ஆட்டோகிராஃப் -14- "ஒரு கதாநாயகி கதை சொன்னாள்"

சித்ரா ரமேஷ்

நான் ஏற்கெனவே சொல்லியிருந்த மாதிரி உடையலங்காரம் கேபிசுந்தராம்பாளை ஒத்திருந்தாலும் ஒருத்தி மட்டும் ஷெரீன் ஸ்டைலில் வருவாள். எட்டாவது வரைக்கும் அவரவர் வளர்ச்சியைப் பொறுத்து முட்டிக்கு கீழ் வரை ஸ்கர்ட்,கொஞ்சம் உயரமாக வளர்ந்து விட்டால் முழுப் பாவாடை. ஒன்பதாம் வகுப்பு வந்து விட்டால் தாவணி கம்பல்ஸரி. ஸ்கர்ட், பாவாடைத் துணியில் வித்தியாசம் காட்ட முடியாது. தடியான சாக்குப்பை போன்ற துணி மட்டும்தான் கிடைக்கும். விலை குறைவு, நீடித்து உழைக்கும் போன்றவற்றால் இந்த வகைத் துணியையே பெரும்பாலானோர் விரும்பிப் பாவிப்பர். கிரீம் கலர் சட்டையில்தான் கொஞ்சம் விளையாடுவார்கள். கிரீம் கலர் என்பது அடிக்க வரும் கோவிந்தா மஞ்சள் கலரிலிருந்து நல்ல சொட்டு நீல வெண்மை வரை வித வித வண்ணங்கள் மாறும். மெலிதாக உள்ளேயிருக்கும் உள்ளாடைத் தெரிய லோ கட் நெக் பிளவுஸ் போட்டுக் கொண்டு காலையில் அஸெம்பிளி முடியும் வரை முன்னால் இரண்டு மூன்று மடிப்புகள் வைத்து தாவணியின் ஒற்றைத் தலைப்பை இழுத்துச் சொருகிக் கொண்டு பதவிசாக பண்டரிபாய் மாதிரி நின்று கொண்டிருப்பார்கள். அஸெம்பிளி முடிந்து வகுப்புக்குப் போகும் போதே தாவணியை இழுத்து பின் பக்கம் 'வி' வடிவம் கொண்டு வந்து லோ நெக் தெரியாத வண்ணம் இழுத்து சொருகியிருந்த முந்தானையை தளர்த்தி விதி முறைகள் மீறப்படுவதற்குத்தான் என்று கவர்ச்சிக் காட்டும் புதுமை விரும்பிகள்.
இவர்களைக் காட்டிக் கொடுப்பதையே கலாச்சாரமாகக் கொண்டிருந்த பழமைவாதிகள். நன்றாக உடை உடுத்துவது என்பது அதிகத் தன்னம்பிக்கைத் தரும் விஷயம் என்பதெல்லாம் அப்போது கிடையாது. நன்றாக அலங்காரம் பண்ணிக் கொண்டுப் போனால் நம் குடும்பத்தையே சந்தேகிப்பார்கள். சின்னப் பெண்களையாவது
மன்னித்து விடுவார்கள். பெண் பெரிய பெண்ணாகி விட்டால் அம்மா பின்னித் தொங்க விட்டுக் கொண்டு பூ வைத்துக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். கண்டிப்பாக அவர்கள் நடத்தைப் பற்றி விமர்சனம் நடக்கும். நகர்ப் புறங்களுக்கும் கிராமப் புறங்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்ததோ இல்லையோ இந்த ஆடை விஷயத்தில்
கண்டிப்பாக நிறைய இருந்தது. பாம்பே, டெல்லி, அருகிலிருக்கும் சென்னையிலிருந்து யாராவது வந்தாலே வித்தியாசத்தைக் கண்டு பிடித்து விடலாம். இவ்வளவுக் கட்டுப்பாடுகளுக்கும் நடுவில் ஷெரீன் மாதிரி குட்டி ஸ்கர்ட் போட்டுக் கொண்டு, முன் பக்க முடியெல்லாம் கத்தரித்து விட்டுக் கொண்டு கழுத்தில், கையில், காதில், எல்லாம் விதவிதமாக அணிந்து கொண்டு வருவாள். அந்த சிற்றன்னை டீச்சருக்கு எதாவது அப்ஸெஸிவ் டிஸ்ஆர்டர் இருந்ததோ என்று ஒரு நிமிடம் யோசிக்க வைக்கிறார்.
எங்களையெல்லாம் எவ்வளவு வெறுத்தாரோ அவ்வளவுகவ்வளவு இந்தப் பெண் மீது விருப்பு. தலையை லூசாக பின்னிக் கொண்டு வரும் ராணிகிரிஜாவுக்குத் தினம் தண்டனை. அவள் தலையை விரித்துக் கொண்டு மோகினி மாதிரி வந்தால் எங்க டீச்சர் ரவிவர்மா ஆகிவிடுவாங்க! வீட்டுப் பாடம் செய்து வரவில்லையென்பதையும்
அலட்சியமாகச் சொல்லிவிட்டு ஒரு மகாராணியின் கர்வத்தோடு நடந்து வருவாள்.
டீச்சருக்கு இவ்வளவு 'பெட்டாக' அவள் இருந்தது எதிர்க்கட்சியினரான எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லாமலிருந்த காரணம் அவள் எங்களுக்கும் நல்ல தோழியாக
இருந்ததுதான். வகுப்பில் மற்ற பெண்களெல்லாம் டீச்சருக்குப் பயந்து சுயநலவாதிகளாக இருந்தபோதும் இவள் மட்டும் எங்களிடம் நட்பு பாராட்டியது தென்றாலாக வீசியது. ஒருமுறை அந்த டீச்சரே பெருந்தன்மையாக 'ஸ்நோவொயிட்' நாடகத்தில் சித்தி வேஷம் எனக்குக் கொடுத்தாங்க! என்னை சிறுமைப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அப்புறம் இவள் அந்த வேஷத்தை ஏற்று நடித்த போதுதான் 'ஸ்நோவொயிட்' நாடகத்தில் உண்மையான கதாநாயகி அந்த சித்தி கதாப் பாத்திரம்தான் என்பது புரிந்தது. 'ஸ்நோவொயிட்' அளவிற்கு அழகுப் படைத்தவள். நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு. பிரமாதமாக நடித்தாள். இதைப் பார்த்து விட்டுதான் வில்லன், வில்லி கதாபாத்திரங்களை விரும்பி ஏற்று நடிக்க ஆரம்பித்தேன். அண்ணனுக்கு முடிசூட்டுவிழா என்று பொறாமைப் படும் தம்பி! “ அங்கே அண்ணனுக்கு மகாராஜாப் பட்டம். இங்கே எனக்கு படைத்தளபதி வேலை! அவமானம்!” என்று வளை இடுப்பிலிருந்து உருவி வலது காலை பக்கத்திலிருக்கும் முக்காலி மீது கோபத்துடன் வைத்து வசனம் பேச வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முக்காலி மீது காலை வைப்பதற்குப் பதில் இடறி விட ஸ்டூல் உருண்டு உணர்ச்சிவசப் பட்ட நடிப்பு என்ற பாராட்டு அந்த முக்காலிக்கு!! முக்காலிக்கும் எனக்கும் எப்பவுமே கொஞ்சம் பிரச்சனைதான்! இதை யார் டிசைன் செய்தது? முதன் முதலாக என் கலைப் பயணத்தைத் தொடங்கிய போதே முக்காலியால் சின்ன இடையூறுதான்! 'பூம்பூம் மாட்டுகாரன்' பாட்டில் வரும் குட்டி 'பூம்பூம் மாட்டுகாரனாக நடிப்பதற்குத்தான் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். குட்டியா ஒரு மத்தளத்தை வைத்துக் கொண்டு ஆடுவது நன்றாகத்தான் இருந்தது. இன்னொரு நடனத்தை கொரியோகிராஃப் பண்ணிய டீச்சர் அதில் கிருஷ்ணனாக வந்தால் நன்றாக இருக்கும் என்று 'நீல வண்ணக் கண்ணனே' பாட்டுக்கு கிருஷ்ணனாக கோபிகைகளுக்கு நடுவில் நிற்பதற்கு தேர்வு செய்து விட்டார்கள். டுவிங்கிளிங் நைலக்ஸ் புடவையை முக்காலி மீது மடித்துப் போட்டுவிட்டு அதன் மேல் கையில் புல்லாங்குழலுடன் ஏறி நிற்க வேண்டும். டுவிங்லிங் நைலக்ஸ் புடவை இடுப்பில் நிற்பதே கஷ்டம். அதில் ஏறி நிற்கும் போதே கால் வழுக்கி வழுக்கி விளிம்புக்கு வந்து விட்டேன். கிளிஃப் ஹாங்கர் மாதிரி எத்தனை நேரம் நிற்க முடியும். கோபிகைகள் அப்போதுதான் சுற்றி வந்து பூ போட ஆரம்பித்திருந்தார்கள். இனிமேல் சமாளிக்க முடியாது என்று நிலைமை வந்ததும் மெள்ள முக்காலியை விட்டு கீழே இறங்கி எல்லாவற்றையும் சரி செய்து திரும்பவும் குழலூதும் கண்ணனாகப் போஸ். எல்லாரும் சிரித்தவுடன் மகிழ்ச்சியாகி விட்டது. கண்ணன் என்றால் இதைப் போல் குறும்புகள் செய்யவேண்டாமா?


ஷெரீன் என்ன செய்தாள் என்று பார்ப்போம். உலகிலேயே அவளுக்கு பிடித்த ஒன்று சினிமா. இலட்சியம் சினிமா நடிகையாவது. சினிமாக் கதையைப் பேசுவதற்கும், கோடம்பாக்க நட்சத்திரமாக மின்னுவதைப் பற்றி பேசுவதற்கு அவளுக்குக் கிடைத்த நம்பிக்கைக்குரிய நபர்களாக நாங்கள் இருந்தோம். அந்தப் அடத்துலே ஆரஞ்சுக் கலர் டிரஸ், கையில் ஆராதனா வளையல் போட்டுக் கொண்டுப் பாடுவாளே என்று பேச ஆரம்பித்தால் போதும்! ஒரு கனவு சாராஜ்ஜியம் கண்களில் விரியும். திடீரென்று ஒரு நாள் ஸ்கூலுக்கு வரவில்லை. ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதமாயிற்று வரவேயில்லை.
தன் வீட்டு வேலைக்காரப் பெண்ணுடன் மெட்ராஸ் கிளம்பிப் போவதற்குத் திட்டம் போட்டு வீட்டை விட்டு கிளம்பி ரயில்வேஸ்டேஷனிலேயே பிடித்துவிட்டார்கள். வழக்கம் போல் திட்டு, அடி, உதை எல்லாம் முடிந்த பிறகு அத்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டாள்.
ஒரு வருடம் பள்ளிப் படிப்பைத் தொடராமல் அடுத்த வருடம் போர்டிங் ஸ்கூலில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள். அவளது வீட்டைச் சுற்றி எங்கள் வகுப்பில் படித்த பெண்களே எட்டுப் பேர் இருந்ததால் அவர்களை சந்திக்க நேரிடுமோ என்ற பயத்தில் விடுமுறைக்குக் கூட எங்க ஊருக்கு வராமல் அப்படியே வந்தாலும் யார் கண்ணிலும் படாமல் வீட்டோட வீடா முடங்கிக் கிடந்து விட்டுப் போவாள். இதெல்லாம் பிறகு நான் சேகரித்தத் தகவல். அவள் போர்டிங் ஸ்கூலோட சேர்ந்து இருந்த காலேஜில் படித்த என் வகுப்புத் தோழிகள் அவளை ஹாஸ்டலில் சந்திக்க நேர்ந்த போது கூட அவள் அவர்களைப் பார்க்காத்தது போல் தவிர்த்துவிட்டு ஓடியதாகக் கூறிய போது அவளை நினைத்துப் பரிதாபப் பட்டோம். பாவம் அவள் என்ன அப்படிப் பெரிய தப்பு செய்து விட்டாள்? தப்பு சரி என்பதுகூட ஊருக்கு ஊர் மாறுபடும். இதே அவள் சென்னையிலேயே இருந்துக் கொண்டு கோடம்பாக்க ஸ்டூடியோக்க்களுக்கு விஜயம் செய்திருந்தால் அது ஒரு பெரிய விஷயமாகக் கூட பேசப்பட்டிருக்காது. அவள் துரத்தியக் கனவுகளை ஜெயித்துக் காட்டியிருந்தால் பிரபலமாயிருப்பாள். இப்போது நம் மெகாத் தொடர்களில் அக்கா, அண்ணி, அம்மா வேஷங்களில் வந்து கொடிகட்டிப் பறந்திருப்பாளோ? அவள் அப்பா அம்மா எதற்காக அவளை அப்படி அவமானப் படுத்தி வேதனையடையச் செய்ய வேண்டும்? அவள் அலட்சியத்தோடு நடந்து செல்வதே தனி அழகுதான். எவ்வளவு இனிமையானப் பெண்! நடுத்தரவர்க்கதினருக்கே உரிய மதிப்பீடுகள், மனத்தடைகள் இவற்றையெல்லாம் மீறுவது கஷ்டம்தான். இப்போழுது எல்லாப் பெண்களையும் எந்த வேலைக்கும் எந்த வித மனத்தடையும் இல்லாமல் பெற்றோரே அனுப்பும் அளவிற்கு காலம் மாறும் என்று யாரும் அப்போது நினைக்கவில்லையா? ஒரு கற்பனை பள்ளிக் கூடம்! அதில் வெறும் குமாஸ்தா வேலைக்கும், கூட்டல் கழித்தல் போடும் வேலைக்கும் மட்டும் பயிற்சி கொடுக்கும் பாடத்திட்டங்கள் இருக்கக் கூடாது. டாக்டர், எஞ்சினியர், பாங்க் ஆபிஸர், டீச்சர், போன்ற வேலைகளை மட்டும் பெரியதாக நினைக்கக் கூடாது. ஒரு பெரிய இசைக் கூடம், தோட்டம், படம் வரையப் பெரியக் கூடம், நாடக அரங்கம், நடிப்புப் பயிற்சி நினைத்தால் கணித வகுப்பிலிருந்து புறப்பட்டு தோட்டத்தில் உட்கார்ந்து கவிதை எழுதலாம். படம் வரையலாம் பியானோ வாசிக்கலாம் என்று எந்தவிதக் நேரக் கட்டுப்பாடுகளும் இல்லாத ஒரு பள்ளி!சாயங்காலம் இரண்டு மணி நேரம் விளையாடுவது மட்டும்தான் கட்டாயம்! நினைத்தாலே இனிக்கிறது. அதற்காக அடிப்படைக் கல்வி எதையும் மாற்ற வேண்டும் என்பதில்லை. நேரத்துக்கு வருவது, டைம் டேபிள் போட்டுப் படிப்பது, மனப்பாடம் செய்வது என்பதெல்லாம் யார் போட்டச் சட்டம்? இந்த கல்வி முறையால் வெறும் பள்ளித் தேர்வை மட்டுமே கடக்க முடியும். ஒரு பாங்க் பரீட்சை எழுதி பாஸ் செய்வதற்குக் கூட முடியாதுதானே? அதெல்லாம் சரி சாப்பாட்டுக்கு? விளையாடரீங்களா? எது படித்தாலும் ஒரு நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்பிருக்க வேண்டும். வயிற்றில் பசி இருக்கும் போது பியானோவாவது பாட்டாவது! 'தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவமெய்தி கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலெ நான் வீழ்வெனென்று நினைத்தாயோ?' பாரதியைப் படிக்கும் போது வயிற்றுப் பாட்டுக்கு வாழ்வது தேவையா? என்று நினைக்கத்தான் தோன்றுகிறது. பாவம் அவர் இப்போது வாழ்ந்திருந்தால் சாகித்ய அகாடெமி பரிசு கூட கிடைக்காமல் யாராவது இலக்கிய ஆர்வலர்கள் வாழ்நாள் சாதனை விருது கொடுத்து அதற்குக் கூட நீங்கதான் செலவழிச்சு வந்து பரிசை வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருப்பார்கள்!

அதனால் வயிற்றுக்குச் சோறு போடாத எந்த இலக்கியமும், கலைகளும் வேண்டாமே?

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 13 - "எதிரி பேரை சொல்லி அடித்தால் வெற்றி என்றே அர்த்தம்"

சித்ரா ரமேஷ்

ஸ்ட்ரைக் லீவும் முடிந்து ஸ்கூல் திறக்கப் போகிறது என்ற நினைப்பே தலை சுற்றியே வேதனை செய்ததடி! நான் ஸ்ட்ரைக் பண்ணும் நேரம். என்னை டுவல்வ் பிளாக் ஸ்கூல்லயே சேர்த்துவிடு நான் இந்த ஸ்கூல் போக மாட்டேன் என்று தகராறு பண்ண ஆரம்பித்து விட்டேன். "என்னடி இது! காலேஜ் சேரும் போது இங்கிலிஷ் மீடியத்தில் படித்தால் ஈசியா இருக்குமேன்னு சேத்தா இப்படி பண்ணறியே"என்று அம்மாவுக்கு வெறுத்துப் போய்விட்டது. ஏழாங்கிளாஸ் தாண்டுவதே பிரச்னையாக இருக்கும் போது காலேஜ் படிப்பையெல்லாம் பற்றி கற்பனை செய்துக் கூட பார்க்க முடியவில்லை. ஹிட் லிஸ்ட் மாதிரி ஒரு லிஸ்ட் வைத்துக் கொண்டு இவர்களையெல்லாம் எழாங்கிளாஸ் தாண்டவே விடப் போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு அன்புள்ள ஆசிரியை இருப்பதைச் சொன்னேன். அம்மா கேட்ட ஒரே கேள்வி "நீ ஃபெயில் ஆற மாதிரி மார்க் வாங்கினாத்தானே அவங்க அப்படி ஏதாவது செய்ய முடியும்? கொஞ்சம் கஷ்டப் பட்டு படித்து விடு. அதுக்கப்புறமும் அப்படி ஏதாவது ஆச்சுன்னா நான் உங்க ஹெச் எம் கிட்டயே போய் பேசிக்கறேன் என்று பெண்புலியெனப் பாய்ந்து எனக்கு வாக்கு கொடுக்கவும் வேறு வழியில்லாமல் திரும்பவும் போக ஆரம்பித்தேன். இங்கிலிஷ் நன்றாகப் படிக்க நிறைய இங்கிலிஷ் புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற அடிப்படை உண்மையை உணர்ந்து இங்கிலிஷ் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன். உடனே சார்லஸ் டிக்கன்ஸ், சாமர்செட் மாம், ஆர்கே நாராயண் என்று நீங்கள் கற்பனை செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல! "நாடி கோஸ் டு டாய்லாண்ட்" என்ற எனிட் பிளைட்டன் புத்தகம். எனிட் பிளைட்டன் கதைகளிலேயே அந்த வயத்துக்குப் படிப்பதற்கு எக்கச்சக்க புத்தகங்கள் இருக்கின்றன. அதைப் பற்றிய அறிவெல்லாம் அப்போது கிடையாது. இது எளிமையாக புரியும் படி கலர் கலர் படங்கள் போட்டு அழகாக இருந்தது.அப்புறம் 'நாடி' வரும் கிண்டெர் கார்டன் லெவலில் இருந்த புத்தகங்கள் அத்தனையும் படித்து என் மொழிஅறிவைப் பெருக்கிக் கொண்டேன். ஏழாங்கிளாஸ் இங்கிலிஷ் மிடியம் படிப்பதற்கு இந்த மொழியறிவு இருந்தால் போதும் என்ற திடுக்கிடும் உண்மையையும் கண்டு பிடித்தாகி விட்டது. ரொம்ப நல்லா படிக்கிற அருமையான பெண் ஒருத்தி இங்கிலிஷில் இருப்பதை அப்படியே தமிழ் படுத்தி படிக்கும் டெக்னிக்கையும் தெளிவு படுத்திய பிறகு வானம் வசப்பட்டுவிட்டது.

அடுத்தது அந்த டீச்சர். அதற்குள் அந்த வகுப்புக்கு நாங்களும் பழகி அன்னியர்கள் இல்லை என்று எங்கள் எல்லைகளை விரிவுப் படுத்திக்கொண்டு விட்டோம் எல்லோரும் ஒரே வகுப்பு என்ற ஒற்றுமை உணர்ச்சித் தோன்றி ரகசியமாக டீச்சர் எதிர்ப்பு சங்கத்தை ஆரம்பித்து விட்டோம். சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் பி இ வகுப்பின் போது எப்பாடு பட்டாவது விளையாடப் போவது. தினமும் கடைசி பிரியட் வரைக்கும் வகுப்பை இழுக்கடிக்காமல் சீக்கிரமாக கொடுத்த வேலைகளை முடித்து விட்டு டீச்சரையே வலுக் கட்டாயமாக விளையாட அனுமதி கொடுக்குமாறு செய்வது. ஓரளவிற்கு வெற்றி கிடைத்தது என்றே சொல்ல வேண்டும்.


பெண் பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பது வெகு சீக்கிரம் நிறுத்தப் பட்டு விடும் விஷயமாக இருந்தது. பத்து பன்னிரண்டு வயது ஆகி விட்டால் தெருவிலெ நின்னு என்ன விளையாட்டு என்று தடுக்கப்பட்டு விடும். அவர்களாகவே விலக ஆரம்பித்து விடுவார்கள். ஸ்கூலில் விளையாட சந்தர்ப்பம் கிடைத்தால் தான் உண்டு. இதில் நிறைய சோம்பேறிப் பெண்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு பி இ வகுப்பில் கூட மரத்தடியில் உட்கார்ந்து பொழுதைக் கழித்து விடுவார்கள். அதனால் விளையாட்டில் யாராவது ஆர்வம் காட்டினால் பி இ டீச்சருக்கு சந்தோஷமாகி விடும். கேம்ஸ் ரூமுக்குப் போய் எந்த விளையாட்டுக்கு வேண்டுமானாலும் உபகரணங்கள் எடுத்துக் கொண்டு வந்து விளையாட அனுமதி தந்து விடுவார்கள். ஸ்கூலை மிகவும் கட்டுப்பாடோடு ஒழுக்கத்திற்கு முக்கியம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஆசிரியை ஒருத்தி பெண்கள் விளையாடும் போது ஆண்பிள்ளைகள் எட்டிப் பார்க்கிறார்கள். அதனால் பள்ளியின் சுற்றுச் சுவரை உயர்த்திக் கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாள். ஒரு ஒட்டகமோ, ஒட்டகச் சிவிங்கியோ மட்டும் எட்டிப் பார்க்க முடிந்த சுவரை எப்படி பசங்க எட்டிப் பாத்தாங்க என்பது புரியவில்லை.


பொதுவாகவே எங்க ஊர் பையன்கள் அருமையான பசங்கதான். ஏனென்றால் ஏதாவது வம்பு செய்தால் அட்ரஸோடு பையனைக் காட்டிக் கொடுப்பது எளிது. சின்ன ஊர்தானே! கிட்டத்தட்ட எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும்.காட்டிக் கொடுக்க மாட்டோம் என்ற தைரியம் சில பேருக்குத்தான் இருந்தது. ஆனாலும் அந்த வயதிற்கே உரிய ஆர்வம் இல்லாமலிருக்குமா? காதெலென்னும் ஆசையில்லா பொம்மைகளா? எப்படியோ மரத்தில் ஏறி சுவரின் மீது வந்து உட்கார்ந்து விடுவார்கள் போலிருக்கிறது. இதெல்லாம் யாருக்குத் தெரியவேண்டுமோ அவர்களுக்குத் தெரியாது. யாருக்குத் தெரியக் கூடாதோ அவர்கள் கண்ணில் சரியாகப் பட்டுவிடும்.


