eppoothum pen

எப்போதும் பெண்கள்
நம் ஊடகங்கள் மூலமாக பெண்கள் சித்தரிக்கபடும் விதத்திலிருந்து ஆண்கள் மனதில் பெண்கள் பற்றிய பிம்பங்கள் உண்மையான பெண்மையின் வெளிபாடுகளாகாது. கதைகள், காப்பியங்கள், பாடல்கள், கவிதைகள், திரைப்படங்கள் தொலைகாட்சித் தொடர்கள் இப்படி எத்தனை ஊடகங்கள் இருந்தாலும் இவை அனைத்துமே கனவுலகப் பதுமைகளாக மட்டுமே பெண்களைச் சித்தரிக்கின்றன. எழுதுபவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். பெண் கவிதாயினிகள் சிலர் பெண்மையின் வலிகளை உண்மையாக வெளிப்படுத்த முயலும் போது அவர்கள் எழுத்தின் மூலம் இன்னும் அதிகமாக காயப்படுகின்றனர். தாய்மை, கற்பு, ஒழுக்கம், குடும்பத்துக் குலவிளக்கு என்று அதிகப்படியான போற்றுதல், தேவையற்ற ஆடைக்குறைப்பு, ஆபாச வசனங்கள் மூலம் அதிகப்படியான இழிவுகள் இவை இரண்டைத் தவிர இயல்பான பெண்களைக் காணவே முடிவதில்லை. தமிழ் நாட்டில் மிகப் புகழ் பெற்றப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். அநேகக் கதைகளில் வலுக்கட்டாயமாக திருமண உறவிலோ திருமணத்திற்கு முன்பே குடும்பச்சூழலால் ஒருவனால் கெடுக்கபட்டு கர்ப்பமடைந்து விடுவாள். அவனை சரியான அயோக்கியன் என்று வெறுத்து ஒதுக்குவாள். இது வரை அட பரவாயில்லையே என்று யோசிக்க வைக்கும் திருப்பம்தான்! இதற்கு மேல்தான் தொடரும் கேலிக்கூத்து!அயோக்கியன் என்று வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்தக் காமுகனை உற்றுப் பார்க்க பார்க்க அவளுள் மலராத பெண்மை மலரும். உயரமாக பெண்களில் பாதிப் பேருக்கு மேல் பிடித்த நிறமாக(!) ராஜகுமாரனாகக் காட்சியளிப்பான். அதுவும் நல்ல பணக்காரனாக வேறு இருந்து விடுவான். பெரிய பங்களா, கார், பணம், அந்தஸ்து எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் அவனை வெறுப்பதற்கு கதாநாயகிக்கு ஒரு காரணமும் இல்லை. ஆனாலும் வெறுப்பதைப் போல் நடிப்பாள். ஒரு நாள் உறவில் குழந்தை உருவாகி அவன் கண்ணம்மா கண்ணம்மா என்று உருகி வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்து எப்பாடியோ இருவரும் இணைந்து விடுவார்கள். இணையும் போது எப்படி இருவரும் சூழ்நிலைக் கைதியாகி ஒருவரை ஒருவர் வெறுப்பதைப் போல் நடித்தார்கள் என்று கடைசி அத்தியாயத்தில் பேசிக் கொள்வார்கள். எல்லாப் பெண்களுக்கும் தாங்கள் குத்து விளக்கைப் போல் பிரகாசிக்கும் அழகிகள் என்ற தீவிரமான நம்பிக்கையும் தன்னிடம் மயங்கி வருபவனிடம் அவர்கள் எதிர்பார்க்கும் பொய்க்கற்பனைகள் இதை பயன்படுத்தி பெண்களை ஒரு அபத்த நிலைக்கு கொண்டுபோகும் பரிதாபம். மின்மினிப் பூச்சி,பளபளக்கும் நியான் பல்பு மற்றும் கலர் பல்பெல்லாம் இதே கதையில் வரும் பிரமாதமான இன்னொரு அழகிக்கு வரும் வர்ணனைகள். ஆனால் அந்தப் பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். இன்னொரு பெண்ணையே பயன்படுத்தி பெண் வாசகிகளை இன்னும் முட்டாளாக்கும் யுக்தி! ஆண்கள் அழகானப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காததற்கு இரண்டு காரணங்கள் மட்டும் தான். முதல் காரணம் அவ்வளவு