ஆட்டோகிராஃப் - 21- "இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்!!"

சித்ரா ரமேஷ்

“எங்களுடைய சொந்த ஊரில் இரண்டு மூணு வீடு வாங்கியாச்சு! ஊருக்குப் போனா வசதியாத் தங்கலாம்”, என்று என்னிடம் யாராவது சொன்னால் அவர்களை சற்றுப் பொறாமையுடன் பார்க்கத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாய் சொந்த ஊர் என்ற ஒரு அனுபவமே இல்லாமல் வாழ்ந்து விட்டக் குடும்பம். சொந்த ஊர், அதில் நிலம், வீடு, அதற்கென்று பிரத்யேகமான தெய்வங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள், சுற்றிலும் நெருங்கிய சொந்தங்கள், ஊர் முழுக்கத் தெரிந்த மனிதர்கள்! இப்படிப்பட்ட பாதுகாப்புகள் அற்ற சமூகத்தில் வாழப் பழகி விட்டோம். இனிமேல் தீடீரென்று இப்படிப்பட்ட அமைப்பில் வாழ நேரிட்டால் மூச்சு முட்டுமோ? வெளிக் கிர்¤ல்கதவைப் பூட்டி, உள்மரக் கதவைச் சாத்தி பெல் அடித்தால் மந்திரக்கண்ணால் பார்த்து உள்ளே வர வேண்டியவர்கள் மட்டுமே நுழையலாம் என்ற பாதுகாப்புகள் மட்டுமே உள்ள வாழ்க்கைக்கு மட்டுமே பழகியவர்கள். சொந்த ஊர் ஏக்கம் என்பது தாய்ப்பாலை மறக்கும் ஏக்கம் போன்றது. கண்டிப்பாக எந்தக் குழந்தையும் தாய்ப்பாலை மட்டுமே குடித்து வளர முடியாது. அம்மாவிடம் பால் குடித்து வளரும் குழந்தைகள்வளர வளர மற்றச் சாப்பாட்டுக்குப் பழகிக் கொள்ளும். ஆனால் அம்மாவைப் பார்த்தால் ஒரு கெஞ்சலும், கொஞ்சலுமாக ஒரு சிரிப்புச் சிரித்து மயக்கி அம்மாவிடமும் பால் குடிக்கும். இந்த நயன பாஷை அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையே நடக்கும். காலையில் பாட்டிலில் பால், இட்லி, அப்புறம் பருப்புச்சாதம், சாத்துக்குடி ஜூஸ், பிஸ்கெட், சாக்லேட், அவல் பொரி, பொட்டுக்கடலை என்று சகலத்தையும் சாப்பிட்டு விட்டு அம்மாவிடமும் போய் பால் குடிக்கும். தூக்கம் வந்தால் தூங்காமல் அம்மாவைத் தொந்தரவு செய்யும். கடைசியில் இந்த அநியாயம் பொறுக்க முடியாமல் அம்மா, மாமியார், அண்ணி, நாத்தனார் என்று அத்தனை பெண் உறுப்பினர்களும் சேர்ந்து சதித்திட்டம் போட்டு குழந்தையையும் அம்மாவையும் ஒருத்தர் கண்ணில் ஒருத்தர் படாமல் கொஞ்ச நாள் வைத்து குழந்தைக்குத் தாய்ப்பாலை மறக்கச் செய்வர். நல்லா கொழுக் மொழுக்கென்று இருந்த குழந்தை கொஞ்சம் வாடி இளைத்துத்தான் போகும். இவ்வளவு சதி பண்ணி நிறுத்த வைத்தவர்களே “பாவம் குழந்தை பால் குடிக்கறதை நிறுத்தினப்புறம் உடம்பே தேறலை”, என்று பரிதாபப்படுவார்கள். கலையில் காபி,இட்லி, சாதம், பிஸ்கெட் என்று வகைவகையாக சாப்பிட்டு விட்டு பாலையும் குடித்துக் கொண்டிருந்தால் உபரிச் சத்து சேர்ந்து குழந்தை குண்டாகத்தான் இருக்கும். உபரிச்சத்து குறைந்த பிறகு கொஞ்சம் உடம்பு இளைக்கத்தான் செய்யும். அம்மாவுக்கும் இந்தப் பிடுங்கல் இல்லாமல் இருந்தால் சரிதான் என்று எல்லாத்துக்கும் ஒத்துக்கொண்டுதான் இருப்பாள். அப்புறம் குழந்தையை தன் உடம்பில் ஒரு பாகமாகச் சுமந்த நினைவின் மீதமாக பால் குடிக்கும் பழக்கமும் மறக்கடிக்கப் பட்டது ஏக்கமாகத்தான் இருக்கும். குழந்தைக்கும் அம்மா மேல் ஒரு சின்ன வருத்தமும் ஏக்கமும் இருக்கும். இந்த ஏக்கம் போலத்தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுப் பிரிவதும்!

அப்பா அம்மாவோடு அந்த ஊரிலேயேதான் இருக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையில் ரொம்ப நாள் இருந்தோம். பிறகு விடுமுறைக்கு மட்டும் எட்டிப் பார்க்கும் ஊராகி விட்டது. அப்பா அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஊரே அந்நியப்பட்டுப் போய்விட்டது. ஸ்கூலுல் அப்படித்தானே! நாம் படிக்கும் வரை நாம் அலங்காரம் செய்து பழகிய வகுப்பு, நம்முடைய பெயர் இன்ன பிற விஷயங்களோடு பிளேடு கீறல்கள் கொண்ட நம்முடைய டெஸ்க், விளையாட்டு மைதானம், நம் நண்பர்களோடு வழக்கமாக உட்காரும் மரத்தடி எதுவுமே நம்முடையதாக இல்லாமல் ஆகிவிடும். அடுத்த வருட மாணவிகள் அதையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்வார்கள். ஸ்கூலுக்கு சும்மா போய் நம் ஆசிரியைகளைப் பார்த்து விட்டு வரும் போது அங்கு நாம் இருந்த மாதிரி எதுவுமே இல்லாதது போல், நம்முடைய சக மாணவிகள் போல் ஒழுக்கமாகவும், நட்புடனும் இல்லாமல் அதிகமாக அலட்டுவது போலவும் தோன்றி அதை டீச்ச்சரிடமும் சொல்லி “ என்ன டீச்சர் எங்களையெல்லாம் இப்படி விடமாட்டீங்க! பரவாயில்லை! இப்போ ரொம்ப லீனியன்ட்டா ஆயிட்டீங்க!” என்று புலம்பி விட்டு “நம்ப ஸ்கூல் நம்ப இருந்த மாதிரி இல்லை”, என்று அப்புறம் அவ்வளவாக போகப் பிடிக்காது. நாங்கள் வாழ்ந்த வீட்டைப் பிரியும் போதும் இதே போல் ஒரு துக்கம். வளர்த்த மரங்கள், பூச்செடிகள், ஒட்டு மாமரம், கொய்யா, வாழை, மணத்தக்காளி, அம்மா தினமும் கொடுக்கும் தக்காளிப் பழத்தைச் சாப்பிட வரும் அணில், பின்னால் டிசம்பர் பூச்செடிப் புதரில் வாழ்ந்த கீரிப் பிள்ளைக் குடும்பம், முன்னால் மல்லிகைப் புதர் பக்கத்தில் வாழ்ந்த பாம்பு, இப்படி அசையும், அசையாச் சொத்து ஏகத்துக்கு விட்டு விட்டுச் செல்ல யாருக்குத்தான் மனது வரும்? கடைசித் தம்பி பிறந்ததும் இந்த வீட்டில்தான்! பாட்டி ரூமுக்குள் வராதே என்று மிரட்டினாலும் அம்மாவுக்கு எதுவும் ஆகாமல் பத்திரமாக இருக்கிறாளே என்று அம்மாவிடம் போக முயற்சி செய்த போது பாட்டி தம்பிப் பாப்பாப் பாரு என்று காட்டினாள். அப்படியெல்லாம் உடனே பாசமிகு அக்காவாக மாறி தம்பியை உச்சி மோந்து கொஞ்சவில்லை. அம்மா அசதியாக ஏன் இருக்கிறாள்? களைப்புடன் படுத்துக் கொண்டிருந்த அம்மாவைத்தான் பார்க்கத் தோன்றியது. இப்படி எத்தனையோ நினைவுகளை எடுத்துச் சென்ற வீடு. அதைக் காலி செய்து கிளம்ப வேண்டும். ஊரையும் மறந்து வேறு ஊருக்குப் போய் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் எந்த ஊருக்குப் போனாலும் எங்க ஊர் மனிதர்கள் அடையாளம் கண்டு கொண்டு பாசத்துடன் பேசுகிறார்கள். ஒரு இரவு நேரப் பஸ் பயணத்தில் யாரோ ஒரு பயணி போல அந்த ஊர் வழியாக கடந்து செல்லும் போது அந்த மௌனமான இரவு, இலை உதிர்ந்த மரங்கள்,வெறுமை வழியும் சாலைகள் இவையெல்லாம் சோகமாகத் தெரிகின்றன. சில சமயம் சில காட்சிகளே மனதில் சோகமாக படிகின்றன. இது ஏன் இவ்வளவு துக்கத்தைத் தர வேண்டும்? பஸ்ஸை விட்டு இறங்கி நான் வந்திருக்கிறேன் என்று உரத்தக் குரலில் கத்த வேண்டும் போல் இருந்தது. இந்த ஊரின் ஒவ்வொரு மூலையும் என்னகுத் தெரியும். உங்களுக்குத் தெரியுமா என்று பக்கத்தில் இருப்பவரிடம் பெருமை அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

ரொம்ப நாட்களுக்குப் புதிதாக எந்த ஊருக்குப் போனாலும் தொலைந்து போய்விடுவோமோ? எப்போது வீட்டுக்குத் திரும்பப் போகலாம் என்றிருக்கும். திரும்ப ஊருக்கு வந்ததும்தான் பாதுகாப்பாக உணர்வேன். இப்போதும் ஊருக்குப் போகலாம். தெரிந்த மனிதர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் ஊர் நம் வீடு என்ற உரிமைக் கொண்டாட அங்கு எதுவும் இல்லை.
ஆனால் ஊர் பிரமாதமாக முன்னேறிவிட்டது. சைக்கிள் எல்லாம் அவ்வளவாக ஓட்டுவதே இல்லை. எல்லோரும் டூவீலர்தான். நகர மத்தியில் குளிர் சாதன வசதியோடு திரையரங்கு. நிறைய பஸ் வசதி. ஆட்டோ ஸ்டாண்ட். ஒரு லட்சம் ரூபாய் வரை போனஸ் வருகிறதாம். வீடு வாங்க லோன் என்று நிறைய வசதிகள். இப்போது அங்கு வளரும் குழந்தைகள் எங்கள் ஏக்கங்கள், அப்பாவித்தனங்கள், விளையாட்டுகள் எதுவும் இல்லாமல் அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ வளர்கின்ற குழந்தைகளைப் போல் வளர்வதற்குரிய வசதிகள் பெருகி விட்டன. போனமுறை விடுமுறைக்குப் போன போது நெய்வேலி போய்விட்டு மறக்காமல் முந்திரிப் பருப்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான் என் தம்பி. “நம்ம ஊர் டேஸ்ட் வேறெங்கேயும் கிடைக்காது. அமராவதித் தியேட்டரில் டிக்கெட் கிடைக்கறதுக்கு சாமி கிட்டல்லாம் வேண்டிப்போமே! இப்ப போய் பாரு. புதுப் படமெல்லாம் ரிலீஸ் செய்யறான். பாக்கறத்துக்குத்தான் ஆள் கிடையாது” என்றான்.

எல்லோரும் பிரியும் போது ஆட்டோகிராஃப் வாங்கிக் கொள்வோமே! அதைப் போல் நானும் வாங்கினேன். ஆட்டோகிராஃப்பில் பொதுவாக எல்லோரும் இந்திரன், சந்திரன், நல்லவரு, வல்லவரு, உலகம் உருண்டைதான் என்றாவது சந்திப்போம் என்று இஷ்டத்துக்குப் புகழ்ந்துதான் எழுதித் தருவார்கள்.உன் சிரிப்பு 'ஸ்ரீதேவி மாதிரி, வகுப்புத் தலைவியாக இருந்து வழி காட்டிய தெய்வம் என்று ரீதியில் புகழ்ந்து எழுதியிருந்ததைப் பார்த்து என் உயிர்த் தோழிகள் இருவரும் செமையாக கடுப்பாகி நாங்களும் எழுதித்தருவோம் என்று கேட்டார்கள். நான் முடியாது என்று சொல்லியும் கேட்காமல் அவர்களே பிடுங்கி உன் அலட்சியப் போக்கும், ஆணவமான பேச்சும், அகங்காரமான சிரிப்பும் என்று ஆளுக்கு ஒரு வரி எழுதி அதற்கு மேல் இன்னும் என்ன எழுதுவது என்று யோசித்து முடிக்கிறோம் என்று எழுதத் தொடங்கியது இன்னும் முடிக்கப் படாமலேயே என்னிடம் இருக்கிறது. எப்போது முடிக்கக் போகிறீர்கள் என்று கேட்டால் இன்னும் முழுமையாக உன் குணங்களைத் தெரிந்து கொண்ட பிறகு என்கிறார்கள். அதேப் போல் இன்னும் முழுமையாக முடிக்கப்பட்டாத ஆட்டோகிராஃப் இது. பதினாறு வயதுடன் ஒரு காலக் கட்டம் முடிவடைகிறது. இதற்குப் பிறகு அந்த நண்பர்கள், என் சகோதர்கள், அப்பா அம்மா யாருடனுமே முழுமையாக இருக்க முடியவில்லை. இந்த உலகில் பெரிய நகரங்களில் வாழும் படியான சூழ்நிலை. வளர வளர அப்பாவித்தனத்தோடு கூடிய யதார்த்தம் போய் நிறைய கள்ளங்கள், கபடு சூது எல்லாம் கற்றுக் கொண்டு பெரிய பெண்ணாகி விடுகிறோம்.இதெல்லாம் கற்றுக் கொள்ளவில்லையென்றால் ஸ்மார்ட் கேர்ள் ஆக முடியாதே! சொந்தச் சகோதர்களே விருந்தாளி ஆகிவிடுகிற விபரீதம்! அண்ணன் அண்ணியின் கணவனாகி விடுகிறக் கொடுமை! இது மட்டும் நல்லவேளையாக நடக்கவில்லை. வாழ்க்கை பதினாறு வயதுடன் முடிவடையவில்லை. உங்க பக்கத்து வீட்டுக் குழந்தை விளையாடுவதை மட்டும் பார்த்து ரசித்தவர்களுக்கு அந்தக் குழந்தையின் அழுகை, பிடிவாதம், படுத்தல், அடம் ஜூரம் வந்த போது ராத்திரியெல்லாம் கண் விழித்துப் பார்த்துக் கொண்டது உடம்பு சரியில்லைகாது வலி, வயிற்று வலி என்று நடுராத்திரி கதறியது, இதெல்லாம் தெரியாது. மேலும் அதை வளர்க்கும் பொறுப்பும் நமக்குக் கிடையாது. அதேப் போல் சிரித்து விளையாடியதை மட்டும் சொல்ல முடிகிறது. கிடைத்த ஏமாற்றங்கள், மூழ்கிய சோகம், சிந்தியக் கண்ணீர், முதுகில் குத்திய துரோகங்கள், பொறாமை, வருத்தம் இதெல்லாம் சொல்லப்படாதக் கதைகள்.
ஆட்டோகிராஃப் எழுத ஆரம்பித்ததும் நிறைய வாசகர்கள் மின்னஞ்சல் மூலம் தங்களுடைய ஆட்டோகிராஃபை என்னுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள்.

'அக்காவைப்' பற்றி எழுதிய வாரம் தான் எக்கச்சக்கக் கடிதங்கள்! என்னைப் போலவே அக்காவால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்புறம் தமிழ் மீடியம் வகுப்பிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாறிய சோகத்தை எழுதிய போதும் அதே போன்றச் சோக அனுபவங்களைப் படித்தேன். தீபாவளிக் கதையின் போது ஓலைவெடி, லஷ்மி வெடியை பற்றி எழுதவில்லையே என்று கேட்டு வந்த கடிதங்கள்! இன்னும் ஒருவர் என்னுடைய ஆட்டோகிராஃப்புக்கு இணையாக ஒவ்வொரு வாரம் வந்தக் கதைகளுக்கும் ஒரு ஆணின் பார்வையோடு எழுத முடியும் என்று எழுதினார். சீக்கிரம் முடிக்கப் போகிறேன் என்று எழுதியதற்கு ஹாஸ்டலில் இருந்த அனுபவங்கள் ஒரு முதிர்ச்சியடைந்தப் பெண்ணாக உங்கள் அனுபவங்கள் என்றெல்லாம் தொடரலாமே என்று ஒருவர் ஆலோசனை கொடுத்தார்.பாவம் ஹாஸ்டல் வார்டன்! எழுதலாம். ஆனால் இப்போது இல்லை!எப்போதும் காதல் பாடல்கள் வருகின்றன. ஆனால் காதல் அனுபவங்கள் எதுவும் இல்லையா? என்று கேட்ட நண்பருக்கு நான் வாழ்க்கையைக் காதலித்ததுப் புரியவில்லையா? வாரா வாரம் படித்து விட்டு தொடர்ச்சியாக எழுதிய மின்னஞ்சல் நண்பர்கள்! திண்ணையில் எழுதினால் நிறைய பேர் படிப்பார்கள். ஆனால் அதற்கு குமுதம், விகடனில் எழுதுவது போல் வாசகர் கடிதமெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று சொன்ன நண்பரின் கணிப்பைப் பொய்யாக்கிய இணைய வாசகர்களுக்கு நன்றி! நான் எழுதாவிட்டால் என்ன? இன்னும் நிறைய ஆட்டோகிராஃப் தொடரப் போகிறது என்று ஒரு குருவி சொல்கிறது. நாமே நம் அனுபவங்களைச் சொல்லும் போது அதுவும் பெண்கள் தங்களை பற்றிச் சொல்லும் போது ரொம்ப அலட்டலாகத்தான் அமையும். நான் எப்பவும் ஃப்ர்ஸ்ட் ராங்க்தான் வாங்குவேன். டான்ஸ் ஆடுவேன், பாட்டுப் பாடுவேன் எங்க வீட்டுலே ரொம்ப ஸ்டிரிக்ட் எங்க குடும்பம் முகலாய வம்ச வழித்தோன்றல்கள், எங்கப்பாதான் பில்கேட்ஸ் இப்படி நிறைய அலட்டுவாங்க! கூடிய மட்டும் இதெல்லாம் இல்லாம அடக்கி வாசிக்க முயற்சி செய்தேன். நிறைய சமயங்களில் ஆண்களைக் கிண்டலடித்திருக்கிறேன். அப்படியெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி பெரிய பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் புதுமைப் பெண்ணெல்லாம் இல்லை.அருமையான அண்ணன், தம்பிகள், கணவர், பையன், நண்பர்கள் என்று நிறைய ஆண்கள் என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சமயத்திலும் கைக் கொடுத்திருக்கிறார்கள். உங்க பக்கத்து வீட்டுப் பெண்போல் சராசரி வெற்றியுடன், சாதாரணமாக எல்லாப் பெண்களையும் போல் சமைத்து குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு கொலு வைத்து சரஸ்வதி பூஜை கொண்டாடும் பெண்தான்! ஒரே மாற்றம்! கொஞ்சம் படிக்கும் பழக்கம் உண்டு! அவ்வளவுதான்! என்னுடைய அனுபவங்கள் எனக்கு மட்டுமே நிகழ்ந்தவையல்ல! அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்த எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைத்ததுதான்! நாம் அந்தச் சமயத்தில் பார்த்தக் கனவுக் கன்னிகளெல்லாம் அண்ணி, அம்மா, பாட்டி வேஷத்தில் வந்து கலர்க்கனவுகள் நிறம் மாறி கருப்பு வெள்ளையாய் ஆனது போல், கருப்பு வெள்ளைக் கனவுகள் கலர்க்கனவுகளாக ஆக முடியாதா? என்ற நினைவுகளோடே ஆட்டோகிராஃப் கதாநாயகியை இனிக்கும் பதினாறோடு நிறுத்திவிட்டேன்.