டெஸ்ட், பரீட்சை இதெல்லாம் எழுதுவதற்கு ஒரு அபத்தமான யுக்தி இருந்தது.
அதை யார் கேட்டாலும் ரத்தம் கொதிக்கும்! இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் எவை? (4 மதிப்பெண்) என்ற கேள்வியிருந்தால் நான்கு காரணங்கள் எழுதினால் நாலு மார்க். இது எவ்வளவு எளிமையான விஷயம். ஆனால் இதை மட்டும் எழுதினால் 1/2 இல்லை 1 மார்க்தான் கிடைக்கும். நான்கு மதிப்பெண்ணையும் முழுமையாக வாங்க வேண்டும் என்றால் "ஒரு ஆஸ்திரிய இளவரசனை செர்பிய புரட்சியாளன் சுட்டு விட்டான்" என்ற முதல் உலகப் போருக்கான காரணங்களோடு தொடங்கி லீக் ஆஃப் நேஷன் உருவானது வரை எழுதி கடைசியில் இரண்டாம் உலக போருக்கான உண்மைக் காரணங்களை கூட எழுதாமல் விட்டு விடலாம். எழுதப்படும் கருத்துக்களை விட எழுதப்படும் அளவைக்கொண்டு நிர்ணயிக்கப்படும் மதிப்பெண்கள்.


சரித்திரம், பூகோளம் இந்த பாடத்தில்தான் இப்படியெல்லாம் கதை விட முடியும். மற்ற பாடத்தில் எல்லாம் முடியாது என்று முடிவு கட்ட வேண்டாம். த டிஃப்ரன்ஸ் பிட்வீன் பிளாண்ட் அண்ட் அனிமல் செல் என்று கேள்வி கேட்டால் கூட முதல் முதலில் செல் கண்டு பிடித்த ராபர்ட் ஹ¨க் அசந்து போகிற அளவிற்கு மொத்த பாடத்தையும் எழுதி அசத்தி விடுவார்கள். சயின்ஸ் டெஸ்ட்டில் முப்பதுக்கு இருபத்தியேழு மதிப்பெண்கள் போட்டு விட்டு டெஸ்ட் நோட்டை என்னிடம் கொடுக்கும் போது நம்ப முடியாமல்
திரும்ப அதை என்னிடமிருந்து வாங்கி அங்கேயும் இங்கேயும் மார்க்கைக் குறைத்து
கையில் கொடுத்ததும் உடம்பில் கிடுகிடுவென்று ஒரு ஆவேசம். முகம் சிவந்து நான் கோபமாக இருப்பதை மொத்த வகுப்பும் உணர்ந்தது. சில பேர்தான் எவ்வளவுக் கோபம் வந்தாலும் அதை மறைக்கும் திறமை பெற்றிருந்தார்கள். அந்த மாதிரி வேஷம் காட்டும் திறமையெல்லாம் என்னிடம் கிடையாதே! கோபத்தில் பயமேனும் பேய் பறந்து போய் "நீங்க நல்லாப் படிக்கலைன்னு திட்டறீங்களேன்னு நல்லாப் படிச்சு எழுதினாலும்
இப்படி செய்யறீங்க. இந்த டெஸ்ட் நோட்டை என் அம்மா பாக்கணும். நான் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போகப் போறேன்" என்று அழுகையும் ஆத்திரமுமாக பேசினேன் . ஏதோ இதைப் போல் பேசியிருப்பேன் என்று நினைக்கிறேன். டீச்சருக்கு ஏதோ பிரச்சனையை வலுவில் அழைத்து விட்டோம் என்பது புரிந்து விட்டது. எதைப் பற்றியும் கவலைப் படாதவள் போல் எல்லோரிடமும் டெஸ்ட் நோட்டை திருப்பி வாங்கினாள். என் குரூப் லீடர் என்னை மிரட்டி டெஸ்ட் நோட்டை வாங்கி டீச்சரிடம் கொடுத்து விட்டாள். இந்தப் பிரச்சனையை நாமே சமாளிப்போம் என்று அம்மாவிடம் சொல்லவில்லை. ஆனால் அதன் பிறகு வெளிப்படையாக வெறுப்பைக் காட்டுவது குறைந்துவிட்டது. சமாதானக் கொடியாக பள்ளி ஆண்டு விழா குழு நடனத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். என்னால் அந்த டீச்சரோடு எப்பவுமே இயல்பாக பழக முடியவில்லை. அதற்குப் பிறகு வகுப்பில் என் பேச்சு எடுபடும் நிலைமை வந்த போது வந்தாரை வரவேற்பது நம் பண்பாடு என்பது நம் வகுப்பின் தனித்துவமாக இருத்தல் வேண்டும் என்று எல்லோரையும் ஆற்றுப் படுத்தி எட்டாம்வகுப்பு , ஒன்பதாம்வகுப்பு என்று தொடர்ந்த புதுமுகங்களையெல்லாம் எங்களில் ஒருவராக அன்புடன் வரவேற்றோம். நல்லவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் நல்ல குணங்களை வெளிக் காட்டவேண்டாமா?அதில் ஒரு முயற்சியாக இது. ஆனால் அந்த மாதிரி வந்த புது முகங்களெல்லாம் அப்படி ஒன்றும் வழி தவறிய வெள்ளாட்டுக் குட்டியாய் இல்லை!
ஏழாம் கிளாஸ் தேர்வு எழுதி விட்டு கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது.
அம்மா விடவில்லை. எதுக்கு அந்த டீச்சர் இப்படி சொல்லிக் கொண்டேயிருந்தாள்?
என்று விசாரித்துத்தான் பார்ப்போமே என்று விசாரித்து விட்டு வந்தாள். அந்த கிளாஸிலே எல்லாரும் ரொம்ப பிரமாதமாகப் படிக்கும் மாணவிகள். அதில் கொஞ்சம் சுமாரா படித்தால் கூட அப்படித்தான் சொல்வார்கள் என்று சொன்னதைக் கேட்டு அப்படி என்ன எல்லோரும் பிரமாதமாக மார்க் வாங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த பிரமாதமான மார்க் ரேஞ்சில் தான் நானும் வாங்கியிருந்தேன். அப்புறம் எப்படி ஃபெயில் ஆக முடியும்? வாழ்க்கையில் ஒப்பீடு செய்தே பாதிப் பேர் இப்படித்தான் துன்பங்களைத் தேடிப் போகிறார்களா? தமிழ் மீடியத்தில் படித்திருந்தால் நல்ல மார்க் எடுக்க முடியும். அதே இங்கிலிஷ் மிடியம் வகுப்புக்கு வந்து விட்டால் சுமாரான மார்க் வாங்க முடியும் என்றால் நம் கல்வித் தரத்திலேயே ஏதோ தப்பு இருக்கிறது. இல்லை பாவம் அந்த ஹிட் லிஸ்ட்டில் இருந்த நான்கு பேர் ஃபெயில். டூரண்டு பேர் ஸ்கூல் மாற்றிக் கொண்டு போய் விட்டார்கள்.

ஒருத்தி தைரியமாக அங்கேயே தொடர்ந்தாள். என்னுயிர்த் தோழி ராணி கிரிஜா என்ன
ஆனாள் என்றே தெரியவில்லை. என்னைத் தவிர யாரிடமும் பேசக் கூட மாட்டாள். அந்த டீச்சர் என்ன சொன்னாலும் தலையைக் குனிந்து கொண்டு கேட்டுக் கொண்டு இருப்பாள். சபரி மலைக்குப் போக வேண்டும் என்று சொல்லி முன்னாலேயே லீவு கேட்டால் கிடைக்காது என்று சொல்லாமல் பத்து நாள் லீவு எடுத்துக் கொண்டு போய்விட்டாள். ஸ்கூலுக்குத் திரும்பி வரும் போது அவள் அப்பாவையும் கூட்டிக் கொண்டு வந்தாள். அவள் அவளை விட சாதுவாய் டீச்சருக்குப் பயந்து பயந்து பேசினார். ராணி கிரிஜா பாஸா ஃபெயிலா என்பது கூடத் தெரியவில்லை. எந்த ஸ்கூலுக்குப் போனாலும் ஒன்பதாம் வகுப்புப் படிக்க இந்த ஸ்கூலுக்குத்தான் வர வேண்டும் என்று நினைத்துக் காத்திருந்தேன். அக்கம் பக்கத்து வீடுகளில் தான் போய் விளையாட முடியும் அவளைத் தேடி அவள் வீடு வரைக்கும் போய்ப் பார்ப்பதெல்லாம் முடியாது. அவள் இருக்கும் அட்ரஸ் கூடத் தெரியாது.ஆனால் அவள் வரவில்லை. எங்கே போனாளோ? என்றோ ஒரு நாள் அபூர்வமாக கிடைத்த மகிழ்ச்சியான தருணத்தில் 'பிச்சி மந்தாரம் துளசி இச்சக மாலைகள் சார்த்தி குருவாயூரப்பா நின் பதம் சரணம்' பாட்டை பாடிக் காட்டினாள். வரிகள் சரியாக நினைவில்லை. கொஞ்சம் தமிழ் படுத்தி விட்டேனோ? கிட்டத்தட்ட இந்த வரிகள்தான்! மயிற்பீலி சூடிக்கொண்டு என்று தொடரும். கண்ணன் பாட்டு எதைக் கேட்டாலும் அவள் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. எனக்கு தற்செயலாக இதைப் பற்றி விசாரித்து தைரியம் சொன்ன அம்மா, கொஞ்சம் வலிமையுள்ள பின்னணி இருந்தது. பாவம் இதெல்லாம் இல்லாததினால்தான் அவள் எங்கள் வகுப்பை விட்டு வெளியேற நேர்ந்ததோ?


அடுத்த வருடம் நிஜமாகவே தமிழ் சொல்லித் தர ஒரு தமிழ் பண்டிதை, மாத்ஸ் டீச்சர் போன்ற விஷயங்கள் இயல்பாய் நடந்து விட அந்த டீச்சருக்கும் அப்படி ஒன்றும் வெறுப்பு இல்லாதவள் போல் இதை பற்றியெல்லாம் மறந்து விட்டவள் போல் சாதாரணமாக நடந்து கொள்ள முயற்சி செய்தாலும் நான் ஸ்கூல் முடிந்து போகும் வரை அந்த டீச்சரைக் கண்டாலே வேறு வழியில் போவது பார்க்காதது போல் போவது என்று தவிர்த்துக் கொண்டுதான் இருந்தேன். இதற்கப்புறம் வேறேந்த டீச்சர் எது செய்தாலும் என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. காரணம் நல்லாப் படிக்காத போதுதான் ஒரு மாணவனுக்கு டீச்சர் தேவை.

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 12 'பாடல் ஒரு கோடி செய்தேன் கேட்டவர்க்கு ஞானம் இல்லை'

சித்ரா ரமேஷ்

'ரோல்ட் டால்' என்ற குழந்தை எழுத்தாளர் எழுதிய 'மெட்டில்டா' கதையை படித்திருந்தால் எங்க ஸ்கூல் பற்றி விவரம் புரியும். அதில் ஒரு பயங்கர ஹெட் மிஸ்ட்ரஸ் வருவாங்க. அந்த ஸ்கூலும் ஏகப்பட்ட கெடுபிடிகளும் விதிகளும் கொண்ட பள்ளியாக இருக்கும். ஆனால் எந்த விதிமுறைகளும் ஹெட்மிஸ்ட்ரஸ் மேடத்துக்கும் அவங்களுக்கு நெருங்கியவர்களுக்கும் கிடையாது. கிட்டத்தட்ட இதே அமைப்பில் தான் எங்க ஸ்கூலும் இருக்கும். தலையில் எத்தனை லிட்டர் எண்ணெய் தடவ வேண்டும், எப்படிப் பின்னிக் கொள்ள வேண்டும், தாவணிக்கு எத்தனை மீட்டர் துணி வாங்க வேண்டும், எப்படி பொட்டு, வளையல், காதணி வகையறாகக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எங்கள் அனைவரையும் கே பி சுந்தராம்பாள் ஸ்டைலில் 'பழம் நீயப்பா' பாடிக் கொண்டு வரச் சொல்லாத குறை. நிறைய பெற்றோருக்கும் இந்த விதிமுறைகள் ரொம்ப பிடித்திருந்தது. பெண் குழந்தைகளை வளர்ப்பதில்தான் அவர்களுக்கு ஏகப்பட்ட கவலைகள் ஆயிற்றே! ஆனாலும் யார் கண்களுக்கு அழகாகத் தெரியவேண்டுமோ அவர்கள் கண்களுக்கு அழகிகளாகத் தெரிந்து கொண்டுதான் இருந்தோம். அந்த வயதும், இளமையும் அழகு! இது புரியாமல் என்னென்னெவோ செய்து அடக்க ஒடுக்கமாக மாற்றுவதாக ஒரு நினைப்பு. ஐஸ்வர்யா ராய் தாவணியில் வந்தால் உலக அழகி இல்லை என்று ஆகிவிடுமா? நிறைய பெண்கள் நல்ல பெண் என்ற இமேஜ் வர வேண்டும் என்று சாமி கும்பிடுகிறார்களோ இல்லையோ விபூதி வைத்துக் கொண்டு வந்து விடுவார்கள். என்னுயிர்த் தோழி கூட (அய்யங்கார்) விபூதியோடு வருவாள். நாமம் போட்டுக்க வேண்டியதுதானே! என்று விசாரித்தால் சீச்சீ! நிஜமாவே எங்க தும்பிக்கை ஆழ்வாரை வேண்டிண்டுதான் விபூதி! என்று சீரியஸாக கொஞ்சம் கூட சிரிக்காமல் பதில் சொல்வாள். அடிப்பாவி எங்க சைவப் பிள்ளையார் உங்களுக்கு ஆழ்வாராயிட்டாரா? என்று ஆழ்வார்க்கடியவன், வீரசைவன் மாதிரி அடித்துக் கொள்வோம்.


இந்த இமேஜ் எவ்வளவு பெரிய விஷயம் என்பது சமீபத்தில் மெட்டி ஒலி டீம் இங்க வந்தப்பத்தான் புரிந்தது. அதில் செல்வமாக நடிக்கும் விஷ்வாவிடம் அனைவரும்(அனைவரும் என்பதில் ஒரு முக்கிய நபரும் இருக்கிறார்) கேட்ட, கேட்க விரும்பிய ஒரே கேள்வி 'நீங்க நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப நல்லவரா?' . அதற்கு அவர் 'அவ்வளவு ஐடியலிஸ்டிக்கா ஆமான்னு சொல்ல முடியாது. முடிஞ்ச வரைக்கும் நல்லவனா இருக்க முயற்சி செய்கிறேன்' என்றார். விஷ்வா 'ஆமா நிஜ வாழ்க்கையிலும் நான் ரொம்ப நல்லவன்தான்' என்று சொல்லியிருந்தாலும் ஒரு புத்திசாலி பெண்கூட நம்பியிருப்பாள். அந்தக் காலத்துலே படிக்காத பாமர மக்கள் மத்தியில் தேவ தூதன் போல் ஒருவர் தோன்றி உங்களுக்கு நல்லது செய்யவே பிறந்திருக்கிறேன் என்று படத்துக்குப் படம் நல்ல இமேஜை கூட்டிக் கொண்டே போய் கடைசியில் பெரிய தலைவர் ஆனதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. (கனவுக் காட்சிகளை மறந்துடுங்க) விஷ்வா அடுத்த முதலமைச்சர் ஆவதற்கு முயற்சி செய்யலாம் என்று ஆலோசனைக் கூறியிருக்கலாம். ஓட்டு போடமாட்டீங்க? இத்தனை வாரம் என்னனென்னவோ பற்றி எழுதிகிட்டு வர்றேன். போன வாரம் அண்ணா என்று ஒரு வார்த்தை எழுதியவுடன் எடிட்டர் அண்ணா படத்தைப் போட்டுவிட்டார். மிஸ்டர் ராம் இந்த வாரம் எம்ஜியார் படமா? கூடவே பாவம் விஷ்வா படத்தையும் போட்டுடுங்க! தமிழர்களுக்கு திராவிட அடையாளமும், மொழியுணர்வும் கொடுத்த பெருந்தலைவர் ஆயிற்றே! அவர் மீது இப்படி ஒரு மதிப்பும் இமேஜும் இருக்கும். ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி கிடைத்ததா?யாராவது வாங்கி சமைச்சு சாப்பிட்டுருக்கீங்களா? இந்த மாதிரி கவர்ச்சிகரமாக தேர்தல் வாக்குறுதி தருவதிலும் முன்னோடிகள்தான்!


காலையில் அசெம்பிளி நடக்கும் போது பேசிக் கொண்டே....யிருப்பார்கள். அந்த பிரசங்கத்தில் கண்டிப்பாக "if welath is lost nothing is lost, if health is not lost something is lost, if character is lost everything is lost" என்ற பொன்மொழி கண்டிப்பாக இடம் பெரும். ஒழுக்கமாக இருப்பது எப்படி என்று மழலைத் தமிழில் மிழற்றுவார்கள் தலைமையாசிரியை. அரைகுறைத் தமிழ்த் தெரிந்த மும்பை இறக்குமதி நடிகை தமிழில் பேட்டியளிப்பது போல் நன்னடத்தையுள்ள பெண்களாக வாழ்வது எப்படி நன்மை பயக்கும் என்று ஏறு வெய்யிலில் நிற்க வைத்து அறிவுரைக் கூறுவார்கள்.தமிழ் சரியாக வராது.(சும்மா) எனக்கு முன்னால் நிற்கும் பெண்ணின் தலையில் ஊறும் உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சியை வேறு வழியில்லாமல் பார்த்து விட்டு கிளாஸிக்கு வரும் போதே கண்களில் பூச்சி பறக்க ஆரம்பித்து விடும்.எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு கண்ணில் பெருமாள் தெரிந்தார். நல்ல வெய்யிலில் நின்று விட்டு தீடீரென்று இருட்டுக்கு வந்தால் மஞ்சள், ஊதா, பச்சை, நீல நிறங்களில் எல்லா சாமி தரிசனமும் கிடைக்கும். இப்படி வெயிலில் வறுபடும் வேதனையில் ப்ரேயர் பாட்டையெல்லாம் அவசர அவசரமாக ஆளுக்கு ஒரு சுருதியில் பாடி நாலா பக்கத்திலிருந்தும் டால்பி சௌண்ட் இஃபெக்ட்டெல்லாம் கிடைக்கும்.


இந்த மாதிரி வெய்யிலில் நின்று சில பெண்கள் மயங்கி விழுந்து விடுவார்கள். அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு போக நான்கு பெண்கள்! அவர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நிற்போம். பெரிய பெண்கள் செய்யும் செட்டப்! பதினோராம் வகுப்பு படிக்கும் பெரிய பெண்கள் அன்று யார் மயங்கி விழுவது யார் தூக்கிக் கொண்டு போவது என்று ஒரு போர்த்திட்டமே தீட்டி இதை நடத்துவதாக எஸ்தர் என்ற பெண் சொன்ன போது சிரிப்பு வந்தது. மயங்கி விழற மாதிரி நடிக்கற பெண் சிரிச்சு காரியத்தை கெடுத்துட்டா? அப்போதெல்லாம் நன்கு வளர்ந்த பெரிய பெண்ணாக இருப்பவர்கள் பதினோராம் வகுப்பு படிப்பார்கள். ஸ்கூல் சேர்க்கும் போதே லேட்டாக சேர்ப்பார்கள். இவங்க பங்குக்கு இன்னும் லேட்டாக்கி ஸ்கூல் முடிக்கும் போதே மண மேடை ஏறத் தயாராகி விடுவார்கள். ஆண்கள் படிக்கும் பள்ளியில் கூட வேஷ்டி கட்டிக் கொண்டு வரும் பெரிய ஆண் பிள்ளைகள் இருப்பார்கள். அம்மா திருத்தக் கொண்டு வரும் நோட்டு புத்தகங்களில் முதல் பக்கத்தில் பாடல் வரிகள் எழுதி வைத்திருப்பார்கள்.'வசந்த மாளிகை' படப் பாட்டுகள்தான். 'கண்களின் தண்டனை காட்சி வழி...'இரண்டு மனம் வேண்டும்' 'மரணம் என்ற தூது வந்தது' .... தேவதாஸ் டைப் காதல் எல்லா ஆண்களுக்கும் காதலின் உச்சக் கட்டக் கனவா? இப்பொது கூட ஆட்டோக்களில் இதைப்போன்ற வாசகங்களைப் பார்க்கும் போது பெண்களை வெறுத்து எழுதுவதாகத் தெரியவில்லை. விரும்பி எழுதுவதாகத்தான் அவர்கள் பார்வை சொல்கிறது. 'இந்தப் பசங்களுக்குப் படிப்பு மட்டும்தான் வராது' என்று கோபத்தோடு அம்மா அந்த வரிகளை கறுப்பு மையினால் அடித்து விடுவாள்.


அது என்னவோ தெரியவில்லை. நான் போகும் வகுப்புகளுக்கு மட்டும் சரியான ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அந்த இடம் நிரப்பப் படாமல் காலியாக இருக்கும். இல்லை அந்த டீச்சர் தீராத வியாதியால் லாங் மெடிகல் லீவில் இருப்பார்கள். இதே போல் எழாவது வகுப்பிற்கும் தமிழ் ஆசிரியை கிடையாது. கணக்குக்கும் வர வேண்டிய டீச்சர் வரவில்லை. எனவே அந்த சிற்றன்னை டீச்சரே எல்லா வகுப்புக்கும் சும்மா கவர் பண்ண உட்கார்ந்து அவர்களுக்கும் எங்களுக்கும் பரஸ்பர வெறுப்பு அதிகமாகிக் கொண்டே போனது. நன்கைந்து பேர்களை ஹிட் லிஸ்ட்டில் போட்டு தினமும் ஒருவரையாவது அவமானப் படுத்துவதை பெரிய பொழுது போக்கு மாதிரி செய்து கொண்டிருந்தாள். சிவப்பு ரோஜாக்கள் கமலுக்கு கூட ஒத்தாசையாய் இன்னும் ரெண்டு கிறுக்குகள் சேர்ந்து கொண்ட மாதிரி இவங்களுக்கு உதவியாய் இரண்டு கிளாஸ்மேட்ஸ்! மாமியார்க் கொடுமையோடு நாத்தானார்க் கொடுமையும் சேர்ந்து கொண்டது போல இந்த ரெண்டு குட்டி தெய்வங்களும் நாங்க என்னிக்கு எந்த புத்தகத்தை மறந்து போய் கொண்டு வராமல் இருந்து விட்டால் உடனே போய் சொல்லி விடுவார்கள். ரொம்ப நியாயாமாய் நடந்து கொள்கிறார்களாம். குரூப் லீடர் என்ற பெயரில் வேறு கொடுமைகள்! சே! அதிகமாகத் திட்டக் கூட முடியவில்லை. நெருங்கிய தோழியாய் பழகி விட்டாள். சினிமாவில் பெரிய அடிதடிக்கு அப்புறம் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆற மாதிரி அப்போது வில்லிகளாகத் தெரிந்தவர்களெல்லாம் 'விதியின் கைப்பாவைகளாகி உன்னை ஆட்டி படைத்து விட்டோம்' என்று பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்ட பிறகு பெருந்தன்மையாகப் போவதைத் தவிர வேறு வழி? மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி?