அழகானப் பெண்ணின் பக்கத்தில் போய் நிற்க முடியுமா என்ற பயம். இன்னொன்று விஷயம் வீட்டம்மா வரை போய் அமைதியான குடும்பவாழ்க்கையில் எதற்கு தேவையில்லாமல் சலசலப்பு என்ற ஜாக்கிரதை உணர்ச்சி! மற்றபடி கற்பு சமாச்சாரத்தைப் போற்றிப் பாதுகாக்கத்தான் உங்களுக்கு இணையாக வேறு ஒரு உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கிறதே! இன்னும் மற்ற பெண் எழுத்தாளர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கஷ்டபட்டுக்கொண்டேயிருந்து கடைசியில் தன்னிடமிருந்து வேறொருத்தியின் மோகத்தினால் பிரிந்த கணவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு மாதர்குல மாணிக்கமாக ஒளிவிடுவாள். ஒரு தமிழ் சினிமா பார்த்து விட்டு கணவனிடம் “வேற பொம்பளைக்கிட்டப் போய் சீரழிஞ்சு கடைசிலே பெண்டாட்டிக்கிட்ட வந்து சேருகிறான்” என்று சொல்லும் மனைவியிடம் “அதுதான் அவனுக்குக் கிடைத்த தண்டனையா?” என்றுக் கேட்டக் கணவன் நினைவிற்கு வருகிறது. (இந்திரா பார்த்தசாரதிக் கதையில்)
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் விழாவில் சில பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் எழுத்திலிருந்து சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிங்கப்பூர் எழுத்தாளர் ஒருவர் தன் எழுத்தைப் பற்றிப் பேசும் போது தான் மனிதர்களை வைத்துக் கதை எழுதுவதே இல்லை எப்போதும் மிருகங்களை வைத்துத்தான் கதை எழுதுவதாகச் சொன்னார். சரிதான் ஏதோ புதுமையாக இருக்க்¢றதே என்று அவர் சொன்ன கதையைக் கேட்டால் ரத்தக் கொதிப்பு எகிறி விட்டது. சொன்ன கதையின் சாராம்சம் இதுதான்! இரண்டு நாய்கள் பெரிய பங்களாவில் வளர்கிறது. இரண்டும் சகோதரிகள்! அதில் தங்கை நாய்க்கு எப்போதும் வெளியில் போக வேண்டும் கெட்டழிய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருந்தது. அக்கா நாய் அப்படியெல்லாம் போகக்கூடாது என்று புத்திமதி சொல்லும். ஆனால் தங்கச்சியோ சொன்னதைக் கேட்காமல் வெளியில் போய் கண்டபடி திரிந்து விட்டு கடைசியில் உடம்பெல்லாம் சொறி பிடித்து வீடு திரும்புகிறது. அக்கா நாயோ கற்போடு வாழ்ந்ததால் சீரும் சிறப்பாக இருந்தது. ஆகையால் பெண்கள் எப்போதும் கற்போடும் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும். கெட்டழிந்தால் இப்படிப்பட்ட இன்னல்களைத்தான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி முடித்ததும் அங்கேயிருந்த பெண்கள் ஒருவர் முகத்தில் கூட ஈயாடவில்லை. யாரும் வாயேத் திறக்கவில்லை. கேள்வி கேட்ட என்னையும் அவருடன் யாரும் பேச முடியாது என்று வாயைத் தைத்து விட்டார்கள்.பாழாய்ப்போன நாய் வாழ்க்கையிலுமா கற்பு, ஒழுக்கம் போன்ற வட்டங்கள் வெளியில் சென்றால் சொறி பிடித்து வாழ்க்கையே வீணாகி விடும் போன்ற’ ரத்தக் கண்ணீர் தீர்ப்பு! பெண்களில் பாதிப் பேருக்கு மேல் நடப்பது அநியாயம் என்று தெரிந்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போகும் மனோபாவத்தை தேவையில்லாமல் வளர்த்துக் கொள்கிறார்கள். இப்படிப் பேசியதால் நீ என்ன சாதித்தாய் என்று எதிர்க்கேள்வி! அடுத்த முறை இதைப் போன்ற ஒரு வாய்ப்பு வரும்போது அந்த எழுத்தாளர் குறைந்த பட்சம் இதைப் போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுக்கவாவது தயங்குவார் இல்லையா?