கனவும் கற்பனையும் தான் வாழ்வு! நாம் நமக்களித்துக் கொள்ளும் சுகம்! நம்மைச் சுற்றி இருக்கும் சமூகம் மாறி வருவதைப் பார்க்கிறோம். தங்கள் வாழ்வை தாங்களே வகுத்துக் கொள்ளும் சுதந்திரத்தோடு என் வாழ்வை வாழும் உரிமை என்னிடம்தான் இருக்கிறது என்று தங்கள் வாழ்வை தாங்களே வரையறுத்துக் கொள்ளும் மனிதர்களைப் பார்க்கும் போது அந்தத் தன்னம்பிக்கை பிடித்திருக்கிறது.அப்படியெல்லாம் வாழும் சுதந்திரம் இல்லையென்றாலும் வாழ்கின்ற நாட்களின் ஒவ்வொருத் துளியையும் நிறைந்த மனதோடு அனுபவிக்க வேண்டாமா!
ஆகாயத்தில் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கும் போதெல்லாம் பிரபஞ்சத்தில் வேறு ஒரு கிரகம்! அதில் என்னைப் போல் ஒரு மனுஷி வாழ்ந்து கொண்டிருப்பாள். வேறு ஒரு பிரபஞ்சம்! அதிலும் வேறு ஒரு கிரகம்! அதிலும் நம்மைப் போல் மனிதர்கள் வாழ்வார்கள். இல்லையா? இந்தத் தொடர்ச்சிக்கும் முடிவில்லை. பிரபஞ்சத்துக்கு காலம், இடைவெளி எதுவும் கிடையாது. ஆனால் வாழ்க்கையில் செய்யபடும் எதற்கும் ஒரு கால வரையறையுண்டு!

போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?- இந்த ஞாலமும் பொய்தானோ?

இத்தனை நாள் சிரிக்கச் சிரிக்க எழுதிவிட்டு முடிக்கும் போது ஏன் இத்தனைச் சோகம்? எல்லாத்துன்பங்களையும் அனுபவித்து விட்டு கடைசிக் காட்சியில் திருமணக் கோலத்தோடு வாய் விட்டு சிரித்ததும் 'வணக்கம்' போட இது என்ன தமிழ் சினிமாவா?
உண்மை வாழ்க்கை! தேவதைக் கதைகளில் 'பிறகு இளவரசனும் இளவரசியும் மகிழ்ச்சியுடன் எப்போதும் வாழ்ந்தார்கள் என்று முடிப்பது ஒரு மரபு போல் வாழ்க்கையும் முடியுமா? ஆனால் சந்தோஷமாக இருந்தக் காலங்களை எழுதிய சந்தோஷத்தோடு.... முற்றும்.

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப்- 20 -'காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்'

சித்ரா ரமேஷ்

ரயிலில் இரண்டு நாள் தொடர்ச்சியாகப் பயணம் செய்திருக்கிறீர்களா? ஏறியவுடன் பரபரப்பாக இருக்கும். சாமான்களை அடுக்கி, ஜன்னலோர சீட் கிடைத்தால் மகிழ்ந்து, பக்கத்துச் சீட்காரர் நம் மனதுக்குப் பிடித்துப் போய் பேசி அரட்டை அடித்து, வருவதையெல்லாம் வாங்கித் தின்று கொண்டு ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கும். மறுநாள் கரி படிந்து அழுக்காக அலுத்துப் போய் எப்போதடா இறங்குவோம் என்றாகி விடும். மீண்டும் நாம் இறங்க வேண்டிய ஸ்டேஷனை நெருங்க நெருங்க இந்தப் பயணம் முடியப் போகிறதே,மீண்டும் நம் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே என்ற வெறுமையும், அப்பாடா வீட்டுக்குப் போய்விடலாம் என்ற நிம்மதியும் சேர்ந்து ஒரு குழப்பமான மனநிலை வந்து விடும். பள்ளியில் கடைசி வருடம். எப்போது இந்த ஸ்கூலை விட்டுப் போவோம் என்று தோன்றும். பள்ளியை விட்டு வெளியேறி விட்டால் மீண்டும் திரும்ப முடியாது. இந்தப் பருவமும் இந்த நண்பர்களும் திரும்ப கிடைக்காது என்ற துக்கமும் இருக்கும். கடைசி வருடம் எங்கள் சயின்ஸ் டீச்சர் இன்னும் பெரிய பெண்களாகி விட்டதால் எங்களைக் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு தனக்கு அதிகமாகி விட்டது போல் கெடுபிடிகளை அதிகப் படுத்தினாள். தான் வகுப்பில் இல்லாவிட்டாலும் என்ன நடக்கிறது என்பதை அறிய இரண்டு பேரை குளோஸ்டு சர்குயூட் காமரா போல நியமித்திருந்தாள். இந்த ரகசியம் தெரியாமல் அந்த ஒற்றர்களையும் வைத்துக் கொண்டே
'அப்ஸரா' என்ற சுஜாதா கதையை விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தேன். 'அ' 'ப்' இருவரின் கொலையையும் சொல்லி முடித்து 'ஸ' கொலையைச் சொல்லும் போது டீச்சர் புயலென உள்ளே நுழைந்து கதைக் கேட்ட யாருக்கும் எந்த விதப் பாதிப்பும் இல்லை. போர்க்களம்தான்! அந்த ஒற்றர்கள் கூட வாயைப் பிளந்து கொண்டு முக்கால்வாசிக் கதையைக் கேட்டுவிட்டுதான் வத்தி வைக்கப் போயிருக்கிறார்கள். அந்த டீச்சர் வகுப்பு அது. அந்த டீச்சர் ஏன் கிளாஸ§க்கு வரவில்லை எனப்தைப் பற்றியெல்லாம் யாரும் யோசிக்கக் கூடாதுதான். ஏற்கெனவே வகுப்பில் நுழையும் போதெல்லாம் தெருவைப் பார்த்து அமைந்திருந்த ஜன்னலை மூடச் சொல்வார்கள். ஜன்னல் வழியாக நாங்கள் யாரையாவது பார்த்து மயங்கி விடுவோமாம். மனதை படிப்பில் செலுத்த முடியாதாம் என்று என்னவோ காரணங்கள். சுறுசுறுப்பாக இயங்கும் காலை, மாலை வேளைகளிலேயே மொத்தம் பத்து பேர்தான் தெருவில் நடந்து கொண்டிருப்பார்கள். இதில் காலை பதினோரு, பன்னண்டு மணி வெய்யிலில் ஈ, காக்கா இருக்காதத் தெருவில் எந்த கந்தர்வனைப் பார்த்து நாங்கள் மயங்கப் போகிறோமோ? எதற்கும் கேள்விகள் கேட்காமல் கீழ்ப்படிந்து நடந்தால்தானே பெண்கள் பெருமையடைவார்கள்? ஜன்னலுக்கு அருகே உட்கார்ந்திருந்த எனக்குத்தான் இதனால் தலைவலி! இவர்கள் வகுப்பில் சாத்தப்படும் ஜன்னல் மற்றவர்கள் வகுப்பில் திறக்கப் பட்டுவிடும். நான்தான் இந்த வம்பு செய்வதாக ஒரு சந்தேகம்! தமிழாசிரியை வகுப்புக்கு வந்ததும் ஜன்னைலை எதற்கு மூட வேண்டும் காற்றும் வெளிச்சமும் வர வேண்டாமா என்று சொல்லி திறக்கச் சொல்வார்கள். இதனால் ஏற்கனவே என் மீது அதிருப்தி ஏற்பட்டு 'அப்ஸரா' விஷயத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டதில் ஓநாய், ஆடு கதை போல சமீபத்தியத் தவறுகளை பட்டியலிட்டு என் அம்மாவிடம் சொல்லப் போவதாக சொன்னதும் தப்பித்து விட்டோம் என்று புரிந்து விட்டது. “' ஸ்ரீகாந்த் பற்றி நீ எழுதினியாமே. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தியாமே”, என்று சம்பந்தமில்லாமல் இவர்கள் வகுப்பில் நடக்காத விஷயத்தைப் பெரிது படுத்த அம்மாவிடம் சொல்லிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். என் அம்மா நடிகர் 'ஸ்ரீகாந்த்' பற்றி எழுதினாலும் ஒன்றும் சொல்லமாட்டாள் என்ற தைரியம்தான்!

அதென்ன 'ஸ்ரீகாந்த்' பற்றி கட்டுரை? அப்போ கிரிக்கெட் வீரர் 'ஸ்ரீகாந்த்' டீமில் நுழையவே இல்லை. நடிகர் 'ஸ்ரீகாந்த்தும்' கிடையாது. வங்காள எழுத்தாளர் சரத்சந்தர சட்டர்ஜி எழுதிய 'ஸ்ரீகாந்த்' என்ற நாவலைப் பற்றியது. ஒரு அருமையான மொழிபெயர்ப்புக் கதை. சரத் சந்திரர்
எழுதிய நாவல்கள் அனைத்துமே பிரமாதமாக இருக்கும். 'தேவதாஸ்' இவர் எழுதிய நாவல்தான். இவருடைய நிறைய கதைகள் திரைப் படமாகக் கூட வந்திருக்கிறது. வங்காள மக்களுக்கும் கேரள மக்களுக்கும் இருக்கும் இலக்கிய ரசனை இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தினருக்கும் கிடையாதுதான். பிபூதிபூஷன்பானெர்ஜீ எழுதிய 'பதேர் பாஞ்சாலி' உலகத் திரைபடவரிசையில் பேசப்படும் அருமையான நாவல். இதெல்லாம் பற்றி காற்றும், வெளிச்சமும் தர மறுக்கும் அந்த டீச்சருக்கு எப்படிப் புரியும்? மேலும் ஒரு கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்ட கட்டுரை!இதை ஏதோ அரைகுறையாகப் பார்த்து விட்டு ஒற்றர்கள் கொடுத்தத் தகவலை நம்பி குற்றசாட்டு! இத்தனைக்கும் அம்மாவுக்கு நெருங்கிய ஃபிரெண்ட் மாதிரித்தான். நட்பு வேறு கொள்கை வேறு என்பதில் தௌ¤வாக இருந்த ஆசிரியை என்னை கண்டித்துத் திருத்த வேண்டிய கடமை இன்னும் அதிகமாக கட்டுப்பாடுகள் அதிகமாக்கப் பட்டு விட்டன. அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்ல “பரவாயில்லை உங்க ஸ்கூலில் பெண் குழந்தைகளை படிங்கடின்னு மிரட்டினால் உக்காந்து படிக்கறாங்களே! எங்க ஸ்கூல் பசங்கக் கிட்ட இத மாதிரி கிளாஸ§க்குப் போகாம படிங்கன்னு சொல்லியனுப்பினால் மறு நிமிஷம் கிளாஸில் ஒரு பையன் இருக்க மாட்டான். எல்லோரும் கிரௌண்டுக்கு ஓடிப் போயிருப்பாங்க” என்று நைசா அந்த டீச்சர் கிளாஸ§க்கு வராமல் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாடம் எடுப்பதைப் பற்றிப் பேசி சமாளித்து விட்டாள்.

அந்த ஒற்றன் யார் என்பதைக் கண்டு பிடித்து 'என்ன இந்த வருடத்து 'பெஸ்ட் ஸ்டுடண்ட் அவார்ட்' உனக்குத்தானா?' என்று அப்பாவியாக எங்க குழுவினர் விசாரித்து இவள் மூலமாக அந்த டீச்சர் காதில் போய் விழட்டுமே என்ற அலட்சியத்தோடுதான் செய்தோம். எல்லோரும் படித்து உருப்படற வழியை பார்ப்போம் என்று அக்கப் போரையெல்லாம் தவிர்த்து விட்டோம். ஆனால் வலுவில் வந்தால்? ஒரே இனிஷியல், ஒரே பெயர், ஒரே வகுப்பு எல்லாம் ஒன்றாக இருந்ததால் யாரோ ஒரு ஆசைக் காதலன் எழுதிய கடித்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை! யாருக்காக எழுதப்பட்டது என்பதைப் பற்றி விசாரணைக் கமிஷன்!பத்தாம் வகுப்பு படிக்கும் போது பாம்பேயிலிருந்து ஒரு பெண் வந்து சேர்ந்தாள்! எதுக்குப்பா இப்படி கஷ்டப்பட்டு படிக்கிறீங்க? பாம்பேல ஜாலியா இருக்கலாம். பாக்க நல்லாயிருந்தா படிக்கவே வேண்டாம். ஏதாவது வேலைக்குப் போகலாம்” என்று லோ கட் பிளவுஸ், எப்போது குட்மார்னிங் சொல்ல வைக்கும் தாவணி இப்படி டிரஸ் செய்து கொண்டு “ஆத்தா நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன் என்று மயில் கணக்காய் இருப்பவர்களுக்கு பல தத்துவங்கள் சொல்லி ஏற்கனவே புஷ்பா தங்கதுரை கதையெல்லாம் படித்து பம்பாய் ஒரு பயங்கர நகரம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கலாச்சார அதிர்ச்சியைக் கொடுத்தாள். கடிதம் யாருக்கு வரும்? ரொம்ப நியாயமாக நடந்து கொள்கிறார்களாம். என்னையும் அவளையும் கூப்பிட்டு விசாரித்தார்கள். 'போன வாரம் புதன் கிழமை சாயங்காலம் நீஎங்கே போயிருந்தே” என்று கேட்டதும் அங்கேயிருந்த என் மேத்ஸ் டீச்சரிடம் “உங்க வீட்டலதானே டுயூஷன் படிச்சுக்கிட்டு இருந்தேன்” என்று நம்பகத் தகுந்த ஆதாரத்தோடு சொன்னதும் சந்தேகப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விட்டேன். அவளும் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சாதித்து விட்டாள். அப்படி ஒரு முகராசி சிலருக்கு! நான் பாட்டுக்கு தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாலும் என்ன பண்ணுகிறாய் என்று விசாரிப்பார்கள். டெஸ்க் அடியில் உட்கார்ந்து இட்லி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை கண்டுக்கவேமாட்டாங்க! இட்லி வைத்திருக்கும் டிஃபன் பாக்ஸைத் திறந்ததும் நல்லெண்ணெயும் மிளகாய்ப் பொடியும் சேர்ந்து கும்மென்று வாசனை வரும். அது கூடவாத் தெரியாது! நாமதான் பெரிய கம்யூனிஸ்ட்ன்னு நினைப்பாச்சே!காம்ரேட்ஸைக் காட்டிக் கொடுக்க மாட்டோமே! ஹெட்மிஸ்ட்ரஸ் ரூமை விட்டு வெளியில் வரும்போது இருவரும் திக் ஃபிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். “லெட்டர் எழுதறவங்கக்கிட்ட வீட்டு அட்ரஸ் கொடுக்க வேண்டியதுதானே!” என்று யதார்த்தமாக கேட்க “ ஆமா! யாரு அட்ரஸ் எல்லாம் கொடுத்தா?சும்மாப் பேசும் போது பேர், கிளாஸ் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு லெட்டர் எழுதிட்டான்!”, அடிப்பாவி சும்மா பேசினாலே காதல் வந்து விடுமா?
“சேச்சே! அதெல்லாம் இல்லெப்பா! சும்மா ஒரு பாய்பிரெண்டுன்னு சொல்லிக்க இருக்கட்டுமேன்னுதான்!”, என்று அவள் சொன்னதும் வாழ்க்கையில் என்னவெல்லாம் தேவைப்படுகிறது என்பது புரிந்தது. பரவாயில்லை உலகம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

மற்றப் பெண்கள் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி “அந்த லெட்டரில் என்ன எழுதியிருந்தது?”, என்பதுதான். ஏறக்குறைய என்ன எழுதப் பட்டிருக்கலாம் என்பது தெரிந்த பெண்ணிடமே கேட்கச் சொன்னேன். “யாருக்குத் தெரியும்? எதோ போன புதன் கிழமை மீட் பண்ணியதைப் பற்றி எழுதியிருப்பான். இந்த புதன் கிழமையும் மீட் பண்ணலாமா என்று எழுதியிருப்பான்”, என்று எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு பிறகுதான் சொன்னாள். அசப்பில் சந்திரபாபு போல் இருந்த அந்தப் பையனைப் பார்த்த பிறகு அதற்கு மேல் அதில் எந்தப் பரபரப்பும் இல்லை.
சிரிப்புத்தான் வந்தது. அப்பொ நிறைய பசங்க காமெடியன் போலத்தான் இருப்பாங்க! பருவ வயதில் பெண்கள் அழகாக இருப்பதைப் போல் ஆண்பிள்ளைகள் தமாஷாக இருப்பார்கள். இதில் ஒரு அசட்டு மூஞ்சியை வேறு காட்டிக் கொண்டு காதல் பார்வைப் பார்த்தால் செம காமெடியாகத்தான் இருக்கும்.

ஆமா இந்த ஸ்கூலை விட்டு போவதற்கு என்ன கஷ்டம்! என்று ஆயிரம் முறை சொல்லி கொண்டாலும், நாம் எல்லோரும் அடிக்கடி மீட் பண்ணிக்கலாம். லெட்டர் எழுதிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தாலும் மீண்டும் அதே வகுப்புத் தோழியரோடு அதே அமைப்பில் இணைய முடியாது என்பதை உணராமல் இல்லை. ஸ்டடி ஹாலிடேஸ§க்கு முதல் நாள்தான் கடைசியாக நம் வகுப்பில் இருக்கப் போகிறோம் என்பதை அறியாமலேயேப் பிரிந்தோம். கடைசி நாள் பரீட்சையன்று பார்த்த சிலரைப் அப்புறம் பார்க்கவேயில்லை. பப்ளிக் எக்ஸாம் எழுதுகிற அன்று பெரியப் பொறுப்பு! முதல் டெஸ்க்கில் உட்கார்ந்திருந்ததனால் கேள்வித்தாள் கையில் வந்ததும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு எல்லாம் ரொம்ப ஈஸியாகத்தான் இருக்கு எனபதைப் போல் பின்னால் திரும்பிப் பார்த்துச் சிரிக்க வேண்டும்! பிறகுதான் எல்லோரும் அவர்கள் கேள்வித்தாளைப் பார்ப்பார்கள். பெண்களுக்கு இந்த மாதிரி சென்ட்டிமெண்ட்டெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். ஓம் முருகா,ஸ்ரீராமஜெயம் சிலுவை, பிறைநிலா786 எழுதுவது என்று எம்மதத்துப் பெண்களுக்கும் இந்த மாதிரி எக்கச்சக்க நம்பிக்கைகள். பரீட்சைத் தொடங்குவதற்கு முன்னால் இந்த மாதிரி டென்ஷன் பார்ட்டி பக்கத்தில் நின்று விட்டால் நமக்கு மாரடைப்பே வந்து விடும். இதெல்லாம் நீ படிக்கலையாப்பா! இதுதான் ரொம்ப முக்கியம்ன்னு அவங்க ஸ்கூல்ல சொன்னாங்களாம்” என்று கையையும் காலையும் உதைத்துக் கொண்டு குட்டிப் போட்ட பூனை மாதிரி குறுக்கும் நெடுக்கும் நடந்து நகத்தைக் கடித்து விரலை ரத்தக் களறியாக்கிக் கொண்டு செமையாகப் படுத்துவார்கள். இத்தனி நாள் படிக்காதது எதுவும் புதுசா வராதுடி! இனிமே எதையும் புதுசா படிச்சு எழுதப் போவதில்லை என்று சொன்னாலும் கேட்காமல் கண்ணீருடன் தான் பரீட்சை ஹாலில் நுழைவார்கள். இதற்காக அவசரம் அவசரமாக குவெஸ்டின் பேப்பரை ஒரு பார்வைப் பார்த்து விட்டு எல்லோரையும் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிந்தி விட்டு எழுதத் தொடங்க வேண்டும். அப்படியெல்லாம் ஒன்றும் கஷ்டமாக இல்லை ஜாலியாகத்தான் எழுதினோம். வகுப்பில் இருப்பதிலேயே வசதியான பெண் ஒருத்தி எங்க ஊரை விட்டுத் தள்ளியிருக்கிற தியேட்டருக்கு, அவர்களோட தியேட்டர் என்று சினிமா பார்ப்பதற்கு கூட்டிக் கொண்டுப் போனாள். வெஜிடபிள் பிரியாணி, வெங்காயத் தயிர்ப்பச்சடி என்ற ஒரு அபூர்வ சாப்பாட்டை வாழ்க்கையில் முதன் முதலாக சாப்பிட்டேன். “இவ்விடம் பிரியாணி அரிசி கிடைக்கும்” மளிகைக் கடையில் என்று எழுதப்பட்டிருக்கும் போர்டைப் பார்த்தாலே அந்த அரிசியிலேயே மட்டன், சிக்கன் எல்லாம் கலந்திருக்கும் என்று
சமையல் விஷயத்தில் நிறைந்த பொது அறிவு பெற்று கற்பனை செய்திருந்தவள்! ஏதோ எங்க வீட்டில் செய்யும் வத்தக் குழம்பு, சாம்பார், பொரிச்சக் கூட்டு, பருப்பு உசிலி சமாச்சாரங்களைத்தான் உலகமெங்கிலும் சாப்பிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்ததால் வந்த கற்பனை! ஹோட்டலுக்குப் போனாலும் மசால் தோசை மட்டுமே சாப்பிடுவோம். அது கூட வருடம் ஒரு முறைதான்! அப்ப ஹோட்டலில் கூட இந்த மாதிரி ஐட்டமெல்லாம் கிடைக்காது. அவர்கள் வீட்டில் இந்த விருந்தைச் சாப்பிட்டு விட்டு என்ன படத்திற்குப் போனோம் தெரியுமா? ““இதயக்கனி”! அவங்க தியேட்டரில் ஓடற படத்துக்குத்தானே போக முடியும்? நான் “இது வேண்டாம். தலையிலே தொப்பி வைத்துக் கொண்டு காவேரியை வாழ்த்திப் பாடுகிறார் என்று நம்பிப் போகவேண்டாம்” என்று லேசாகச் சொல்லிப் பார்த்தேன். விதி யாரை விட்டது? இதுக்குப் பதிலா 'மன்மத லீலை” பார்க்கலாம். அது 'ஏ' படம் நம்மையெல்லாம் விட மாட்டார்கள் என்று இதில் போய் உட்கார்ந்தால்.. பாவம் வாழ்க்கையிலேயே இரண்டு மூன்று திரைப்படம் பார்த்திருந்த ஒருத்திக்கு ரத்தக் கொதிப்பு ஏறி தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. அவளை மெல்ல ஆசுவாசப் படுத்தி எத்தனை நாள் சின்னப் பெண்ணாகவே இருப்பது நம்மையெல்லாம் 'அடல்ட்' ஆக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று என்று கிண்டல் செய்து கிளைமாக்ஸ் பார்க்காமலேயே கிளம்பி விட்டோம். என்ன
நடக்கும்? வழக்கம் போல் போலிஸ் வந்திருக்கும். கதாநாயகி 'அத்தான்' என்று எம்ஜிஆர் காலில் விழும் காட்சி இருந்திருக்கும். இழந்த இளமையைத் தேடும் முயற்சியில் புரட்சித் தலைவர் நடித்த படம்! சும்மாவா? இந்த அதிர்ச்சியிலிருந்து மீள வீட்டில் அனுமதி வாங்கி 'மன்மத லீலை' ரசித்துப் பார்த்தோம். இதுக்கு 'ஏ' கொடுத்திருக்காங்களே!
இதயக்கனிக்கு டபுள் ஏ தர வேண்டாமா? என்று ஒருத்தி அங்கலாய்த்தாள்.