எனக்குப் பக்கத்தில் ராணி கிரிஜா என்ற மலையாளப் பெண்குட்டி. நிஜமாகவே குட்டியாகத்தான் இருப்பாள். அவளும் ஏழாம் கிளாஸில் வந்து சேர்ந்த ஹிட் லிஸ்ட் விக்டிம்!இருவரும் ஒடுக்கப் பட்டவர்கள் என்ற ஒற்றுமையினால் இணைந்தோம். அந்த டீச்சருக்கு யாராவது தலைக்கு குளித்து விட்டு லூசாகப் பின்னிக் கொண்டு வந்தால் 'அருள்' வந்து விடும். இந்தப் பெண் எப்போது பார்த்தாலும் தலைக்கு குளித்து விட்டு வருவாள். தலை காய்ந்து இறுக்கிப் பின்னிக் கொள்ளும் வரை வகுப்புக்குள் நுழைய முடியாது. வெளியில் தான் நிற்க வேண்டும். தினமும் அவளுக்குக் தண்டனை. போதாக் குறைக்கு சபரி மலை போவதற்கு மாலை போட்டுக் கொண்டு வந்து விட்டாள். அந்த மாலையை கழட்டினால்தான் கிளாஸிக்குள் விடுவேன் என்று டீச்சர் மிரட்ட விம்மி விம்மி அவள் அழுததை வேடிக்கைத்தான் பார்க்க முடிந்தது. ஒரு பன்னெண்டு வயதுக் குழந்தை மீது ஐம்பது வயது பெரியவங்களுக்கு அப்படி என்ன ஆத்திரம்? அந்தக் கிரிஸ்டியன் டீச்சருக்குத்தான் இதைப் பற்றியெல்லாம் தெரியாமல் இருந்திருக்கலாம். ஊர் வம்பெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் யாராவது அந்த டீச்சரிடம் சொல்லியிருக்கலாம். நான்தான் கிட்ட போகவே முடியாது.போனால் பாம்பு போல் சீறுவாள்.உண்மையிலேயே சிவப்பு ரோஜக்கள் ஹீரோ மாதிரி நான்தான் சைக்கோபத் ஆகியிருக்க வேண்டும். டீச்சர்களைக் கண்டால்.... கொலை வெறியுடன் அலையும் சைக்கோபத். அப்படி கொலை செய்தால் தண்டனை கூட கிடையாதுதானே! ரொம்ப நாட்களுக்கு அந்த டீச்சர் போட்டுக் கொண்டிருந்த பவுடர் வாசனையை எங்காவது உணர்ந்தாலே மூட் அவுட் ஆகிவிடும். சிறுமைக் கண்டு பொங்குவதெல்லாம் பெண்களுக்கு கிடையாதே! நம்பத் திட்டு வாங்காம தப்பித்தால் போதும்ங்கற எண்ணம்தான் எல்லோருக்கும் இருந்தது.
இப்போது கூட நன்கு படித்த பெண்கள் பாரதியின் கனவுப் பெண்கள் தனக்கு நல்லது நடந்தால் போதும் அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கும் சுயநலவாதிகள். சிறுமைக்கண்டு பொங்குவதெல்லாம் கிடையாது. நமக்கு எதுக்கு வம்பு என்று ஒதுங்கிப் போகும் குணம்தான் இருக்கிறது. இதற்குக் காரணமும் நாம்தான்! உனக்கு எதுக்கு வம்பு? கெட்ட பேர் வந்தா என்று பயமுறுத்தி வளர்ப்பதுதான்.
திட்டுவது, அடிப்பது என்பது வேறு. துன்புறுத்துவது என்பது வேறு. இதுவே பெண்களுக்குச் சற்று சென்ஸிடிவ் விஷயம். நன்றாகத் தெரிந்த விஷயங்களை கூட செய்ய விடாமல் தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே வந்தால்... நன்றாகத் தெரிந்த தமிழ்க் கூட காலை வாரி விடும். பி யி கிளாஸிக்கு அனுப்ப மாட்டாள். உட்கார்ந்து படிக்க வேண்டும். இதனால் அந்த குரூப் லீடரும் போக முடியாது. தப்பு தப்பாக தமிழும், கணக்கும் சொல்லிக் கொடுத்தால் சும்மாயிருக்க முடியுமா? நாங்களும் நல்லா படிக்கிறவங்கதானே! அப்படியில்லை இப்படித்தான் என்று சொன்னால் உடனே அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவங்க எல்லோரும் என்னை மதிப்பதில்லை என்று கோள் சொல்லி எல்லாம் நேரக் கொடுமைதான்! வாயை மூடிக் கொண்டு சும்மாயிருந்தாலும் திட்டு. மற்ற டீச்சர்ஸ் எதாவது கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூப்பிட்டால் ஸ்கூலுக்கு எதுக்கு வர்றே? இதமாதிரி ஆட்டம் போடவாங்க்ற மாதிரி ஒரு பார்வை. இதுங்கள்ளாம் எதுக்கு ஸ்கூலுக்கு வந்து அப்படின்னு எதோ மந்திரம் ஜெபிப்பது போல் உள்ளுக்குள் புலம்பி
நாடகமெல்லாம் கண்டேன் உன் ஆடும் விழியிலே! மாத்ஸ், ஹிஸ்டரி, ஜியாகரஃபி, தமிழ் இப்படி ஏதாவது சப்ஜெக்ட்டுக்காவது வேற டீச்சர் வந்து இவங்கக் கிட்டேந்து தப்பிக்கலாம்னு பாத்தா நாள் முழுக்க அவங்க எங்க முகத்திலும், நாங்க அவங்க முகத்திலும் முழிப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. அந்த டீச்சர் என்னிக்காவது வராமா இருக்க மாட்டாங்களா? இல்லே வரும் வழியில் எதாவது.... வேணாம் குருவை நிந்தித்த பழி பாவத்திற்கு ஆளாக வேண்டாம். நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். சாதாரண எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாக எழுதுகிறார்கள் என்று யாரோ சொன்னது போல (யார் சொன்னது?) நல்ல குணம் படைத்த அருமையான ஆசிரியர்கள் நீண்ட மருத்துவ விடுப்பில் போவதும் இதைப் போன்ற ஆசிரியர்கள் நல்ல தேக ஆரோக்கியத்தோடு இருந்து வதைப்பதும் இயற்கையின் விளையாட்டுகளில் ஒன்று! இங்கிலிஷ் கிளாஸ் மட்டும் நடக்கும். மிச்ச நேரமெல்லாம் கேள்வி பதில் எழுதக் குறித்துக் கொடுத்து விட்டு சும்மாதான் உட்கார்ந்திருப்பாங்க. ஒண்ணுமே இல்லேன்னா மேப் டிராயிங் நோட்டில் கலர் பண்ணச் சொல்லிடுவாங்க! இவங்களும் தையல் சொல்லித்தர டீச்சரும் நெருங்கிய தோழிகள். அதனாலே தையல் வேலையை செய்ய அனுமதி உண்டு. ஜீஸஸ் பத்தின பாட்டெல்லாம் சொல்லிக் கொடுத்து மகிழ்வாங்க!இவங்களோட கடுகடுப்புலேந்து தப்பிக்க ஏழுகடல், ஏழுமலைத் தாண்டத் தயாராக இருந்த எனக்கு இந்த ஜீஸஸ் பாட்டெல்லாம் பெரிய பிரச்சனையாகவே இல்லை. யார் சொன்னது ஜீஸஸ் காப்பாற்ற மாட்டார் என்று! ஜீஸஸ்தான் என்னைக் கொஞ்சமாவது இந்தக் கொடுமையிலிருந்து காப்பாற்றினார். "சைலண்ட் நைட் ஹோலி நைட்""ஜிங்கில் பெல்ஸ்" "ஜீஸஸ் சேவ்ஸ் யூ" பொன்ற பாட்டுக்கள். இதில் பிரபலமான பாட்டு அந்த வருடத்து எங்கள் சாய்ஸ் பாட்டு "வாட்ச் யுவர் ஐஸ் வாட்ச் யுவர் ஐஸ் வாட் தே சீ" ஐ ஹாவ் டிசைடட் டு ஃபாலோ ஜீஸஸ்" என்ற இரண்டு பாடல்கள்தான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு எங்களை மதம் மாற்றும் முயற்சியில் இருப்பதாகத் தோன்றாது. எதோ நர்ஸரி ரைம்ஸ் சொல்லிக் கொடுப்பதாகத்தான் தோன்றும்.


அடுத்த தற்காலிகத் தப்பித்தல் பக்கத்துலே இருந்த பல்கலைக்கழகத்தால் வந்தது. பெரிய கலாட்டா நடந்து எங்க ஊர் ஸ்கூல் எல்லாவற்றையும் மூடச் சொல்லிட்டாங்க! அப்பாடா! ஒரு மாதமாவது தப்பித்தோம்! அந்த பல்கலைக் கழகத்தில் எப்போது வகுப்பு நடக்கும்? பரீட்சை நடக்கும் என்பது யாருக்கும் புரியாது.ஆனால் எப்போதும் ஸ்ட்ரைக் நடக்கும் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் 'நாளைக்கு காலேஜ் திறந்துடராங்க! இதோ இப்ப ஒரு மாசம் பாம்பே கிளம்பிட்டு இருக்கேன்!'என்று விடுமுறைப் போவதற்கு திட்டம் போடுவார்கள். 'நாளைக்கு கிளாஸ் போக வேண்டாமா? என்று ஆச்சரியப் பட்டுக் கேட்க வேண்டாம். கிளாஸ் ஒரு நாள்தான் இருக்கும். அப்புறம் ஒரு மாசம் லீவுதான்' என்று குறி சொல்லி விட்டு கிளம்பி விடுவார்கள். அந்த யுனிவர்சிடி இந்த பிஏ பிஎஸ்ஸி பிடுங்கலே வேண்டாம் என்று இளங்கலைப் படிப்பையெல்லாம் மூடி விட்டு இப்பொது முதுகலைப் படிப்பு மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறது.


முதல் டெஸ்ட் மார்க் பாத்துட்டு வெலவெலத்துப் போச்சு! சரி அடுத்த முறை எப்பாடு பட்டாவது மனப்பாடம் செய்து எழுதி விடலாம் என்ற நம்பிக்கையில் மனம் தளராத விக்கிரமாதித்யனாய் நான் இருந்தாலும் வேதாளம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்ததே!அது சரி தமிழ் உட்பட எல்லாவற்றிலும் எப்படி கேவலமாக மார்க் வாங்க முடிந்தது? தமிழ் டெஸ்ட்டுக்கு 'எங்கள் பள்ளி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை! டெஸ்ட் வைப்பதே பாடங்களையெல்லாம் ஒழுங்காகப் படிக்கிறோமா? என்பதை டெஸ்ட் செய்வதற்குத்தான்! ஆனா எந்த லாஜிக்கும் எடுபடாத இடம் ஆயிற்றே! டெஸ்ட்டுக்கு கட்டுரை எழுதச் சொன்னது கூடத் தப்பில்லை. ஏற்கெனவே கிளாஸில் எழுதி போடப் பட்ட கட்டுரை. அதற்கு 30 மார்க். அதை அப்படியே படித்து வார்த்தை மாறாமல் முத்து முத்தாக எழுதியவர்கள் தப்பித்தார்கள். நான்தான் அதி புத்திசாலி ஆயிற்றே! இந்த சூட்சுமம் தெரியாமல் சொந்தமாக "எங்கள் பள்ளி" எழுதியதால் வந்த வினை. இரண்டு பகக்ங்களையும் அடித்து விட்டு மீசை முளைத்த மதிப்பெண். பன்மையில் கூட எழுத மனமில்லை. அவங்க சொன்னதை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தப்புத்தான் என்று இதை ஒப்புக் கொண்டால் கூட தமிழ் மீடியம் வகுப்புக்கு உபயோகப் படுத்தும் அதே ஆங்கிலப் புத்தகம்தான்! இதில் எப்படித் தோல்வியடைய முடியும் என்ற மர்மத்திற்கான விடை இன்னும் கிடைக்கவில்லை! இரண்டே வருடங்களில் மொத்த வகுப்பும் என் கட்டுரைகளைப் படித்து ரசிக்கும் முதல் விசிறிகள் ஆகி விட்டார்கள்! அதற்குக் காரணம் என் தமிழாசிரியைதான். என் கட்டுரைகளை சத்தமாகப் படித்துப் பாராட்டி மகிழ்வார்கள். ஆனால் முதல் மார்க் மட்டும் போடவே மாட்டார்கள். நன்றாகப் படிப்பது என்பது வேறு! நல்ல மதிப்பெண்கள் வாங்குவது என்பது வேறு! அப்படித்தானே!

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 11 - "மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே"

சித்ரா ரமேஷ்

"எங்கண்ணா குழந்தைக்கு ஆயுஷ்ஷேமம்! இந்தாடி! குஞ்சாலாடு", என்று நீட்டி முழக்கிக் கொண்டு பித்தளை சம்படத்திலிருந்து ஒரு பெரிய சைஸ் லட்டுவை எடுத்துக் கொடுத்தாள் என் தோழி. லட்டுவை வாயில் வைத்து சாப்பிடும் போது எப்படியோ கரெக்ட்டா அவள் அம்மா வந்து விட்டாள். "எச்சப் பண்ணி சாப்பிட்டாச்சா? சீக்கிரம் மிச்சத்தையும் வாயிலே போட்டுண்டு கையே அலம்பிக்கோ! பாட்டி பாத்தா திட்டப் போறா! ஏண்டீ பெரியவா இருக்கறச்சே நீயே உபசாரம் பண்ணியாறதா?", என்று தன் பெண்ணின் மேல் பாய்ந்த அந்த மாமிக்கு கோபம் லட்டு எடுத்துக் கொடுத்ததாலா, எச்சப் பண்ணி சாப்பிட்டதாலா புரியவில்லை. திருப்பதி லட்டு சைஸில் பாதி வாசி கால் வாசி சைஸில் இருந்த குஞ்சாலாடுவை கடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக கையால் பிய்த்துத்தான் தின்ன வேண்டும். முறுக்கு, தட்டை,தேங்குழல் எதையுமே கையில் வைத்துக் கொண்டு அப்படியே கடித்து சாப்பிடக் கூடாது. எச்சப் பண்ணி சாப்பிடாதே என்று இன்ஸ்ட்ர்க்ஷன் கொடுக்க யாராவது தோன்றி விடுவார்கள். அப்புறம் அந்த குஞ்சாலாடு வேப்பலாடுவாய் கசந்தது. நல்ல பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு போனல் கூட " சின்னாளம் பட்டிப் பாவாடையில் இந்த மாதிரி கலர்லாம் கிடைக்கறதா?", "வைரத்தோடுங்கறேளே! இப்படி எண்ணெய் இறங்கி ஏன் இப்படி குருட்டு முழி முழிக்கறது?", "புள்ளையாத்துக்காராகிட்டே செவ்வாய் தோஷம்னு சொல்லி பண்றேளா இல்லை மறைச்சுக் பண்றேளா?", இப்படி வாழைப்பழத்தில் ஊசி ஏத்துவது போல் குத்தல் பேச்சு,முகத்தில் அடித்தது போல் குதர்க்கப் பேச்சு! வேண்டாத விஷயங்களில் எல்லாம் யார் வேண்டுமானாலும் தலையிடுவது! அப்பபப்ப சாஸ்திர சம்பிரதாயங்களை மீறாத மக்களாய் காட்டிக் கொள்வது! இதையெல்லாம் நிறைய அங்குப் பார்க்கலாம். இதனால் அந்த அமைப்பை எல்லோரும் விரும்பினார்கள் என்று சொல்ல முடியாது.

பள்ளியில் வாசுகி என்ற பெண் சட்டையில் வாசனை கமகமக்க எதையோ பூசிக் கொண்டு வந்தாள். எதுக்கு என்று கேட்டதற்கு 'எங்கக்கா மேஜராய்ட்டா! அதுக்குத்தான் எங்க வீட்டுக்கு வறியா?" என்று கூப்பிட்டாள். மேஜராவது என்றால் என்ன? பெரிய பெண்ணாகி விட்டாள். இந்த இரண்டு டெர்மினாலஜியும் புரியவில்லை. ஸ்கூல் முடிந்ததும் நேராக வீட்டுக்குத்தான் போக வேண்டும். இஷ்டத்துக்கு திரிந்து விட்டு போக முடியாது.
"எங்க வீட்டுலே நாய் நாலு குட்டி போட்டிருக்கு! வந்தா அதையும் பாக்கலாம்", என்று கூப்பிட்டதும் தடுக்கப்பட்ட கனியை சுவைக்க ஏவாளுக்கு ஏற்பட்ட ஆர்வம் வந்துவிட்டது. அவளுடன் கிளம்பி விட்டேன். அவள் அண்ணனும் அதே வகுப்புத்தான். அப்போது நிறைய பேர் இப்படித்தான் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று வித விதமான காம்பினேஷனில் ஒரே வகுப்பு படிப்பார்கள். பள்ளியில் சேர்க்கும் போதே இப்படி ஒன்றாக சேர்த்து விடுவார்கள். எதோ கோமாளி வேலை செய்து சிரிக்க வைத்துக் கொண்டு வந்தான். ஆண் பிள்ளைகளுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்தான். எதையாவது செய்து எல்லாருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பும் முயற்சியில் இதுவும் ஒன்று. வீட்டு வாசலில் தொய்ந்து போன கயிற்றுக் கட்டிலில் வசதியாக உட்கார்ந்தாகி விட்டது. வாடாமல்லி நிறப் பொட்டோடு மூக்கும் முழியுமாக அசப்பில் நம்ப ஊர் அம்மன் ஜாடையில் அவள் அம்மா இருந்தாள். கன்னத்தைக் கிள்ளி ஆசையாக நெட்டி முறித்தது இன்னும் கன்னத்தில் வலிக்கிறது. பசுஞ்சாணம் போட்டு மெழுகிய தரையில் லேசாக சாணி வாசம் வீசிக்கொண்டிருந்தது. அவள் அக்கா அப்படியொண்ணும் பெரிய பெண்ணாகத் தெரியவில்லை. மாடு, கோழி, நாய் என்று குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களைக் கொண்டிருந்தது வீடு. பொதுவாக 'அம்மா' நாய் தன் குட்டிகளை யாரையும் தொட விடாது. ஆனால் அந்த 'அம்மாவுக்கு' எங்கள் மீது அசாத்திய நம்பிக்கை! அப்போதுதான் கண் திறந்திருந்த குட்டிகளை எங்கள் பொறுப்பில் விட்டு விட்டு வெளியில் எங்கேயோ கிளம்பி விட்டது. நாய்க்குட்டிகளோடு விளையாடுவதைப் போன்ற சுகமான விஷயம் உலகத்திலேயெ வேறேதுவும் இருக்க முடியாது. லேசாக ஈரம் படர்ந்த மூக்கால் முட்டி, நாக்கால் நக்கி, வாலாட்டி குழைந்து முளை விட்டுக் கொண்டிருக்கும் பற்களால் கவ்வி கடித்து! அடேயப்பா! பரமாத்மாவை தரிசிக்கும் பேரானந்தம் என்று ஞானிகள் சொல்வார்களே! அந்த நிலைக்குப் போய்விடலாம். சின்னக் குழந்தைகளுக்குப் பல் முளைக்கும் போது வாயில் விரல் கொடுத்தால் நைசாக பல் முளைக்கும் இடத்திற்கு கொண்டு போய் நறுக்கென்று கடித்து விட்டு ஈறு தெரிய சிரிக்குமே! அதே போலத்தான் நாய்க்குட்டியும். நாய்க்குட்டிக்கும் பல் முளைக்கும் போது கையைக் கொடுத்தால் பல் ஊறுகின்ற இடத்திற்கு லாகவமாய் விரலைத் தள்ளிக் கொண்டு போய் கடிக்கும். 'ஆ' என்று கத்தினால் நாக்கால் நக்கி சமாதானப் படுத்தும். கொஞ்ச நேரத்தில் அம்மா நாயும் திரும்பி வந்து விட்டது. நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தோம். ஒரு நாய்க் குட்டியை வீட்டுக்கு தூக்கிக் கொண்டு போவதாக அவசரப் பட்டு ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டேன். வாசுகியின் அம்மா கறந்த பாலை சுட வைத்து எங்களுக்கு, நாய்க்கு, நாய்க்குட்டிகளுக்கு எல்லோருக்கும் கொடுத்து உபசாரம். அதில் வழக்கமாகப் போடும் 'அஸ்கா' சர்க்கரை போடப்பட்டிருக்கவில்லை என்பது ஒரு வித்தியாசமான சுவையிலிருந்து தெரிந்தது. வெல்லம் போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். சர்க்கரை விலை அதிகம் என்று நிறைய பேர் வீட்டில் வாங்க மாட்டார்கள். அந்தப் பாலையும் ரசித்து சீப்பி குடித்தாகிவிட்டது. வழக்கமாக நான் சேர்ந்து போகும் பெண்கள் போகிற வழியில் தாத்தாவிடம் நான் வீட்டுக்கு வராமல் எங்கே போயிருக்கிறேன் என்ற விவரத்தை விலாசத்தோடு வத்தி வைத்து விட என் தாத்தாவுக்கு செம கோபம்.

கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பார்த்து விட்டு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார். ஏய் உன்னைத் தேடி உங்க தாத்தா வந்துட்டார்ன்னு சொன்னதும் சரெல்லென்று ஒரு கத்தி பாய்ந்தது. தாத்தா வீட்டுக்கு திரும்பி வரும் வழி முழுவதும் 'பிரஸ்டீஜ், பிரஸ்டீஜ்' என்று ஏதோ சொல்லிக் கொண்டே வந்தார். சின்னப் பெண்தானே! செய்யக்கூடாத பெரிய தப்பு செய்து விட்டதாக அப்போது தோன்றியது. பிறகு என் அம்மா வந்த போது இதைப் பெரிய விஷயமாகத் தாத்தா முறையிட அம்மா என்ன சொல்லியிருப்பாள்? வழக்கம் போல் சின்னப் பெண்தானே! ஏதோ விளையாட்டுக்கு செஞ்சிருப்பா! இதையெல்லாம் பெரிசு பண்ணாதீங்க என்று சொன்னதும் அப்படியொண்ணும் செய்யக் கூடாத தப்பு செய்து விடவில்லை என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஒரு மஞ்சள் பையில் புத்தகம் சிலேட்டு வைத்து தலையில் மாட்டிக் கொண்டு வரும் குழந்தைகளிடையே பிளாஸ்டிக் பாக்ஸ்,(அலுமினிய பாக்ஸ் மாதிரி இருக்கும்), வாட்டர்பாட்டில், சைனீஸ்காலர் சட்டை,ஃபிராக் அணிந்து போன வித்தியாசமான பெண்ணாக ஏற்கெனவே அடையாளம் காட்டப்பட்ட எனக்கு என் தாத்தாவின் அதீதமான கண்டிப்பினால் அவளை விளையாட்டுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டாம். அடிபட்டா அவங்க தாத்தா திட்டுவாரு என்ற அனுதாபம் சேர்ந்து கொண்டது.