கேள்வி கேட்கும் பெண்களைப் பற்றி எப்போதுமே ஒரு எதிர்மறையான சிந்தனை! உனக்கு ஏன் இதைப் பற்றிப் பேசினால் கோபம் வருகிறது? பொதுவாக நமக்குத் தவறு என்று தோன்றும் ஒரு விஷயம், நம் மனதை நெருடும் ஒரு செயல், கண் முன்னால் நடக்கும் அவமானங்கள் இவற்றை சகித்துக் கொண்டுச் சென்றால் அவள் ரொம்ப நல்ல பெண்! பொறுமைசாலி! எதிர்த்து நின்றால் இவங்களுக்கு ஏங்க கோபம் வருது? இவங்களும் அப்படித்தானோ? சமீபத்தில் தங்கர் பச்சான் நடிகைகளைப் பற்றித் தவறாகப் பேசிப் பெரிய பிரச்சனையாகி விட்டது. உண்மையாகவே திரைப்படத்துறையில் இருப்பவரும் சரி அல்லது வெளியில் இருந்து பார்ப்பவரும் சரி தங்களுடன் நடிக்கும் நடிகை மேல் எப்படிப்பட்ட மரியாதை வைத்திருக்கிறனர் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே! தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வார்கள். முதல் தாராமாகத் திருமணம் செய்து கொண்டால் இனிமேல் என் மனைவி நடிக்க மாட்டாள் என்று பேட்டியளிப்பார்கள். மிஞ்சிப் போய் காதல், புரட்சி ‘சேர்ந்து வாழ்தல்’ என்று பேசியவர்கள் கூட பிரிந்து விவாகரத்து வரைக்கும் போய் விட்டது. திரைப்படத்துறை ஒரு கவர்ச்சி மிக்கத்துறை. அங்கே இப்படி ஏடாகூடமாக சங்கதிகள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. மற்ற துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் இதைப் போன்ற துக்கங்கள் தொடர்கின்றன. பெண் முதலாளிகள் என்றால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக ஆண்கள். எப்போதும் எடுக்கப்படும் கடைசி ஆயுதமாக பெண்ணின் நடத்தையைப் பற்றி விமர்சனங்கள்! அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படும் பத்திரிகைத் துறையிலிருந்து பாடம் சொல்லிக்கொடுக்கப்படும் ஆசிரியர் பணி வரை பெண் என்பவளை பெண்ணாக மட்டுமே ஒரு ஆண் பார்க்கிறான். ஆனால் பெண்களோ ஆண்களை சக மனிதனாக பார்க்கிறார்கள். இறுதியாக ஒரு குட்டிக் கதை! கடவுள் உலகத்தை சிருஷ்டிக்கத் தீர்மானித்து பிரமாதமாகத் திட்டம் தீட்டி ஒவ்வொரு உயிரினமாக படைக்கிறார். மீன்கள், பறவைகள், பூச்சிகள், மிருகங்கள் என்று பலவிதமான உயிரினங்கள். பலவிதமான தாவரங்கள். இவையெல்லாம் கடவுள் படைத்த படி வாழ்ந்து உண்டு இனப்பெருக்கம் செய்து மடிந்து போயின. கடவுளுக்கு கொஞ்சம் போரடித்து விட்டது. இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகளோடு ஒரு உயிரினத்தை உருவாக்கலாமே என்று மனிதனை உருவாக்கினார். மனிதன் மற்ற மிருகங்கள் போலவே காட்டில் திரிந்து உணவு தேடி அலைந்து எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தான். கடவுளுக்கு இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது. ஒரு பெண்ணை உருவாக்கினார். அவளை கொண்டு போய் மனிதனிடம் கொடுத்து