எங்க ஊர்ல நடக்கும் ஒரே திருவிழாவான பங்குனி உத்திரத் திருவிழாவுக்குப் போய் திரிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினோம். லீவு முடியும் வரை ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் மாறி மாறி போய்க் கொண்டிருந்தோம். “ என் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு வரும் போது எந்த கலாட்டாவும் பண்ணாதீங்கடா” என்று என் அருமைச் சகோதர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மழை என்று என் வீட்டில் வந்து நின்று கொண்டிருந்த என் தோழியைப் பார்த்து வெறுத்துப் போய் என் அண்ணன் தம்பிகள் “மழை ஏன் இப்படிக் கேவலமாக இருக்கு இவ்வளவு கோரமான மழையைப் பார்த்ததேயில்லை” என்று கன்னாபின்னாவென்று டபுள் மீனிங் வைத்துப் பேசி என் மானத்தை வாங்கியதால் இந்த எச்சரிக்கை! இந்த மாதிரி சமயத்தில் வயது வித்தியாசம் எல்லாம் மறைந்து போய் ரொம்ப நெருங்கிடுவாங்க! அந்தப் பெண்ணுக்கு நல்ல வேளை தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று புரியாமல் அதுவும் இவர்கள் செய்யும் கலாட்டாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் போனபிறகு “ஏண்டி உன் ஃபிரெண்ட்ஸ் ஒருத்திக் கூட தேற மாட்டாங்களா” என்று துக்கம் விசாரித்து என்னைச் சீண்டிவிட்டார்கள்.அப்படியும் அவர்கள் கிளம்பிப் போனபிறகு “யாருடி அது ரயில் ராதிகா மாதிரி கொஞ்சிக் கொஞ்சி பேசிகொண்டிருந்தாள்? ஒய்விஜயா மாதிரி ஒருத்தி இருந்தாளே”, என்றெல்லாம் அன்பாக விசாரித்தான் அண்ணன்.தினமும் பேசிப் பழகும் எனக்குத் தெரியாத உண்மையெல்லாம் அவனுக்கு ஒரு பார்வையில் பதிவாகி விடுகிறது. இதில் ஃபர்ஸ்ட்ஹாண்ட் தகவல் வேணும் என்று அப்பப்ப கடைசித் தம்பியை விட்டுப் பார்க்கச் சொல்லி அனுப்பிகொண்டிருந்தான். அவனும் சின்னப் பையன் என்ற சலுகையில் கோபிகைகள் நடுவில் கண்ணன் மாதிரி எங்க அரட்டையில் சேர்ந்து கொண்டுப் பேசி எல்லோரையும் அறுத்துத் தள்ளி.. என்ன செய்தால் என்ன? எல்லோரும் அவனையும் ஞாபகம் வைத்துக் கொண்டு விசாரிக்கிறார்கள். ஒரே ஒரு பெண் மட்டும் “உங்கண்ணன் பாக்கறத்துக்கு ஹிந்திப்பட ஹீரோ மாதிரி இருக்காண்டி” என்று சொல்லி விட்டுப் போனாள். அடச்சே! இதுக்கா எல்லோரும் வந்தாங்கன்னு எனக்கு வெறுத்துப் போச்சு! இதை இன்னும் அவனிடம் சொல்லவில்லை. சொன்னால் கர்வம் ஏறிக்கும் என்ற நல்லெண்ணம்தான்!

சிலர் படிப்பைத் தொடர ஊரை விட்டுக் கிளம்பினார்கள். சிலர் ஊரிலேயே இருந்து கொண்டு ஏதோ செய்தார்கள். நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவேயில்லை. அதில் ஒருத்தி 20 வயதிலேயே இறந்தும் போய்விட்டாள். எட்டாவது படிக்கும் போது ரெண்டு பேர் உட்காரும் டெஸ்க்கில் இடப் பற்றாக்குறையால் மூன்று பேர் உட்காருவோம். அப்போது என்னோடும் சுபா என்ற என் ஃபிரெண்டோடும் பழிச் சண்ண்டைக்கு நிற்பாள். ஸ்கேல் வைத்து அளந்து பிளேடால் கோடு போட்டு அதைத் தாண்டி துளி இடம் கூட கொடுக்க முடியாது என்று துரியோதனன் போல் கறாராகச் சொல்லிவிடுவாள். இவள் சண்டையால் எனக்குக் கிடைத்த அருமையானத் தோழிதான் சுபா! இந்தப் பூங்கோதைத்தான் இப்படி அல்பாயுசில் இறந்து விடுவாள் என்பது தெரியாமல் நானும் சுபாவும் சேர்ந்து கொண்டு அவளோடு விடாமல் சண்டை போட்டிருக்கிறோம். துரதிருஷ்டவசமாக வகுப்புப் புகைப்படம் எடுக்கும் அன்று அவள் பள்ளிக்கு வரவில்லை. அந்த போட்டோவைப் பார்க்கும் போதெல்லாம் அதில் இருப்பவர்களை விட இல்லாத அவள் ஞாபகம்தான் அதிகம் வருகிறது. பதினாறு வயதில் பிரிந்த நாங்கள் இருபத்தியைந்து வருடங்கள் கழித்து அழகான ஆண்ட்டிகளாக மீண்டும் சந்தித்தோம். (கூட்டிக் கணக்குப் பாத்துட்டீங்களா!) கணவர், குழந்தைகள் என்று எந்தப் பிடுங்கலும் இல்லாமல் அதேத் துடிப்போடு ஜெயண்ட் வீல், ரோலர் கோஸ்டர் எல்லாவற்றிலும் சுற்றி ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு விஜிபியையே கலக்கினோம். சுஜாதாவோட “கற்றதும் பெற்றதும்” படிக்கும் போதெல்லாம் உன்னைத்தாண்டி நினைச்சுக்குவேன்” என்று ஒருத்தி சொன்னாள். எதுக்கு? நல்லதாக எதைப் படித்தாலும் பகிர்ந்து கொண்டதைத்தானே அவரும் செய்கிறார்.வகுப்புப் புகைப் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பெயரெல்லாம் நினைவுப் படுத்திப் பார்த்துக் கொண்டோம். ஒரு சிலரோடு ஒரு வார்த்தைக் கூடப் பேசியதில்லை திடுக்கிடும் என்ற உண்மையைப் பகிர்ந்து கொண்டோம். வராதவர்களில் யார் யார் எங்கேயிருக்கிறார்கள் என்று வம்படித்தோம். ஒருத்தி எங்க ஊரிலேயே டாக்டராக இருக்கிறாள். நெய்வேலிக்கு வா. கார் வைத்திருக்கிறேன். நீ வசதியாகச் சுற்றிப் பார்க்கலாம்” என்றாள்.நமக்கு எதற்குக் கார்? ஒரு லேடீஸ் சைக்கிள் இருந்தால் போதுமே!எல்லோரையும் சிங்கப்பூர் வாங்க என்று கூப்பிட்டுவிட்டு எப்ப வரீங்கங்கறதை மட்டும் கரெக்டாக சொல்லிடுங்க” அப்பத்தானே வீட்டைப் பூட்டிக் கொண்டு எஸ்கேப் ஆக முடியும்? என்று நான் சொன்னதை யாரும் தப்பாக நினைக்கவேயில்லை. என்னுடைய தோழிகள் ஆயிற்றே! இதையெல்லாம் தப்பாக நினைத்தால் என்னுடைய ஃபிரெண்ட்ஸாக இருக்கவே முடியாதே!

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் -19- “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”

சித்ரா ரமேஷ்

அசோகமித்தரன், தி.ஜானகிராமன், அ.முத்துலிங்கம், கி.ராஜநாரயணன், சுந்தரராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், இந்திரா பார்த்தசாரதி இவர்கள் எழுதிய மொத்த சிறுகதைத் தொகுப்புக்கள் இன்னும் இதைப் போல் சிறுகதைத் தொகுப்புகள், கவிதை தொகுப்புகள் வெளிவந்திருப்பதைப் பார்க்க என் போல் புத்தகப் பிரியர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இதைப் போன்ற பெரிய வால்யூம்களில் புத்தகத்தைப் பார்க்கும் போது ஆஹா நேரம் கிடைக்கும் போது நிறையப் படிக்கலாம் என்று மனது ஆசைப் பட்டாலும் எங்களுடைய பத்துக் கட்டளைகளுக்கு உட்பட்டு படிக்க வேண்டும். இதைப் போன்ற கனமான புத்தகங்களைக் கையாள்வதில் உள்ள சிரமம், அப்புறம் யாராவது இரவல் கேட்டால் தர மாட்டேன் என்று சொல்ல முடிவதில்லை. அப்போது சொன்னது போல் புத்தகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்கப் படங்கள் போட்டு சொல்லிவிட்டால் மித்ர துரோகம் செய்தவர்கள் ஆகிவிடுகிறோம். அல்பம் என்ற பட்டப் பேர் வேறு வந்துவிடும். இவை எல்லாவற்றையும் மீறி திரும்பத் திரும்ப அசட்டு நாவல்களைப் படிப்பதிலிருந்து நல்ல இலக்கியங்களை படிக்கட்டுமே என்ற நல்லெண்ணமும் பெருந்தன்மையும் மேலோங்கி கொடுத்து எந்த கதை உனக்குப் பிடித்திருக்கிக்கிறது என்று கேட்டு அதைப் பற்றிப் பேசும் நட்பும் சமயத்தில் தேவைப் படுகிறதே! ஹீம்! இதுக்குக் கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒருவர், ரெண்டு பேரைத் தவிர தேற மாட்டேங்கறாங்க! அப்புறம் எழுத்தாளர்கள் ஏன் இத்தனை கர்வமாக இருக்க வேண்டும்?
வெகுஜன ரசனைக்கு எழுதுகிறவர்கள் ஆகட்டும் இல்லை தீவிர இலக்கியவாதிகள் ஆகட்டும்! தங்கள் எழுத்து மேல் தன்னம்பிக்கை இருக்க வேண்டியதுதான்! அதற்காக அவர்களைப் போலவே வாசகர்களும் அதி மேதாவிகளாக இருந்து விட்டால் இவர்களைப் படிப்பதற்கு யாரும் இருக்க மாட்டர்கள் என்பதை உணருவதில்லையா? சினிமாக்காரங்கதான் இந்த மாதிரி பொது மக்கள் தொடர்பில் கில்லாடிகள்! எழுத்தாளர்களுக்கு அறிவுஜீவித்தனம் வந்து ரொம்ப தொந்தரவு செய்கிறது. உங்க எழுத்தைப் படித்து விட்டு உங்களை சாதாரண மக்களை விட உயர்ந்த நிலையில் வைத்து கேள்விகள் கேட்டால் உங்களால் ஒரு நியாயமான பதிலைத் தர முடியவில்லையென்றால் அந்த எழுத்தின் நேர்மையில் சந்தேகம் வருகிறது.

மர பீரோவில் வைத்துப் பூட்ட முடியாத அளவிற்கு புத்தகங்கள் சேர சேர இன்னொரு பெட்டி தயார் செய்து அதில் அடுக்க ஆரம்பித்தோம். என் பாட்டி, அம்மா சேர்த்து வைத்திருந்த பார்த்திபன் கனவு, துப்பறியும் சாம்பு, தில்லானா மோகனாம்பாள், தியாக பூமி, அடுத்த வீடு போன்ற கதைகளும் சேர்ந்து பெரிய பெட்டி நிறைய புத்தகங்கள்!! ஒனிடா டிவி வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்னவோ சொல்வார்களே! அதைப் போல் ஒரு மன நிலையிலிருந்தோம். அண்ணன் கல்லூரி படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய காலக் கட்டாயம்! உடனே அவன் சங்கராபரணம் சங்கர சாஸ்திரி மாதிரி காலில் இருந்த தண்டை! இல்லை கையில் இருந்த காப்பைக் கழட்டி அடுத்த தலைமுறைக்கு கொடுத்து உயிரை விடுவாரே அதைப் போல் இவனும் பீரோச் சாவியை என்னிடம் கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொல்வான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு என்பது போல் தொடர்கதைகளை கிழித்து வைக்கச் சொல்வது, யாரும் பீரோவின் பக்கத்தில் அநாவசியமாக நிற்காமல் பார்த்துக் கொள்வது போன்ற சில்லறை வேலைகளைக் கொடுத்து விட்டுப் போய்விட்டான். முதலில் கொஞ்ச நாள் அண்ணனுக்கு பயந்து பீரோ பக்கத்திலேயே யாரும் போகாமல்தான் இருந்தோம். அப்புறம் அவந்தான் இல்லையே இனிமே யார் அவனுடைய கோலியெல்லாம் எடுத்து விளையாடப் போறாங்க எனக்கு எடுத்துக் குடேன் என்று தம்பிகள் கேட்க ஆரம்பித்தனர். அண்ணன் அறிவுபூர்வத் தோழன் என்றால் தம்பிகள் விளையாட்டுத் தோழர்கள் ஆயிற்றே!அவர்கள் கெஞ்சிக் கேட்டதும் சரி எடுக்கலாம் ஆனா சாவி கிடையாதே என்று சமாளித்துப் பார்த்தேன். நீ சரின்னு சொன்னா சாவிக்கு நாங்க ஏற்பாடு செஞ்சுக்கறோம் என்று மாற்றுச் சாவி போட்டு திறக்க ஆரம்பித்தோம். முதலில் கோலிக் குண்டுகள், பம்பரங்கள், பட்டம் செய்வதற்கான உபகரணங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளைக் கூட்டத்தினரின் குகையிலிருந்து அலிபாபா திருடியது போல் எடுத்து பீரோவே கிட்டத்தட்ட காலியாகும் நிலை! ஆனால் அப்போது கூட புத்தகங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. லீவுக்கு வரும் போது திறந்து பார்த்து கண்டு பிடித்து கத்தி கலாட்டாப் பண்ணிப் பார்த்தான். யாரும் கண்டுக்கவேயில்லை. மாற்றுச் சாவி போட்டு திறந்த உண்மையை உளறாமல் ரகசியத்தைக் காப்பாற்றி விட்டோம். அப்புறம் நானும் காலேஜ் படிக்க வெளியூர் போன பிறகுதான் உண்மையான கொள்ளை நடந்து விட்டது. ஒரு தம்பி ஒளரங்கசீப் மாதிரி! அவனுக்கும் கலை இலக்கியம் கதை எதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்து விடுவான். இப்போது கூட ஹாங்காங்கில் வீ¤டியோ கடையிலிருந்து போன் செய்வான். என்ன சினிமா பார்க்கலாம்? என்று விசாரித்து விட்டு விசிடி வாங்கிக் கொண்டுப் போவான். “அழகிய தீயே” பாரு என்று கடைசியாக பரிந்துரைத்தப் படம். கடைசித் தம்பிதான் தமிழ்வாணன் கதையைப் படிக்க முயற்சி செய்தான். அவனுக்கு நண்பர்களிடம் சாமர்த்தியமாக நடந்து கொள்ளத் தெரியாத அப்பாவி! அவன்தான் யாராவது நண்பர்கள் கேட்கிறார்கள் என்று திறந்து எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும். இப்படி நிறைய கதைகள் காணாமல் போக, பெட்டியில் போட்டுப் பூட்டியக் கதைகளும் கறையான் அரித்து மிஞ்சியதையும் வேண்டாம் என்று வெறுத்து நாங்களே முன் வந்து யாருக்கோ கொடுத்து விட்டோம். அண்ணன் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் மீண்டும் இந்தப் பழக்கம் தொடங்கி நிறைய புத்தகம் வாங்கி அடுக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் முன்பு போலில்லாமல் யார் கேட்டாலும் கொடுத்து அவர்கள் படிப்பதைப் பார்த்து மகிழும் அற்புத மனது இருவருக்கும் தோன்றி விட்டது. அம்பையின் 'அம்மா ஒரு கொலை செய்தாள்' தொகுப்பைக் கொடுத்து என் நெருங்கிய தோழிகள் அனைவரையும் பெண் எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றி எழுத வேண்டும் என்றெல்லாம் பேசுவோமே இவங்க கதைகளைப் படித்துப் பார் ஒரு பெண்ணின் குரல் எப்படி ஒலிக்கிறது என்று அனைவரையும் படிக்க வைத்து உணரச் செய்த மனது மெல்ல முதிர்ச்சியடையத் தொடங்கியது.

முதலில் துப்பறியும் கதைகள், நாவல்கள் என்று தொடங்கிய பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விஷயங்களைத் தேடி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி விட்டது. தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' படித்து விட்டு ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் மாறவில்லை. 'மரப்பசு' அம்மணிதான் ஒரு பெண்மையின் இறுதியான விடுதலையோ? இப்படியெல்லாம் யோசிக்க வைத்தக் கதைகள் நிறைய இருந்தாலும் அவரது 'தீர்மானம்' என்ற சிறுகதை! அதை படிக்கும் போதெல்லாம் .. ..