பிறகு அதிக நாள் அந்த வாழ்க்கைத் தொடரவில்லை. கிராமச் சூழ்நிலை, பள்ளிக்கூடம், படிப்பு எதுவுமே என் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. நான் வேறு தனிமையில் ஏங்கியதால், தாத்தாவுக்கு இத்தனை வயதுக்குப் பிறகு எதற்கு கூடுதலாக ஒரு பொறுப்பு என்று நான் என் குடும்பத்தோடு இணைய வேண்டிய காலக் கட்டாயம் ஏற்பட்டு விட்டது. என் தாத்தாவும் ரொம்ப நாள் அங்கு இருக்கவில்லை. அந்த பெரிய வீட்டில் இரண்டு வயதானவர்கள் தனிமையில் இருப்பது கஷ்டம்தான். இரண்டு மூன்று முறை ஓட்டை பிரித்துக் கொண்டு திருடன் இறங்கியதை கையும் களவுமாக பிடித்தாலும் மனதில் பயமும், பாதுகாப்பற்றத்தன்மையும் தோன்றி விட்டது. ஒரு முஸ்லிம் பெரியவர் அந்த வீட்டைப் பார்த்து விட்டு ஆசையாக விலைக்குக் கேட்டார். அக்ரஹாரத்தில் எப்படி என்று தயங்கி என் தாத்தா அவருக்கு விற்கவில்லை. கடைசியில் கிடைத்த விலைக்கு விற்று விட்டார். இதெல்லாம் முடிந்து கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்களில் அக்ரஹார அமைப்பே காணாமல் போய் விட்டது. முதலில் பனிப் பாறையை யார் உடைப்பது என்ற கேள்வி இருந்து கொண்டேயிருந்தது. ஒருவர் செய்ய ஆரம்பித்ததும் மடமடவென்று சரியும் சீட்டுக்கட்டுச் சங்கிலித் தொடராய் அனைவரும் யாருக்கு வேண்டுமானாலும் வீட்டை விற்க ஆரம்பித்து விட்டனர். அவ்வளவுதான்! இப்பொது அந்த ஊர் பாராளுமன்றத் தொகுதியாகி விட்டது. (ரிஸர்வ்டு தொகுதி?) பெரிய ஊராகிவிட்டது. பாழடைந்த அரண்மனை எல்லாம் மறைந்து போய் பெரிய கடைகள் கொண்ட கடைத்தொகுதி. இங்கிலீஷ் மீடியம் வகுப்புகள் கொண்ட மெட்ரிகுலேஷன் ஸ்கூல்! ஊருக்குள் போவதற்கு ஆட்டோ என்று முன்னேறி விட்டது. இண்டெர்நெட் சென்ட்டர், என்ஜினியரிங் காலேஜ் கூட வந்திருக்கும். பஜனை மடம் பாழடைந்து அதிலிருந்த அழகான ரவிவர்மா படங்கள், தஞ்சாவூர் பாணியில் வரையப்பட்ட தெய்வங்கள் நிறமங்கி, பொலிவிழந்து கடந்த காலத்தின் பிரதிநிதிகளாகி நிற்கின்றன. ஜோதி மஹாலிங்கம் நியான் விளக்கில் சிரிக்கின்றார். பிரகாரங்கள் இருட்டைப் பூசிக்கொண்டு வெளவால்கள் வட்டமிட கிசுகிசுக்கின்றன. இதெல்லாம் ஊரின் வளர்ச்சிக்கு கொடுக்கும் விலை. கும்பகோணத்திலிருந்து 19ஆம் நம்பர் பஸ் (வழி: வேப்பத்தூர்) ஏறிப் போனால் பஜனை மடம் தாண்டியவுடன் வரும் இரண்டாவது வீடு. விலாசம் மாறித்தான் போய்விட்டது. வாசலில் பவளமல்லி, பன்னீர் மரம், முல்லைக்கொடியெல்லாம் இல்லாமல் ஒரு மாட்டுக் கொட்டகை இருக்கிறது. வாங்கியவருக்கு பூக்களின் தேவையை விட வாழ்தலின் தேவை அதிகம்!

'மதுரையில் பறந்த மீன் கொடி' வரவேயில்லையே என்கிறீர்களா? இந்தப் பாட்டு முழுவதையும் ஒரு வரி விடாமல் எழுதித் தரப்பட்டதைப் படித்தேன். அதுதான் நான் படித்த 'முதல் காதல் கடிதம்' என்று அப்போது எனக்குத் தெரியாது. நாலு வீடு தள்ளியிருந்த வீட்டில் கும்பகோணம் காலேஜில் படிப்பை பாதியிலேயே நிறுத்தியப் பெண் கையில் கையில் வைத்துக் கொண்டிருந்தப் பேப்பரை அவளுடன் சேர்ந்து படித்தேன். காலெஜெல்லாம் சேர்ப்பார்கள். தீடீரென்று இவளுக்கு மேலே படிச்ச மாப்பிள்ளையை எங்கே தேடுவது என்று படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். எல்லா ஆண்களுக்கும் முத்துராமன் மாதிரி காம்ப்ளெக்ஸ் வந்து விடுமா? ஆண்கள்தான் மேம்பட்ட ஹொமொசெபியன்ஸ்ன்னு காட்ட இதெல்லாம் ஒரு 'பாவ்லா'. சரி நம்ப கதைக்கு வருவோம். "ஏது ரேடியோலே கேட்டு எழுதினியா?", என்று கேட்டேன். "இல்லேடி" என்று யார் அதை எழுதிக் கொடுத்தார்கள் என்று சொன்னதும் எனக்கு கதை வசனம் டைரக்ஷன் புரியவில்லை. ஒரு சினிமாப் பாட்டை எதற்கு எழுதித் தர வேண்டும்? அதைப்பற்றி விலாவரியாக கேட்டுத் தெரிந்து கொள்வதற்குள் அவள் கையில் வைத்துக் கொண்டிருந்த 'கல்கியில்' ஹெலிகாப்டர்கள் கீழே இற்ங்கி விட்டன' கதையின் தலைப்பை எழுத்துக் கூட்டிப் படித்ததைப் பார்த்து என் தலையில் தட்டி" இது ரெண்டுமே உனக்கு இப்ப புரியாது" என்றாள் சிரித்துக் கொண்டே! இந்த மாதிரி லெட்டர் இன்னியோட மூணாவது! அவாத்துலே ஒத்துப்பாளா? எதிர் ஜாமீனே நாலாயிரம் அஞ்சாயிரம் கேப்பா"என்று சம்பந்தமில்லாமல் பேசியதாகப் பட்டது. "நீ போய் யார் கிட்டயும் உளறி வைக்காதே" என்று மிரட்டினாள். அது என்னமோ என் ராசி! எல்லாப் 'பெரியவர்களும்' என்னிடம் இதுபோல் நிறைய ரகசியங்களை சொல்லிவிடுவார்கள். அப்போதே ஒளிந்திருந்த ஒரு கதை சொல்லியின் திறமையை கண்டு கொண்டார்களோ? அது இன்று வரை தொடர்கிறது. இப்போது 'சின்னவர்கள்' சொல்கிறார்கள். பின்னாளில் அது காதல் கடிதம் என்று அறிந்த போது 'குணா' லெவலில் இருப்பவர்கள் கூட முதல் வரி கண்மணின்னு இருக்கா? அடுத்த வரி பொன்மணின்னு போட்டுக்க என்று எதுகையோடு காதல் கடிதம் எழுதும் போது, முக்கல் வாசி கவிஞர்கள் கவிதை எழுத ஆரம்பித்ததே காதலியால்தான் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் போது சொந்தமாக நாலு வரி எழுதாமல் கண்ணதாசன் வரிகளைக் (வாலியா?)கடன் வாங்கிய அசட்டுக் காதலன்! என்றுதான் நினைத்தேன். (இந்த பாட்டு வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கே ஜாஸ்தி). ஆனால் அவர் ரொம்ப சமத்தாக தன் காதலை தோல்வியில் முடித்துவிட்டார். தன் அம்மா அப்பாவிடம் இவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொல்லி எதிர் ஜாமீன் நகை, நட்டு என்று எதுவும் கேட்காமல் திருமணம் செய்து கொண்டு விட்டார். காதல் கல்யாணத்தில் முடிந்தால் அது தோல்விதானே?

அண்ணா இறந்து போனது, கொள்ளிடம் பாலத்தில் அண்ணா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் போனவர்களின் இறுதி ஊர்வலம் நடந்தது, நிலாவில் முதலில் ஆம்ஸ்ட்ராங்க் காலடி எடுத்து வைத்தது இதெல்லாம் அப்போது பரபரப்பாக பேசப்பட்ட சங்கதிகள். அதை செய்தி படத்தில் காட்டுகிறார்கள் என்பதற்காகவே ஒரு சினிமாவுக்குப் போனோம். இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன'
ஒரு விடுமுறையில் போன போது எனக்கு படிப்பதற்கு பைண்ட் பண்ணி அந்தப் பெண்ணே கொடுத்தாள். அப்போது அதில் புரியாத விஷயம் எதுவுமில்லை என்பது புரிந்தது. அப்புறம் ஏதாவது பாட்டு எழுதிக் கொடுத்தாரா என்று கேட்க நினைத்தேன். அதெல்லாம் எதற்கு? அதான் மனமொத்த தம்பதிகள் ஆகி விட்டார்களே? கவிதையெல்லாம் எதற்கு?

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 10 - "கங்கையிலே குளிக்கையிலே காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இதில் வருமோ?"

சித்ரா ரமேஷ்

"இது என்ன தண்ணி கலங்கலா? தாமிரபரணி தண்ணியைப் பாக்கணும் ஸ்படிகம் மாதிரி இருக்கும். தங்கச் செயின் கழண்டு விழுந்தா தேடி எடுத்துடலாம். அப்படியே கண்ணுக்குத் தெரியும்" இது என் தாத்தா காவேரியில் குளிக்கும் போது காவேரித் தண்ணீரைப் பற்றி சொல்லும் வர்ணனை. காவேரித் தண்ணீரில் வளர்ந்தவர்கள் சென்னையில் கூவம் என்ற நதியைப் பார்த்துக் கேவலமாகச் சிரிப்பதைப் போல் என் தாத்தா காவேரியைப் பார்த்து சிரிப்பார். கூவம் என்ற ஆறு படகுப் போக்குவரத்தும், குளிக்கும் படித்துறைகளும் கொண்டதாக சென்ற நூற்றாண்டுக் குறிப்புகள் கூறுகின்றன. ஹ¨ம்! பட்டணத்து மக்களின் நாகரிகம் பெருகி நல்லா ஓடிட்டு இருந்த ஆற்றை குப்பைத் தொட்டியாக்கி சாக்கடையாக்கி விட்டார்கள். மேலும் அந்த ஊர் உற்சவம்,திருவிழா போன்ற விஷயங்களிலும் ரொம்ப பட்டுக்காம தாமரை இலை தண்ணீர் போல இருப்பார்.எல்லோர் வீட்டிலும் அக்கம் பக்கத்து ஊர்களில் உறவினர்கள் இருந்தார்கள். ஏதாவது விசேஷம் என்று கிளம்பி போய் விட்டு வருவார்கள். "மாயவரத்தில் எங்க அத்தங்கா வீட்டில் சீமந்தம், குத்தாலத்தில் (குற்றாலம் இல்லை) மாமா பையனுக்கு தாம்பூலம் மாத்திக்கறா" என்று தஞ்சாவூர், மாயவரம், வைதீஸ்வரன் கோவில் போய்விட்டு வருவார்கள். நமக்கு மட்டும் ஏன் யாரும் இல்லை என்ற மர்மத்துக்கு விடை கிடைத்தது. தாத்தா உண்மையிலேயே தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் கிடையாது. ரிடையர் ஆன பிறகு சொந்த ஊரான திருநெல்வேலிக்குப் பக்கத்தில் இருக்கும் குக்கிராமத்துக்குப் போகாமல், சொத்து வேண்டாம் என்று விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்து, அப்பா அம்மாவும் இல்லை என்றான பிறகு அங்கே என்னயிருக்கு என்ற விரக்தியில் இந்த ஊருக்கு வந்து விட்டார். விவேக் மாதிரி காதலுக்காக ஸ்டேட் மாறியது போல் தாத்தா ஜில்லா மாறவில்லை.மனதளவில் திருநெல்வேலிகாரராகவே இருந்தார். பட்சணவகைகள், சுட்ட அப்பளத்திலிருந்து அருவி, அம்பாசமுத்திரம், தாமிரபரணி ஆறு வரை திருநெல்வேலி மாவட்டத்தை அவரிடமிருந்து பிரிக்க முடியவில்லை. காவேரிக்கரையில் நின்று கொண்டு தாமிரபரணியை ரசித்த ஒரே மனிதர் அவராகத்தான் இருக்க முடியும். வேர்ப்பற்று! தஞ்சாவூர்காரர்கள் என்றால் சாமர்த்தியம் ஜாஸ்தி என்பதால் யாருடனும் அதிகம் பழக மாட்டார். பாட்டியையும் பழக விட மாட்டார். அவரது வளர்ப்பு மகளான என் சித்திக்கும் ஏகப்பட்ட கட்டளைகள். இந்த சட்ட திட்டங்களையெல்லாம் மதிக்காமல் கூட்டை உடைத்துக் கொண்டு பறந்தது ஒரே ஒரு வண்ணத்துப் பூச்சிதான்!

என் அம்மா தாத்தாவுக்கு திருமணமாகி பத்து வருடங்கள் கழித்துப் பிறந்த தவப் புதல்வி. அதனால் ஏகப்பட்ட கெடுபிடிகள், கட்டுப்பாடுகளோடு பொத்தி பொத்தி வளர்த்திருக்கிறார். கூட விளையாடுவதற்கு தம்பி தங்கைகள் யாருமில்லாத தனிமையில் இருந்தது இதெல்லாம் ரிவர்ஸ் சைக்காலஜியாக மாறி, நாங்கள் வீட்டில் என்ன விஷமம் செய்தாலும் கண்டுக்காமல் விட்டு விடுவாள். நண்பர்கள் எத்தனை பேர் வீட்டுக்கு வந்து கொட்டமடிச்சாலும் தலையிடவே மாட்டாள். அதே மாதிரி என்னையும் வளர்க்கும் முயற்சியில் பத்துக் கட்டளைகள் போடுவார். அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல் நான் பாட்டுக்கு என்னுடைய வழக்கமான குணத்துடன் இருந்தது தாத்தாவுக்கு அடிக்கடி கோபத்தைக் கிளறி விடும். யார் வீட்டுக்கு வேண்டுமானாலும் சுதந்திரத்துடன் உள்ளே நுழைந்து விளையாடிக் கொண்டிருப்பேன். எதிர் வீட்டில் பெரிய கண்ணாடிப் பாட்டி, சின்னக் கண்ணாடிப் பாட்டி என்று இரண்டு பாட்டிகள். இந்தப் பெயரைக் கேட்டதுமே காரணப்பெயர் என்பது புரிந்திருக்கும். ஆனால் 'பெரிய கண்ணாடி' என்பது பெரியக் கண்ணாடியைக் குறிப்பது இல்லை. உயரமாகக் கண்ணாடிப் போட்டுக் கொண்டிருக்கும் பாட்டி 'பெரிய கண்ணாடிப் பாட்டி'. சற்றுக் குள்ளமாக கண்ணாடிப் போட்டுக் கொண்டிருக்கும் பாட்டி 'சின்னக் கண்ணாடிப் பாட்டி. இவர்களுக்கு ஒரே பிள்ளை. 'ஒரு தாய்க்கு இரு பிள்ளை பிறப்பதுண்டு. இரு தாய்க்கு ஒரு பிள்ளை இருப்பதுண்டோ?' இதைப் போன்ற பாலச்சந்தர்தனமான கேள்விகளுக்கு விடையுண்டு. ஒரு பாட்டி அந்த மாமாவை ஸ்வீகாரம் எடுத்துக் கொண்ட அம்மா. இன்னொரு பாட்டி சொந்த அம்மா. காலச் சுழற்சியில் சொந்த அம்மாவும் இந்த பிள்ளையிடமே வந்து சேர்ந்து விட அந்த மாமிக்குத்தான் திண்டாட்டம். ஒன்றுக்கு இரண்டு மாமியார். பானுமதி, சௌகார் ஜானகி மாதிரி இரண்டு அம்மாக்கள் சேர்ந்து பிள்ளைக்கு சாதம் போடுவதிலிருந்து தோசை வார்த்து போடுவது எல்லாவற்றிலும் மும்முனைப் போட்டிதான்! என்னதான் அர்விந்த் சாமி மாதிரி கணவன் இருந்தாலும் இரண்டு மாமியார்களையும் சாமர்த்தியமாக சமாளிப்பாள். இதில் அரவிந்த் சாமி எங்கே வந்தார்? (அரவிந்த் சாமிக்கு இரண்டு அம்மா! நம்ப சிதம்பரம் மாமாதான் சொந்த அப்பா! 'சாமி' ஸ்வீகார அப்பா. அதே போல் அன்னை சினிமா கதை போல் இரண்டு அம்மா. இந்த கிசுகிசு நம்ப 'திண்ணை' வட்டாரத்திலேயே இருக்கட்டும். ) டெல்லி கனகாம்பரம் உதிரிப் பூ வாங்கி நெருக்கமாகத் தொடுத்து ஒரு மாமியார் கொடுப்பாள். எனக்கு கனகாம்பரமே பிடிக்காது என்று அதை சீந்தக் கூட மாட்டாள். டெல்லி கனகாம்பரப்பூ நல்ல அரக்குச் சிவப்பாக அழகாகத்தான் இருக்கும் விலையும் அதிகம். மூன்று நாளானாலும் வாடாது. ராத்திரியானா பூவை எடுத்து வச்சியான்னு கேப்பா! என்று எரிச்சல் பட்டுக்கொண்டு கோபத்தை பூவிடம் காட்டுவாள். ஒரு பெண் குழந்தையிருந்தது. அதற்கு இன்னிக்கு விளக்கெண்ணெய் கொடுத்தியா? வசம்பு கொடுத்தியா என்று விசாரித்துக் கொண்டேயிருப்பார்கள். மாமி இதற்கெல்லாம் அசரவே மாட்டாள். ஒன்றுக்கு இரண்டு மாமியார் இருந்து கொண்டு காலையிலிருந்து இரவு வரை எல்லா விஷயத்திலும் தலையிடுவது யாருக்குப் பிடிக்கும்? இரண்டு மாமியார்களும் அன்பாக இருப்பார்கள். வருஷா வருஷம் தீபாவளி, பொங்கல், புது வருஷம் என்று எல்லாப் பண்டிகைக்கும் பட்டுப் புடைவைகள்! நகை. தினமும் இரண்டு வேளை தலை வாரிப் பின்னி விடுவது! மாமி மாமியார் கொடுமை என்று யாரிடமும் போய் சொல்லக் கூட முடியாது. இவர்களின் தொணதொணப்பும் அன்புத் தொல்லையும் தாங்க முடியாத அன்று முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு தலையில் ஒரு துண்டை இறுக்கிக் கட்டிக் கொண்டு தலைவலி என்று படுத்துக் கொண்டு விடுவாள். 'சும்மா தொணதொணங்காதீங்கோ' என்று உரிமையுடன் சொல்லி விடுவாள். 'சும்மா இவா பேச்சையே கேட்டுண்டு இருந்தா பைத்தியம் புடிச்சுடும். நீ வேற எதுக்குடி இவாக் கிட்ட மாட்டிண்டு. போ விளையாடு"என்று இந்த நாடகத்தைக் கண்டு களிக்கும் ஒரே ரசிகையான என்னையும் துரத்தி விடுவாள்.

என்றாவது ஒரு நாள் இரண்டு பாட்டிகளும் வெளியூருக்கு போய் விட்டால் டாம் இல்லாத வீட்டில் ஜெரி துள்ளி விளையாடுவதைப் போல் மாமி ஆயிரம் வாட்ஸ் பல்ப் பிரகாசத்துடன் வளைய வருவாள். காலைச் சமையலுக்கு சின்ன வெங்காய சாம்பார், உருளைக்கிழங்கு ரோஸ்ட், மத்தியானம் வெங்காயப் பக்கோடா பூரி மாசாலா என்று அமர்க்களப் படுத்துவாள். அது என்னவோ! அநேகமாக நிறைய பேர் வீட்டில் வெங்காயம், பூண்டு, முருங்கை, முள்ளங்கி போன்ற காய்களை வாங்கவே மாட்டார்கள். 'சின்னவா' இருக்கிற வீட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வெங்காயம், முள்ளங்கி, முருங்கை போட்டு சாம்பார், உருளைக் கிழங்கு கறி என்று விசேஷமான சமையல். ஞாயிற்றுக்கிழமை சிக்கன், மட்டன் வாங்கி சமைப்பது போல் இதுவும் ஒரு பழக்கம். இப்பக் கூட நிறைய பேர் வீட்டில் 'சண்டே' ஸ்பெஷல் இந்த சமையல்தானே! இரண்டு பாட்டிகளும் இல்லாத திருநாளில் மத்யானமா மாமா வெங்காயப் பக்கோடா தின்று கொண்டிருந்தார். எனக்கும் கிடைத்தது. "இன்னிக்கி காலையில் மாமி பண்ணின வெங்காயச் சாம்பாரும் உருளைக் கிழங்கும் நீ சாப்பிட்டிருக்கணும்" என்று மாமி சமையலை வெகுவாக சிலாகித்துப் பேச மாமி முகத்தைப் பார்த்தாலே பரவசம்! "ஐயோ அவக் கிட்ட இதையெல்லாம் சொல்லிண்டு! அமாவாசையும் அதுவுமா வெங்காயத்தைச் சாப்பிட்டாச்சே!" என்று மாமி செல்லமாக மாமாவைக் கோபித்துக் கொண்டு " டீ! இங்க வெங்காயப் பக்கோடா தின்னதைப் போய் உங்க பாட்டிகிட்ட சொல்லி வைக்காதே!" என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டுதான் அனுப்பினாள். நான் அந்த சத்தியத்தை கடைசி வரை மீறவே இல்லை. அமாவாசையாவது! வெங்காயமாவது! அவங்களுக்கு அன்னிக்குத்தான் பௌர்ணமி!

அக்ரஹார அமைப்பை மீறாத அந்தத் தெருவில் இதைப் போன்ற ஆசாரங்களும் ரகசியமாய் மீறல்களும் (அனாசாரம்) நடந்து கொண்டுதான் இருந்தன. ஹோட்டல்களில் சாப்பிடுவது கூட ஆசார மீறல்தான். கும்பகோணம் போனால் ஹோட்டலில் நுழைந்து காபி டிபன் சாப்பிட்டு விட்டு வருவதை ரகசியமாகத்தான் செய்வார்கள். கணவனும் மனைவியுமாக ஜோடியாக போய்ச் சாப்பிட்டு வந்து விட்டால் தொலைந்தார்கள். "பெரியவான்னா ஒரு பயம் மரியாதைக் கிடையாது. அவன்தான் கூப்பிடறான்னா இவளும்னா ஜோடி கட்டிண்டு போயாறது எங்க காலத்திலே இந்த மாதிரி கூத்துல்லாம் நடந்ததே கிடையாது" என்று புலம்பி கொண்டிருப்பார்கள். அது சரி "குத்தால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?" பாட்டைக் கேட்டிருக்கீங்களா? அந்தப் பாட்டில் எம் ஜி ஆரும் ராஜசுலோச்சனாவும் கிணற்றடியில் ஜாலியாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். ராஜசுலோச்சனா தண்ணியெல்லாம் தலையில் விட்டு எம்ஜிஆரோட சட்டையெல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டு உல்லாசமாக பாடிக் கொண்டிருப்பாங்க. ஜன்னல் வழியா கண்ணாம்பா பாத்து முறைச்சுக்கிட்டு நிப்பாங்க! ஒரு கெட்டிக்காரியான புது மருமகள் தன் மாமியார் மாமனாரோடு இந்த சீனைப் பார்த்து விட்டு யதார்த்தமா ஒரு கேள்வி தன் மாமியாரிடம் கேட்டாள். அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி தானே? மாமியாரும் ஆமாம் என்று பதில் சொன்னவுடன் " அதுக்கு ஏன் அவங்க மாமியார் இப்படி முறைக்கணும்? அந்தக் காலத்தில் கணவன் மனைவி என்றால் இப்படியெல்லாம் சந்தோஷமாக இருக்கக் கூடாதா? பாவம் அவரு இவங்கிட்ட இப்படியெல்லாம் இல்லாமல் வேறு யார் கிட்ட இருக்க முடியும்?" என்று கேட்டதும் அந்த அருமையான மாமானார் மாமியார் அந்தப் பெண்ணைக் கொஞ்சம் கூட தப்பாவே நினைக்கவில்லை. "என்னமோ அந்த நாள்லே மாமியர்ன்னா அப்படித்தான் இருப்பாங்கன்னு சிரிச்சுக்கிட்டே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அப்புறம் அந்த பெண்ணின் கணவரிடம் போய் உனக்கு ஒரு நல்ல பெண்ணை கல்யானம் பண்ணி வெச்சிருக்கேன் என்று பெருமைப் பட்டுக் கொண்டார்கள். அந்தக் கணவர் பெயர் ரமேஷ்! இப்படி மாமியார் மெச்சிய மருமகளாய் நடந்து கொள்ள நிறைய புரட்சிகரமான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றால் இன்னும் கூட நிறைய சொல்லியிருப்பேனே!