இவளை உருவாக்கியதே உனக்காகத்தான்! இவளால் உனக்குச் கொஞ்சம் தொந்தரவுகள் இருந்தாலும் உனக்குத் துணையாக இருப்பாள் என்று சொன்னார். மனிதனும் சரிதான் ஏதோ தனக்குத் துணையாக இருப்பாள் என்று நம்பி அவளுடன் வாழ ஆரம்பித்தான். பெண் எப்போது பார்த்தாலும் தொணதொணவென்று பேசிகொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள். இவனிடம் எனக்குத்தான் அந்த உயரமான மரங்களில் ஏற்த் தெரியாதே நீதான் ஏறி எனக்கும் சேர்த்து பறித்துக் கொண்டு வாயேன், அந்த பட்டாம் பூச்சி இறக்கைகள் போல் ஏதாவது பூவைப் பார்த்து எனக்குத் தா, என்னால் வெட்ட வெளியில் படுக்க முடியாது ஏதாவது நல்ல குகையைக் கண்டு பிடி என்று ஏதோ ஏவல்கள் சொல்லிக் கொண்டேயிருந்தாள். இவன் அவள் பக்கத்தில் போய் நின்றால் உடனே நல்ல தண்ணீரில் குளிக்கக் கூடாதா?என்பாள். கூடிக் குலாவ முயன்றால் மிருகத்தைப் போல் உன் முகமெல்லாம் ஏன் இத்தனை தாடி மீசை என்று தள்ளிவிடுவாள். மனிதனும் பெண்ணை பலவழிகளில் திருப்திபடுத்த முயன்று கடைசியில் கடவுளிடமே போய் “ கடவுளே! என்னால் இவள் தொல்லைத் தாங்க முடியவில்லை. எனக்குத் துணையே வேண்டாம். நீங்களே இவளை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவளை கடவுளிடமே திருப்பிக் கொடுத்து விட்டு வந்து விட்டான். இனிமேல் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணினான். ஆனால் எங்கேயிருக்க முடிந்தது? மரமேறி பழம் பறித்தாலும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்தாலும் பேசிச் சிரித்த பெண் நினைவு வந்தது. இரவு நேரங்கள் கொடுமையாயின. பைத்தியகாரனைப் போல் அவளை மறக்க நினைத்து இன்னும் அதிகம் நினைத்தான். காடு, மரம், மலை, மேடு அருவி, நதி, நீர், புல் எல்லாவற்றிலும் அவள் தெரிந்தாள். திரும்பவும் கடவுளிடமே ஓடினான். “எனக்குத் தொந்தரவு, தொணதொணவென்றப் பேச்சு இவையெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் அவளில்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. அவளை என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்’, என்று கெஞ்சினான். கடவுள் சிரித்துக் கொண்டே “இனிமேல் நீ அவளிடம்தான் கேட்கவேண்டும்”, என்றார். பெண்ணுக்கு அப்போது ஆணவம், முசுட்டுத்தனம், முன்கோபம் என்று எல்லா துர்க்குணங்களையும் கொண்டிருந்த ஆண் என்ற எண்ணம் மறந்து அப்போது பைத்தியக்காரன் போல் தன்னிடம் கெஞ்சிகொண்டிருந்த ஆணைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அவனோடுக் கிளம்பினாள்.
கதையிலிருந்து நிறைய விஷயங்கள் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஆண்கள் கேட்டு வாங்கிய வரம் பெண்கள். பெண்ணுக்கு உரிமைத் தருகிறேன் என்று இந்தக் கடவுள் கூட அநியாயமாக அவளை இப்படி பரிதவிக்க விட்டாரே ! இவன் உனக்கு வேண்டாமம்மா! நீ சிரித்தால் கூட இவனுக்குப் பிடிப்பதில்லை. உன்னுடைய நியாயமான கோரிக்கைகளைக் கூட சந்தோஷமாக நிறைவேற்றுவதில்லை! உனக்கு இப்படிப்படத் துணை வேண்டாமென்று அந்தக் கடவுள் கூட பெண்ணை எச்சரிக்கவில்லையே!