முதல் முதலில் படிக்கும் போது பதிமூணு வயதிருக்கும். விக்கி விக்கி அழத் தோன்றியது. பத்து பதினோரு வயது சிறுமி! அந்தக் கால வழக்கப்படி சீக்கிரம் கல்யாணம் ஆகியிருக்கும். அதில் ஏதோ ஏமாற்றிவிட்டார்கள் என்ற கோபத்தில் பெண்ணின் அப்பா பெண்ணை புகுந்த வீட்டுத் தொடர்பு இல்லாமல் வளர்க்கிறார். அப்பா இல்லாத சமயம் மாமனாரும், சின்ன மாமனாரும் வந்து கூப்பிடுவார்கள். இந்தப் பெண் குங்குமத்தை எடுத்து இட்டுக் கொண்டு கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாவாடையையும் சுருட்டிக் கொண்டு அவர்களோடு கிளம்பிவிடுவாள். வீட்டில் இருக்கும் அத்தை பதைபதைத்துப் போய்விடுவாள். அத்தை அப்பா வந்தால் சொல்லிவிடு அவாத்துலே என்னைக் கூப்பிடறா நான் கிளம்பறேன் என்று கிளம்பி விடுவாள். கிளம்பிப் போனதும் பக்கத்து வீட்டு மாமி வந்து என்ன தீர்மானம் இத்தனூண்டு பெண் கிட்ட என்று மாய்ந்து மாய்ந்து போவாள். அப்பா வந்ததும் அத்தை புலம்புவாள். யம கிங்கிரர்கள் மாதிரி ரெண்டு பேரும் கூப்பிட்டதும் கிளம்பிப் போய்டுத்தே பசிக்கறதுன்னா ஒருவாய் சாப்பிடக் கூட இல்லை என்று பொருமுவாள். அப்பா உடனே குழம்பு சாதத்தை எடுத்துக் கட்டிக் கொண்டு கிளப்புவார். அப்பா வண்டி வருவதைப் பார்த்து நிறுத்த அப்பா சாப்பிடாமலேயே போய்ட்டியே என்று சாப்பிடத்தருவார். மிச்ச சாப்பாட்டை ஆற்றில் தூக்கி வீசிவிடுவார். அப்பா நீ எங்காத்துக்கு வருவியாப்பா என்று அந்தப் பெண் கேட்க நீ என்னைப் பார்க்க வா என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். அந்தக் கதையைப் படிக்கும் போது நானும் அந்தப்
பெண்ணைப் போலத்தான் என்று நினைத்து ஒரு துக்கம் பொங்கும். அந்த பதிமூணு வயது திரும்ப வந்தது போல் மனது பேயாட்டம் போடும். உண்மையிலேயே எனக்குத் திருமணம் ஆனதும் எனக்கு மட்டுமில்லை எல்லாப் பெண்களுக்கும் திருமணம் ஆகிப் போகும் போது பொங்குகிற துக்கம் தான் இது. வீட்டுக்கு ஒரே பெண்ணாக 'குட்டி இளவரசியாக' வளைய வந்த வீடு நமக்குச் சொந்தம் இல்லை என்று எங்கேயோ அனுப்பிவிடுகிறார்களே என்ற சோகம்! அப்புறம் நம்ம வீடு, குழந்தை என்றான பிறகு அம்மா அப்பா அவசரம் என்று கூப்பிட்டால் கூட நினைத்த போது நம் வீட்டை விட்டுக் கிளம்ப முடியாத பிரச்சனைகள். ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தவர்கள்தானா என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஒன்றாக சேரும் போது கூட ஒருத்தருக்கு போன் வரும். உடனே கிளம்ப வேண்டியதுதான்! பின்ன வாழ்க்கையிலேயே முக்கிய உறவான அவங்க வீட்டம்மா கூப்பீட்டால் ஓட வேண்டியதுதானே என்று எங்களை நாங்களே சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்!

வளர்ச்சி என்பது இப்படித்தான் நிகழ வேண்டும் என்று யாரும் அட்டவணைப் போட்டுப் பார்க்க முடிவதில்லை. நம் கண்ணெதிரே பார்பி பொம்மைக் கேட்டு அடம் பிடிக்கும் பெண் 'ஸ்டார்டஸ்ட்' பார்த்துக் கொண்டு அம்மா இதில் யார் ரொம்ப ஹேன்ட்ஸம் என்று கேட்கும் போது ஒரு கணம் தூக்கி வாரிப் போடுகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் போலத்தான் ரசனைகளும் வளர்கின்றது. ஆனால் நிறையப் பேர் படிக்கிறோம் என்கிறார்கள். ஆனால் அதில் வளர்ச்சி என்பது எப்பவோ நின்று விட்டது போல் இருக்கிறது. சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, சிவசங்கரியோட இல்லை இன்னும் சில தீவிர தமிழ் ஆர்வலர்கள் நாபா, முவ, ஜெயகாந்தன் என்று அதற்கு மேல் வளராமல் நிற்பது குறைபாடுதான் என்பதை உணராமல் இருக்கிறார்கள். ஜேகே ஓஷோ என்று எக்ஸ்ஸிஸ்டென்ஷியலிசம், சர்ரியலிசமெல்லாம் படிக்க வேண்டாம். அட நம்ப ஜெயகாந்தனுக்கு அப்புறம் இப்போ ஜெயமோகனெல்லாம் வந்து பிரமாதமாக எழுதுகிறாரே என்று யோசிக்க வேண்டாமா? பாரதி, கண்ணதாசனுக்கு அப்புறம் கவிதைக்கு ஆளே இல்லை என்று வேறெதையும் படிக்காத பிடிவாதம் விதண்டாவாதம்தான்! மீராவின் கனவுகள் + கற்பனைகள் படித்து விட்டு எத்தனைக் காதலர்கள் கவிஞன் ஆக வேண்டும் என்ற கனவுகள் + கற்பனைகளோடு அலைந்தார்களோ? இப்ப ந முத்துக்குமார் எழுதிய கவிதைகள்!சினிமாவுக்குப் பாட்டு எழுதும் முகமூடி இருந்தாலும் பிரமாதமாக எழுதுகிறார். புதியதாக மனதுக்கு நிறைவைத் தரும் எதுவுமே ஒரு இலக்கிய அந்தஸ்து பெற்று விடுகிறது. சினிமா மெட்டுக்கு பாட்டு எழுதினால் நல்ல கவிதை இல்லை என்ற ஒரு அபத்தக் கருத்து நிலவுகிறது. இந்த மாதிரி சினிமாப் பாட்டு மட்டும் இல்லையென்றால் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போவதற்கு வேறு என்ன ஊடகம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
ஊருக்குப் போகும் போது புத்தகங்கள் வாங்கி இன்னும் இருவரும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். எந்த நல்ல விஷயத்தையும் இன்னும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை. சமீபத்தில்தான் அவனுடைய பீரோவுக்கு மாற்றுச் சாவிப் போட்டு திறந்த விஷயத்தை உளறி வைத்தேன். ரொம்ப மூட் அவுட் ஆகி என் கணவரிடம் உன் மனைவியால் எனக்கு எக்கச்சக்க மனக் கஷ்டம். நீதான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அட்லீஸ்ட் ஒரு மில்லியனாவது தர வேண்டும் என்று புலம்ப இந்த விஷயம் உன் தங்கையாய் இருந்தப்ப நடந்த விஷயம் இப்ப என் மனைவியாக ஆன பிறகு இதைப் பற்றி பேசி வம்பு வளர்த்ததற்கு நீதான் நஷ்ட ஈடு தர வேண்டும் இருவரும் கொஞ்ச நேரம் சட்ட நுணுக்கங்களைப் பற்றி நட்புடன் பேசிக்கொண்டார்கள்.

“ மிக உயர்ந்த பிறப்பு பெண்தான்! தெரியுமா? உங்களுக்கு எக்ஸ்ஒய் குரோமோசோம் என்பதெல்லாம் அபத்தம். ஒரு எக்ஸ் ஆண் இல்லை ரெண்டு எக்ஸ் பெண் என்பதுதான் சமீபத்திய கண்டுபிடிப்பு. ஒய் இருப்பது சும்மா! என்று நான் எதாவது விஞ்ஞானபூர்வமாக பேசி பெண்களுக்காகக் குரல் கொடுத்தால் எதுக்கு இவளுக்கு இப்படி இடம் கொடுத்து கெடுத்துட்டீங்க என்று செல்லமாக கண்டிக்கும் அண்ணன்! உலத்தில் எல்லா அண்ணன்களும் கல்யாணம் ஆகிப் போகும் தங்கைக்கு என்ன சொல்வார்களோ தெரியாது. ஆனால் உன்னில் இருக்கும் நீ தொலைந்து போகும் படி ஒரு உறவில் நிர்ப்பந்தங்கள் இருந்தால் நீ எந்த யோசனையும் இல்லாமல் தைரியமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்று சித்ரா என்ற தனித்துவம் மாறாமல் இருக்க ஆலோசனை சொன்ன அதிசயப் பிறவி ஆயிற்றே!

இப்போது கூட யார் வீட்டுக்காவது போகும் போது அவர்கள் வீட்டில் பழைய பத்திரிகைகளிலிருந்து கிழித்து சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்தால் பரவசமாக இருக்கிறது. பழைய சினிமா விமர்சனங்கள், ஜோக்குகள், விளம்பரங்கள் இவற்றோடு அதைப் படிப்பதே ஒரு தனி சுகம்தான்.தில்லானா மோகனாம்பாள் படிக்கும் போது “அய் அம்மா அப்பா உங்க கல்யாண போட்டொ வந்திருக்கு” என்று ஆச்சரியப்பட வைக்கும். என் அம்மா அப்பா மட்டுமில்லை என் அத்தைகள், மற்றும் எங்க குடும்பத்தின் நிறைய கல்யாணக் காட்சிகளைப் பழைய ஆனந்த விகடன் தொடர்கதைகளில் பார்க்கலாம். இதில் ஒரு சின்ன ரகசியம் இருக்கிறது. என்ன? என்ன? அது என்ன? விகடன் குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஒரு உறவு முறை!

எல்லாவற்றையும் மன்னித்தாலும் அப்புசாமித் தாத்தாக் கதைகளும், தீவிர சிவாஜி ரசிகனான அவன் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தொகுத்த சிவாஜியின் முதல் நூறு படங்களின் ஸ்டில்களோடு சிவாஜியே அந்த நூறு படங்களை பற்றி சின்ன கமென்ட் கொடுத்திருப்பார். அந்த புத்தகமும் தொலைந்து போனதை மட்டும் அவனால் மன்னிக்கவே முடியவில்லை. நானும் அவனைப் போலவே சிவாஜி ரசிகையானதால் கண்டிப்பாக என்னால் அந்தப் புத்தகம் தொலைய வாய்ப்பில்லை என்பதை நிரூபித்து விட்டேன். பரவாயில்லை ஃபிலிம் நியூஸ் ஆனந்தனிடமே அந்த புத்தகத்திற்கு இன்னொரு பிரதி இருக்கிறதா என்று போய்க் கேட்டுப் பார்ப்போம் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். இதைப் படிப்பவர்கள் யாரிடமாவது இருந்தால் கொடுக்கலாம். ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம். ஆனால் அந்த ஒரேஒரு முறை பார்ப்பதற்கு எத்தனை நாளாகும் என்பதைத்தான் தீர்மானம் செய்யவில்லை. அப்படித் திருப்பித் தர முடியவில்லையென்றாலும் கவலைப் பட வேண்டாம். நிறைய நஷ்டஈடு தர நான் ஏற்பாடு செய்கிறேன். யாரிடமாவது இருக்கிறதா? இன்னும் அந்த பீரோ பத்திரமாக இருக்கிறது. அதிலிருந்து கடைசியாக கொள்ளை அடிக்க முயற்சி செய்தது என் பையனும் என் அண்ணன் பையனும் சேர்ந்து! ஒரு ஸ்டாம்ப் ஆல்பம், உபயோகிக்கும் நிலையில் இருந்த வியூ மாஸ்டர்! இரண்டையுமே என் மருமகன் எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டேன். பாவம்! இதுவாவது அண்ணன் பையனுக்கு அவன் அப்பா சொத்து என்று போகட்டும் என்று!

ஆனால் இன்னும் அந்த பீரோவுக்குப் பெயர் 'கோபால் பீரோ”!

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் -18 - “பூங்கதவே தாள் திறவாய்”

சித்ரா ரமேஷ்

வாசித்தல் என்பது சுவாசித்தல் மாதிரி நிகழ வேண்டும். கையில் பொட்டலம் கட்டி வந்த பேப்பர் கிடைத்தால் கூட படிப்பேன். சிறு வயதிலிருந்தே 'விதரிங் ஹைட்ஸ்', 'டேல் ஆஃப் டூ சிடீஸ்', 'விக்கார் ஆஃப் தி வேக் ஃபீல்ட்', 'பிரைட் அண்ட் ப்ரெஜுடிஸ்' போன்ற அற்புத இலக்கியங்களைப் படித்து மனதை மேன்மைப் படுத்திக் கொண்டேன்!!ஹீ!ஹீ!ஹீ!ஹீ! இப்படியெல்லாம் நான் எழுதி நீங்க நம்பத் தொடங்கினா இந்த ஆட்டோகிராஃப் படிப்பதைப் பற்றி கொஞ்சம் மறு பரிசீலனை செய்யுங்க! கபட வேடதாரிகள் நிறைந்த உலகம் இது! இதையெல்லாம் படிப்பதற்கு நான் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போர்டிங் ஸ்கூலில் கன்யாஸ்திரீகள் பொறுப்பில் வளர்ந்த கான்வெண்ட் பெண்ணா? பக்கத்து வீட்டு தினத்தந்தியில் தினமும் “பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்” என்று ஆண்டிப் பண்டாரம் 'குறும்பாகப்' பாடுவதையும், “லைலா என்ன இது?” “வேண்டாம் சிந்துபாத்!” சிந்துபாத் கத்தியை உருவினான். தொடரும். சி10235. என்று படித்து குட்டி லைலாவுக்கு என்ன ஆகுமோ என்று மனம் பதைத்தவள்! தினத்தந்தியில் ஆண்டிபண்டாரம் கிட்டத்தட்ட ஆயிரம் முறையாவது குளிக்கும் அழகிகளை பார்த்து பாடியிருப்பார். இது என்ன கலாச்சாரமோ? கிரஹச்சாரம்! மேல் மட்ட வர்க்கத்தினரின் கையில் இலக்கியம் இருக்கட்டும். செய்திகளாவது எல்லோருக்கும் போய் சேரட்டும் என்று தினத்தந்தி பாமரர்கள் கூட படிக்கும் வகையில் உருவாக்கியதை எல்லோரும் புகழட்டும். கூடவே கொஞ்சம் கொஞ்சமாவது ஒரு நல்ல ரசனையையும் வளர்த்து விட்டிருக்கலாம். இதையெல்லாம் எல்லோரும் படிக்க மாட்டார்கள் என்று யாரும் தீர்மானிக்க முடியாது. எப்படியோ நமக்குத் தேவையான அக்கப்போரை நம்பிக்கையான முறையில் கொடுத்து வந்த தினத்தந்தியின் வியாபாரத்தந்திரத்தை பாராட்டாமல் இருக்க முடியாதுதான்! ஒரு செய்தி! ஆளில்லா ரயில்பாதையில் பஸ் மோதி 22 பேர் சாவு! இதில் இறந்து போனவரில் ஒருவர் வசந்தி. வயது 32! குறிப்பு: இவர் ஒரு எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்ததே! பின்குறிப்பு: இவர் எழுத்தாளர் வாசந்தி இல்லை! இப்படி ஒரு செய்தியை தினத்தந்தி மட்டுமே தர முடியும்!

சித்திரக் கதைகளை எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்த போது கூட 'வேதாளம்' கதைகள் புரியாது! வேதாளம் முத்திரை எதற்கு இடுகிறார்? ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கும் ஆதிவாசிகளின் இங்கிலிஷ் மன்னரான 'வேதாளம்' கதை கொஞ்சம் நம்ப கலாச்சாரத்துக்கு மாறுபட்டதுதானே! “மரண அடி மல்லப்பா” “அஞ்சு பைசா அம்மு” போன்ற குமுதம் காமடி ஸ்ட்ரிப்! குமுதம் மாலைமதி இதழ் முதலில் குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் தான் வெளியிட்டார்கள். 'காதல் காவலர் அப்புசாமி, ரத்தினசாமிக்கு ஜே, குண்டுபூபதி போன்ற கதைகளை அண்ணன் அம்மாவை அரித்து காசு வாங்கி வாங்கிக் கொண்டு வந்து விடுவான். யார் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ தெரியாது! நம்மிடம் அந்த புத்தகத்தைக் கண்ணில் கூட காட்டாமல் மறைத்து வைப்பதில் மன்னன். கெஞ்சிக் கூத்தாடி அம்மா வரைக்கும் போய் நாட்டாமைத் தீர்ப்புக்குக் கட்டுப் பட்டு ஒருமணி நேரத்துக்குள் தந்து விட வேண்டும் என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பான். எப்படித்தான் இப்படி அல்பமாக இருக்கிறாயோ என்று என்ன திட்டினாலும் கண்டு கொள்ளாமல் புத்தகத்தை வாங்கி அவனுடைய பொக்கிஷக் கருவூலமான மர பீரோவில் வைத்துப் பூட்டினால்தான் ஜென்ம சாபல்யமடைவான். அந்த மர பீரோவுக்கு பூட்டு சாவியெல்லாம் கிடையாது. இவனே அதுக்கு பாட்லாக், சாவியெல்லாம் வாங்கி பொருத்தி பூட்டி சாவியை யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துக் கொண்டு அலைவான். மெட்றாஸ் போகும் போது மூர் மார்க்கெட் என்று ஒரு நிதி நிறுவனம் இருக்கும். அதில் பழைய புத்தகங்கள், பழைய கண்ணன் இதழ்கள், ராணிமுத்து எல்லாம் வாங்கி பத்திரப் படுத்துவான். புத்தகம் வாங்குவது படிப்பதற்காகத்தான் என்று யாராவது அவனிடம் உரத்தக் குரலில் சொன்னால் தேவலை. அவன் வாங்கியப் புத்தகத்தை அவனே கூட சில சமயம் படிக்காமல் லைப்ரரியிலிருந்து எடுத்து படிக்கும் கூத்தெல்லாம் உண்டு!

எப்படியோ பெரியவன் என்று சலுகையில் இதைப் போன்ற கொடுங்கோலாட்சி செய்து
கொண்டிருந்தான். அவன் தராததால் நானும் புத்தகம் வாங்க வேண்டும் என்று தகறாறு செய்ய ஆரம்பித்ததும்தான் அமைதிக் குழு ஏற்பாட்டின் பேரில் எனக்கும் புத்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அப்படியும் புத்தகங்களை லேசில் எடுத்து யாருக்கும் கொடுத்து விட மாட்டான். அவனுடைய நெருங்கிய நண்பனுக்கு ஒரே ஒரு புத்தகம் இரவல் கொடுத்து விட்டு மறு நாளே அவன் வீட்டிலிருந்து அதை தூக்கிக் கொண்டு வந்து விட்டான். கேட்டதற்கு இவன் சொன்ன மாதிரி நடந்து கொள்ளவில்லை என்று பதில்! புத்தகத்தைக் கசக்கக் கூடாது. மடிக்கக் கூடாது. எச்சில் பண்ணி பக்கங்களைப் புரட்டக் கூடாது. படித்துக் கொண்டிருக்கும் போது வேறு ஏதாவது வேலை வந்து விட்டால் அதை அப்படியே மடக்கி போட்டு விட்டு போகக் கூடாது. புத்தகத்தின் ஓரம் மடித்து அடையாளம் வைக்கக் கூடாது. என்று அவன் சொன்ன கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டுத்தானே நடந்து கொண்டேன் என்று அந்த நண்பன் பரிதாபமாகக் கேட்க “நா வீட்டுக்கு வந்தப்ப உங்கக்கா இந்தப் புத்தகத்தை எடுத்து பாத்துக்கிட்டு இருந்தாங்களே?” என்று சொன்னதும் நொந்து போய்விட்டான். ஆமாம் அவன் சொன்ன கட்டளைகள் அந்த அக்காவுக்கு எப்படித் தெரியும்? அப்படியேத் தெரிந்தாலும் கட்டுப் பட்டு நடக்கவில்லையென்றால் அந்த அக்காவிடம் கேட்க முடியுமா? இந்த விளக்கத்தைக் கேட்டு அந்த நண்பன் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் போய்விட்டான். ஆனால் எனக்கு என்னவோ அண்ணனின் கோபம் நியாயமாகத்தான் பட்டது! சொந்தத் தம்பி தங்கைக்கே தராதவன் அந்த நண்பனுக்கு கொடுத்தான் என்றால் அந்த நண்பன்தான் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்! இப்பொது கூட யார் வீட்டுக்காவது போய் அங்கே புத்தகங்கள் விரித்தபடி கவிழ்ந்து கிடந்தால் நான் எடுத்து “ ஏய்! நீ படிச்சிக்கிட்டு இருந்தது 235வது பக்கம் என்று சொல்லி புத்தகத்தை சரியாக வைத்துவிடுவேன். ஒருத்தி சாமர்த்தியமாக “புக் பாட்டுக்கு கிடக்கு! அதை ஏன் எடுத்து மூடறே! நீ சொல்ற பக்கமெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்காதுன்னு சொல்லப் போக படிக்கிற புத்தகத்தில் என்ன படிக்கிறோம்னு ஞாபகம் வெச்சுக்க முடியலைன்னா நீ புத்தகம் படிப்பதே வேஸ்ட் என்று பதில் சொல்லியதிலிருந்து அவள் என்னைப் பார்த்தாலே பதுங்குக் குழியில் இருக்கும் வீரனைப் போல் ஆகி விடுகிறாள். எல்லாம் அண்ணன் காட்டிய வழிதான்!