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 9 - "காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா"

சித்ரா ரமேஷ்


நடுவில் கொஞ்ச நாள் கிராமத்து மின்னலாய் இருந்ததைப் பற்றி சொல்லவில்லையே! டிபிகல் தஞ்சாவூர் ஜில்லா கிராமம். பாடல் பெற்ற ஸ்தலம். அருமையான சிவன் கோவில். திருமறைப் பாடல்களில், திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்ற ஊர். வரகுணப் பாண்டியனுக்கு சிவலோகக் காட்சி தந்தது இங்குதான் என்று நினைக்கிறேன். ரொம்ப சின்னப் பெண்ணாக இருந்ததால் விஜயசாரதி போல் நிறைய தகவல்கள் அப்போது தெரியாது. (அதாங்க வாங்க கப்பலைப் பார்ப்போம் என்று இளங்ஜோடிகளைப் பார்ப்பாரே) ஒன்றுக்கு இரண்டு ஆறுகள் காவேரி, வீரசோழன்.சரி! வீரசோழன் கிளை ஆறு. அப்போ இரண்டு ஆறு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு வாய்க்கால்கள். பெரிய வாய்க்கால், சின்ன வாய்க்கால். பண்ணையார் கூட இரண்டு. பெரிய பண்ணை, சின்ன பண்ணை!!! இல்லை பெரிய பட்டாமணியம், சின்ன பட்டாமணியம். நிஜமாகவே காவேரியில் தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடும். கடைவீதி, அக்ரஹாரம்,கோலம் சுவாமி புறப்பாடு,தேர், தோட்டம், வயல், தோட்டம், குருவிகள் என்று தி ஜானகிராமன் கதையில் வர்ணிப்பதை விட இன்னும் கூட அழகாக இருக்கும். தி ஜா கதையில் வரும் அழகான மாமிகளைக் கூட பார்க்கலாம். ஆனால் அந்த அளவுக்கு 'உயர்ந்த மனிதர்களை' சந்தித்ததில்லை. காவேரித் தண்ணீருக்கே உரிய குசும்புத்தனம், நையாண்டித்தனம், வம்பு,பொல்லாப்பு எல்லாவற்றோடும் கலையுணர்வு! பஜனை மடத்தில் கச்சேரிகள், கொலு வைக்கும் அழகு, சின்ன கோலம் போட்டாக் கூட திருத்தமாய் போடும் லாகவம் தஞ்சாவூர் சமையல் கை மணம் வத்தக் குழம்பு, கருவடாம்,தொகையல் .... இத்தனை இருந்தாலும் எனக்கு பிடித்த இடம் ரயில்வே ஸ்டேஷன்தான். ஆல மரங்கள் நிரைந்த சாலையில் ரொம்ப தூரம் நடந்து போய் ஊர் கோடியில் இருக்கும் ரயிலடிக்குப் போகலாம். சாயங்காலம் ஆறு மணி பாசஞ்சர் வருவதற்கு காத்துக் கொண்டிருப்பேன். (எந்த ஊருக்குப் போகும்?). ரயில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ரயிலிலிருந்து ஒருவர் பிரமாண்ட சைஸ் மரச்சாவி? மூங்கில்சாவியை தூக்கிப் போட இங்கே ஸ்டேஷனில் நிற்கும் ஒரு தன் கையில் இருக்கும் சாவியை அவர் கையில் மாட்டுவதைப் பார்க்கத்தான்! இதை ஏன் ரயில் நின்ற பிறகு கொடுக்கக் கூடாது? சில எக்ஸ்பிரஸ் ரயில் நிற்காமல் போகும் போது இந்த சாவி மாறும் விவகாரம் இன்னும் திரில்லிங்கா இருக்கும். ரயில் நின்ற பிறகு எஞ்சினிலிருந்து வரும் புகையை பிரமித்து பார்த்து விட்டு மனிதப் பிறவி எடுத்ததே இந்தக் காட்சியை பார்க்கத்தான் என்ற திருப்தியில் வீட்டுக்குத் திரும்பும் போது தாத்தாவிடம் இதைப் பற்றி பேசியே அவர் கழுத்தில் ரத்தம் வந்து விடும். பெரியவளானதும் ரயில் டிரைவராகி இந்த மாதிரி என்ஜின் கதவோரமா நின்னு சாவியைத் தூக்கி எறிய வேண்டும் என்று தீர்மானித்தேன். அப்புறம் பஸ் கண்டக்டராக வேண்டும் என்ற ஐடியாவில் அம்மாவின் ஹாண்ட்பேக்கை மாட்டிக் கொண்டு "டிக்கெட், டிக்கெட்" இன்னும் பெண் பஸ் கண்டக்டர் இல்லை போலிருக்கு! ஆஹா! தமிழ் நாட்டின் முதல் பஸ் கண்டக்டர்! அப்புறம் லைப்ரரியில் லைப்ரேரியனாக, மர்மக் கதை எழுத்தாளராக, சினிமா டைரக்டர், பத்திரிகை ரிப்போர்ட்டர், கவிதாயினி, புரட்சி வீராங்கனை என்று என்னென்னவோ கற்பனை! இப்போது?....


ஒரு சோழ ராஜாவின் பாழடைந்த வசந்த மாளிகையின் இடிபாடுகளில் தப்பிய ஒரு ஹாலில் ஒன்றாவது, இரண்டாவது வகுப்புகள். மூன்றாவதிலிருந்து ஆறாவது வரை ஒரு பழங்கால வீடை ஸ்கூலாக மாற்றியிருந்தார்கள். அந்த ஹாலில் திருமலை நாயக்கர் மஹால் போல் பெரிய பெரிய தூண்கள். ஒரு வேளை நான் சின்னப் பெண்ணாக இருந்ததால் எல்லாமே பிரமாண்டமாய்த் தெரிந்ததோ? என் தாத்தா வீட்டு ஹாலை விட பெரியது. ஹாலுக்கு நடுவில் பாசி படிந்த முற்றம். தினமும் ஒரு குழந்தையாவது அங்கே சறுக்கி விழுந்து அடி பட்டுக் கொள்ளும். அதற்காக அந்த பாசி படர்ந்த முற்றத்தை யாரும் மாற்றி விடவில்லை. குழந்தைகள் அவ்வளவு விலையுயர்ந்த ரத்தினங்களாக யாரும் நினைக்கவில்லை. காலையில் கொஞ்சூண்டு பருப்பு சாதம், உருளைக் கிழங்கு கறி(தினமும்)! மத்யானம் தயிர் சாதம் நார்த்தங்காய் ஊறுகாய்(உவ்வே!) அந்த பெரிய அரண்மனை இடிபாடுகளில் நடந்து பின் பக்கம் போனால் ஒரு வாழைக்கொல்லை, மகிழம்பூ மரங்கள் இருக்கும். பக்கத்திலேயே குட்டியாய் குளம். அதன் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை அந்த குளத்திலேயே அலம்பி முகமெல்லாம் துடைத்துக் கொண்டு அவசர அவசரமாக விளையாடுவதற்கு ரெடியாகி விடுவோம். நார்த்தங்காய் வைத்து ஊறிய இடத்தை மட்டும் தயிர் சாதத்தில் சாப்பிட்டு விட்டு உப்பும் ஊறுகாய் சாறும் ஊறி அந்த இடம் மட்டும் செம டேஸ்ட்டா இருக்கும். மிச்ச சாதத்தை ஜீவ காருண்ய நோக்கத்தில் காக்காய், குருவி, நாய் எல்லாவற்றிற்கும் வினியோகம் செய்து விடுவேன். சில குழந்தைகள் வெறும் சாதத்தை சாப்பிடும். தண்ணீர் விட்ட பழையது. அது என்னவென்று புரிந்ததில்லை. அந்த தூக்குச் சட்டியைத் திறந்தாலே புளிச்ச வாடை அடிக்கும். அதற்கு தொட்டுக் கொள்ள பழுப்பாக என்னவோ! பாதிப்பேர் மதிய உணவு சாப்பிட கோவிலுக்குப் போய்விடுவார்கள். காமாராஜரின் மதிய உணவுத் திட்டம் அப்போ இருந்தது என்று நினைக்கிறேன். அடிப்படை சுத்தம், சுகாதாரம் பற்றியெல்லாம் யாரும் கவலைப்பட்ட மாதிரியே இருக்காது. பெண் குழந்தைகள் தலையில் பேன், சிரங்கு என்று பாதி நேரம் மொட்டைத்தலையாக இருக்கும். காதில் சீழ் வடியும். கை கால்களில் சொறி, சிரங்கு. ஸ்கூலுக்குத் தினமும் வரவேண்டும் என்று கூட தெரியாது. வாரம் ரெண்டு நாள் என் பக்கதில் உட்கார்ந்திருந்த பெண் வரமாட்டாள். ஏன் ஸ்கூலுக்கு வரவில்லையென்று கேட்டால் "எங்கம்மா தோச்சுப் போட்ட பாவாடை காயலை". பாதிப்பேர் அணிந்திருந்த உடைகள் அழுக்காய் முடைநாற்றத்தோடு ஈரப் பசையோடு இருக்கும். தலையில் எக்கச்சக்கமாய் வேப்பெண்ணெய் தடவி அந்த எண்ணெய் வேறு கன்னத்தில் நெற்றியில் படிந்திருக்கும். சுத்தமா இருப்பதற்கு ஒரு சவுக்காரக் கட்டி வாங்க வேண்டாமா? சில்லறையாகக் கூட பணப் புழக்கம் எல்லோரிடமும் இருக்காது. நிறைய எழ்மையை என் பள்ளிக்கூடத்தில் மட்டுமில்லை அக்ரஹாரத்திலும் உணர முடிந்தது. என் தாத்தா வீட்டுக்குப் பக்கத்து வீடு ஐந்து குடித்தனங்கள் குடியிருந்த நீளமான வீடு. முன் போர்ஷன் ஒரு வாத்தியார் வீடு. அம்மா இல்லாத இரண்டு பெண் குழந்தைகள். அவர் ஏதோ சமைத்து வைத்து விடுவார். இந்த இரண்டு பெண்களும் வயதுக்கு மீறிய பொறுப்புடன் அப்பாவுக்கு உதவியாய் கறிகாய் நறுக்கி, வீட்டைப் பெருக்கி ஒழித்து எச்சலிட்டு என்னென்னவோ வேலைகள் செய்யும். பாவம் தலை மட்டும் பின்னிக் கொள்ளத் தெரியாது. பின் போர்ஷன் மாமியிடம் போய் நிற்பார்கள். அந்த மாமி "நான் மடிடி" என்று நிர்தாட்சண்யமாகசொல்லிவிடுவாள். மனிதர்களை நெருங்க விடாமல் இது என்ன சம்பிரதாயம்? தொடுவுணர்ச்சி எவ்வளவு அற்புதமான விஷயம்! காதல், காமம்,பாசம், நேசம், வெறுப்பு, வேஷம் இதையெல்லாம் ஆயிரம் வார்த்தைகள் சொல்லி வர்ணிப்பதை விட ஒரு தொடுகையில் உணர்த்தி விடலாமே!
"எதுக்குடி இப்படி மேல படற மாதிரி வழியிலே நின்னுண்டு" என்று அங்கே பாதி மனிதர்கள் விலகி விலகிப் போவார்கள். "தீக்குள் விரலை வைத்தால் உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா" என்று பாரதி எழுதியது இந்த உணர்ச்சியை உணர்த்தத்தானா? கொஞ்சம் வளர்ந்து விட்டால் அப்பா கூட பெண் குழந்தைகளை தொடமாட்டார் என்பதும் தமிழர் பண்பாடுதானே! அப்புறம் என்ன? அவங்க அப்பா கண்டு பிடிச்ச ஒரே தீர்வு மொட்டையடித்து விடுவதுதான்!கடைசி போர்ஷனில் எக்கச்சக்கக் குழந்தைகள் கொண்ட ஒரு ஒல்லிக் குடும்பம்! ஏன் ஒல்லி? உணவுப் பற்றாக்குறையால்தான்! தயிர்காரி கூடையில் தயிர் எடுத்துக் கொண்டு வாடிக்கையாய் அவர்கள் வீட்டுக்கு வருவாள். ஒரு கொட்டாங்கச்சியைத் தேய்த்து தேய்த்து மழமழவென்று ஆக்கி வைத்திருப்பாள். அது ஒரு அளவு! ஒரு கொட்டாங்கச்சி அளவு தயிர் வாங்கி மேலே கொசுறாக அரை கொட்டாங்கச்சி மோர் வாங்கி அதை இன்னும் ரெண்டு லிட்டர் தண்ணீர் விட்டு கரைத்து மோராக்கி சாதம் சாப்பிடுவார்கள். தொட்டுக் கொள்ள மட்டும் சீசனுக்கு ஏற்றாற் போல் மாங்காய், நெல்லிக்காய், எலுமிச்சங்காய், கிடாரங்காய் எல்லாமே வெறும் உப்பு போட்டது.இதுதான் முக்கால் வாசி நாள் அவர்கள் சாப்பாடு. அந்த தயிர்க்காரி கொடுக்கும் தயிர் ரொம்ப வாசனையாய் இருக்கும். அதனால் அந்த மோர் உபசாரம் எனக்கும் கிடைக்கும். அவர்கள் வீட்டுப் பெண் ஒருத்தி என் வயது. எந்த வறுமையிலும் தங்களை செம்மையாகக் காட்டிக் கொள்வாள்."இந்த வாட்டி தீபாவளிக்கு எங்க அப்பா வைர ஊசி பட்டுப் பாவாடை வாங்கித் தரப்போறார். நான் சேப்புக் கலர் கேட்டிருக்கேன்" என்று சொல்லிக் கொள்வாள். உடனே நானும் போய் "ராஜிக்கு சேப்பு கலர் வைர ஊசி பாவாடை வாங்கப் போறா. எனக்கும் அதே தான் வேண்டும்" என்று சொல்லிவிடுவேன். பாட்டி அதற்கு சிரிப்பாள்.

ஆனா நிஜமாகவே அங்கு இருந்த மனிதர்கள் என்ன செய்து பணம் சம்பாதித்தார்கள் என்பது புரியவில்லை. எல்லோரும் வீட்டில்தான் இருப்பார்கள். சிலசமயம் காலையிலேயே குழம்பு,ரசம், கூட்டு, தயிர் என்று முழுச்சாப்பாடு சாப்பிட்டு விட்டு வெள்ளை வேட்டி சட்டை போட்டுக் கொண்டு வாயில் வெற்றிலையை குதப்பிக் கொண்டு 'கும்மாணம்' போய்விட்டு வருவார்கள். கிளம்பும்போதே "ராத்திரி பலகாரத்துக்கு வந்துடுவேன்". எல்லாருக்கும் சொந்த வீடு, கொஞ்சம் நிலம் (அதென்ன நீச்சு) இருந்தது என்று நினைக்கிறேன். நான் கும்மாணத்துக்குப் போறது சினிமா பார்க்க மட்டும் தான்! அதனால் எல்லோரும் சினிமா பார்ப்பதற்குத்தான் போகிறார்கள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பவர்லைட் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஒரு குளம் வரும் அது வழியாகப் போனால் ஜுபிடர் டாக்கீஸ் வரும். ராஜா, டயமண்ட்,விஜயலட்சுமி/நூர் மஹால் தியேட்டருக்கெல்லாம் தாத்தா போகமாட்டார். இது ஒண்ணுதான் டீசண்ட் தியேட்டர்ன்னு அவருக்கு அபிப்பராயம். இதில் பார்த்த படங்கள்! வேறேன்ன இருக்க முடியும்? தில்லானா மோகனாம்பாள், சிவந்த மண், எங்க மாமா! இந்த ஆர்டர் சரியில்லையோ! கால வித்தியாசம் இருக்கலாம். தியேட்டரில் கண்டதை வாங்கி சாப்பிடக் கூடாது. வீட்டிலிருந்தே கடலை உருண்டை எடுத்துக் கொண்டு போகவேண்டும். என் அப்பா அம்மா வந்தால் கொஞ்சம் மாற்றம்.பாப்பின்ஸ் மட்டும் வாங்கித் தருவார்கள். அது கை படாமல் ராப்பரில் இருக்குமே அதனால் இதற்கு மட்டும் அனுமதி!

ராத்திரியானா ஊரே இருட்டிப் போய்விடும். நிறைய பேர் வீட்டில் மின்வசதி கிடையாது. மின்வசதி இருந்தவர்கள் வீட்டில் மட்டும் என்ன? சாயங்காலம் ஐந்து மணிக்குள் டியூப் லைட் போட்டா எரியும். அப்புறம் போட்டா அது சரியான டியூப் லைட்தான்!மெயின் கடைத்தெருவில் மட்டும் தெரு விளக்குகள் இருக்கும். லோ வொல்ட்டேஜ்ஜினால் நூறு வாட்ஸ் பல்ப் கூட பத்து வாட்ஸ் பல்ப் மாதிரி எரிஞ்சு ஊரே அழுது வடியும். இதுக்கெல்லாம் ஈடு கட்டற மாதிரி சுவாமி பெயர் ஜோதி மஹாலிங்கம். நிறைய விளக்குகளோடு பிரகாசமாக மகாலிங்கசுவாமி. சுவாமி சன்னதிக்குப் போய்ட்டு அதே வழியில் திரும்பி வரக்கூடாது. சோழ மன்னனை பிரம்மஹத்தி பிடிக்கத் துரத்திக் கொண்டே வந்தது. சுவாமி தரிசனம் பண்ண உள்ளேப் போன ராஜா திரும்பி வருவார் என்று வெளியில் காத்துக் கொண்டிருக்க ராஜா நைசா வந்த வழியில் திரும்பி வராமல் குறுக்கு வழியில் அம்மன் சன்னதிக்குப் போய் பிரஹத்சுந்தர குஜாம்பிகையை தரிசனம் செய்து விட்டு 'எஸ்கேப்' ஆகி விட பிரம்மஹத்தி மட்டும் இன்னும் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறது. அப்பாடா! இதுதான் ஸ்தல புராணம். அதனால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்த வழியே திரும்பி வந்தால் பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டு விடும் என்று அதே ஷார்ட்கட்டில் அம்மன் சன்னதிக்குப் போக வேண்டும். சோழ ராஜ்ஜியத்தில் வரகுணப் பாண்டியர் எங்கே வந்தார்? நல்லெண்ண நோக்கத்தில் வந்திருப்பார் போல இருக்கு. அப்போது சிவலோகக் காட்சி கிடைத்ததா? சுவாமி சன்னதிக்குப் போகிற வழியில் ஒரு மூலையில் படிக்கட்டுகள் ஏறிப் பார்த்தால் தலையில் கையை வைத்துக் கொண்டு பிரம்மஹத்தி உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். வெளிப் பிரகாரத்தில் இருக்கும் 'சிங்கக் கிணறு'. சிங்கத்தின் வாயில் நுழைந்தால் கிணற்றில் இறங்கப் படிக்கட்டுகள். பிரகாரத்தில் இருக்கும் ஒரு சிறு துளையில் காது கொடுத்துக் கேட்டால் ஆஹா! தேவலோகத்துச் சத்தங்களைக் கேட்கலாம். தேவர்கள் வேதம் ஓதும் சத்தம், தேவலோக மங்கையரின் ஜல்ஜல் சலங்கையொலி. உண்மையாகவே எதோ எதிரொலி மாதிரி கேட்கும். அது தேவலோகத்துச் சத்தமா? கடைத்தெருவிலிருந்து வந்த சத்தமா? சுவாமியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வந்த மூகாம்பாள் ஏற்கெனவே பிரஹத்சுந்தர குஜாம்பிகையைத் திருமணம் செய்து கொண்டு புது மாப்பிள்ளை ஆகி விட்ட மஹாலிங்க சுவாமியை நினைத்து இன்னும் தவம் செய்து கொண்டிருக்கிறாள்.
ஆ! மனிதர்கள் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல! கடவுள் காதல்! இந்த அம்மன் சக்தி வாய்ந்த அம்மன் என்று சேது ஸ்டைலில் கை கால்களில் சங்கிலியோடு
மன நலம் குன்றியவர்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள். ஒரு தெலுங்குப் பெண் கை கால்களில் சங்கிலியோடு அவள் அம்மா "ம் ஜோதி மஹாலிங்கம் செப்பு! ஜோதி மஹாலிங்கம்! " என்று சொல்ல அந்தப் பெண்ணும் அழுது கொண்டே "ம்! செப்பு ஜோதி மஹாலிங்கம்! ஜோதி மஹாலிங்கம்!" என்று சொல்லிக் கொண்டே சிரித்தது. இவர்களையெல்லாம் பார்த்துக் கொள்வதற்கு கையில் குச்சியுடன் ஒருவர்.

யாராவது உண்மையாகவே குணமடைந்து திரும்பியிருக்கிறார்களா? கிளாஸ் எடுக்க வர டீச்சர் கையில் புத்தகம் இல்லாவிட்டாலும் கண்டிப்பாகக் குச்சியுடன்தான் வருவார். இந்த மாதிரி வன்முறையான வைத்தியத்துக்கு முதலில் மருந்து கண்டு பிடிக்க வேண்டும். அந்த பைத்தியங்களைப் பார்த்து ஒரு நாள் கூட பயந்துப் போனதாக ஞாபகம் இல்லை. நார்மல் என்றும் ரொம்ப மேதை என்றும் சொல்லிகொள்ளும் மனிதர்களைப் பார்த்துதான் பயந்து போயிருக்கிறேன். போன வாரம் கதை என்ன ஆச்சு? நான் ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன் ரேன்ஞ்சில் ஏதாவது செய்து பெரிய ஆள் ஆகியிருந்தால் தோல்விகளைப் பட்டியலிட்டு "வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா! தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா" என்று பாடியிருப்பேன். பரவாயில்லை! இன்னும் ரெண்டு வாரம் கழித்து சொல்கிறேன். மர்மக் கதை எழுத்தாளர்தான் இதுவரை ஆகவில்லை. இதிலாவது ஒரு மர்மம் இருக்கட்டுமே! தலைப்பில் காவேரி, காதல், கவிதை என்று எழுதிவிட்டு எங்கே அதையெல்லாம் காணவில்லை!காவேரி வந்தது. கவிதை கூட வந்துடுத்தே! காதல்? அதுவும் மனிதக்காதல்! நம்ப இளையராஜாவுக்கு முன்னாலேயே ஏஎம் ராஜாவும் ஒரு மியூசிக் ஜீனியஸ்தான்! அவர் இசையமைத்த அருமையான எனக்கு ரொம்ப பிடித்த பாடல்! சரி பரவாயில்லை! அடுத்த வாரம் மனிதக் காதலையும் சொல்லிவிடுகிறேன்.


சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்


kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 8 - 'வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி'

சித்ரா ரமேஷ்

எப்பவும் விளையாட்டுதானா? படிக்கவே மாட்டீங்களா? இப்படியெல்லாம் நினைக்கவே மாட்டீங்க! நான் எழுதுவதை பார்த்தே நாங்களெல்லாம் எவ்வளவு புத்திசாலி என்று கண்டுபிடிச்சு இருப்பீங்களே! அதெல்லாம் நல்லா படிச்சு பாஸ் பண்ணி விடுவோம். அம்மா டீச்சர் வெறே!! அதனால ஸ்கூல்ல வாலெல்லாம் சுருட்டிக் கொண்டு சமத்தா டீச்சர் சொல்வதையெல்லாம் உன்னிப்பாக கவனிப்பது போல் நடித்து அப்புறம் வீட்டுக்கு வந்து ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கி விடுவோம். ஃபஸ்ட் ராங்க்கெல்லாம் வாங்கவே மாட்டோம். ஆனா படிப்பு விஷயத்தில் யாரும் ஃஎப் ஐ ஆர் எழுத முடியாத அளவுக்கு மார்க் வாங்கி அம்மா மானத்தைக் காப்பாற்றி விடுவோம். இதை மாதிரி குழந்தைகளை மோடிவேட் பண்ணுவதற்கு எல்லோரும் செய்கிற ஒரே 'டெக்னிக்'! படிக்காமலேயே இவ்வளவு மார்க் வாங்கறியே! படிச்சா எவ்வளவு வாங்கலாம்னு கேட்டு யோசிக்க வைப்பாங்க! இதைக் கேட்டவுடன் ஆமா உண்மைதான் என்றுதான் தோன்றும். ஆனால் வழக்கம் போல் விளையாடி விட்டு படி படின்னு சொல்லும் பொதெல்லாம் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு படிப்பது போல் 'பாவ்லா' கூட காட்ட முடிந்ததில்லை. பள்ளியில் படிக்கும் போது அம்மா டீச்சராக இருப்பது கொஞ்சம் அசௌகரியமான விஷயம்தான்! எல்லா விஷயங்களிலும் கண்காணிக்கப்படுகிறோம் என்று தோன்றும். அப்புறம் எந்தக் கதையும் விட முடியாது. ஆனா மற்ற மாணவர்களுக்கு டீச்சர் பசங்கன்னா எல்லா எக்சாம் பேப்பரும் கையில் கிடைச்சுடற மாதிரியும், எங்கியோ அதிகப்படி சலுகை வழங்கப்படுகிற மாதிரியும் ஒரு உணர்வு இருந்து கொண்டேயிருக்கும். ஆனா எங்க பேப்பர் திருத்த வந்தா இன்னும் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டுக் கொண்டு திருத்தி வழக்கத்தை விட குறைச்சலா மார்க் வற சாத்தியக்கூறுகளே அதிகம் இருந்தது. அம்மா பாய்ஸ் ஹை ஸ்கூல் டீச்சர் என்பதால் என்னை விட இந்த பிரச்சனைகளை அதிகம் சமாளித்தது என் சகோதரர்கள்தான். கேர்ள்ஸ் ஸ்கூலும் பக்கத்தில்தான். எங்க ஸ்கூல் டீச்சர்களும் அம்மாவுக்கு தெரிந்தவர்கள்தான். நைன்த், டென்த் படிக்கும் போது இருந்த கிளாஸ் டீச்சர் அம்மாவின் பால்ய காலத்துத் தோழி வேறு. அப்பப்ப பாசத்தைப் பொழிவதும், திடீரென்று என் எதிர்காலத்தை உத்தேசித்து ரொம்ப ஸ்டிரிக்ட்டாக மாறுவதுமாக கேட்கவே வேண்டாம். இப்போது ஒரு உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும். எனக்குப் பிறகு அடுத்தடுத்தது என் தம்பிகள் பிறந்து விட்டபடியால் அம்மாவால் எல்லா குழந்தைகளையும் சமாளிக்க முடியாது என்று என் தாத்தா பாட்டி( வேறு யார் அம்மாவின் அப்பா அம்மாதான்)என்னை தூக்கிக் கொண்டு போய் தங்களிடம் வளர்த்தார்கள். நர்சரி ஸ்கூல் பாதி எங்க ஊரில். அடுத்த பாதி எங்கேயும் இல்லை. அப்புறம் திரும்பவும் ஒன்றாவது வகுப்பு எங்க ஊரில். திரும்பவும் தாத்தாவுடன் ஊருக்கு! என்று மாறி மாறி பத்து வயது வரை வளர்ந்தேன். கிராமப் பள்ளிக் கூடத்தில் தமிழ், கணக்கு என்று ஏதோ சொல்லிக் கொடுத்தாலும் 'இங்கிலிஷ்' என்ற பாடத் திட்டமே இல்லை. மூணாங்கிளாஸில் ஏ,பி,சி,டி என்று நாலே நாலு எழுத்து சுமாரா அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. திரும்பவும் நாலாம் கிளாஸ் எங்க ஊருலே! அந்த டீச்சர் என் அம்மாவிடம் " என்னங்க உங்க பொண்ணுக்கு இங்கிலீஷே தெரியலை" என்று துக்கம் விசாரிப்பாள். ஐந்தாம் வகுப்பு முடிக்கும் போது ஒரு வழியாகஏ,பி,சி,டிக்கும் மேலே இருபத்தியிரண்டு எழுத்துக்கள் இருக்கின்றன. எழுத்துக்கள் சேர்ந்து சொற்களாகி,சொற்கள் சேர்ந்து வாக்கியமாகும் என்ற அடிப்படை பிடிபட ஆரம்பித்தது. இந்த அடிப்படையிலேயே முதல் ராங்க் வாங்கிக் கொண்டு வருவேன். இதனால் என் அம்மாவுக்கு ஒரு விபரீத ஆசை வந்து விட்டது. ஆறாம் வகுப்பில் இங்கிலிஷ் மீடியம் சேர்த்து விடலாம் என்று திட்டம் போட்டாள். உங்களுக்கே தூக்கி வாரி போட்டிருக்குமே.எனக்கு எப்படியிருந்திருக்கும்? இந்த மாதிரி தமிழ் மீடியத்தில் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் ஆறாம் வகுப்பில் இங்கிலிஷ் மிடியம் சேர்க்க முயற்சி செய்வார்கள். அதற்கு ஒரு நுழைவுத் தேர்வு. ஐ ஐ டி பரீட்சை போல் ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் கோச்சிங் கிளாஸ் நடக்கும். ஒரேஒரு வகுப்புதான் இங்கிலிஷ் மீடியம் என்பதால் அந்த பரீட்சை எழுதி முதல் நாற்பது ராங்க் வாங்கி இங்கிலிஷ் மீடியம் வகுப்பு சேருவது கொஞ்சம் கஷ்டம்தான்! நான் இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் லீவ் விட்டதும் தாத்தா பாட்டியோடு ஊருக்கு கிளம்ம்பி போயாச்சு. அப்புறம் என்ன? நுழைவுத் தேர்வில் என்ன கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியவில்லை. வெறும் பேப்பரை கொடுத்து விட்டு நிம்மதியாக மற்றத் தோழியரோடு ஆறாங்கிளாஸ் தமிழ் மீடியம் வகுப்புக்குப் போய் ஜோதியோடு கலந்து விட்டேன்.

தொடக்கப் பள்ளியிலும் சரி அடுத்து நடுநிலைப் பள்ளியிலும் சரி அண்ணன் காட்டிய வழிதான். அவன் ரொம்பவே நல்லாப் படிப்பான். அவனுடைய தங்கையும் நன்றாகத்தான் படிப்பாள் என்ற எண்ணத்திலேயே கொஞ்சம் மதிப்பாகத்தான் நடத்துவார்கள். நானும் அந்த மதிப்பைக் காப்பாற்றிக் கொண்டு விடுவேன். டான்ஸ், டிராமா என்று எந்த கலை நிகழ்ச்சியிருந்தாலும் நமக்கு இடம் இருக்கும். சப்ஜெக்ட் பிரைஸ், ஒப்பித்தல் போட்டி, தனி நடிப்பு இப்படி எல்லாவற்றிலும் அதிகப்படியான ஆர்வம் காட்டுவோம். ரொம்ப அலட்டிகிறேனா? இனி வருவதைப் படியுங்கள். என் ஈகோவிற்கு எப்படியெல்லாம் அடி கிடைத்தது என்று! மறு வருடம் மீண்டும் சோதனைக் காலம்! இன்னும் இரண்டு மூன்று சீட் இருக்கு! உங்க பெண்ணை இந்த வருடம் ஏழாவது வகுப்பிலாவது இங்கிலிஷ் மீடியம் சேர்த்து விடுங்கள் என்று அம்மாவின் சக ஆசிரியர் ஒருவர் ஆலோசனத் தர அந்த வருடம் கோச்சிங் கிளாஸ் போய் வாட் இஸ் யுவர் ஃபாதர்ஸ் நேம்? ஹெள மெனி மன்த்ஸ் ஆர் தெர் இன் ய இயர்? ஹெள மெனி டேஸ் ஆர் தேர் இன் ய மன்த்? போன்ற பொது அறிவுக் கேள்விகளுக்கு விடையளித்து பாஸ் பண்ணி விட்டேன். இது போன்ற நிறைய கேள்விகளுக்கு டியூஷன் கிளாஸிலேயே படித்து மனப்பாடம் செய்திருந்தாலும் ஒரே ஒரு கேள்வி அது வரை படித்திருந்தாத கேள்வி வந்த்திருந்தது. தெனாலிராமனுக்கு நண்பராக இருந்த மன்னன் யார்? நான் 'தி கிருஷ்ண தேவராயர்' என்று விடையெழுதி அதைப் பெருமையாக டியூஷன் மாஸ்டரிடம் சொன்னேன். என் புத்திசாலித்தனத்தை மெச்சுவதற்குப் பதில் என்னை உட்கார வைத்து 'தி கிருஷ்ணதேவராயர்' என்று எழுதுவது ஏன் தவறு என்று வகுப்பெடுத்து அனுப்பினார். என்ன அருமையான ஆசிரியர் அவர்!

ஏழாம் வகுப்பு. என்னை மாதிரியே இன்னும் மூன்று பேர். ஆக நான்கு புதுமுகங்கள் அந்த வகுப்பில் நுழைந்தோம். ஏற்கெனவே தமிழ் மீடியம் மாணவிகளைக் கடந்த ஒரு வருடமாகக் கட்டி மன்றாடிய அந்த ஆசிரியை பார்வையில் நட்புத் தெரியவில்லை. அது இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அப்பட்டமான வெறுப்புத் தெரிந்தது. ஆறாம் வகுப்பிலேயே ஒரு போராட்டம் தொடங்கியிருக்க வேண்டும். எங்க ஊர்ல இருந்த சிபிஎஸ்சி பள்ளியிலிருந்தும் சில பெண்கள் இதைப் போல வந்து சேருவார்கள். அவர்கள் நர்சரியிலிருந்து எல்லாம் ஆங்கில வழிக் கல்வி. அவர்களுக்கு இந்தத் தேர்வு, பிறகு வகுப்பில் வந்து பாடம் படிப்பது எல்லாம் ரொம்ப எளிமையாக இருக்கும். எங்களைபோல் தமிழ் வழிக் கல்வி படித்து இங்கிலிஷ் மீடியம் சேரும் போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டு காட்டு மிருகங்களோடு இங்கிலிஷில் பேசி விளையாடு என்றால் எப்படியிருக்கும்? அதனால் அந்த ஜவஹர் ஸ்கூல் பெண்களோடு சகவாசமே வைத்துக் கொள்ள மாட்டோம். இங்கிலிஷ்ல பேசி அலட்டுராங்கன்னு! என் அப்பாவுக்கு என் தம்பிகளை ஜவஹர் ஸ்கூல்ல சேர்க்க வேண்டும் என்று சேர்த்து விட்டார். என்னையும் என் அண்ணனையும் ஏனோ சேர்க்கவில்லை. என்னையாவது ஏழாம் வகுப்பிலாவது என் அம்மா சிரத்தை எடுத்துக் கொண்டு இங்கிலிஷ் மீடியமாவது சேர்த்தாள். என் அண்ணனுக்கு அது கூட கிடையாது. ஏன் என்று புரியவில்லை. அப்புறம் ஒரு நாள் இதைப் பற்றி வருத்தப் பட்ட அவரே சொன்ன பிறகு அதனால் எங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் வந்திருக்காது என்ற தௌ¤வு வந்து விட்டதாலோ என்னவோ நானும் என் அண்ணனும் இதைப் பெரிய விஷயமாக எடுத்து கொள்ளவேயில்லை. சரி! அந்த ஜவஹர் ஸ்கூல் பெண்கள் கிளாஸ்மேட்ஸா வேற வந்து டீச்சர்களின்அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி கிளாஸ் லீடர், குரூப் லீடர் என்று எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி எங்களை நசுக்கப் பார்ப்பார்கள்.ஒருமாதிரி ஒருவருடம் சமாளித்து எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படித்து யெஸ், நோ, கம், கோ என்று பேசிப் பழகும் போது எங்களைப் போன்ற புது முகங்கள் வந்து மீண்டும் குட்டையைக் குழப்பினால் டீச்சருக்கும் மற்றப் பெண்களுக்கும் கடுப்பாகத்தான் இருக்கும். என்னுடன் ஐந்தாவது வரை படித்த தோழி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து அவளுடன் சேர்ந்து உட்காரலாம் என்று பக்கத்தில் போனால் அவள் என்னை அடித்து துரத்தாதக் குறையாய் விலகி முன்னே பின்னே பார்க்காதவள் போல் நடித்து என் துக்கத்தை அதிகப்படுத்தினாள். நான்தான் ஃபர்ஸ்ட் ராங்க் வாங்குவேன் அவள் என்னை முந்தியதே இல்லை! ஆனால் அவள் இப்போது அந்த வகுப்பின் பழங்குடியினரோடு சேர்ந்து என்னை ஒதுக்குகிறாளே அவளை நாமும் உதாசீனப் படுத்த வேண்டும் என்று என்க்குள் ஒரு வீர சபதம் அந்தக் கணமே எடுத்தேன். பிறகு இரண்டு வருடம் கழித்து மீண்டும் பழக ஆரம்பித்து நெருங்கிய தோழியான பிறகும் கூட இந்த ஃபிளாஷ்பேக்கைச் சொல்லி குத்தி கீறி காட்டிக் கொண்டேயிருந்தேன். போன வருடம் லீவுக்குப் போயிருந்த போது கூட 'மலரும் நினைவுகளாக' இதைச் சொல்லிக் காட்ட அவள் நொந்து போய் 'உனக்கு என்னைப் பற்றி நல்ல விஷயம் எதுவுமே நினைவுக்கு வரவில்லையா?' என்று பரிதாபமாகக் கேட்டாள்.மை டியர் மீரா, இன்னியோட அதை மறந்து விட்டேன்!

ஆனால் அவள் அப்படி நடந்து கொண்டதற்கு வலுவானக் காரணம் இருந்தது. அந்த பொல்லாத டீச்சருக்கு பயந்து கொண்டுதான். நாங்கள் உள்ளே நுழையும் போதே ஹோம்வொர்க் பற்றி எதோ கேட்டு மிரட்டிக் கொண்டிருந்தாள். நான் புது அட்மிஷன் என்பதை மறந்து விட்டதைப் போல் நடித்து "வெர் இஸ் யுவர் ஹோம்வொர்க்?" என்று கேட்டு கிளாஸை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டாள். முதல் அதிர்ச்சி! அதிச்சிக்கு மேல் அதிர்ச்சியாக என்னை ஒரு சப்ஜெக்ட் விடாமல் தமிழ் உட்பட முதல் மிட்டெர்ம் பரீட்சையில் ஃபெயில் பண்ணியது! ராங்க் கார்டைப் பார்த்தாலே அதில் சிரிக்கும் சிவப்பு மலர்களாக என் மதிப்பெண்கள்!ஸ்கூல் என்றாலே சந்தோஷமாக போய் நன்றாகப் படித்து கெட்டிக்காரப் பெண் என்று பெயர் வாங்கிய எனக்கு ஸ்கூல் என்றாலே "வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டை" உருளத் தொடங்கியது. இதைப் போய் காதலுக்கு எப்படி வைரமுத்து எழுதினாரோ?

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 7 - 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்'

சித்ரா ரமேஷ்

மணியின் உடல் நிலையை உத்தேசித்து வீட்டுக்குள்ளேயே விளையாடும் 'இண்டோர் கேம்ஸ்' விளையாடலாம் மணி வீட்டிலேயே, அவன் வைத்திருக்கும் சீட்டுக் கட்டு, டிரேட், கேரம் போர்ட், எல்லாவற்றையும் அனைவரும் உபயோகிக்கத் தர வேண்டும் என்ற கம்யூனிச சித்தாந்தத்திற்கு உட்பட்டு போன்ற பல நிபந்தனைகளுடன் சமாதான உடன் படிக்கை போட்டு திரும்பவும் 'ஃபிரெண்ட்ஸ்' ஆகிவிடுவோம். இந்த உடன் படிக்கையில் இரண்டு அம்மாக்களுமே மிகவும் திருப்தியடைந்து விடுவார்கள். இல்லையென்றால் பன்னெண்டு மணி உச்சி வெயிலில் நடுத்தெருவில் விளையாடுவதை விட இது பரவாயில்லை என்று தோன்றி விடும். எண்ணெய் தேய்த்து விடும் போதெல்லாம் "எண்ணெய தேச்சிண்டு வெயில்ல போய் விளையாடாதே" என்று சொன்னாலும் அந்த மாதிரி வாக்குறுதி அவசரப் பட்டுத் தர மாட்டோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை அவ்வளவாக எந்த குழந்தையும் விரும்பாது. அதையெல்லாம் பற்றி கவலையேப் படாமல் தேய்த்து விடுவார்கள். கண்ணுக்கு விளக்கெண்ணெய், (Franch oil) உடம்புக்கு தேங்காய் எண்ணெய், தலைக்கு நல்லெண்ணெய் என்று பிரமாதமாக உபசாரம் செய்தாலும் அந்த சீயக்காய்ப் பொடியை பார்த்தாலே வெறுப்பாகத்தான் இருக்கும். அதை எடுத்து தலையில் வைத்து கரகரவென்று தேய்த்து சமயத்தில் கை அழுந்தவில்லையென்றால் வீட்டில் வேலை செய்யும் கண்ணம்மாவைக் கூப்பிட்டு தேய்க்கச் சொல்லி..இதெல்லாம் நாம் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் போது நடந்து விடும். எண்ணெய் தேய்த்துக் குளித்த எரிச்சல், சீயக்காய் பொடி கண்ணில் புகுந்து விட்ட எரிச்சல், இதோடு கண்ணை திறந்து பார்க்கும் போது கண்ணம்மா சிரித்துக் கொண்டு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு நம்மேலேயே நமக்கு தன்னிரக்கம் வந்து விடும். அப்புறமா சிடுக்கு எடுக்கறேன், பேன் பாக்கறேன் என்று வந்து தலையையே கழட்டி வைத்து விட்டுதான் மறு வேலை பார்ப்பார்கள். எண்ணேய் தேய்த்துக் குளித்தால் நல்லது என்று யார் கண்டு பிடித்தார்கள்? ஆனால் அம்மா சொன்னது போல் எண்ணெய் தேய்த்துக் குளித்தவுடன் வெயிலில் போய் சுத்தினால் சாயங்காலம் கண்ணெல்லாம் சிவந்து ஒரு மாதிரி ஜுரக்களையுடன் தலைவலியுடன் வீட்டில் பேயறைந்த மாதிரி உம்மென்று உட்கார்ந்திருப்பதைப் பார்த்துக் கண்டு பிடித்து சொன்ன பேச்சு கேட்கவில்லையென்றால் எப்படிப்பட்ட பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது என்பதை விளக்க ஆரம்பித்து விடுவாள். "பேப்பர்ல பாத்தியா? சன்ஸ்ட்ரோக் வந்து ஒரு பையன் செத்துப் போய்ட்டான்" என்று சொல்லி இன்னும் கவலையை அதிகப்படுத்தி விடுவாள். சன்ஸ்ட்ரோக் என்றால் என்ன அதில் செத்துப் போகிற அளவுக்கு என்ன ஆகும் என்று தெரிந்து கொள்ள முயற்சித்தால் இன்னும் கிலி அதிகமாகிவிடும். "மூக்குலேந்தும் கண்ணுலேந்தும் ரத்தமாக் கொட்டும். அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போய்ட்டான்" என்று விவரிப்பதைக் கேட்டால் கொஞ்சம் மரணபயம் வந்து விடும். அப்பாதான் உலகத்திலேயே பலசாலி(இல்லை உலகத்தில் இருக்கும் பலசாலிகளில் அப்பாவும் ஒருவர்) அப்பாவால் எதையும் தூக்க முடியும். (உண்மையாகவே என் அப்பா ஸ்ட்ராங்க் மேன்தான்) அம்மாவுக்குத் தெரியாமல் எந்த விஷயமும் இருக்க முடியாது. அம்மா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று தீவீரமாக நம்பும் பருவம் அது.


எவ்வளவு நேரம் வெளியில் விளையாடினாலும் சாயங்காலம் விளக்கு வைக்கும் நேரம் கூட்டில் அடையும் கோழி போல் விட்டுக்கு வந்து விட வேண்டும். காலையில் சீக்கிரம் ஆறு மணிக்குள் எழுந்து விட வேண்டும். சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் வெளியில் சுற்றக் கூடாது. வீட்டுக்கு வந்து படிக்க வேண்டும். எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு ஒன்பது மணிக்குத் தூங்கி விட வேண்டும் என்று ஏகப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள். சில பேர் வீட்டில் ஆனாலும் அநியாயத்துக்கு காலங்கார்த்த்தாலே நாலு நாலரைக்கெல்லாம் எழுந்து குளிச்சு என்னமோ தீபாவளி மாதிரி கலாட்டா பண்ணுவது கொஞ்சம் ஓவர்தான்! ஆறு ஆறறைக்குள் வீடு திரும்பவில்லையென்றால் ஆள் அனுப்பி தேட ஆரம்பித்து விடுவார்கள். அம்மாவுக்கு யார் யாரை எந்த இடத்தில் தேட வேண்டும் என்பது சரியாகத் தெரிந்திருக்கும். 'பிராபபிலிட்டி கர்வ்' எல்லாம் சரியாகப் போட்டு இங்க இல்லேன்னா இந்த இடத்திலே இருப்பாங்கன்னு ஹை ஸ்கூல் கிரௌண்ட், எதிர் பக்கத்திலிருக்கும் பாலத்தடி, ஏழுநாள் தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டுபவர் சைக்கிள் ஓட்டும் இடம், சோவியத் யூனியன் புக் எக்ஸிபிஷன் நடக்கும் மைதானம் என்று எந்தெந்த லொகேஷனில் யார் இருப்பார்கள் சரியாக சொல்லியனுப்பி விடுவாள். தொடர்ந்து சைக்கிள் ஓட்டி சாதனை படைக்கும் சாதனையாளர் சாயங்காலம் ஏழு ஏழரை மணிவரை குழந்தைகளை குஷிப் படுத்தும் விதமாக நிறைய வித்தைகள் செய்து காட்டுவார். சைக்கிளிலிருந்தே குனிந்து கண்ணால் ரூபாய் நோட்டை எடுப்பது, ஹாண்டில் பாரில் உட்கார்ந்து கொண்டு ரிவர்ஸில் சைக்கிள் ஓட்டுவது, நெருப்பை முழுங்கிக் காட்டுவது, ஒரே சைக்கிளில் பத்து பேரை ஏற்றிக் கொண்டு ஓட்டுவது (இதை எங்க ஊரிலேயே நிறைய பேர் செய்வாங்க) அவ்வப்போது ஒலி பெருக்கியில் "ராணியின் கண் கவர் நடன விருந்து" என்று அறிவிக்க ராணி கூடரத்தை விட்டு வெளியில் வந்து கையசைத்து விட்டுப் போவாள். ரோஸ் நிறப் பவுடரும், கன்னத்தில் ஜிகினா மினுமினுக்க, பளபள உடைகளில் நம்ப பத்மினி சாயலில் பேரழகியாகத் தெரிவாள். ஆனால் அந்த "கண் கவர் நடன விருந்து" நாங்க வேடிக்கைப் பார்க்க நின்று கொண்டுருக்கும் வரை ஆரம்பிக்காது. 'லேட் நைட் ஷோ' தான் இருக்குமோ? அதற்குள் அம்மாவின் உளவாளி வந்து விடுவார். ராத்திரி சாப்பிட்டு விட்டு படுக்கப் போகும் போது 'மாமா மாமா, பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' பாட்டுகள் லேசாக காற்றில் கலந்து வரும். திடீரென்று நினைத்துக் கொண்டு "அம்மா இந்த டான்ஸ் ஆடறவ பத்மினி மாதிரியே இருந்தாம்மா" என்று சொன்னால் அம்மா இந்த மாதிரி அசட்டுக் குழந்தைகளைப் பார்த்து என்ன செய்ய முடியும்? தலையில் அடித்துக் கொண்டு சிரிப்பாள். அம்மா பத்மினி ஃபான்! படுக்கைப் போடுவதைப் பார்த்து "இப்பவே தூங்கணுமா? இந்த புக் மட்டும் படிச்சுட்டுத் தூங்கறேனே" என்று சொல்லிக் கொண்டே மறு நிமிடம் தூங்கி விடுவோம்.