8 மறுமொழிகள்:

At 10:22 PM, Anonymous Anonymous said...

///நீ சிரித்தால் கூட இவனுக்குப் பிடிப்பதில்லை. உன்னுடைய நியாயமான கோரிக்கைகளைக் கூட சந்தோஷமாக நிறைவேற்றுவதில்லை! உனக்கு இப்படிப்படத் துணை வேண்டாமென்று அந்தக் கடவுள் கூட பெண்ணை எச்சரிக்கவில்லையே!////

எப்படி எச்சரிப்பார்? "இவன் தலைவிதி இப்படியா ஆகவேண்டும்? பாழாய்ப்போனவன் இவ்வளவு பட்டும், இன்னும் புத்தி வராமல் திரும்பவும் அவளைத்தேடியே வருகிறானே?!" என்றல்லவா அப்போது அவர் யோசித்துக்கொண்டிருந்தார். :-)

குட்டிக்கதை, சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டது. ஆண்கள் எப்போதும் பாவம்! இதுதானே கதையின் நீதி?! :-)

நல்ல பதிவு.

கற்பகம் ஷங்கர்!

 

At 1:13 AM, Blogger தங்ஸ் said...

Nalla pathivu! Ramani Chandran kathai-ya neengal kuripittathu?

-Thangam

 

At 4:56 AM, Blogger துளசி கோபால் said...

வாங்க சித்ரா. வந்துட்டீங்களா? இன்னைக்குத்தான் ஒங்க ப்ளொக் பார்த்தேன். எப்படி இத்தனைநாள் விட்டுவச்சேன்னு புரியலை(-:

நல்லா இருக்கீங்களா?

நல்ல பதிவு.
இனிமே தவறாம உங்க பக்கம் விஸிட் தான்!
என்றும் அன்புடன்,
துளசி.

 

At 12:02 PM, Blogger பினாத்தல் சுரேஷ் said...

சிந்திக்க வைத்த பதிவு. மீண்டும் வருக.

கொஞ்சம் formatting-இலும் கவனம் செலுத்தினீர்கள் என்றால் படிப்பது சுலபமாக இருக்கும். paragraph, line spacing-போன்றவை.

 

At 8:35 PM, Blogger ooviyam said...

அன்பு மிக்க துளசி,
இத்தனை நாள் ஏன் எழுதவில்லை என்று கேட்கக் கூடாத கேள்வியெல்லாம் கேட்காதீங்க! நிறைய எழுத வேண்டும் என்று மனம் நினைக்கும் அளவிற்கு நேரமும் உடலும் ஒத்துழைக்க மாட்டென் என்கிறது. சும்மா சோம்பேறித்தனத்தைதான் இப்படி கவிதையாகக் கூறினேன். டிசெம்பெர் விடுமுறையில் newzealand வரலாமென்றிருக்கிறேன். ப்ரொகிராம் முடிவானதும் உங்களுக்கு விரிவாக கடிதம் எழுதுகிறேன். ஆனால் வருவது நிச்சயம்
அன்புடன் சித்ரா

 

At 8:39 PM, Blogger ooviyam said...

இனிய தோழி தங்கத்திற்கு,
எழுத்தாளர் பெயரெல்லாம் எதற்கு? அவங்களைப் போலவே அவங்க வழித் தோன்றல்களெல்லாம் இருக்காங்க! நிறைய பெண்கள் இப்படித்தான் எழுத வேண்டும் என்று வட்டம் போட்டுக் கொண்டு எழுதுவதாகத் தோன்றியதால் அப்படி எழுதினேன்.
அன்புடன் சித்ரா

 

At 8:43 PM, Blogger ooviyam said...

இனிய நண்பர் சுரெஷ¤க்கு,
தங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி. இந்த முறை கொஞ்சம் முன்னேறியிருக்கிறேன் என்று சொல்லலாமா? கடித்ததுடன் முகம் வருவது நன்றாக இருக்கிறது.வழக்கமாக புகைப்படமாக வந்து பார்த்திருக்கிறேன். இது எப்படி?
அன்புடன் சித்ரா

 

At 8:47 PM, Blogger ooviyam said...

கற்பகம் சங்கருக்கு,
ஆணா பெண்ணா என்று தெரியாமல் எப்படி பதில் சொல்வது? இருந்தாலும் பதிலைப் படிக்கும் போது ஆணாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். “கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும். பிரிவென்னும் கடலிலே மூழ்க வேண்டும். பெண்ணென்றால் என்ன என்று உணர வேண்டும்”
அன்புடன் சித்ரா

 

Post a Comment

<< முகப்பு