சோவியத் யூனியன் புத்தகக் கண்காட்சி வருடாவருடம் வரும். அதில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் பிரமாதமாக இருக்கும். நல்ல கெட்டியான அட்டையுடன் மழமழவென்ற ஆர்ட் பேப்பரில், வண்ணப் படங்களோடு எளிமையான ஆங்கிலம் இல்லை அழகான மொழிபெயர்ப்போடு புத்தகங்கள். எல்ல்லோருக்கும் காசு கொடுத்து ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொல்லும் அம்மா! இதற்கு மறுப்பேதும் சொல்லாத அண்ணன்! எப்படியும் படித்து முடித்தவுடன் அவனிடம் வந்து சேர்ந்து விடுமென்ற நம்பிக்கைதான்! “தூக்கம் பிடிக்கவில்லை சிறுமி மாஷாவுக்கு” கதைத் தலைப்பே கவிதை மாதிரி இல்லை! அழகான இளம்சிவப்பு நிற படுக்கையறை! இரவு உடையோடு ஒரு குட்டிப் பெண்! அவளுக்குக் கதை சொல்லி தூங்க வைக்கும் அம்மா! வரிசையாக கறுப்பு ஜமுக்காளத்தில் தலைகாணி போட்டுக் கொண்டு இன்னிக்கு யார் அம்மா பக்கத்தில் என்று சண்டை போட்டுக் கொண்டு படுக்கும் எங்களுக்கு யாரும் என் பக்கத்துலே வேண்டாம் எல்லாரும் உதைச்சே கொன்னுடுவீங்கன்னு அம்மா மறுப்பு சொன்னாலும் எதாவது ஒரு குழந்தை அருகிலாவது படுக்கத்தான் வேண்டியிருக்கும், இந்தக் கதைகள் ஆச்சரியமூட்ட வைத்தன. அம்மா கதை சொல்லி தூங்க வைத்தும் தூக்கம் வராமல் வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டத்தில் போய் நின்று விடுகிறாள். அங்கே ஒரு ஆந்தை மரக்கிளையில் தன்னுடன் வந்து இருக்கும் படி கேட்கும். அப்புறம் ஒரு தவளை தன்னுடன் தண்ணீரில் வந்து படுத்துக் கொள்ளும் படிச் சொல்லும். இப்படி எல்லா இடத்திற்கும் போய் சுற்றி விட்டு உலகத்திலேயே சிறந்த இடம் என் பெட் ரூம்தானென்று முடிவுக்கு வந்து நிம்மதியாகத் தூங்குவாள் சிறுமி மாஷா! அதிசய ஏழு நிறப்பூ! என்ற கதை! இதைத் தழுவித்தான் சமீபத்தில் நம்ப சூப்பர் ஸ்டார் பாபா கூட வந்தது. ஏழு வண்ண இதழ்கள் கொண்ட பூ ஒன்று ஒறு சிறுமியிடம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இதழையும் பிய்த்து “பறப்பாய் பறப்பாய் பூவிதழே! கிழக்கிலிருந்து மேற்காய், மேற்கிலிருந்து வடக்காய், வடக்கிலிருந்து தெற்காய், மீண்டும் தெற்கிலிருந்து கிழக்காய்” என்று அற்புத மந்திரத்தைச் சொல்லி தனக்கு விருப்பப் படுவதைக் கேட்பாள். முதல் முறை ஐஸ்கிரீம், இரண்டாம் முறை வடதுருவத்துக்குப் போவதற்கு, மூன்றாம் முறை வடதுருவத்திலிருந்து வீடு திரும்புவதற்கு என்று எல்லாவற்றையும் வீணடித்து விட்டு கடைசி இதழ் இருக்கும் போது ஒரு கால் ஊனமான சிறுவனுக்கு உதவுவாள். சிறுமி இப்படி விளையாட்டுத்தனமாக இருந்தால் ரசிக்க முடியும். ரிட்டயர் ஆகிற வயசில் ஒருவர் இப்படி விளையாட்டுத்தனமாக வீணடித்தால் ரசிக்க முடியுமா?

“மறைந்த தந்தி” 'சுக்' 'கெக்' மாஸ்கோவில் இருக்கும் இரட்டைச் சிறுவர்கள். அப்பா சைபீரியக் காட்டில் வேலை செய்யும் ஆஃபிஸர். கிறிஸ்மஸ்ஸ§க்கு அப்பா வேலை செய்யும் அந்த காட்டுப் பகுதிக்குப் போகலாம் என்று திட்டமிடும் அம்மா டிக்கட் வாங்கப் போயிருக்கும் போது ஒரு தந்தி வரும். அதை இருவரும் சண்டை போடும் மும்முரத்தில் தொலைத்து விடுவார்கள். “அம்மா வந்து தந்தி எங்கே என்று கேட்பாள்” என்று சுக் பயப்படுவான். கெக் கொஞ்சம் தைரியசாலி. அம்மாவிடம் தந்தி வரவேயில்லை என்று சொல்லிவிடலாம் என்று தைரியம் சொல்வான். பொய் சொன்னால் அம்மாவுக்குப் பிடிக்காதே! உலகத்தில் எல்லா அம்மாக்களும் ஒன்றுதான் போல இருக்கிறது! அம்மா வந்து தந்தி எங்கே என்று கேட்டால் உண்மையை சொல்லிவிடலாம் என்று இருவரும் தீர்மானிப்பார்கள். அம்மாவுக்குத்தான் தந்தி வந்ததே தெரியாதே! தெரிந்தால்தானே கேட்பாள்! கடைசியில் ரொம்ப கஷ்டப்பட்டு அப்பாயிருக்கும் அந்த பனி படர்ந்த காட்டுக்குள் போய் அங்கே அப்பா இல்லாமல் ஒரு காவல்காரன் மட்டும் இருப்பான். அப்பா கொடுத்த தந்தியைப் பற்றித் தெரிந்து கொண்டு அம்மா எப்படியோ நிலைமையைச் சமாளித்து அப்பாவும் அவர்களுடன் கிறிஸ்மஸ்ஸ§க்கு வந்து சேர்ந்து விடுவார். இந்தக் கதைகள் நம்மைக் கதையோடு பயணம் செய்ய வைக்கும். சோவியத் யூனியன் உடைந்து சிதறிப் போனதில் இப்படி ஒரு இலக்கிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதோ? பாவம் ரஜனிக்கு கதை சொல்லி சொல்லி ஓய்ந்து போன கதாசிரியர்களுக்கு ஒரு டிப்ஸ்! இந்த “மறைந்ததந்தி” கதையை உல்ட்டாப் பண்ணி சூப்பராக் கதை சொல்லலாம். “சுக்” “கெக்” என்று இரட்டை வேஷங்களூம் ரஜனியே நடிக்கலாம். இரண்டு கதாநாயகிகள்! ஒரு காட்டுவாசிப் பெண்! ஒரு நகரப் பெண்! இது இல்லாமல் முறைப் பெண் என்று மூன்றாவது கதாநாயகியைக் கூட சேர்த்துக் கொள்ளலாம். சைபிரியக் காடுகளில் லொகெஷன்! இதுவரை யாரும் படம் பிடிக்காத லொகெஷன்! டைட்டில் சாங் கூட பிரமாதமாக எழுதிவிடலாம்.

சினிமாப் பாட்டுப் புத்தகங்கள்! இசைத் தட்டு வடிவத்திலேயே ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகம் வந்ததே என்ன சினிமான்னு நினைவு இருக்கா? கண்டு பிடியுங்க! திண்ணை ஆசிரியரிடம் சொல்லி அந்தப் பாட்டுகளை உங்கள் கணினியில் இலவசமாக “இறக்குமதி” செய்யச் சொல்கிறேன். பாட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் கதைச் சுருக்கம் போட்டிருக்கும். சேகர் அந்த சுந்தரியைச் சந்தித்தானா? காணாமல் போனக் குழந்தை என்ன ஆயிற்று? ராஜூ இழந்த சொத்தை மீண்டும் பெற்றாரா? விமாலாவுக்குப் பைத்தியம் தெளிந்ததா? போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் தெள்ளென பதில்! “மணாளனே மங்கையின் பாக்கியம்” படத்தின் கதையில் கதைச் சுருக்கத்தை விட இதைப் போன்ற கேள்விகள் நிறைய இருந்தது. படம் முடியுமா என்ற சந்தேகமே வந்து விட்டது! 18 ரீல் படத்தில் இப்படி முடிச்சு மேல் முடிச்சு போட்டுத் தெளிய வைப்பதுதானே சரியான டெக்னிக்! பாட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டு பாட்டுப் பாடுவதுக் கூட ஒரு கலை! பாடல் ஆரம்பத்தில் தொகையறா என்றெல்லாம் இருக்கும். அதை போய் தொகையறா என்று பாடினால்! ஹிந்தி படப் பாட்டு புத்தகமெல்லாம் வாங்கி வேறு பாடிப் பார்ப்போம். “மேரி சப்னேக்கி ராணி கப்பு ஆயே கித்தூ” முதல் வரி பழகி விட்டிருப்பதால் பாடிவிடலாம். அப்புறம் ஆயி கிஸ் மஸ்தானே என்று வாயில் நுழையாத வார்த்தையெல்லாம் வந்து பாடவிடாமல் செய்யும்.

பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை கிழித்து 'பைண்ட்' பண்ணி பீரோவுக்குள் வைப்பது, அந்த மர பீரோவில் புத்தகங்கள் மட்டுமில்லை. கோலிக் குண்டு, சீட்டுக் கட்டு, சோடாமூடி, சிகரெட் அட்டைகள், டுவைன் நூல்கண்டு, கோணிஊசி, பாட்டரி, கிரீட்டிங்ஸ் கார்ட்ஸ், பழைய பொம்மைகளின் உடைந்த சக்கரம், இன்னும் விளையாடக் கூடிய நிலையில் இருக்கும் தகரப்பொம்மைகள், முட்டை போடும் கோழி, கொக் கொக் என்று கொத்தும் கோழி, பம்பரம், நாங்களே செய்த கெலிடாஸ்கோப், கண்ணாடிக் கடையிலிருந்து நீளமான கண்ணாடித் துண்டுகளை எடுத்து வந்து முப்பட்டையாக்கிக் கட்டி உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளைப் போட்டு ஒரு லென்ஸ் வைத்துப் பார்த்தால் கெலிடாஸ்கோப், எங்க குடும்பச் சொத்தான வியூ மாஸ்டர் இதில் முப்பரிமாணத்தில் படங்கள் தெரியும். நேரு வாழ்க்கை வரலாறு, தம்ப்லீனா, இந்திய நடனங்கள், ஸ்நோவொயிட் என்று வியூ மாஸ்டரில் பார்ப்பதற்கு சின்ன வட்ட வடிவமான புகைப்படங்கள். கலர்ல பார்ப்பதற்கு பிரமாதமாக இருக்கும். சின்ன சின்ன ஃபிலிம் துண்டுகள் எங்கிருந்தோ கொண்டு வருவான். அதை இருட்டில் சினிமா மாதிரி போட்டுக் காட்டுவான். அந்த வயதில் அண்ணன்தான் எங்களுக்குப் பெரியா ஹீரோ! இப்படி கையில் கிடைப்பதையெல்லாம் சேர்த்து உள்ளே வைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவனின் பீரோ எனக்கும் என் தம்பிகளுக்கும் ஒரு கனவுப் பிரதேசமாக இருந்தது. அவன் வாரம் ஒருமுறை அதைத் திறக்கும் போது அதைச் சுற்றி உட்கார்ந்து கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருப்போம். தீசல்! எதையும் தொட விட மாட்டான். இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்க்காமல் என் அம்மா
“ஏண்டா பெரியவனா இருந்துண்டு இப்படி இருக்கே! அதுங்கக் கையிலே எதையாவது கொடேன். நாளைக்குத் தம்பி தங்கைகளுக்கு நீ ஏதாவது பண்ணிடுவியா?' என்று வீராவேசமாகக் கேட்டால் கொஞ்சம் மனமிறங்கி வியூ மாஸ்டரைப் பார்ப்பதற்கு வாய்ப்புத் தருவான். இரண்டு மூன்று உடைந்த பம்பரத்தை எடுத்து ஆணி அடித்து தருவதாக வாக்குத் தருவான். எனக்குப் போனால் போகிறது என்று பெருந்தன்மையாக சேர்த்து தைத்து வைத்திருக்கும் பாட்டு புத்தகத்தையோ அல்லது அவனுக்குப் பிடிக்காத ராணிமுத்து புத்தகத்தையோ படிக்கத் தருவான். இப்படி மூன்றாம் முறையாக “பாரு பாரு பட்டணம் பாரு” என்ற குரும்பூர் குப்புசாமி எழுதிய ராணிமுத்துவைக் கொடுக்க ரோஷம் வந்து வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து விட்டேன். அதுக்குப் பதிலா 'படகு வீடு' கொடுத்தால்தான் ஆச்சு என்று பிடிவாதம் செய்து வாங்கி விட்டேன். பிறகு இருவரும் சேர்ந்து ஒத்த அலை வரிசையாகி 'படகு வீட்டை' சினிமாவாக எடுக்க ஸ்க்ரிப்ட் எல்லாம் கூட எழுதினோம். சிவாஜி, வாணிஸ்ரீ, நாகேஷ், முத்துராமன், எஸ்விரங்காராவ் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே நடிக்க வைத்திருந்தோம். அப்புறம் ஆண்டவன் கட்டளை பார்த்து விட்டு கிட்டத்தட்ட அதே கதையை எடுப்பதில் அர்த்தமில்லை என்று கைவிட்டு விட்டோம். இதேபோல் பிவிஆர் எழுதிய “தொடுவானம்” என்று ஒரு நாவல். அதில் நர்மதா என்ற செம அழகான கர்வமான பெண்! உன் அழகுக்கு நகை நட்டு ஏதுக்கடி என்ற வார்த்தை வரும். அதைக் கூட திரைப்படமாக எடுத்துப் பார்த்தோம். என் அண்ணன் சிவாஜியைத் தவிர வேறு யாரையும் ஹீரோவாக ஒத்துக் கொள்ளவே மாட்டான். தொடுவானம் ஹீரோயின் சப்ஜெக்ட். இதில் நடிக்க சிவாஜி ஒத்துக் கொள்ள மாட்டார் என்று நான் சொல்லி விட்டேன். லஷ்மி அப்போ இந்த கர்வம் பிடிச்ச கேரக்டரெல்லாம் பிரமாதமாதமாக நடிப்பாங்க! “புகுந்த வீடுன்னு ஒரு படம் நினைவிருக்கிறதா? அதை பார்த்துவிட்டு லஷ்மியை ஹீரோயின்னா போடலாம்னு முடிவு எடுத்தோம். ஜாவர்ட் சீதாராமன் எழுதிய “உடல், பொருள், ஆனந்தி”, சாண்டில்யனோட 'கடல் புறா' அப்புசாமித் தாத்தாவைக் கூட திரைப் படமாக எடுப்பதற்கு நிறைய திட்டம் வைத்திருந்தோம். என் அண்ணன் மட்டும் திரைப்படத் துறையில் நுழைந்திருந்தால் நானும் ஒரு அட்லீஸ்ட் ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டர் ஆகியிருப்பேன். இப்போது கூடப் பார்க்கும் போதெல்லாம்
ஏதாவது ஒரு நல்ல கதையைப் பற்றிப் பேசி அதை சினிமாவாக எடுப்பது பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. “மோகமுள்” எடுப்பதைப் பற்றி கூடப் பேசியிருக்கிறோம். எங்களுக்கு முன்பாகவே ஹீம்! அதை யாரோ எடுத்து விட்டார்கள்! அந்தக் கதையை அவர்கள் எடுக்காமலேயே இருந்திருக்கலாம். ஜமுனாவையும் படத்தில் முதலில் வரும் அரை மணி நேரம் தவிர மற்ற எதுவுமே சரியில்லை என்று படத்தைப் பார்த்து வருத்தமாகி விட்டது.

முதன் முதலில் சித்திரக் கதைகள் இல்லாமல் பெரிய கதை படித்தது தமிழ்வாணனின் 'இரண்டுபேர்'. மன்னப்பன், நலம்விரும்பி என்று இரண்டு துப்பறிவாளர்கள். முதலிலேயே நலம்விரும்பி இறந்து விடுவான். “சிலையைத் தேடி” என்று வாண்டுமாமா கதை! ஒரு தங்க புத்தர் சிலையைத் தேடி ஷீலாவும் ரவியும் புறப்படுவார்கள். கடலுக்கு அடியில் அந்த தங்கப் புத்தர் சிலை இருக்கும். இந்த மாதிரி வீர சாகசங்கள் நிறைந்த கதைகள்தான் ரொம்ப பிடிக்கும். “ஒளிவதற்கு இடமில்லை” கதையில் வரும் குறுந்தாடி டிடெக்டிவ் ரமணன், கௌசிகன் எழுதிய “சுழிகாற்று” கதையில் வரும் லேசாக காலை விந்தியபடி வரும் ரிட்டயர்ட் மிலிட்டரி டிடெக்டிவ்
நம்ப சங்கர்லால், இன்ஸ்பெக்டர் வஹாப், கத்தரிக்காய் என்று கல்கண்டுக் கதைகள்.
சங்கர்லால் துப்பறிந்த வரை சுமாராப் போனக் கதை அப்புறம் தமிழ்வாணனே துப்பறிய ஆரம்பிச்சதும் போரடிக்க ஆரம்பிச்சுடுத்து. SS66 என்ற நீர்மூழ்கி கப்பலைப் பற்றியக் கதை, இன்னொரு செருப்பு எங்கே? மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி? மனிமொழி என்னை மறந்து விடு, என்னுடன் பறந்து வா இப்படி எல்லாக் கதைகளும் எதோ ஒரு இங்கிலிஷ் கதையையோ, ஜேம்ஸ்பாண்ட் படத்தையோ காப்பியடிச்சு வந்தாலும் நமக்குத் தெரிந்த மொழியில் படிக்கும் போது ஒரு திரில்தானே!

மரபீரோ கதை என்ன ஆச்சு? இப்படி வாரம் ஒரு முறை மட்டும் வித்தை காட்டும் நிகழ்ச்சிக்கு ஒரு இக்கட்டு வந்தது. எப்படியோ ஒரு துரும்புக் கூட அதிலிருந்து வெளியேறாமல் பார்த்துக் கொண்டவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பீரோவையே காலியாகப் பார்த்தால் .... நானாவாது இன்னும் உரிமையாக எல்லாவற்றையும் எடுத்து ஆசை தீர படித்திருப்பேனே!