'இண்டோர் கேம்ஸ் பற்றி சொல்ல ஆரம்பித்து.... டிரேடில் இரண்டு வகை உண்டு. பாம்பே டிரேட், இண்டர்நெஷனல் டிரேட். இதில் பாம்பே டிரெட்தான் சூப்பரா இருக்கும். பேங்கரை கையிலே போட்டுக் கொண்டு பணம் சுருட்டுவது, பேங்கர மிரட்டி பணம் பறிப்பது, இன்சால்வென்ஸி கொடுப்பது, பணம் கட்ட முடியாமல் ஜெயிலுக்குப் போவது, பாங்கில் கடன் வாங்குவது, ஓவர் டிராஃப்ட் எடுப்பது, பெரிய தொழிலதிபர்கள் செய்யும் 'பெரிய விஷயங்கள்' எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளலாம். கிரெடிட் கார்ட் விஷயத்தை மட்டும்தான் கற்றுக் கொள்ளவில்லை. ஜுý§ வாங்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப லக்கிதான்! பாம்பே எந்த பக்கம் இருக்கிறது என்ற அடிப்படை பூகோள அறிவு கூட இல்லாமல் பாம்பேயில் ரொம்ப விலையுயர்ந்த இடம் ஜுஹ§ அப்புறம் வெரேலி, சர்ச் கேட், மரைன் டிரைவ் போன்ற மற்ற இடங்களும் அத்துப் படியாகி விடும். இன்டெர் நெஷனல் டிரேடில் ஐரோப்பிய அமெரிக்க நகரங்கள்! சீட்டுக்கட்டு விளையாட்டில் நாலு சீட்டு, ஏழு சீட்டு டிரம்ப் கார்ட்(மங்காத்தா!!) ரம்மி, டாங்க்கி,மங்க்கி, லிட்ரேச்சர்ன்னு ஒரு விளையாட்டு விளையாடி இருக்கீங்களா? இது விளையாடினால் நினைவாற்றல் பெருகும் கார்ட்ஸ் விளையாடுவதில் மட்டும் தான்! கேரம் போர்ட்! பாண்ட்ஸ் பவுடர், ரெமி பவுடர் மணக்கும் கேரம் போர்ட். பவுடர் போட்டு கேரம் போர்டைத் தேய்த்தால் ஸ்ட்ரைக்கர் இன்னும் வழுக்கிக் கொண்டு போகும் என்று வீட்டில் இருக்கும் பாண்ட்ஸ்,ரெமி
பவுடர் சமயத்தில் அம்மா உபயோகிக்கும் மைசூர் சாண்டல்.... கேரம் போர்டே அம்மா வாசனை அடிக்கும்.அப்பாவின் புது பிளேடு, அம்மாவின் பவுடர் இதையெல்லாம் எடுத்தால் பயங்கரகோபம் வந்து விடும். ஆனால் உண்மையாகாவே அம்மாவை கோபப் படுத்த வேண்டும் என்று செய்வதாக சொல்வது சற்று மனத்தாங்கலாகத்தான் இருக்கும். விளையாடும் போது நன்றாக விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்வதுதான். அப்புறம்தான் கேரம் போர்டுக்கு அம்மா உபயோகிக்கும் சந்தன பவுடரெல்லாம் போட மாட்டாங்க! அதற்கென்று ஸ்பெஷலா பவுடர் வாங்க வேண்டும் என்ற பொது அறிவு வளர்ந்தது. தாயக்கட்டை, பல்லாங்குழி என்று பாரம்பரிய விளையாட்டுகளைக் கூட விட்டதில்லை. ஜோடி சேர்த்து வெட்டுவது, மலையேறி பழமாகும் நிலையில் இருக்கும் காய்களை வெட்டுவது, ஒரு தாயம் போட்டு ஒரு காயைக் கூட இறக்காதவங்களை எள்ளி நகைப்பது, இரண்டு பன்னெண்டு, ஈராறு, ஓரைந்து, இரண்டு என்று தொடர்ச்சியாக பயங்கர எண்ணிக்கைகள் போட்டு இரண்டு மூன்று காய்களை வெட்டுவது (ஒரே ஆட்டத்தில் இரண்டு மூன்று காய்களை வெட்டினாலும் வெட்டாட்டத்துக்கு ஒரே ஒரு மறு ஆட்டம்தான்!) என்று சகுனியை விட திறமைசாலிகள் இருந்தார்கள். பல்லாங்குழியில் பன்னிரண்டு சோழிகள் போட்டு விளையாடும் போது வலது பக்கத்திலிருந்து மூன்றாவது குழியிலிருந்து எடுத்து ஆடினால் புதையல் நிச்சயம்! ஞாபகமிருக்கா? புதையல் வர வய்ப்பிருக்கிறது என்று சோழிகளை எண்ணி வைத்துக் கொண்டு சரியாக வரவில்லை என்று தோன்றினால் ஒரே குழியில் நைசாக இரண்டு சோழிகளைப் போட்டு புதையல் எடுப்பது, காசி பொத்துவது, பசு எடுப்பது சோழிகளின் எண்ணிக்கை குறைத்து குறைத்து கடைசியில் கஞ்சி காய்ச்சி ஓட்டாண்டியாக்கி விடுவது! எத்தனை சுவாரஸ்யமான விளையாட்டு! ரொம்ப அறிவு பூர்வ விளையாட்டான செஸ் கூட விளையாடியிருக்கிறோம். இதில் பேஜாரான விஷயம் என்னவென்றால் எதிராளி ரொம்....ப நேரம் யோ....சித்து யோ...சித்து குதிரைக்கு முன்னாலிருக்கும் பானை நகர்த்தி விட்டு திரும்பவும் பழைய இடத்திற்கே கொண்டு போய் வைத்து குதிரையை ஜம்ப் பண்ணி நகர்த்தி திரும்பவும் யோசித்து ம்ஹ§ம் செமையா படுத்துவாங்க! செஸ் நல்லா விளையாடத் தெரிஞ்சவங்க யாராவது படிக்காமலா இருப்பீங்க! நான் சொன்ன 'மூவ்' பற்றி கற்பனை பண்ணி பாருங்க! எவ்வளவு முட்டாள்தனமான 'மூவ்'! விளையாட்டுன்னா பரபரன்னு விளையாடணும்னு நினைக்கறவங்களுக்கு இது சரிப் படாது. ராஜா சும்மா டம்மிதான்! ராணிதான் அம்மா மாதிரி இங்கேயும் அங்கேயும் திரிஞ்சு ஆட்டத்தை சுவாரஸ்யமாக்குவாங்க! அதனால் செஸ் மாதிரி ஒரு நல்ல கேம் வேறெதுவும் இல்லை! பெண் விடுதலைக்கு முதலில் குரல் கொடுத்த விளையாட்டு இல்லையா?

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 6 - "ஓடி வரும் நாடி வரும் உறவு கொள்ள தேடி வரும்"

சித்ரா ரமேஷ்

பரீட்சை, பிறகு விடுமுறை என்று வருடத்திற்கு மூன்று முறை வந்தாலும் எல்லோருக்கும் பிடித்த லீவ் சித்திரை மாதத்து விடுமுறை தான். காலாண்டு, அரையாண்டு முடிந்து வரும் விடுமுறைகள் கண்மூடி திறப்பதற்குள் முடிந்து விடும். முடிந்த பரீட்சையின் கேள்விதாள்களுக்கு விடை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்று வீட்டுப் பாடம் வேறு கொடுத்து விடுவார்கள். சாய்ஸ் கொடுத்த கேள்விகளுக்கு அப்போது சாய்ஸ் கிடையாது. இதில் ரொம்ப திடுக்கிட வைக்கும் விஷயம் என்னவென்றால் கணக்குத் தேர்வுத்தாள்தான். பரீட்சையில் திரு திரு வென்று விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் லட்டு மாதிரி பதில் கிடைத்து விடும். ஸ்கூல் திறந்ததும் கொடுக்கும் பேப்பரில் என்ன மார்க் வந்திருக்கும் என்று குத்து மதிப்பாய் தெரிந்து போய் செமையாக மூட் அவுட் ஆகி விடும். எல்லாப் பாடங்களுக்கும் மாங்கு மாங்கு என்று உட்கார்ந்து விடை தேடி எழுதியே பொழுது கழிந்து விடும். முழுப் பரீட்சை லீவில் இந்த மாதிரி தொந்தரவு கிடையாது. ஸ்கூல் திறந்ததும் மார்க் கிடைக்கும் என்ற வம்பெல்லாம் கிடையாது. புது கிளாஸ் போய் விடலாம். பழைய டீச்சரை ரொம்ப கண்டுக்க வேண்டாம். அப்புறம் கிட்டத்தட்ட ஐம்பது நாள் லீவு. படி படி என்று தப்பித் தவறிக் கூட யாரும் சொல்லிவிட முடியாது. சில சமயம் அம்மா மட்டும் அடுத்த வருஷத்துப் புக்ஸ் எல்லாம் வாங்கியாச்சே! சும்மா எடுத்துப் புரட்டக் கூடாதா? என்று செல்லமாக சொல்லிப் பார்ப்பாள். நாங்கள்தான் பெரிய மேதாவியாச்சே! அதெல்லாம் லீவுலேயெ படிச்சுட்டா அடுத்த வருஷம் ஸ்கூல் போய் என்ன பண்ணுவது போர் அடிக்குமே என்று ரொம்ப நம்பகத்தனமான பொய் சொல்லி விடுவோம். நம் வீட்டு அட்ரஸ் எழுதிதரச் சொல்லி ஒரு போஸ்ட் கார்டை டீச்சர் வாங்கி வைத்துக் கொள்வார்கள். பரீட்சை, படிப்பு, ஸ்கூல் எல்லாவற்றையும் மறந்து குதித்துக் கொண்டிருக்கும் போது 'பிரமோட்டட்' என்று போட்டு போஸ்ட் கார்ட் வீட்டுக்கு வரும். பாவம் சிலருக்கு மட்டும் வேறு மாதிரி வந்து விடும். இவர்கள் மட்டும் எப்போ ரிஸல்ட் வரும் என்று எதிர் பார்த்து போஸ்ட்மேனை வழியிலேயே மடக்கி லெட்டரைக் கேட்பார்கள்.போஸ்ட்மேன் விவரமான ஆள். இதற்கெல்லாம் மசியாமல் நேரா வீட்டில் கொண்டு போய் கொடுத்து விடுவார். ஒரு நாள் இரண்டு நாள் அடிதடியாக இருக்கும். 'புத்தகத்தை தூக்கிப் போடாதே இந்த வருடமாவது ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ற வழியைப் பாரு' என்று பொது மன்னிப்பு வழங்கப்பட்டு திரும்பவும் விளையாடுவதற்கு வந்து விடுவார்கள். சின்ன கிளாஸ்ல என்ன பாஸ், ஃபெயில்? அப்படியெல்லாம் ஒரு குழந்தையை தரம் பிரித்து பார்ப்பதற்கு என்ன ரொம்ப நடுநிலையான கல்வி முறையா இருந்தது? தன்னிடம் டியூஷன் படிக்க வரும் மாணவர்களை 'எப்பாடு' பட்டாவது பாஸ் பண்ண வைக்கும் ஆசிரியர்கள்! நாங்களும் முதல் ராங்க் வாங்குகிற பெண்ணும் ஒரே கோனார் நோட்ஸிலிருந்து படித்து வரிக்கு வரி ஒரே மாதிரி பதில் எழுதினாலும் அவளுக்கு எட்டு மார்கென்றால் எனக்கு ஆறு மார்க்! ஒப்பிட்டுப் பார்த்துக் கேட்டால் 'கம்பேர் பண்ணியா மார்க் கேக்கற' என்று அதற்கு இரண்டு மார்க் குறைத்து விடுவார்கள். அந்த டீச்சருக்கு கையெழுத்தைப் பார்த்தவுடனேயே எங்கள் முகம் தெரிந்து விடும்! இப்படியெல்லாம் மிரட்டியே ஒருத்தியை பெரிய ஆள் ஆக்கி விடுவது!மற்றொருத்தியை மட்டம் தட்டி விடுவது! (இதைப் பற்றி அப்புறம்) இப்போதெல்லாம் இந்த அநியாயம் கிடையாது போலிருக்கிறது. ஆனாலும் இன்னும் 99.3% எடுத்தால் மருத்துவ கல்லூரியில் இடம். 99.2% எடுத்தால் கிடையாது. இந்த அமைப்பை கொஞ்சம் மாற்றினால்தேவலை. 0.1% வித்தியாசத்தில் திறமைசாலிகளுக்குத் தகுந்த அங்கீகாரம் தராமல் விட்டு விடுகிறோமா?


விடுமுறை ஆரம்பித்ததும் உடம்பெல்லாம் லேசாக ஆகி காற்றில் பறப்பது போல் உணரலாம். மார்ச் மாதம் தீயைப் போல் பூக்கும் மஞ்சள் நிறப் பூவுக்கு எக்ஸாம் பூ என்று பெயர் வைத்திருந்தாள் என் தோழி. அந்த பூவைப் பார்த்தாலே பரவசம்தான்! பொங்கல் விடுமுறையின் போதே மனம் பூக்கத் தொடங்கி விடும். அந்த டெர்ம்தான் ஸ்கூல்டே, ஸ்போர்ட்ஸ்டே எஸ்எஸ்எல்சி முடித்து விட்டு ஸ்கூலை விட்டுப் போகும் அக்காக்களுக்கு சென்ட் ஆஃப் பார்ட்டி என்று நிறைய கொண்டாட்டங்கள்! இதை ஒட்டி கிளாஸில் இருக்காமல் டான்ஸ், டிராமா, மாஸ்டிரில் என்று எக்கச் சக்க ஒத்திகைகள்! இந்த கொண்டாட்டங்களுக்கு நடுவில் படிப்பை மறந்து விடக் கூடாது. முழுப் பரீட்சை வரப் போகிறது என்று அப்பப்ப மிரட்டும் ஆசிரியைகள்! செண்ட் ஆஃப் பார்ட்டி அன்று பிழியப் பிழிய அழுது'பசுமை நிறந்த நினைவுகளே' என்று தவறாமல் பாடும் பாட்டு! எங்கள் வகுப்பில் அனைவரும் அப்போதே முடிவு செய்து விட்டோம். நம்ப சென்ட் ஆஃப் பார்ட்டி அன்று யாரும் அழக் கூடாது. அப்புறம் 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாட்டு பாடக் கூடாது என்று! இதனால் முழுப் பரீட்சையை ரொம்ப ரசித்து எழுதுவோம்! எஸ்எஸ்எல்சி பரீட்சை எழுதி விட்டு காத்திருக்கும் நாட்கள்! பெரிய மனிதர்கள் ஆகி விட்டது போல் தோன்றும். அப்பாடி! இனிமேல் ஸ்கூல், ஹோம் வொர்க், மிரட்டல் எதுவும் கிடையாது. இனிமேல் காலேஜ் தான் என்று கற்பனைகளோடு காத்திருக்கும் காலம்! இதைப் பற்றி வண்ண நிலவன் "ரெயினிஸ் ஐயர் தெரு"வில் விவரிச்சு இருப்பார். படிச்சுப் பாருங்க! வாரா வாரம் என்னோட எழுத்தை படிச்சு ரசிக்கறவங்க இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதே போல் இதையும் ரசிச்சு படிக்கலாமே! என்னால் முடிந்த இலக்கிய சேவை!


காலையில் சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்தால் அப்புறம் பசி, தாகம், தூக்கம் எதுவுமே இருக்காது. இருட்டிய பிறகு நாமாகவே பசி உணர்ந்து வீடு திரும்பினால் உண்டு. காலையில் தூங்கி எழுந்ததும் பரபரக்கத் தொடங்கி விடும். 'சீக்கிரம் சாதம் போடு பசிக்கிறது' என்று அம்மாவை குடைந்து எடுத்து விடுவோம். "ஸ்கூல் தான் கிடையாதே கொஞ்சம் நிதானமா பண்ணலாம்னா இப்படியா பறக்கறது" அம்மா அலுத்துக் கொண்டே சாப்பாடு போட்ட அடுத்த நிமிஷம் விளையாடுமிடத்தில் கூடி விடுவோம். மரத்தடியில், பாலத்துக்கு கீழ், ஸ்கூல் மைதானம் என்று நிறைய இடங்கள் இருந்தாலும் 'ஐஸ் பாய்ஸ்' விளையாட வீடும் வீட்டைச் சார்ந்த இடங்களும் தான் வசதி. ஒளிந்து கொள்ள தோதாக இண்டு, இடுக்கு, மாடி, தண்ணீர் தொட்டி, மல்லிகைப் புதர், மரங்கள் என்று எக்கச்சக்க இடங்கள்! ஆனால் எல்லார் வீட்டிலும் வீட்டு வாசலிலோ, வீட்டைச் சுற்றியோ விளையாட அனுமதி தரமாட்டார்கள்.வீட்டு வாசலில் கச்சா முச்சா என்று சத்தம், சாப்பிட்டு விட்டு சற்று நேரம் கண்ணயரலாம் என்று நினைக்கும் நேரத்தில் தலை மாட்டில் நின்று கொண்டு 'ஐஸ் பாய்ஸ்' என்ற கூப்பாடு, செடி கொடியெல்லாம் துவம்சம் செய்து கொண்டு ஓடுதல், தண்ணீர் குடிக்க வருகிறேன் என்று வீட்டுக்குள் புகுந்து கலாட்டா என்ற சில பல காரணங்களால் அனுமதி மறுக்கப் பட்டு விடும். சில பேர் மனமிரங்கி விடுவார்கள்.அதில் என் அம்மாவும் ஒருத்தி. ஒரு சமயம் இந்த கூச்சல் பொறுக்க முடியாமல் " ஏண்டா! உங்க வீட்டிலே போய் விளயாடுவதுதானே"என்று அம்மா கேட்டு விட்டாள். "எங்காத்துலே அம்மா தூங்கும் போது சத்தம் போட்டா அம்மாக்கு தலைவலி வந்துடும் அதான் மாமி அங்க போய் விளையாட முடியாது" என்று தாய்ப் பாசத்தோடு உண்மையை உளறி விட இந்த கத்தல் கலாட்டாவை விட இந்த விஷயம் அம்மாவை உறுத்தி விடும். "அந்தப் பசங்களுக்குத்தான் அம்மாக் கிட்ட என்ன கரிசனம்? நம்ப வீட்டிலேயும் தான் இருக்கே" என்று துக்கத்துடன் சொல்வாள். இந்த அசட்டுப் பையன்களை சமாளித்து 'தாய் பாசத்தைக்' காட்ட ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். ஐஸ் பாய்ஸ் விளையாடுவதற்கு சரியான மறைவிடம் மொட்டை மாடிதான். வீட்டின் பின் பக்கம் ஏறி முன் பக்கமாககுதித்து தப்பித்து விடலாம். மாடி என்றதும் வசதியாக முன்பக்கம் பின்பக்கம் இரண்டு வழிகளிலும் படிக்கட்டு அமைந்து பெரிய பங்களா மாதிரி இருக்கும் என்று நினைத்து விட வேண்டாம். பின்பக்கம் வழியாக என்றால் துணி தோய்க்கிற கல்லில் ஏறி ஒரு ஜம்ப் செய்து ஒத்தைக்கல் சுவரில் கை தேர்ந்த கழைகூத்தாடி போல் பாலன்ஸ் செய்து நடந்து சன்ஷேடில் தொங்கி மொட்டைமாடிக்குப் போய்விடலாம். முன்பக்க வழி என்றால் 'ஜாக் அண்ட் தி பீன் ஸ்டாக்' கதையில் வரும் ஜாக் ஏறுவானே அதே போல் ஒரு போகன் வில்லா மரக்கிளை வழியாக சன்ஷேடில் ஏறி அப்படியே மொட்டை மாடி. மழைக் காலத்தில் மட்டும் ஏறும் போது வழுக்கி விடும். அப்போது மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக ஏற வேண்டும். மற்ற சமயங்களில் சாதாரணமாக படிக்கட்டில் ஏறுவது போல் ஏறி விடலாம். பலவீன இதயம் இருப்பவர்கள் பார்த்தால் படபடப்பு அதிகமாகி விடும். விளையாட வருகின்ற அனைவருக்கும் இந்த தொழில் நுட்பமெல்லாம் தெரிந்து இருக்கும்.


பொதுவாகவே விளையாடும் போது ஏற்படுகின்ற கீறல், சிராய்ப்பு, சின்ன விழுப்புண்களை அம்மாவிடம் சொல்லாமல் மறைத்து விடுவோம். நாங்களே திருட்டுத்தனமாக சைபால் எடுத்து அப்பிக் கொள்வது, காயத்தின் மேல் மண் அள்ளி பூசுவது, எருக்கம்பால்விட்டுக் கொள்வது என்ற கொடூரமான வைத்திய முறைகளை பின்பற்றி எப்படியோ சரி செய்து கொண்டு விடுவோம். அம்மா மறுநாள்குளிப்பாட்டி விடும்போது 'ஆ! ஐயோ, அங்க தேய்க்காதே. இங்க தொடாதே' என்று கத்தி உண்மையை கக்கி விடுவோம். குளிக்கும் போதே அடிபட்ட வலியுடன் உண்மைகளை மறைத்ததற்காக முதுகில் மேலும் ஒரு அடி! எவ்வளவு நல்ல அம்மாவாக இருந்தாலும் இந்த மாதிரி சமயங்களில் கொஞ்சம் வெறுப்பாகத்தான் இருக்கும்.இந்த மாதிரி பயங்கர வைத்திய முறைகளை வேறு கேட்டு விட்டு அதிர்ச்சியடைந்து அந்த ஐடியா கொடுத்தப் பையனையும் திட்டி நாம் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறோம். மற்ற பசங்க எப்படி விவரமாக இருக்கிறார்கள். அவர்கள் எப்படியெல்லாம் நம்மை உபயோகித்துக் கொள்கிறார்கள் என்பதையும் எடுத்துரைத்து(இந்த குற்றச்சாட்டு இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது!!) அவர்களுடன் இனிமேல் விளையாடக் கூடாது என்ற அச்சுறுத்தலுடன் வேறு மருந்து போட்டு பிளாஸ்ட்டர் ஒட்டி சிசுருஷைகள் செய்வாள். இந்த பிரச்சனை நமக்கும் அம்மாவுக்கும் நடுவில் மட்டும் இருந்தால் பரவாயில்லை. சில சமயம் அப்பாவிடம் போய் சொல்லி விடுவாள். இதெல்லாம் எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காது என்று தெரிந்து கொண்டே! இரண்டு பேரும் சேர்ந்து திட்டும் போது அம்மாவிடம் மட்டும் தான் மனத்தாங்கல் அதிகமாகிவிடும். இந்த விரிசல் அதிகமாகும் முன் நம் கண்ணீரைக் கண்டு அம்மா மனமிரங்கி நமக்குப் பிடித்த உருளைக் கிழங்கு ரோஸ்ட் பண்ணி சமாதானம் செய்து விடுவாள். சாப்பிட்டு முடிக்கும் போது யாருடன் சேரக் கூடாது என்று சொன்னாளோ அந்த ஆசாமியே வந்து விளையாடக் கூப்பிடுவான். வாயேத் திறக்காமல் அனுப்பி வைத்து விடுவாள்.