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 17- "நீயெனதின்னுயிர் கண்ணம்மா!எந்த நேரமும் நின்றனை போற்றுவேன்"

சித்ரா ரமேஷ்

தீபாவளி என்றாலே புதுத் துணி, பட்டாசு, பட்சணம், நசநசக்கும் மழை, களை கட்டிவிடும் மெயின் பஜார் கடைகள், விதவிதமான விளம்பரங்கள். இவை எல்லோருக்கும் நினைவு வரும். ஆனால் எங்களுக்கு இவற்றோடு ஸ்ட்ரைக், அந்த வருடம் தீபாவளி கொண்டாடப் போகிறோமா இல்லையா என்ற கவலையும் சேர்ந்து கொள்ளும். அந்த வருடம் தீபாவளி போனஸ் கிடைத்தால் தீபாவளி! அதனால் தீபாவளிக்கு முன்னால் தொழிற்சங்கப் போராட்டங்கள், அரிவாள், சுத்தி, நட்சத்திரக் கொடிகள். கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் பரபரப்புடன் இயங்கத் தொடங்கும். சைக்கிள் ஊர்வலங்கள். கோஷம் போட்டுக் கொண்டு போகும் தொழிலாளிகள். இதையெல்லாம் பார்க்கும் போதே தீபாவளி மூட் வந்து விடும். 40% சதவீதம், 33.3% சதவீதம், 20% சதவீதம் என்று கணக்கிட்டு சேர்மேனோடு பேச்சுவார்த்தை. கடைசியில் கிளைமேக்ஸில் தூக்கிலிடப்படாமல் காப்பாற்றப்பட்டு விடும் கதாநாயகன் போல் எங்கள் தீபாவளியும் போனஸ் பணம் வந்து காப்பாற்றிவிடும். நிறைய பேர் வீட்டில் போனஸ் பணம் வந்தவுடன் தீபாவளிக்கு சைக்கிள் வாங்குவார்கள். சைக்கிள் இல்லையென்றால், சைக்கிள் ஓட்டத் தெரியவில்லையென்றால் தொலைந்தீர்கள்! தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது என்று தலையில் ஒரு துணியை அழுத்திக் கொண்டு ஆஸ்பிட்டல் போக பஸ்ஸ§க்காக காத்திருக்கும் நிலைமை! அந்தத் துணி முழுவதும் ரத்த மயமாகி ரத்தப் பெருக்கு உறைந்து ரத்தக் காயம் தன்னால் ஆறிப் போய் வீட்டுக்குப் போய்விடலாம். பஸ் மட்டும் வராது. பஸ் இல்லையென்றால் ஆட்டோ,சைக்கிள் ரிக்ஷா ஏதாவது வசதி செய்து போகலாமே என்று கேட்டால் என்ன சொல்வது! ஆகாயத்தில் விமானம், ஹெலிகாப்டர் இவற்றைப் பார்ப்பது போல் வெளியூர் சென்று ஆட்டோ, டாக்ஸி இவற்றைப் பார்க்கலாம். ரிக்ஷாவை 'ரிக்ஷாகாரனில்' பார்த்தால் உண்டு. இந்த மாதிரி ஒரு அமைப்பில் சைக்கிளை நம்பாமல் வாழ முடியுமா? உணவு, உடை, இருப்பிடம், சைக்கிள் என்ற நான்கும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள்! முன்னால் ஒரு குட்டி சீட்டில் ஒரு குழந்தை,அடுத்து ஹாண்டில் பாரில் மிச்சமிருக்கும் இடத்தில் இன்னொரு குழந்தை, பின்னால் காரியரில் கையில் குழந்தையுடன் அம்மா! இப்படிபட்ட காட்சிகளை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். அப்ப சிவப்பு முக்கோணம் மூன்று குழந்தைகளை அனுமதித்தது. அதை காரியத்தில் காட்டி பின்பற்றுபவர்களுக்கு சைக்கிள் பரிசு உண்டு! ஆக தீபாவளி போனஸ் வந்தவுடன் அந்த வருடம் யாருக்கு சைக்கிள் வாங்குவது என்று ஆலோசனை நடக்கும். வீட்டுக்கு மூன்று சைக்கிளாவது இருக்கும். தெருவுக்கு தெரு பீடி சிகரெட் கடையெல்லாம் இருக்காது. ஆனால் மரத்தடியில் சாக்குப் பை போட்டு சைக்கிள் பம்ப், சைக்கிள் ரிப்பேர் செய்யத் தேவையான உபகரணங்களோடு ஒரு அலுமினிய பேஸினில் தண்ணீரோடு சைக்கிள் ரிப்பேர் கடை கண்டிப்பாக இருக்கும். தீபாவளி டிரஸ், பட்சணம், புதுசா ரிலீஸ் ஆகிற திரைப்படம், நம்ப ஊர் தியேட்டருக்கு தீபாவளிக்கு எந்த தீபாவளிப் படம் வரும் போன்ற சாதாரணக் கவலைகளோடு எத்தனை ரூபாய்க்கு பட்டாசு வாங்கப் போகிறோம், அப்பா பட்டாசை மெட்றாசிலிருந்து வாங்கி வந்து விடுவாரா இல்லை நம்ப லிஸ்ட் போட்டு இங்கேயே வாங்கப்போகிறோமா போன்ற முக்கியக் கவலைகள் சேர்ந்து விடும். மெட்றாசில் புது வகை பட்டாசு வகைகள் கிடைக்கும், விலையும் கொஞ்சம் குறைச்சலாக இருக்கும் என்றாலும் பட்டாசுக் கடையிலிருந்து லிஸ்ட் வாங்கிக் கொண்டு வந்து அப்பாவிடம் எத்தனை ரூபாய் பட்ஜெட் என்று விசாரித்துத் தெரிந்துக் கொண்டு, அதுக்கு தக்க லிஸ்ட் போட்டு கடைக்கு நாமே போய் வாங்கும் சுகம்... இது நீங்க நினைப்பது போல் அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை. அப்பா பிடி கொடுத்தே பதில் சொல்ல மாட்டார். எல்லாம் நான் பாத்து வாங்கித் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்தாலும் ரொம்ப கவலையாகத்தான் இருக்கும். கண்ணன் தூது போவது போல் கடைசித் தம்பிதான் தூதுவன் கம் ஒற்றனாக இருந்து இதைப் பற்றிச் சரியான தகவல் தருவான். கடைசியில் எல்லோரும் சேர்ந்து கடைக்குப் போய் அப்பாவுக்கு பெரிய செலவு வைத்து விடுவோம். வருடாவருடம் துப்பாக்கி வாங்கி தருவார். இதையே பத்திரமா அடுத்த தீபாவளிக்கும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கண்டிஷனோடு! என்னக் கண்டிஷன் போட்டாலும் எதிர்த்துப் பேசுகிற வழக்கமெல்லாம் வழக்கொழிந்து போய் விடுகிற அற்புத நேரமது! இதைப் போல் குழந்தைகள் கிடைக்க என்ன தவம் செய்தனை என்று கவி பாடும் அளவிற்கு அவ்வளவு சமத்தாய் நடந்து கொண்டு, அவர் பாவம் இந்த வருடம் 25 ரூபாய்தான் பட்ஜெட் என்று சொல்லித்தான் கூட்டிக் கொண்டுப் போவார். வரும் போது கிட்டத் தட்ட 100 ரூபாய் செலவழித்திருப்போம். உண்மையிலேயே 'மருதநாயகம்' போல் ரொம்பப் பெரிய பட்ஜெட்தான்! வீட்டுக்கு வந்ததும் பட்டாசு விலையெல்லாம் கேட்டுவிட்டு எனக்கு ஒரு பட்டுப் புடவை எடுத்துத் தர மனசாகாது. நூறு ரூபாய்க்கு காசை கரியாக்கியாச்சு என்று குழந்தைப் போல் சொல்லும் அம்மா! தீபாவளியென்றால் பட்டு ஸ்பெஷல் ஐட்டம் கிடையாது. பட்டாசுதான் என்று உணர்ந்த அப்பா இதையெல்லாம் காதில் விழாதது போல் நகர்ந்து விடுவார். நூறு ரூபாய்க்கு பிரமாதமாகப் பட்டுப் புடவை வாங்கலாம்தான்! அந்த வயதும், நூறு ரூபாய்க்கு பட்டாசு விடுகிற மனசும் இப்போது நினைத்தால் கூட கிடைக்காதே! இந்த பட்டாசு விடுவதற்கு ஆசைப்பட்டு சமீபத்தில் ஒரு முறை சென்னை வந்து பட்டாசுப் புகை ஒத்துக் கொள்ளாமல் தீபாவளியை டாக்டர் சொன்ன விதிமுறைகளுடன் கொண்டாட வேண்டியதாகிவிட்டது. என்ன விதிமுறை? பட்டாசே வெடிக்கக் கூடாது. பட்டாசுப் புகைபடுகிற இடத்தில் நிற்கக் கூடாது. எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம். எண்ணெயில் பொறித்த எந்த பட்சணமும் சாப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கூடவே ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரையும் கொடுத்தனுப்பாதக் குறையாக நெபுலைசர் வைத்து அஸ்தலின் இத்யாதிகளோடு பாதி சொத்தை வேறு எழுதி வாங்கிக் கொண்டுதான் விட்டார். இதெல்லாம் இல்லாத தீபாவளி என்ன தீபாவளி? தொலைக்காட்சியில் தமிழ் தெரியாத நடிகைகள் கொடுக்கும் தமிழ் பேட்டிகளைப் பார்த்துக் கொண்டு இந்திய இல்லை உலகத் தொலைகாட்சிகளிலேயே முதன் முதலில் தோன்றும் திரைப்படங்களை பார்த்துக் கொண்டு என்ன முட்டாள்தனமான தீபாவளி! உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறை என்பது கொஞ்சம் கதை! அப்படி வந்த படங்களை ஏற்கனவே இந்த ஊர்ல பார்த்து இருக்கிறோம்! இந்த மருந்து சாப்பிட்டால் கனவு உலகத்தில் உலவுகிற மாதிரி லேசாக பறக்க முடியும். டிரைவ் பண்ணாதீங்கன்னு ஆலோசனை கொடுப்பார். மீறி செய்தால் 'சக்கரைக் கட்டி ராசாத்தி உன் மனசை வெச்சுக்க காப்பாத்தி' என்று காரோடு சேர்ந்து பறந்து உயிரை காப்பாதிக்க உத்தரவாதம் கிடையாது. பட்டாசு விடுவதை இனிமேல் கணினித் திரையில் வரும் வாழ்த்துகளில் மட்டுமே பார்க்க முடியும். சே! அப்போது பெரியவளானதும் வாங்குகிற சம்பளத்தில் முழுவதும் பட்டாசு மட்டுமே வாங்க வேண்டும் என்ற கற்பனையெல்லாம் காற்றோடு போயாச்சு!


தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பே பட்டாசையெல்லாம் பாகம் பிரித்து அப்பா அம்மாவுக்கும் நீங்க எதையெல்லாம் வெடிப்பீங்கன்னு கேட்டு அவங்களுக்கும் பாகம் போட்டு த்¤ரி கிள்ளி வெங்கலத் தாம்பாளத்தில்தான் காய வைக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக சூடேறி சரியான பதத்தில் காயும். மழை வந்து விட்டால் பேஜாராகிவிடும். அதுவும் தீபாவளியன்று காலையில் மழை பெய்து விட்டாலோ இல்லை முதல் நாளிரவு மழை பெய்திருந்தாலோ அந்த வருட தீபாவளிக் கொண்டாட்டமே சரியாக அமையாது. ஏற்கனவே மழைபெய்து வாசலில் தண்ணீர் தேங்கியிருக்கும். இதில் என் வீட்டில் வேலை பார்க்கும் கண்ணம்மா வேறு வாசல் தௌ¤த்து கோலம் போடுகிறேன் என்று தண்ணீரைக் கொட்டி அலம்பிவிடுவாள். முதல் நாள் ராத்திரியே என் தம்பி கண்ணம்மாவிடம் கண்டிப்பாகச் சொல்லி விடுவான். இன்னிக்கி ராத்திரியிலேந்து என் வீட்டில் நீ இருக்கக் கூடாது என்று! எங்க வீட்டுக்குப் பின்னால்தான் சின்னதா ஒரு குடிசைப் போட்டுத் தங்கியிருந்தாள். அவள் எங்கேப் போவாள்? ஆனாலும் சின்னப் பையன் என்ற சலுகையில் கண்ணம்மாவை கண்டிப்பான்.

அவள் ஒன்றும் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்க மாட்டாள். ஒரு நாளு கிழமைன்னா வாசத் தௌ¤க்காம எப்படி? கடைசியில் அம்மாதான் சரி நாளைக்கு வாசல்ல தண்ணி கொட்டாம கோலம் மட்டும் போட்டுவிடு என்று சமாதானப் படுத்துவாள். என் அம்மா வேலைக்குப் போனதிலிருந்து கண்ணம்மாதான் என் அம்மாவுக்கு ஆஸ்தான மந்திரி மாதிரி! எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். ரெண்டு பேரும் தோழிகள் மாதிரி பேசிக்கொள்வார்கள். என் அம்மா மைசூர் சாண்டல் சோப் வாங்கும் போது தனக்கும் சேர்த்து வாங்கச் சொல்லும் நாசூக்கானவள். பாலச்சந்தர் படம் பார்த்து விட்டு விமர்சனம் செய்யும்
அறிவுஜீவி! போய் பாத்துட்டு வாம்மா! புருஷங்காரன் என்ன செஞ்சாலும் பாத்துக் கிட்டு சும்மாயிருக்க முடியுமா? என்று 'அவர்கள்' பார்த்துவிட்டுச் சொன்னப் புதுமைப் பெண்.
அம்மாவும் அப்பாவும் முழு நேரமும் எங்க அம்மா அப்பாவாகவே இருக்க முடியுமா?
கண்ணம்மாவிடம் பார்த்துக்கச் சொல்லிவிட்டு நைசா நைட்ஷோ சினிமா பாத்துட்டு வருவாங்க! காலையில் விஷயம் தெரிந்து விசாரித்தால் சின்னக் குழந்தைக்கள்ளாம் பாக்க முடியாது அது 'ஏ' படம் என்று சொல்லி சமாளிப்பாள். அம்மா அநியாயம்! தீர்க்கசுமங்கலிப் படமெல்லாம் 'ஏ' படமா? அது அக்மார்க் முத்திரைப் பெற்ற குடும்பப் படமாயிற்றே!

கண்ணம்மா தன் புருஷனை ஊரில் விட்டு விட்டு வந்து விட்டாள். கேட்டால் அவன் கிழவன் அவனோட என்னத்த குடும்பம் நடத்ததுவது? என்று பதில் சொல்வாள். 'ஏன் கல்யாணத்தில் போது தெரியவில்லையா அவன் கிழவன் என்று! ஒரு பையன் வேறு இருக்கிறானே? என்று அம்மா கேட்டால் ஆமா பையந்தான் தலையெடுத்து கஞ்சி ஊத்தப் போறானாக்கும் என்பாள். அவள் அனுமதி கேட்டா அவளுக்குக் கல்யாணம் நடந்திருக்கும்? ஏதோ தப்பித்தவறி ஒரு குழந்தைப் பிறந்து விடுவதால் நிறைவுப் பெற்ற தாம்பத்தியம் ஆகிவிடுமா? நம் மத்தியதர வர்க்கத்து அளவுகோல்கள் அவளுக்குப் பொருந்தாது. அவள் யாரையும் சார்ந்து நிற்காத சுதந்திரமானப் பெண்மணி. காலையில் குளித்து கொண்டவனுக்கு எது பிடிக்கும் குழந்தைகளுக்கு எது பிடிக்கும் என்று பார்த்து சமைத்து வீட்டு வேலைகள் எல்லாம் செவ்வனே செய்து சாயங்காலம் ஆனா தலை வாரி மூஞ்சி அலம்பி பொட்டு வைத்து விளக்கேற்றி கோவிலுக்குப் போனால் கொடுக்கும் குங்குமத்தை நெற்றியில், உச்சி வகிட்டில் கழுத்தில், கழுத்தில் தொங்கும் தாலியில் எல்லாம் அப்பிக் கொண்டு சுமங்கலியாய் கொண்டு போய்விடு தாயே என்று வேண்டிக் கொண்டு வாழும் குடும்பவிளக்குகள் பாரதிதாசனுக்கு வேண்டுமானால் காவியக் கதாநாயகி ஆகலாம்.


தீபாவளிக்குப் பட்டுப் புடவை, நாலு இடத்துக்கு போனால் கல்யாணம், கார்த்திகை என்றால் மதிப்பாகப் போட்டுக் கொள்ள நகைகள் இவற்றோடு பெண்ணின் தேவைகள் தீர்ந்து விடுகிறதா? பொருத்தம் உடலிலும் வேண்டும் என்று சும்மாவாப் பாடினார்? புருஷன் மனசுக்குப் பிடிக்கவில்லையென்றால் கட்டப்பஞ்சாயத்து மூலம் விடுதலை பெற்று விடலாம் என்ற எளிமையான சட்டங்கள்! ஆமா மாமாவுக்கு என்ன தெரியும் என்று வெறுத்துப் பேசும் பெண்மணிகள் யாரும் இந்த முடிவெல்லாம் எடுக்க மாட்டார்கள். அவருக்கு இந்த கலர் வாங்கினாப் பிடிக்காது, வேலைக்குப் போனா பிடிக்காது, சத்தமாச் சிரிச்சா பிடிக்காது, பாட்டு கேட்டாப் பிடிக்காது, மை இட்டுண்டாப் பிடிக்காது, அது பிடிக்காது, இது பிடிக்காது என்று அடுக்கிக் கொண்டேப் போகும் பெண்களை சற்று அனுதாபத்துடன் தான் பார்க்கத் தோன்றுகிறது.கடைசியில் அவர்களுக்கு தங்களையே பிடிக்காமல் போய்விடுமோ?இதில் எத்தனை உண்மையிருக்குமோ? பெண்களுக்கு சற்று நாடகம் போடுவதென்றால் பிடிக்குமே! ஆண்கள் என்ன அவ்வளவு முசுடுகளா? இத்தனையும் சொல்லும்போது அந்த மாமாவைப் பார்த்தால் அவர் பாட்டுக்கும் தேமேயென்று உட்கார்ந்திருப்பார். சரி இந்த வியாக்கியானமெல்லாம் கண்ணம்மாவுக்குப் பொருந்துமா? கண்ணம்மாவுக்கு ஒரு நண்பர் இருந்தார். கண்ணம்மாவைப் பார்க்க வருவார். வரும்போது தன்னுடைய குழந்தைகளைக் கூட கூட்டிக் கொண்டு வருவார். அது பிளட்டானிக் உறவு என்றெல்லாம் கதை விடப் போவதில்லை. அவர்தான் எங்க வீட்டு ரேடியோவுக்கு ஸ்டாண்ட் செய்து கொடுத்தார். யுனிகோட் மாதிரி ரேடியோ ஸ்டாண்ட்டும் ஒரே யுனிவெர்ஸல் டிசைன்! எங்க ஊர் தச்சர்களுக்கெல்லாம் இந்த ஒரே ஒரு டிசைன்தான் தெரியும். யார் வீட்டுக்குப் போனாலும் இதே ரேடியோ ஸ்டாண்ட். அப்புறம்தான் தெரிந்தது. தமிழ் நாடு முழுவதும் இதே டிசைன்தான் என்று. அவருடைய நண்பர் ஒருவரும் கூட வருவார். கடைசியில் 'சங்கம்' படம் மாதிரி நண்பன் கண்ணம்மாவின் காதலனாக மாறிவிட இவர் கொஞ்ச நாள் தேவதாஸ் மாதிரி திரிந்து கொண்டிருந்தார். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் கண்ணம்மா சொல்லாமல் கொள்ளாமல் அந்த 'பாய் ஃபிரெண்டுடன்' ஓடிப் போனதுதான்! அம்மாவுக்கு மனசு ஆறவேயில்லை. எவ்வளவு நன்றாகப் பழகினேன். “அம்மா அவர் கூட வந்து இருங்குறாரு நான் போறேன்ன்னு” ஒரு வார்த்தை சொல்லி விட்டு போயிருக்கலாம் என்று புலம்பிக் கொண்டேயிருந்தாள். நண்பர்கள் செய்யும் துரோகங்கள் சீக்கிரம் மறக்கப் பட்டு விடுமா? என்னவோ கண்ணம்மாவின் கேரக்டருக்கு அது ஒரு பெரிய சறுக்கல்தான்!