அப்படித்தான் ஒரு நாள் விளையாடி கொண்டிருந்த போது ஒரு நண்பன் மாடியிலிருந்து தவறி விழுந்து விட்டான். தலையிலிருந்து ரத்தமாகக் கொட்டுகிறது. இவ்வளவு பெரிய அடியை சமாளிக்கும் அளவுக்கு கை வைத்தியம் தெரியவில்லை. அவன் அழுது கொண்டேவீட்டுக்கு ஓடிப் போய் விட்டான். எதிர் பாராத இந்த திருப்பத்தை பார்த்து மற்றவர்களும் பயந்து ஓடி விட்டார்கள். நாங்கள் எங்கே ஓடுவது? கொஞ்ச நேரம் கழித்து அவன் அம்மா அந்த பையனுடன் வீட்டுக்கு வந்து விட்டாள். "யாருடா மணிய கீழே தள்ளி விட்டது?" ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவனை நம்பியார் பாணியில் பார்த்தோம். மாடியிலிருந்து தவறி விழுந்ததைச் சொல்லாமல் அம்மாவுக்குப் பயந்து கொண்டு யாரோ தள்ளி விட்டதாகப் போய் புளுகியிருக்கிறான். அப்போதுதானே தன் மேல் எந்த விதத் தவறும் இல்லை என்று அனுதாப அலை வீசும்! இந்த சத்தத்தைக் கேட்டு அம்மா வந்து விட " என்ன உங்க குழந்தைகளை பாத்துக்க மாட்டீங்களா? விளையாடும்போது என்ன பண்றாங்கன்னு கொஞ்சம் கவனிக்கக் கூடாதா?" என்று அபத்தமாக சண்டைக்கு வர "உங்க பிள்ளையை நாங்க எல்லாரும் சேர்ந்து தள்ளி விட்ட மாதிரி பேசறீ¦ங்களே! விளையாடும் போது இந்த மாதிரி அடி படத்தான் படும். இன்னும் ஏழெட்டு பேர் சேர்ந்து விளையாடினாங்க! அவங்க வீட்டுகெல்லாம் போய் விசாரியுங்க" என்று பெரியவர்களுக்கிடையில் ஒரு சின்ன சண்டை உருவாகி விட்டது. அப்புறம் நடந்ததைக் கேட்கவே வேண்டாம். ஏற்கனவே எங்கள் நடத்தையால் மனம் நொந்து போயிருந்த அம்மா இனிமேல் அந்த பையன் நம் வீட்டு பக்கமே வரக்கூடாது. அவனை எந்த விளையாட்டிலும் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்று கடைசி முறையாக எச்சரித்தாள். இரண்டு மூன்று நாள் கொட்டமெல்லாம் அடங்கி சோகத்துடன் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்போம். வீட்டில் இருந்து கொண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தின்பதற்கு என்னயிருக்கிறது என்று சமையல் ரூமில் புகுந்து டப்பாவையெல்லாம் உருட்டுவது, அதைத் தேடுகிறேன் இதைத் தேடுகிறேன் என்று பெட்டிகளை குடைவது, அப்பா வைத்திருக்கும் புது பிளேடுகளை எடுத்து விஷமம் செய்வது, எங்களுக்குள் அடிக்கடி அபிப்ராய பேதம் ஏற்பட்டு அடிதடியில் இறங்குவது போன்ற பிடுங்கல்கள் தாங்க முடியாமல் அம்மாவே வெளியில் போய் விளையாடுங்கள் என்று துரத்தி விடுவாள். விளையாடிக் கொண்டிருக்கும் போது அடிபட்ட அந்த பையன் தலையில் கட்டுடன் ஏக்கப் பார்வை பார்த்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டிருப்பான். நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம். கெஞ்சிக் கேட்டாலும் "போடா! எங்கம்மா உன்னை சேத்துக்கக் கூடாதுன்னுட்டாங்க" என்று நிர்தாட்சண்யமாக மறுத்து விடுவோம். நாங்களும் தாய் சொல்லைத் தட்டாமல் இருப்பதில் எம்ஜியாருக்கு சளைத்தவர்களில்லை என்று காட்ட வேண்டாமா?அவன் வீட்டுக்கு போய் அழுது புரண்டு என்ன செய்வானோ அவன் அம்மா வெள்ளைக் கொடியுடன் சமாதானப் புறாவாக வந்து விடுவாள்."ஏண்டா எங்காத்து மணிய சேத்துக்க மாட்டீங்களா?" என்று என் அம்மாவிடமும் போய் "என்ன மாமி நீங்களாவது சொல்லக்கூடாதா? அன்னிக்கு ரத்தமா கொட்றதைப் பாத்து பயந்து போய்ட்டேன். அவர் வந்து பாத்தார்னா என்ன பதில் சொல்றது?" என்று இறங்கி வந்து பேசுவாள். அப்பாக்கள் பொதுவாகவே குழந்தைகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டவிட்டாலும் இந்த மாதிரி அடிபட்டு ரத்தக் களறியாக வந்தால் அம்மா மேல் பாய்வார்கள். "வீட்ல இருந்து ஒழுங்கா கண்காணிப்பா குழந்தையை பாத்துக்க முடியவில்லை! மத்யான தூக்கம்தான் உனக்கு முக்கியம்" என்று குத்திக் காட்டுவார்கள். அம்மா வந்து நாங்கள் விளையாடுவதை கவனிக்க வேண்டும் என்பது "மிஷன் இம்பாஸிபில்". டிடெக்டிவ் ஏஜென்ஸியில் சொல்லி டிடக்டிவ் ஏற்பாடு செய்தால் கூட அவர் முறையான ரிபோர்ட் தர முடியாது. அம்மா எப்படி அடிபடுவதற்கெல்லாம் பொறுப்பேற்க முடியும்? நிறைய எழுதிவிட்டேன் போலிருக்கிறது. அடுத்த வாரம் "திருவிளையாடல்கள்" தொடரும்.

சித்ரா ரமேஷ், சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் - 5 - "உன் பார்வை போல என் பார்வை இல்லை, நான் கண்ட காட்சி நீ காணவில்லை"

சித்ரா ரமேஷ், சிங்கப்பூர்

என் பெண் என்னிடம் "நீ சின்ன வயதில் யாருடைய விசிறி" என்று கேட்டு நான் சொன்ன பெயரைக் கேட்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டு "என்ன" என்றாள். உலகத்திலேயே தலை சிறந்த நடிகர் அவர்" என்று சொன்னதும் "இல்லை அதைப் பற்றி ஒன்றும் இல்லை.
பட் ஹி இஸ் லைக் யுவர் டாட்" என்று பதில் சொன்ன போது அவள் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்தது. அவள் எதிர் பார்த்த 'கனவுக் கதாநாயகர்கள்' யாரும் அப்போது கிடையாது. கிரிக்கெட் வீரர்களில் கூட நம் ஊர் கிரிக்கெட் வீரர்கள் கிடையாது. பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் டீமில் அவ்வப்போது "மில்ஸ் அண்ட் பூன்" கதாநாயகர்கள் தென்படுவார்கள். பிஷன் சிங் பேடி, பிரசன்னா, சந்திரசேகர் இவர்களுக்கு நடுவில் கவாஸ்கர், விஸ்வனாத், வெங்சர்கர் கொஞ்சம் இளமையாக இருப்பார்கள்.

அப்போது கதாநாயகர்களாக நடித்தவர்களின் சராசரி வயது நாற்பது இல்லை ஐம்பதா? நான் ஒரு லிஸ்ட் தருகிறேன். அதிலிருந்து நீங்களே கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேஷ், முத்துராமன், ஏவி எம் ராஜன், ரவிச்சந்திரன்,
ஜெய்சங்கர், எஸ் எஸ் ஆர் எக்ஸட்ரா.... யாராவது இளமையான ஆண்கள் சான்ஸ் கேட்டு வந்தால் ரொம்ப சின்னப் பையனாக இருக்கிறான் என்று நிராகரித்து விடுவார்களோ? கதாநாயகிகள் கூட இருபது வருடம் நடித்து புகழடைந்தவர்கள் தான்! அவ்வப்போது
இளம் சிட்டுகள் புது முக நடிகைகளாகி "பழம் பெரும்" நடிகர்களோடு நடிப்பார்கள். நம் ஊரில்தான் ஆண்களுக்கு வயதே ஆகாதே!

பத்து, இருபது வயது வித்தியாசத்தில் ஆண்களுக்கு வயதானால் என்ன என்று கேட்டு கல்யாணமே செய்து வைத்து விடுவார்கள். பணம் வாங்கி நடிப்பதற்கு என்ன?அந்த இளம் நடிகைகள் மூத்த நடிகர்களோடு கனவு கண்டு டூயட் பாடுவது "சைல்ட் அப்யூஸ்" மாதிரித்தான் இருக்கும். இதை விட கடுமையான வார்த்தையைக் கூட உபயோகிக்கலாம். பாவம் சில 'ரசிகர்கள்' மனம் உடைந்து விடுவார்கள் என்பதால் வேண்டாம்.

கதாநாயகனின் கண்ணியம் காப்பாற்றும் பொருட்டு கனவு காண்பது அந்த இளம் நடிகை. "இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமைதானே"! கடைசி இரண்டு வரிகளை உத்தேசித்து இப்படி காட்சியை அமைப்பார்கள் போலிருக்கிறது. இதை விடக் கொடுமை மிடில் ஏஜ் மாமிகளெல்லாம் இளமைத் துள்ளலுடன் நடை போடுவது! படத்தில் முன்பாதியில் கோணவகிடு, காதுகளில் ரிங், பாவாடை தாவணி, இன்னும் கொஞ்சம் மாடர்னானால் டைட்ஸ், ஸ்கர்ட் அணிந்து குதித்துக் கொண்டு இண்டர்வெல்லுக்குப் பிறகு கொண்டை மல்லிகைப் பூ சகிதம் தாலியை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு அடக்க ஒடுக்கமாய் குடும்பப் பெண்ணாகி விடுவார்கள். "அப்பாவை எதித்தா பேசற? என்னங்க நம்ப பிள்ளை மாறிட்டான்" என்று உருக்கமாக வசனம் பேசுவார்கள். கொடுக்கிற காசுக்கு அந்த இளம் நடிகைகள் வேண்டுமானால் கனவு காண்கின்ற மாதிரி நடிக்கட்டும். எங்களைப் போன்ற பதினாறு வயது'மயில்களுக்கு' என்ன கட்டாயம்? எதோ அப்பா, பெரியப்பா அளவில் மரியாதை தரலாம். இப்போது 'சித்தப்பு' நடிகர்களாக இருக்கும் சூப்பர் ஸ்டார், உலக நாயகனெல்லாம் அப்போது குட்டி நடிகர்களாக முன்னேறி கொண்டிருந்தார்கள். இந்த பெரிய நடிகர்களுக்கு தம்பி, மகன், சில சமயம் நண்பனாக நடிப்பதற்கு அவ்வப்போது புது முக நடிகர்கள் வருவார்கள். சிவகுமார், ஜெய்கணேஷ், ஸ்ரீகாந்த்,விஜயன், சுதாகர், கஷ்ட காலம்தான்!

பொதுவாகவே உண்மை வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் ஒரு பெரீய்ய இடைவெளி இருந்து கொண்டேயிருக்கும். கதாநாயகன், கதாநாயகி அணியும் ஆடை அணிகலனிலிருந்து பேசும் வசனம் வரை உண்மை வாழ்க்கை நிலையை பிரதிபலிக்காது. கிட்டத் தட்ட ஐம்பது அறுபது வயது கதாநாயகன் கோட் சூட் அணிந்து கொண்டு (இதில் ஒருவர் அணிவது தொப்பையை மறைக்க) பட்டப்படிப்பு முடித்து விட்டு வரும் கட்டிளங்காளையாக தன்னைவிட இளமையான அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு 'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்' என்று பாடுவார். ஒரு ரசிகக் கூட்டமே மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும்.

பணக்கார அம்மாக்கள் வீட்டிலேயே கல்யாணத்திற்கு கிளம்புபவர்கள் போல் பெரிய கொண்டை நிறைய பூ, எக்கச்சக்கச் ஜரிகை போட்ட பட்டுப் புடவை, நெக்லஸ் இத்யாதிகளோடு சர்வலங்காரத்தோடு தான் காணப்படுவார்கள். ஒருவேளை பணக்கார ஆன்ட்டிகளின் யூனிஃபார்ம் அதுதானா? பங்களாவுக்குள் நுழைந்து யார் பார்த்தார்கள்?

நடிகர்களின் ஆதிக்கத்தையும் மீறி கேஎஸ்ஜி, ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா என்று டைரக்டர்களுக்காக என்று நல்ல படங்கள் வந்து கொண்டுதான் இருந்தன. கேவிஎம் மாமா, மெல்லிசை மன்னர் பிடியிலிருந்து மீண்டு இளையராஜா இசை என்ற புதுமை. அது வரை பின்னணி இசையென்றால் குதிரைக் குளம்பபொலி, சோக வயலின் டிஷ§யூம் டிஷ§யூம் சத்தம்தான் கேட்கும். பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை உணரச் செய்ததே இளையராஜாதான்! சினிமாவை டெக்னிகலாக அணுகுகின்ற அறிவுஜீவித்தனம் மெல்ல வெளிப்பட ஆரம்பித்த காலம்.

என்ன புதுமைகள் வந்தால் என்ன? தமிழில் 'கலைபடங்கள்' என்ற அமைப்புக்கே இடமில்லை. ஹிந்தியில், நம்ப பக்கத்து மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திராவிலிருந்து கூட 'கலைப்படங்கள்' வரும். தமிழ் ரசிகர்கள் 'கலையம்சத்தோடு' கூடிய கமர்ஷியல் படங்களை ஒத்துக் கொள்வார்களே தவிர இதையெல்லாம் சீந்த மாட்டர்கள். நாயகன் படத்திலே கூட "நிலா அது வானத்து மேலே" என்று குயிலி ஆட்டம் வேண்டும். ஸ்ரீதர், பாலச்சந்தர் கொஞ்சம் யோசித்து வித்தியாசமானப் படங்கள் தந்தாலும் தமிழ் பண்பாடு, தாலி சென்ட்டிமென்டை கை விட மாட்டார்கள். நெஞ்சத்தைத் தொட்ட பிரமாதமானப் படம்தான்! நல்ல ஆரோக்கியத்தோடு சமுதாயத்திற்கு செம தொண்டு செய்யும் டாக்டர். பழைய காதலி புற்று நோய் முற்றிய நிலையில் இருக்கும் கணவனுடன் டாக்டரிடம் சிகிச்சைக்காக வருகிறாள். கணவனே பெருந்தன்மையுடன் நான் இறந்தாலும் நீ நல்ல விதமாக வாழ வேண்டும் என்றாலும் " தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா? தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா" என்று உருக்கமாகப் பாடி டாக்டரையும் உணர்ச்சிகரமாகப் பேசி மிரட்டி, கடைசியில் சாகப் பிழைக்க இருந்த கணவன் உயிர் தப்ப நல்ல திடமாக இருந்த டாக்டர் இறந்து விடுவார்.என்ன அநியாயமான முடிவு? இன்றும் ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்த நல்ல படம்தான்.

பாலச்சந்தராவது பெண்கள், தாலி என்ற சென்டிமென்டை மாற்றுவாரா என்று பார்த்தால் தன்னைக் கெடுத்தவனையே திருமணம் செய்து கொள்ளும் 'புதுமைப்பெண்'
கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டு தாலி கட்டினாலும் பைத்தியம் பிடித்து அலையும் கதாநாயகி, (சிவகுமார் உங்களுக்கு நல்லபடியாக வாழ வழியே இல்லையா?) சாடிஸ்ட் கணவனை வெறுத்து தாலியை கழட்டி கோவில் உண்டியலில் போட்டதும் கணவனுக்கு கண்ணில் அடிபட்டு விடும். சிந்துபாத் கழுத்தில் தொங்கும் சின்ன லைலா மாதிரி கணவன் உயிர் மனைவியின் தாலியில் தொங்கிக் கொண்டிருக்கிறதா என்ன?

இந்த ஊர் சீனப் பையன்களுக்குக் கூட தாலியின் தாத்பர்யம், வித விதமான தாலி வகைகள் முதற் கொண்டு ஐய்யர் தாலி, ஐய்யங்கார் தாலி, செட்டியார் தாலி, முஸ்லிம், கிறிஸ்துவர்கள், மற்றும் 'சீர் திருத்த' தாலி கூடத் தெரியும்.இவ்வளவையும் தெரிந்து கொண்டு "வேர் இஸ் யுவர் வெட்டிங் ரிங்?" என்று வேறு இன்னும் விசாரிப்பார்கள். ஆனா நம்ப ஊர் 'சின்னத் தம்பிக்கு' மட்டும் தாலி என்றால் என்னவென்றே தெரியாமல் தாலி கட்டி திருமணம் செய்து கொள்வார். நாமும் அதை சூப்பர் ஹிட்டாக்கி விடுவோம்.

தாலியே கட்டாமல் குழந்தையைக் கொடுத்து விட்டு ஓடிப்போன காதலன் இறந்தவுடன் பொட்டழித்து விதவைக்கோலம் பூணும் எம்ஆர்பி உங்களுக்காகக் காத்திருக்கும் அழகான இளமையான எலிஜிபில் பேச்சுலர் ஆசையில் மண் அள்ளிப் போட எப்படி மனசு வந்தது? பெண்கள் பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கும் கணவனுக்கு தாலி கட்டி விடும் பொஸசிவ் மனைவி என்று குறும்புகள்!

குடும்பப் பட டைரக்டர் கேஎஸ்ஜி கேட்கவே வேண்டாம். இரண்டு நல்லவர்கள் மோதிக் கொண்டு ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பந்தாடுவார்கள். திருமண வாழ்க்கையில் பிரச்னை என்று கணவனே மனைவிக்கு வேறு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் புதுமை என்று பார்த்தால் மனைவி கணவன் காலில் விழுந்து உயிரை விட்டு விடுவாள்.

'ஆயிரத்தில் ஒருத்தியாக' இருக்கும் குழந்தை உள்ளம் கொண்ட கதாநாயகியைப் புரிந்து கொண்டு கதாநாயகன் வாழ்க்கைதர முன் வந்தாலும் கெட்ட பெயர் வந்து விட்டதே
என்று உயிரை விடும் கதாநாயகி! எத்தனை பாரதி, பாரதிதாசன், பெரியார் வந்தால் என்ன? பெண்களை இப்படி சென்ட்மென்டால் மூளைச் சலவை செய்வதில் தமிழ் சினிமாவின் பங்கு என்று பெரிய ஆய்வு நடத்தி படம் பெறலாம். இப்போது பரவாயில்லை!
தலைகாணிக்கடியில் கழற்றி வைத்த தாலியை தேடி "அலைபாயும்" கதாநாயகி! தாலியை கண்ணாடியில் தொங்க விட்டு விட்டு மனைவியை சீண்டி சிரிக்கும் கணவன்! தமிழ் சினிமா முன்னேறி விட்டது.

சினிமா பார்ப்பதிலும் சினிமாவைப் பற்றி பேசுவதிலும் ஏகப்பட்ட தடைகள், கெடுபிடிகள் இருந்தன. சினிமாவே பார்க்கமாட்டோம் என்று அலட்டிக் கொள்ளும் சமத்துப் பெண்கள், நல்ல படங்கள் மட்டும் செலக்ட் பண்ணிப் பார்க்கும் 'அறிவு ஜீவிகள்', சான்ஸ் கிடைத்தால் எந்த திரைப்படத்தை வேண்டுமானாலும் பார்க்கும் சந்தர்ப்பவாதிகள், அம்மா அப்பாவோடு தேவரின் தெய்வம், துணைவன் போன்ற படங்கள் பார்க்கும் 'பக்திமான்கள்'. இப்படி நிறைய வகையினர் இருந்தாலும் சினிமா என்ற மாய வார்த்தை எல்லோரையும் மயக்கிக் கொண்டுதான் இருந்தது. சினிமாவே பார்க்காத பெண்கள் கூட கதை கேட்கிறேன் என்று ஒரே சினிமா கதையை மூன்று பேரிடம் கேட்டு திருப்தி அடைவார்கள்.

தமிழ் சினிமா என்ன பெயரில் வந்தால் என்ன? எல்லாம் கிட்டத்தட்ட ஒரே ஃபார்முலா தான்! சமூகப் படம் என்றால் திருமணம் முடிந்து முதலிரவு அறையில் நுழைந்ததும் கிருஷ்ணராஜா சாகரில் டூயட் பாடுவார்கள். பக்தி படம் என்றால் முதலிரவில் 'நம் திருமணம் முடிந்ததும் பழனிக்கு நடந்தே வந்து உங்களுக்கு மொட்டையடித்து நம் முதல் குழைந்தைக்கு முருகன் திருநாமம் வைத்து வணங்க வேண்டும் அத்தான்" என்று பக்தி பரவசத்தோடு டூயட் பாடுவார்கள். கற்பழிப்பு காட்சி என்றால் காப்பாற்றுவதற்கு எங்கிருந்தோ அருவியில் குதித்து கயிற்றில் தொங்கி கடைசி நிமிஷத்தில் கதாநாயகியின் கற்பை கதாநாயகன் காப்பாற்றி விடுவான். பக்தி படமென்றால் முருகா முருகா என்ற அலறல் சத்தம் கேட்டு மயில் பறந்து வந்து வில்லனை குத்திக் குதறும். வழக்கம் போல் கவர்ச்சி நடனம்! கிளப்பில் கேபரே நடனம். இல்லை தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி நடனம், நாட்டுப்புற கலைகளான குறத்தி நடனம், மயிலாட்டம், கரகாட்டம் என்று கவர்ச்சி வழிய ஆட்டம்!

பெண் குழந்தைகளை கன்னாபின்னா படங்கள் பார்த்து மனசு கெட்டுப் போய்விடாமல்
பாதுகாத்து பக்தி படங்கள் மட்டும் பார்க்க அனுமதிக்கும் அப்பா அம்மாக்களுக்கு இந்த சூட்சுமம் புரிந்ததில்லை. பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அந்த வயதில் தெரிய வேண்டிய விஷயங்களைத் தெரிந்து கொண்டுதான் வளர்கிறார்கள் என்பது புரியாமலா இருக்கும்?
அப்பா அம்மாவுக்கு பதினாறு வயது வரவில்லையா? எத்தனை அபத்தங்களோடும் முரண்பாடுகளோடும் திரைப்படம் வந்தாலும் மூன்று மணி நேர மாய பிம்பம் பிரமிப்பைத்
தந்தது. சந்தோஷத்தைத் தந்தது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உண்மை வாழ்க்கை இதை விட அபத்தங்களும் முரண்பாடுகளையும் கொண்டதுதானே?
கனவுக் கதாநாயகன் யார் என்று சொல்லவே இல்லையா? போனால் போகிறது என்று ஒரே ஒருவருக்கு பாஸ்மார்க் கொடுத்திருந்தோம். மீண்டும் நன்றாகப் படித்துப் பாருங்கள்! கண்டு பிடித்து விடலாம்!

kjramesh@pacific.net.sg