தீபாவளி வாசல் தெளிக்காமல் கொண்டாட முடியும். புது டிரஸ் இல்லாமல் முடியுமா? தையல்காரர் என்று ஒரு வில்லன் இருந்தார். “பாப்பா தீபாவளித் துணி சீக்கிரம் வாங்கிக் கொடுத்துடு நல்லா புது டிசைன்ல தெச்சுத் தறேன் என்று டிசைன் புக்கெல்லாம் காட்டுவார். புதுத் துணி வாங்கிக் கொடுத்து விட்டு அதை மறந்து விட வேண்டும். எப்பப் பாத்து தச்சாச்சா என்று கேட்டாலும் இதோ பட்டன்தான் கட்ட வேண்டும் என்று சொல்லி விட்டு பாப்பாவோடத் துணியை எடுப்பா கட்டிங் பண்ணணும் என்று அஞ்சாமல் புளுகுவார். சரி துணியை எடுத்து கட் பண்ணி விட்டாரே தைப்பதற்கு ரொம்ப நாள் ஆகாது என்று திரும்பப் போய்க் கேட்டால் இதோ ஆச்சே என்று திரும்பிப் பார்த்தால் ஜீபூம்பா பூதம் போல் நம் துணி உரு மாறாமல் துணியாகவே நம்மைப் பார்த்துச் சிரிக்கும். கோபம் வந்தாலும் கொஞ்சம் கூட அசராமல் தீபாவளிக்கு இன்னும் எத்தினி நாள் இருக்கு? அதுக்குள்ளே உனக்கு பத்து டிரஸ் தச்சிடுவேன் என்று தன் தொழிலில் அபார நம்பிக்கையோடு சொல்லி விடுவார். கடைசி நாளன்று ராத்திரி பதினோரு மணிக்கு ஒரு வழியாய் நம் கையில் கிடைக்கும் போது செம த்ரில்லாத்தான் இருக்கும் போட்டுப் பார்க்கும் வரை! போட்டுப் பார்த்தால்தான் எப்படியெல்லாம் சொதப்பித் தள்ளியிருக்கிறார் என்பதும் புரியும். ஸ்ரீதேவி படத்தைக் காட்டிச் சொன்ன புது டிசைனும் இருக்காது. நம் அளவும் இருக்காது. போய்க் கேட்டால் நீ சொன்ன மாதிரிதானே தச்சேன். நீ இவ்வளவு ஒல்லியா இருந்தா இந்த டிசைன் எடுபடாது என்று நம் மீதே குற்றத்தைத் திருப்பி விடுவார். தீபாவளி முடிஞ்சதும் இந்த சட்டையை திருப்பிக் கொடு சரி பண்ணித் தருகிறேன் என்று சமாதானப் படுத்தினாலும் ஒரு முறை சரியாக அமையாத டிரஸ் என்ன செய்தாலும் சுமாராகத்தான் இருக்கும் என்று தெரியாதா? பாரதியார் வேலைக்காரர்களால் பட்ட அவதிகளை எழுதியிருக்கிறாரே! அவர் டைலரிடம் எதையும் தைத்து வாங்கியதில்லையா? ஆக தீபாவளிக்கு கதாநாயகன் பட்டாசு என்றால் வில்லன் தையல்காரர்தான்!


வீட்டில் பலகாரம் செய்வதற்கு வரும் சமையல்கார மாமா! சுட சுட ஜாங்கிரி பிழியும் போதே எடுத்து சாப்பிடும் ரசனை! அதிர்சம் பண்ணுவதற்கு பிசைந்து வைத்திருக்கும் மாவு ராத்திரி முழுவதும் ஊற வைத்து மறு நாள்தான் பொறிக்க வேண்டும்.அந்த மாவை எடுத்து தின்று விட்டு இதை எதுக்கு வேஸ்ட்டா பொறிக்கறே என்று கேட்டு.... தீபாவளிக்கு பட்சணம் நைவேத்தியம் கிடையாது என்பதால் எல்லாவற்றையும் தின்று ருசி பார்க்கலாம். தீபாவளி வரைக்குமாவது கொஞ்சம் பட்சணம் வைத்திருக்க வேண்டும். யாராவது வீட்டுக்கு வந்தா தர வேண்டாமா? என்று அம்மா சொன்னால் மிக்ஸரில் இருக்கும் அவல், பொட்டுக்கடலை, கொஞ்சூண்டு
போனாப் போகிறது என்று மிச்சம் வைத்திருக்கும் பூந்தி இதைக் காட்டி இதைக் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிடுவோம்.

தீபாவளி மலர்கள்! தவறாமல் இடம் பெறும் மைசூர் பாகு, தலை தீபாவளி மாப்பிள்ளை ஜோக்ஸ்! குனேகா செண்ட் வாசனையுடன் வந்த ஆனந்தவிகடன் தீபாவளி மலர் ஞாபகம் இருக்கா?
காலங்கார்த்தாலெ எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து புது டிரஸ் போட்டுக் கொண்டு லேகியம் சாப்பிட்டுவிட்டு (ஆ! காரம்!) பட்டாசையெல்லாம் வெடித்துவிட்டு
சாயங்காலத்திற்கு மிச்சம் அம்மா அப்பா ஷேர் பட்டாசு இருக்கிறதே! எந்த தெருவில்
நிறைய வெடித்திருக்கிறார்கள் என்று நகர்வலம் வந்து பட்டாசுக் குப்பைகள் மூலம்
கண்டு பிடித்து பட்சணத்தைச் சாப்பிட்டுக் கொண்டே அப்படியே சோபாவில் சாய்ந்து ஒரு தூக்கம் தூங்குவோமே அந்தத் தூக்கத்திற்கு ஈடு இணை வேறு எதிலும் கிடையாதுதானே!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் -16 - "ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருள் என்னவோ?"

சித்ரா ரமேஷ்

தமிழ் இலக்கணத்தில் வேற்றுமை உருபு, பண்புத்தொகை, வினைத்தொகை, உவமைத் தொகை, உரிச்சொல் போன்றவற்றை படித்த போதும் ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை என்று இலக்கண குறிப்பு எழுதிய போதும் நமக்கு நன்றாக தெரிந்த மொழியை தேவையில்லாமல் எதற்கு இப்படி கஷ்டமாக மாற்றுகிறார்கள் என்ற எதிர்ப்புதான் அதிகம் இருந்தது. கணக்கில் அல்ஜீப்ரா, சைமல்ட்டேனியஸ் ஈகுவேஷன், பிதாகரஸ் தியரம், டிரிக்னாமெட்ரி என்று எதைப் புதிதாக கற்றுக் கொண்டாலும் ஏற்படும் திகில் கலந்த பயத்தை தமிழிலும் எதிர்பார்க்கவில்லை. தமிழில் ஒரு செய்யுளை எழுதி அதில் சொற்களை குறில் நெடில் என்ற முறையில் பிரித்து இரண்டு குறில், உடன் ஒரு ஒற்றெழுத்து, ஒரு குறில் ஒரு நெடில், உடன் ஒரு ஒற்றெழுத்து வந்தால் அது நிரைசீர், குறில் ஒற்றெழுத்துடன் வேண்டாம் இந்த விளையாட்டு! ஆக நேரசை, நிரையசை என்று முதலில் பிரித்து, நேர் நேர் வந்தால் தேமா, நிரை நேர் வந்தால் புளிமா, கருவிளம், கூவிளம் என்று முதல் அடுக்கு, அடுத்த அடுக்கு தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய், மேலும் அதிகப் படுத்தி தேமாங்கனி, புளிமாங்கனி என்று சொல்ல சொல்ல இனிக்கவில்லை. இந்த விளையாட்டுக்கே நான் வரவில்லை என்ற விரக்தியோடு ஒதுங்கி விட்டேன். இந்த விரக்தியை கவனிக்காமல் தமிழம்மா மாமுன் நேர், விள முன் நிரை, காய் முன் நேர் வந்தால் ஆசிரியப்பா என்று யாப்பிலக்கணத்தை விளக்க ஆரம்பித்ததும் வெறுத்துப் போய்விட்டது. வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, குறட்பா-நாள், மலர், காசு, பிறப்பு போன்றவைகளில் தான் முடிவடையும். ஏதாவது புரிகிறதா? ஒரு வாரம் இரண்டு வாரம் இந்த வெறுப்பிலேயே ஓடிவிட்டது. “யாருக்காவது இந்த பாடங்களில் சந்தேகம் இருக்கிறதா?” என்று கேள்வி கேட்டபின் சும்மாயிருக்க முடியாமல் “பரீட்சைக்கு இதிலிருந்து கேள்விகள் வந்தால் விட்டு விடுவதற்கு சாய்ஸ் இருக்குமா?” என்று கேட்டதும் கோபமே வராத தமிழ் ஆசிரியைக்குக் கூட கோபம் வந்து விட்டது. நொபெல் பரிசு பெற்ற இந்தியப் பெண்கள் யாராவது இருக்காங்களா என்ற கேள்விக்கு “இப்பொது இல்லை வருங்காலத்தில் ____பெயர் இருக்கும் என்று தன்னடக்கத்தோடு சொன்ன பெண்ணுக்கு ஒரு சாதாரண இலக்கணம் பிடிபடவில்லையா என்ற கோபம்! அப்பொது
அன்னை தெரசாவுக்கு நொபெல் பரிசு கிடைக்கவில்லை. இன்று வரை எந்த இந்தியப் பெண்ணுக்கும் இலக்கியதுக்கான நொபெல் பரிசு கிடைக்கவில்லை! நோபெல் பரிசு பெறும் கனவு கூட காணக் கூடாதா? நாளைக்கு ஆசிரியப்பாவிலோ, வெண்பாவிலோ
அனைவரும் ஒரு கவிதை எழுதி வரவேண்டும். நன்றாக எழுதியவர்கள் டிஸ்ட்ரிக்ட் லெவல்ல நடக்கின்ற போட்டிக்கு போகலாம் என்று அறிவித்து விட்டு தனியே என்னைக் கூப்பிட்டு இந்த போட்டிக்கு நீ போவதற்கு எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். நீதான் சாய்ஸில் விட்டுவிடப் போகிறாயே! ஆனால் கண்டிப்பாக வீட்டுப் பாடம் செய்து கொண்டு தான் வரவேண்டும்! என்று சொன்னதும் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் கப்பம் கட்ட வேண்டும் என்று சொன்னதும் பொங்கி எழுவாரே அதைப் போல் இல்லை மனோகராவில் 'பொறுத்தது போதும் பொங்கி எழு மகனே' என்று கண்ணாம்பா சொன்னதும் கொதித்தெழுந்த மனோகரனைப் போல் சீறிப் பாய்வேன் என்று எதிர் பார்த்தீங்களா? அந்த வயது யார் எது சொன்னாலும் எதிர்த்து நிற்கும் புரட்சிகரமான புயலடிக்கும் வயதாயிற்றே! ஆசிரியை என்னை உசுப்பி விடுகிற மாதிரி பேசியும் அதைக் கண்டு கொள்ளாதது போல் என் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 'கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? பாட்டிலிருந்து நாலு வரிகள் எடுத்து எழுதி வீட்டுப் பாடமாக முடித்து கொடுத்து விட்டேன். கண்ணதாசனை காப்பியடிச்சாலும் மிகச் சிறந்த கவிதை இதுதான் என்று வகுப்பில் அறிவித்தது கூட என்னை அவமானப் படுத்தும் முயற்சி என்றுதான் தோன்றியது. கண்டிப்பாக கண்ணதாசனை காப்பியடிக்காமல் கவிதை எழுதித் தர வேண்டும் என்ற இக்கட்டு! யாப்பிலக்கணத்தை நானே படித்து புரிந்து கொண்டபின் கணக்கு, கவிதை எல்லாம் ஒன்றுதான்! ஒரு பக்கம் எதுகையெல்லாம் எழுதி கொள்வது எதுகைக்கு ஏற்ற மோனைச் சொல் தேடுவது! இப்படி மொழியாற்றல் இருந்தால் போதும்! கொஞ்சம் சீர் சரியாக வரவில்லை என்றால் குறிலை நெடிலாக மாற்றி விடுவது என்று விளையாட்டாக செய்து பார்த்து ரசித்து ஆஹா! ஒரு அற்புதமான விஷயம் கைவரப் பெற்றேன்.

கவிதை எழுதி ரசித்ததை விட இன்னொரு கொடுமையான விஷயம்! வீட்டுக்கு யாராவது வந்தால் கவிதையெல்லாம் எழுதுவியாமே! என்று துக்கம் விசாரிப்பது போல் விசாரித்து விட்டுப் போவது! பாட்டு கற்றுக் கொண்டால் ரொம்ப நல்ல விஷயம்! பாட்டு எழுதினால் ஒரு மாதிரி கிண்டலான விஷயமாகிவிடும். இதனால் இந்த கவிதை எழுதும் கெட்ட பழக்கத்தையே நிறுத்தி விட்டேன். இல்லை கவிதை எழுதுவேன் என்று வெளியில் சொல்லவதை நிறுத்திவிட்டேன். நான் கவிதை எழுதுவேன் என்று தெரிந்து அதனால் அதிகம் கவரப் பட்டவர்கள் எங்கள் பாட்டு டீச்சர்தான்! வாரம் ஒருமுறை வகுப்புக்கு வரும்போது எதாவது சொந்த சாஹித்யம் மாதிரி எதையாவது எழுதி கொண்டு வந்து என்னிடம் அசை, சீர், தளை எல்லாம் பிரித்துப் பார்க்கச் சொல்லி வெண்பா, ஆசிரியப்பா,
கலிப்பா, வஞ்சிப்பா வகைகளில் எந்த வகையைச் சார்ந்தது என்பதையெல்லாம் கண்டு பிடிப்பது என் பொறுப்பு. அந்த பாட்டுக்கள் ஸ்ரீராஜராஜேஸ்வரி, காமாக்ஷி, கஜமுகன் மாதா, அம்மா பரமேஸ்வரி வந்தருள் தருவாய் என்ற ரீதியில் வந்து இறுதியில்
'வசந்தா உன் பாதம் பணியும்' என்று அவர்கள் பெயர் கொண்ட முத்திரையோடு
முடியும் பாடல்கள்! நிறைய வடமொழிச் சொற்கள், எதுகை மோனை போன்ற எந்த சந்தத்துக்குமே அடங்காமல் புதுக் கவிதை மாதிரி எந்த இலக்கணத்திலும் சேர்க்க முடியாத புதிராக இருந்தது. பக்தி பாடல்களில் 'சின்னஞ்சிறு பெண் போல சிற்றாடை இடையுடுத்தி', ஆண்டாள் பாசுரங்கள் போன்ற அழகான கவிதைகளை விடியற்காலையில் கேட்டு எட்டிப் பார்த்த பக்தி ஓடியேப் போய்விட்டது.


எந்த பாடலைக் கேட்டாலும் ஆசிரியப்பா இல்லை வெண்பா என்று சொல்லிவிடுவேன்.
எதுகை மோனையெல்லாம் கூட மாற்றி கடைசியில் அவர்கள் பாடல் என் பாடல் ஆகிவிடும் நிலை! முருகா உன் திருவடி சரணம்! பாடுவதற்கு சரியாக வரும் என்று எழுதி விடுவார்கள். உடனே சும்மா ஒரு காப்பிய நயத்துக்காக “மயில் மேல் வரும் முருகா உன் மேல் மையல் கொண்ட மங்கை இனி உன் கையில் வேலாக வர
தையல் எனக்கு தஞ்சம் அளிப்பாய்” என்று எழுதித் தந்து விடுவேன். பாட்டு சூப்பரா இல்லை? இது போல் மெத்தை, தத்தை, வித்தை, சொத்தை, கண், மண், பெண்,
போன்ற வார்த்தைகளில் விளையாடி நிறைய பாட்டு எழுதிக் குவித்திருக்கிறேன்.
ஆனாலும் அவர்களுக்கு அநியாயத்துக்கு ஆசை! ஏன் எப்போதும் ஆசிரியப்பா இல்லை வெண்பாவில் மட்டும் கவிதைகள் இருக்கின்றன? வஞ்சிப்பா, கலிப்பா இதெல்லாம் எழுத முடியாதா? என்று என்னிடம் ஐடியா கேட்க விளையாடறீங்களா? அதெல்லாம் எழுத முடிந்தால் நான் ஏன் இப்படி உங்கக் கிட்ட மாட்டிக் கிட்டு முழிக்கணும்? படிப்பை- யெல்லாம் நிறுத்தி விட்டு முழுநேரக் கவிஞனாகி இருப்பேனே? அதையெல்லாம் எப்படி எழுதுவது என்று எதாவது எளிமையான வழி இருக்கிறதா என்று கேட்க இதை போல எதாவது ஒரு வாய்ப்புக்குத்தானே காத்துக் கொண்டிருக்கிறேன்? வஞ்சியென்றால் என்னை வஞ்சிப்பதோ? இதைப் போல் சொற்கள் வந்தால் அது வஞ்சிப்பா! குதிரை குளம்பொலி சத்தம் போல் சந்தம் வந்தால் அது கலிப்பா! என்று ஏதோ எனக்குத் தெரிந்த ஷார்ட்கட் வழியைச் சொல்லிக் கொடுத்தேன். தமிழ் தாய் என்னை மன்னிப்பாளாக! முடிந்தால் அந்தாதி கூட எழுத முயற்சி செய்யுங்கள் என்று அவங்களுக்கு 'வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்' பாட்டைச் சொல்லிக் கொடுத்து நல்லா ஊக்கப்படுத்தினேன். என்னுயிர்த் தோழி என்னுடைய அத்தனை குயுக்தியும் அறிந்தவள்! அந்த டீச்சர் வகுப்புக்கு வந்தாலே போதும் முகத்தில் ஒரு மந்தஹாசம்! ரகசியமாக என்னைப் பார்த்துப் புன்னகைப்பாள். அந்த புன்னகையில் ஒரு பொருள் இல்லை. பல பொருள் இருக்கும். இது கடைசியில் வகுப்பு முழுவதும் தெரிந்த ரகசியமாகி விட்டது. காதலிப்பவர்களைப் பற்றி ஃபிரெண்ட்ஸ், அக்கம் பக்கத்தினர், தெருவில் இருப்பவர்கள், எதேச்சையாக அவர்களை சேர்ந்து பார்த்தவர்கள் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். சம்பந்தப்பட்ட அப்பா, அம்மாக்களுக்கு மட்டும் தெரியாமல் போவது போல் எங்கள் வகுப்பில் அத்தனை பேருக்கும் தெரிந்த ஒரு விஷயம் அவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போனது? என்னே என் வகுப்பின் ஒற்றுமை!


அது சரி அ.முத்துலிங்கம் எழுதிய 'திகடசக்கரம்' என்ற சிறுகதையைப் படித்திருக்கிறீர்களா? ஒரு அணைக்கட்டினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைப் பற்றி எடுத்துச் சொல்லி அணைக்கட்டு கட்டுவதை நிறுத்த வேண்டும். அதற்கு
கச்சியப்பர் யுக்தி என்று ஒன்றைச் சொல்லுவார். கந்த புராணம் எழுதிய கச்சியப்பர் எழுதிய முதல் வார்த்தையான 'திகடசக்கரம்' என்ற வார்த்தையை திகழ்+தசம்+சக்கரம்
என்று பிரித்துப் பொருள் தர இதைப் போன்ற புணர்ச்சி விதி தொல்காப்பியத்திலேயே கிடையாது என்று ஆட்சேபிக்க முருகனே எடுத்துக் கொடுத்த முதல் வரி இதை எப்படி மாற்றுவது என்று அவர் திகைத்து நின்றார். மறுநாள் சோழதேசத்திலிருந்து வந்த ஒரு புலவர் வீரசோழியம் என்ற இலக்கண நூலை சமர்ப்பிக்க அதில் 'திகடசக்கரம்' என்ற வார்த்தைக்கு கச்சியப்பர் கூறிய புணர்ச்சி விதி சரியாக அமைந்திருப்பதைக் கண்டு கச்சியப்பரின் நூல் அரங்கேற்றம் கண்டது. கிட்டத் தட்ட இதேப்போன்ற ஒரு யுக்தி கண்டு பிடித்து தன்னுடைய பிரச்சனைக்கும் தீர்வு காணும் கதாநாயகன்! என்ன அருமையான கதை! இதை படித்ததிலிருந்து திரு முத்துலிங்கத்துக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே....யிருக்கிறேன்.அவர் திண்ணை வாசகராக இருக்கும் பட்சத்தில் இந்த பிரச்சனைக்கு தீர்வு வந்து விடும். கச்சியப்பரைப் போல் நான் கூறிய யாப்பிலக்கணத்தையும் ஒத்துக் கொள்ளக் கூடிய வகையில் வருங்காலத்தில் ஒரு இலக்கணநூல் வராமலா இருக்கும்?


மாவட்ட அளவில் நடை பெற்ற கவிதைப் போட்டியில்
“தத்தை நிறமே எங்கும் தவழ புல்
மெத்தை விரித்த மென்மழையே
வித்தை செய்த விந்தை மழையே உன்
சொத்துத்தானோ சொக்கத்தங்கம்” இதைப் போல் கவிதை எழுதினால் பரிசு கிடைக்காமாலா போகும்? கவலைப் படாதீர்கள். இப்போது கவிதை எல்லாம் எழுதுவதில்லை. உண்மை! என்னதான் சொல்லுங்க! ஆயிரம் புதுக் கவிதைப் படித்தாலும் என்னவோ சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டாலும்
மனதில் தங்குவது என்னவோ மரபுக் கவிதைதான்! மனப்பாடம் செய்ய வசதி!
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தமிழ் தெரிந்த எந்தத் தமிழனும் குறைந்த பட்சம் பத்துக் குறளாவது சொல்ல முடியும். புதுக் கவிதைகள் அதை நானே எழுதியிருந்தாலும் திடீரென்று யாரிடமாவது சொல்ல வேண்டும் என்றால் தட்டித் தடுமாறிப் போக நேரிடுகிறது. கொண்டுகூட்டுப் பொருள் கோள் போல் வார்த்தைகள் வரிகள் மாறிவிடுகிறது. என்ன மாறினாலும் பிரச்சனையும் இல்லை. இதுதானே புதுக் கவிதைதையின் பலம்!

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் -15 - “ஊருக்குப் போன பொண்ணு உள்ளூரில் செல்லகண்ணு கோவில் மணி ஓசை கேட்டாளே”

சித்ரா ரமேஷ்

அந்த இரண்டு வருடங்களையும் கடந்து உயர் நிலைப் பள்ளி வந்தாகிவிட்டது. அதேப் பள்ளிதான்! ஆனால் இனிமேல் கொஞ்சம் பெரிய பெண்ணாக நடத்துவார்கள்.
கூடுதல் பொறுப்புகள். கூடுதல் எடுபிடி வேலைகள். எமர்ஜென்சி வேறு அப்போது
வந்து விட்டதால் கிளாஸ் பக்கமே எட்டிப் பார்க்காத ஆசிரியைகள் கிளாஸ§க்கு வந்து பாடம் நடத்த வேண்டியக் காலக் கட்டாயம்! கேள்வி பதில் எழுதித் தரும் நோட்டு புத்தகங்களையெல்லாம் திருத்தித் தரும் அதிசயமெல்லாம் நடந்தது. எங்க ஊர் குப்பைக் கூட்டுகிறவர்கள் வெற்றிலை போட்டுக் கொண்டு அங்கங்கே காறித் துப்பிக் கொண்டு குப்பைகளுக்கு நடுவே உல்லாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சியைத்தான் காணலாம். அவர்கள் குப்பைப் பெருக்கி ரோடெல்லாம் சுத்தமான அற்புதக் காட்சி! நேரத்துக்கு ஆஃபிஸ் செல்லும் கனவான்கள்! இதைப் போன்ற கண்களுக்கு விருந்தளிக்கும் பலக் காட்சிகளைக் கண்டு களித்த நாட்கள்! ஸ்கூலுக்கு
இன்ஸ்பெக்டர் வருகிறார், டி ஓ வருகிறார் என்றால் மட்டுமே நடக்கும் அமர்க்களமெல்லாம் தினந்தோறும் நடந்தால்? எல்லா நோட்டுப் புத்தகங்களுக்கும் அட்டை போட்டு உள்ளே பொருளடக்கம் எழுதி கேள்வி பதில் எல்லாம் திருத்தி அவர்கள் வகுப்புக்குள் வந்து விட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும், கேள்வி கேட்டால் யார் எழுந்து பதில் சொல்ல வேண்டும் என்ற செட்டப் செய்து நாடகமெல்லாம் நடக்கும். இன்ஸ்பெக்டர், டி ஓ வருவது டீச்சர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் நடக்கும் பரீட்சை. நமக்கு இல்லை என்ற உண்மை அப்போது தெரியாமல் நாங்களும் கவலைப் பட்டுக் கொண்டிருப்போம். போதுவாகவே வேலை தேடுவதில் இருக்கும் ஆர்வம் பிறகு வேலை கிடைத்து அதைச் செய்யும் போது இருக்காது. அதுவும் அரசாங்க வேலையென்றால் அவ்வளவுதான்! புதியதாக எதையும் கற்றுக் கொள்ளாமல் அதே வேலையை திரும்பத் திரும்பச் செய்து தேவைப்பட்ட நேரத்தில் மட்டும் யார் யாரை எப்படிக் கவனிக்க வேண்டுமோ அப்படி கவனித்து ரிட்டையர் ஆகி விடலாம். எங்களுடைய சயின்ஸ் டீச்சர் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து வெளி வந்த புது அறிவியல் பாடப் புத்தகத்தையே ஒத்துக் கொள்ளவில்லை. வகுப்பில் வந்து தைரியமாக இந்த புது சிலபஸ் பாடமெல்லாம் என்னால் சொல்லித்தர முடியாதுடி நீங்களே படிச்சுக்குங்க என்று சொல்லி விட்டாள். இந்த ஆசிரியை பிறகு தலைமை ஆசிரியை ஆகி நல்லாசிரியை விருது பெற்றதாகக் கேள்விப்பட்ட போது எங்கள் வகுப்புத் தோழியர் அனைவருமே சிரித்துக் கொண்டோம். மாணவர்களை 'நன்றாகப்' படிக்க வைத்து பரீட்சை பாஸ் பண்ண வைப்பதுதானே நல்ல ஆசிரியரின் இலக்கணம்! இந்த இலக்கணத்தை மீறாமல் மாணவர்களை அதட்டி உருட்டி படிக்க வைத்து மனப்பாடம் செய்து மூன்று முறை எழுதி காட்டி பரீட்சை சமயத்தில் முக்கியமான சொல்லிக் கொடுத்து 'கற்பித்தல்' நீங்கலாக மற்ற எல்லா விஷயங்களிலும் லட்சிய ஆசிரியைதான்!

அந்த வருடம் வந்த புதிய பாடத் திட்டத்தில் பயங்கரப் புதுமை ஹிஸ்டரி, ஜியாகரஃபி புத்தகம்தான்! தமிழ் மீடியம் வகுப்பு புத்தகத்துக்கும் இங்கிலிஷ் மீடிய புத்தகத்துக்கும் இருந்த ஒரே ஒற்றுமை அட்டைபடம் ஒன்றுதான்! மற்ற படி உள்ளேயிருந்த விஷயங்கள் எதிலும் குறைந்த பட்சம் ஆறு ஒற்றுமைகள் கூட கிடையாது. தமிழ் நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் வெளிவந்ததுதான்! தமிழ் வழிக் கல்விக்கான புத்தகத்தை எழுதியவரின் மொழி பெயர்ப்பு சரியில்லையா? இல்லை ஆங்கில வழிக் கல்விக்கான புத்தகத்தை எழுதியவரே வேறு யாரோவா? ஆனால் பரிட்சைக்கான கேள்விகள் தமிழ் மீடியப் புத்தகத்திலிருந்துதான் வரும் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. அந்த வகுப்பில் தொடர்ந்து செய்த ஒரே விஷயம் மொழி பெயர்ப்புதான். தமிழ் மீடியப் புத்தகத்தை வைத்துக் கொண்டு வரிக்கு வரி மொழி பெயர்த்து எழுதிக் கொண்டிருப்போம்.

பொதுவாகவே பெண்களுக்கும் பெருந்தன்மைக்கும் சம்பந்தமே கிடையாது. அதுவும் படிப்பு விஷயம் என்று வரும் போது எல்லா நல்ல குணங்களும் மறைந்து விடும். அதனால் ஒருவர் மொழி பெயர்ப்பை மற்றவருக்கும் கொடுத்து உதவும் நற்பண்பெல்லாம் கிடையாது. ஆனால் இதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. ஒருவர் கஷ்டப்பட்டு செய்யும் விஷயம் அடுத்தவருக்கு ஒரு சின்ன முயற்சிக் கூட செய்யாமல் கிடைத்து விடும். சோம்பேறிகளுக்கு உதவக் கூடாது என்று என் தோழி ஒருத்திதான் இப்படி விளக்கம் சொன்னாள். அப்போது அம்மா, அப்பா, அண்ணன் யார் எது சொன்னாலும் எதிர்த்து நிற்கும் மனது ஃபிரெண்ட்ஸ் சொன்னால் மட்டும் வேத வாக்காகி விடுமே! வெயிலா, குளிரா, புயலா, மழையா என்று எதையும் பற்றி கவலைப் படாமல் வகுப்புக்கு வந்து சுவையாக பாடம் எடுத்தது தமிழாசிரியை மட்டும்தான்! இவங்களை மட்டும் மற்ற ஆசிரியைகள் போல் 'டீச்சர்' 'மிஸ்' என்றெல்லாம் கூப்பிடாமல் 'தமிழம்மா'. எப்படி இந்த பழக்கம் வந்தது என்று புரியவில்லை. வயது முதிர்ந்த தமிழாசிரியைகள் 'பெரிய தமிழம்மா' 'சின்ன தமிழம்மா'. வயது குறைந்த தமிழாசிரியைகள் ' பெரிய தமிழக்கா' சின்ன தமிழக்கா'. மிச்ச உறவெல்லாம் ஏன் விட்டு வச்சீங்கன்னு அப்பப்ப அண்ணன் கிண்டல்! தமிழம்மாதான் எனக்கு மட்டுமில்லை எங்கள் வகுப்புக்கே பிடித்த ஆசிரியை!
கட்டுரை எழுதச் சொன்னால் தன் வரலாறு கூறுதல், வர்ணனைக் கட்டுரைகள்
என்று தலைப்புக் கொடுத்து விட்டால் போதும் எல்லோரும் பிச்சு உதறி விடுவார்கள்.
ஆனால் எல்லோரும் கவனிக்கக் கூடிய வகையில் சிறப்பாக எழுதியிருந்தால் கண்டிப்பாக வகுப்பில் அதை படித்துக் காட்டி மகிழ்வது போன்ற அரியச் செயல்கள் செய்து மகிழ்விப்பார்கள். நதி தன் வரலாறு கூறுதல் என்ற தலைப்பில் எழுதியது முதன் முதலில் நல்ல பெயர் வாங்கித் தந்தது. அதில் “மானசீக நதி” என்ற ஒரு வார்த்தை டீச்சரின் நெஞ்சைத் தொட்டுவிட்டது. கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் சங்கமமாகும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் அங்கு கங்கையும் யமுனையும் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். மூன்றாவது நதியான சரஸ்வதி கண்ணுக்குத் தெரியாத 'மானசீக நதி' சங்கமமாகிறது என்பதைப் படித்து விட்டு 'மானசீக நதி' என்ற வார்த்தையால் கவரப் பட்டு மணலுக்கு அடியில் ஓடும் 'மானசீக நதி' வெறும் ஊற்றாக மட்டுமே கண்ணுக்குப் புலப்படுவேன் என்று நதி தன் வரலாறு கூறும். காவேரிப் பிரச்சனை இவ்வளவு தலை தூக்காத போதே வெறும் மணலாய் விரிந்த நதிப் படுகைகளைப் பற்றிப் பேசிய தீர்க்கதரிசி! நதிகள் பாதை மாறி போகும். வறண்டுப் போகும். ஆனால் மணலுக்கு அடியில் ஓடிக் கொண்டிருந்த நதியின் கதையைப் பற்றி எழுதிய சிந்தனையாளரை எல்லோருக்கும் பிடித்ததில் ஆச்சரியமென்ன? 'வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி' என்ற ஒரு சாதாரணத் தலைப்பு! வாழ்க்கையின் துயரங்கள் அனைத்தும் ஒரு மகத்தானச் சம்பவத்தின் தொடக்கம் என்றே சொல்ல வேண்டும்! யேசுநாதர் சிலுவையைச் சுமந்து ரத்தத்தில் குளித்ததைப் பார்த்து அனைவரும் பாவம் யேசு என்றார்கள். ஆனால் அவரோ அனைவரின் பாவத்தையும் சுமந்து நீங்கள் பாவம் என்றார் என்று சுகி சிவம் பாணியில் செம 'தன்னம்பிக்கைக்' கொடுத்து எழுதி டீச்சருக்கு ஒரு தத்துவ ஞானியாக காட்சியளித்தேன். நிறைய புத்தகங்கள் படிப்பியா? என்று டீச்சர் கேட்டதும் 'ஆமாம்' என்று பெருமையாகச் சொல்லிகொண்டேன். அடுத்தது வம்பை விலை கொடுத்து வாங்குகிற கேள்வி. யார் எழுதிய புத்தகமெல்லாம் படிப்பே என்று கேள்வித் தொடர 'யார் புத்தகம்?' ஆனந்த விகடன், குமுதம் கூடவே வரும் கல்கண்டு, கல்கி, பேசும் படம் அவ்வப்போது தினமணிக் கதிர் என்று சொல்லலாமா? ஒரு மாதிரிக் கேள்வியைப் புரிந்து கொண்டு ஜெயகாந்தன், இந்துமதி, ராஜேந்திரகுமார் (எங்கே இவரைக் காணும்?) சுஜாதா என்று ஒரு லிஸ்ட் கொடுத்து நல்லவேளை ஸ்ரீவேணுகோபால் பெயரைச் சொல்லவேண்டாம் என்று ஒரு ஞான திருஷ்டி தோன்றி சொல்லாமல் விட்டு விட்டேன். பாலகுமாரன் அப்போ எழுத ஆரம்பிக்கவில்லையா? தமிழ் டீச்சருக்கு சத்தியமாக இந்த லிஸ்ட்டைக் கேட்டு ஒரு திடுக்கிடல் இருந்திருக்க வேண்டும் மணிவண்ணன்!!, முவ, அகிலன், அட்லீஸ்ட் கல்கியைக் கூட குறிப்பிடாத என் ரசனை மீது சற்று அதிருப்தி ஏற்பட்டிருந்தாலும் “இவங்களெல்லாம் என்ன எழுதறாங்க என்ன கருத்தைச் சொல்ல வர்றாங்கன்னேப் புரியலையே?'” என்று முணுமுணுத்து விட்டுப் பிறகு இந்த புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் பற்றிப் பேசுவதையே விட்டுவிட்டார்கள். இந்த மாதிரி என்ன புத்தகம் படிப்பாய் என்று விசாரித்ததே அந்த பத்தாண்டின் மிகப் பெரிய சாதனைதான். கதைப்புத்தகம் படிப்பது, சினிமா பார்ப்பது, சினிமாப் பாடல்கள் கேட்பது என்பதெல்லாம் நல்ல பெண்கள் செய்யக் கூடாத கெட்டப் பழக்கம் ஆயிற்றே! அந்த புத்தகங்களில் என்ன கருத்துன்னு கேட்டாங்களே! இன்னும் கொஞ்சம் அனுமதித்திருந்தால் கருத்தையெல்லாம் விளக்கமாகச் சொல்லியிருந்திருக்கலாம். 'நைலான் கயிறு' கதையில் டைரி எழுதுவது எப்படி, பெண்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப் படுகிறார்கள், கண்டுபிடிக்கப் படாத குற்றம் என்பதே கிடையாது என்று அடுக்கியிருப்பேன். கவிதை எழுதும் அழகான இண்டெலெக்சுவல் திமிர் நிறைந்த வாலிபன் எப்படி கவிதையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு கணக்கெழுதப் போகிறான் என்ற யதார்த்தக் கருத்தைச் சொல்லும் இந்துமதியின் கதை, (தரையில் இறங்கும் விமானங்களுக்கு இப்படி ஒரு வியாக்கியானம் செய்துதானா உங்களுக்குப் புரிய வைக்க வேண்டும்?) எங்களுக்கெல்லாம் கமலும், அர்விந்த் சாமியும் அழகனாய்த் தோன்றிய மாதிரி இந்துமதிக்கு அமிதாப்பச்சன் அழகாய்த் தோன்றினாரோ? அமிதாப்பச்சனுக்கும்,ரஜனிகாந்த்துக்கும் அழகு முக்கியமில்லை. ராஜேந்திரக்குமார்
'ஙேன்னு முழிக்கறது எப்படி என்று சொல்லியிருப்பார். பரவாயில்லை. எங்க தமிழாசிரியைக்கு என் மூலம் நவீன இலக்கியப் பரிச்சயம் கிடைக்காமல் போயிற்று. ஆனாலும் அவங்களுக்கு நல்ல ரசனை இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய வித்தியாசமான எழுத்தைப் படிச்சுப் புகழ்ந்தாங்களே! சரி என்ன வித்தியாசமாக எழுதினாலும் படிச்சுப் புகழ்வாங்களேத் தவிர மதிப்பெண் தரும் போது வழக்கமான தமிழ் ஆசிரியர்கள் கஞ்சத்தனத்தோடுதான் மார்க் தருவாங்க!

ஏனோ இந்தத் தமிழ் ஆசிரியர்களுக்கு முவ, நாபா, அகிலன் மீது அதி தீவிரப் பற்று இருப்பது போல் திருக்குறள் மீதும்! குறள் எடுத்துக் காட்டாய் எழுதினால் மார்க் அதிகம் உண்டு. அனைவரும் கற்க கசடற, தொட்டனைத்தூறும் மணற்கேணி, ஆக்கம் அதர்வினான், ஒழுக்கம் விழுப்பம், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், கேடில் விழுச் செல்வம் போன்ற குறள்களை மேற்கோள் காட்டி கட்டுரை எழுதிவிடுவார்கள். கட்டுரைத்தலைப்புக்குச் சிறிது கூட சம்பந்தமே இல்லாதக் குறளைக் கூட சாமர்த்தியமாக உள்ளே நுழைத்து விடுவார்கள். ஒரு முறை என் தோழி ஒருத்தியின் கட்டுரையைப் படித்து விட்டு ஏன் இந்தக் குறளை இதுக்கு எழுதியிருக்கே? என்று கேட்டதற்கு இதுக்குப் பொருத்தமா வேறு எந்தக் குறளும் தெரியவில்லை. சும்மா ஒரு குறள் எழுதினால் போதுமே என்று சொல்லி சிரித்தாள். பிறகு அவளே ரகசியமாக டீச்சர் என்ன எல்லாத்தையுமா கவனிச்சுப் படிக்கப் போறாங்க? எந்தப் பாட்டு எழுதினாலும் பரவாயில்லை பாரு அடுத்த வாட்டி எனக்குப் பிடிச்சப் பாட்டை எழுதப் போகிறேன். நீ மட்டும் வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் என்று ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். அடுத்த முறை கட்டுரை எழுதும் போது சும்மா இடையில் 'ஊருக்குப் போற பொண்ணு உள்ளூரில் செல்லக் கண்ணு கோவில் மணி ஓசைக் கேட்டாளே பாவம் உந்தன் கச்சேரிக்குப் பொண்ணு நானா? ' என்று எழுதி கொடுத்து விட்டாள். அதை இப்போது நினைத்தாலும் அந்த இளமையும் திமிரும் தெரிகிறது. டீச்சர் படிச்சாங்களா? இந்தக் கேள்விக்கு விடை அவசியமா? அவள் எழுதி கொடுத்தக் குறும்புதானே முக்கியம்? ஆனா இந்த மாதிரி விளையாட்டெல்லாம் நம்மிடம் நன்றாகப் பழகும் ஆசிரியைகளிடம்தான் செய்ய முடிகிறது என்பதுதான் ஒரு வேதனையான விஷயம்! இதை சீரியஸ் ஆக்கும் ஆசிரியைகளிடம் எந்த விளையாட்டும் வைத்துக் கொள்ளாமல் நல்ல பேர் வாங்க முயற்சி செய்வோம். அந்தப் பெண்ணைக் கூப்பிட்டு எதுக்கு இந்த பாட்டை இங்கே எழுதினாய் என்று கேட்டுவிட்டு சிவப்பு மையால் அடித்து விட்டார்கள். அந்தத் தோழி சொன்னது போல் இல்லாமல் ஆசிரியை எல்லாக் கட்டுரைகளையும் திருத்தும் போது படித்துத் தான் மதிப்பெண் தருகிறார்கள் என்பது புரிந்தது. கிழக்கே போகும் ரயில் பாட்டு சூப்பர் பாட்டுத்தான்! ஆனா அதை எதுக்கு எடுத்துகாட்டாக எழுத முடியும்?

இதைப் படித்து விட்டு அந்த பாட்டு எழுதியப் பெண் நான்தான்னென்று உங்களில் பாதிப் பேராவது யோசிக்கக் கூடும். கண்டிப்பாக நானாக இருந்திருக்க முடியாது.
இருந்தாலும் மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். உண்மை புரியும்!

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg