ஒரு 'பொன் விழா' கொண்டாட்டம்

சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர்

சென்ற வாரம் என் கணினியின் மென் பொருள், வன் பொருள் எல்லாம் விபத்துக்குள்ளாகி குற்றுயிரும் கொலையுயிருமாகக் 'கோமா' நிலையில் கிடந்தது. நல்ல வேளை 'ஜீனோ' போல் மீண்டும் உயிர் பிழைத்தது. ஆனால் பழைய ஞாபகங்கள் எல்லாவற்றையும் இழந்த அம்னீஷியா நோயாளியாக! இந்த குழப்பத்தில் தமிழில் இணைமதி மூலம் தட்டச்சு செய்ய அது டிஎஸ்சி இணைமதியாக சேமிக்கப் பட்டு தமிழ் எழுத்துக்கள் மாறி நான் எழுதிய நகைச்சுவை 'comedy of errors' ஆகி விட்டது. இதையும் மீறி அதைப் படித்துப் புரிந்து கொண்டவர்களின் கணினிக்கு எந்த விபத்தும் நேராமல் தூக்கில் தொங்காமல் 'மென்பொருள் முனீஸ்வரர்', 'கணினி கணபதி' காப்பாற்றட்டும்.

உங்களுக்கு 'பொன் விழா' கொண்டாட இங்கே சில எழுத்துக்களை கொடுத்திருக்கிறேன். இவை எந்த கதையிலிருந்தும் திருடப்பட்டவை அல்ல. என் சொந்த எழுத்து. நடை மட்டும் வாசகர்களால் பெரிதும் வாசிக்கப் படுகின்ற எழுத்தாளர்களின் நடை. இதை வைத்து எந்த எழுத்தாளர் என்று கண்டு பிடித்து விட்டால் நீங்கள் உண்மையிலேயே ஐம்பது வருடங்களாக விடாமல் வாசித்து வரும் தீவிரமான வாசகர்தான்! உங்கள் வாசிப்புக்கும் 'ரசனைக்கும்' ஒரு 'பொன்விழா' கொண்டாடிக்கொள்ளுங்கள்.


1. 'சூமோவைப்' பற்றி சொல்வதற்குள் மற்ற நால்வருக்கும் நாலு பாரா. இஷ்டமில்லாதவர்கள் இதை படிக்காவிட்டால் ஒன்றும் பாதகமில்லை. ஆனால் பின்னாளில் நிகழ இருக்கும் வன்முறையின் உக்கிரம் உணர்ந்து கொள்ள எளிதானது இந்த அறிமுகம். கருப்பன்தான் இந்தக் கூட்டத்தில் சீனியர். தெருக்கோடியில் இருக்கும் குப்பைத் தொட்டியில்தான் கொட்டிக் கொள்வான். மற்ற நாய்கள் செல்லமாக 'மாமா' என்றுதான் கூப்பிடும். 'ஜீல்ஸ்' என்று அழைக்கப்படும் சிவா சற்று உயர்ந்த ஜாதி. அதற்குரிய கர்வத்துடன் சமயத்துக்கு தகுந்த படி காரிலோ ஸ்கூட்டரிலோ வெளியில் போய் விட்டு வரும். 'கருக் முருக் என்று ஏதாவது சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும்....
(இந்த எழுத்தை ரசிக்காதவர் யார்?)


2. பதினாறு வயதுப் பெண்ணாக வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டாள்.
"இதென்ன பாஷாண்டியாட்டமா வேஷம்?" என்று செல்லமாகக் கேட்டுக் கொண்டே

"அப்ப கிளம்பியாறதாக்கும்"

"ஐயாவுக்கு எளுபது எம்பளது வருஷப் பளக்கமாச்சே! கிளம்பாம எங்க போறது?" எதிர்க் கேள்வி எழுந்தது.

ராஜாமணி பதில் சொல்லவில்லை. மாம்பழக் கதுப்பாகக் கன்ன சரிவில், புருவ மத்தியில், மூக்கின் வீச்சில் வைரமாக மினுமினுத்த வேர்வை கசகசப்பில் சௌந்தர்யம் சொட்டியது. இதென்ன மோகினியாட்டம் ஒரு ஜிலுஜிலுப்பு. சிரித்துக் கொண்டே எழுந்து நின்றாள். சராசரிக்கு மிஞ்சின உயரம். உலகத்தையே ஆட்டி படைக்கும் சக்தி சிரிக்கும் சிரிப்பு. இப்படி புத்திக்குத் தெரியாத சூட்சுமமாக அவளை தேவி உபாசனை செய்வது அவளுக்குத் தெரியுமா? பாதத் தாமரைகளை பூஜிப்பது புரியுமா?
எதுவும் தெரியாத சாதாரணப் பெண்ணாக அவதாரம் எடுப்பதும் அவள் விளையாட்டுக்களில் ஒன்றா? ராஜாமணி முதுகுத் தண்டில் ஜிலீரென்று நடு முதுகிலிருந்து உச்சந்தலைவரை ஓடியது.
(உண்மையாகவே பெண்களை இப்படி ஆராதிப்பவரா?)


3. 'ட்ரூவ்' 'ட்ரூவ்' என்ற சத்தம் கேட்டதும் என்னவென்று பார்க்க ஓடினாள். வழக்கமாக வரும் வாலில்லாக் குருவிதான். அதற்கு எப்படி வால் போயிருக்க முடியும் என்று யோசித்தாள். காதலியை கவரும் முயற்சியில் இரண்டு குருவிகள் சண்டை போட்டு போயிருக்குமோ இல்லை கதவடியில் சிக்கிக் கொண்டு வால் மட்டும் அறுந்து போயிருக்குமோ? யோசித்துப் பார்த்தால் ரொம்ப குரூரமாகப் பட்டது. இப்படி யோசித்துக் கொண்டேயிருந்தால் ரொம்ப சீக்கிரம் பைத்தியம் பிடித்து விடும் என்று ஸ்ரீராம் செல்லமாக மிரட்டுவது ஞாபகம் வர 'ப்ரிஜ்ஜை' திறந்தாள். அம்ஷிதாவும் அம்ரித்தும் இதோ "மம்மி வேர் இஸ் மை ஸ்நாக்ஸ்" என்று கேட்டுக் கோண்டே வந்து விடுவார்கள். உள்ளே என்ன இருக்கு என்று ஆராய்ந்தாள். எலி கடித்து மீந்த 'சீஸ்' துண்டு ஒன்று இருந்தது. காலையில் செய்த உப்புமாவில் இருந்து பொறுக்கி வைத்த கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஒரு கப்பில் கிடந்தது. மஞ்ச பூசணி ஒரு துண்டு. சரி சமாளித்து விடலாம் என்று பிரெட்டை எடுத்து பூசணியை சின்ன துண்டங்களாக வெட்டி நடுவில் வைத்து மேலே சீஸ் பச்சை மிளகாய் கறிவேப்பிலை வைத்து அலங்கரித்தாள். (உவ்வே...). இதில் மீந்தால் ஸ்ரீராம் கூட சாப்பிட்டு
விடுவார் என்று புன்னகைத்துக் கொண்டாள்.
(இவங்க 'விழிப்புணர்வும்' சமையல் குறிப்பும்தான் ஸ்பெஷாலிட்டி)


4. செய்வது அறியாது நின்றவளின் தோளைத் தட்டி "அங்கே பேசியது போல் என்னிடமும் பேச வேண்டாம். இனிமேல் விளையாட்டுக்கூட அவள் பெயரை நீ சொல்வதை என்னால் அனுமதிக்க முடியாது". என்று கூறிய வர்த்தனின் முகத்தைப் பார்த்தாள். பிடிவாதத்துடன் மூடிக்கொண்ட மோவாய், அகன்ற மூக்கு, மேட்டு நெற்றி, மேலும் அந்த பிடிவாதக் கண்கள்.... எல்லாம் சரியாகத்தான் இருந்திருக்கும் என்று பெருமூச்சு விட்டாள். "இதை என் மனைவிக்கு என்றுதான் வாங்கினேன்" என்று நமட்டுச் சிரிப்போடு மேலும் தொடர்ந்த துணைவனை வெறித்து நோக்கினாள். தயக்கத்துடன் பார்த்த பார்வையை தவிர்த்து உள்ளூர வலியுடன் "ம்! இதென்ன விளையாட்டு கண்மணி!" என்று இறுக அணைத்தான்.
(தமிழ் நாட்டின் பெஸ்ட் செல்லர். நூறு நாவல் எழுதி இலக்கிய சேவை செய்தவர்.)


5. கழூவூர் இளைய இளவரசி மேதினியைப் பற்றி தளபதி வானவூரான் கூறியவை நினைவுக்கு வந்ததும் அவ்விதம் அந்த வீர தளபதியின் உள்ளத்தை கொள்ளை கொண்டு அவனை பித்து அலைய வைத்த மோகினி எப்படியிருப்பாள் என்று பார்க்கும் ஆவல் அவள் உள்ளத்தின் அடிவாரத்து மூலையில் எழுந்தது. அந்த விருப்பம் விரைவில் வளர்ந்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கினாலும் ஒரு வேளை அவளை பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற விசனமும் உண்டாயிற்று. இத்தகைய மனோபாவம்
நீடித்திருக்கவில்லை. வாசலில் ஆஜானுபாகுவான வீராதி வீரர் கிழ நாகவரையர் நின்று கொண்டிருந்தார். எத்தனையோ இளம் பிராயத்து வாலிபர்களைக் காட்டிலும் புருஷ சிங்கமாக காட்சியளிக்கும் அவரை கிழவர் என்று சொல்வது தவறுதான்.
(எத்தனை முறை ரிலீஸ் ஆனாலும் யாரும் அலுத்துக் கொள்ள முடியவில்லை. தியேட்டர் அவர் சொந்த தியேட்டர்)


6. ஆட்டோ கிறீச்சிட்டு பிரேக் போட்டு நின்றது. கால்களை அகல விரித்துக் கொண்டு அசப்பில் விவேகானந்தரை நினைவுப் படுத்தும் தோற்றத்தில் நின்றான். வரலெட்சுமிக்கு மனதில் மணி அடித்தது. தியானம் செய்து செய்து வலுவடைந்த புஜங்கள். மௌ¢ள ஒவ்வொரு அடியாக எடுத்து முன்னேறி வருவதைப் பார்த்தாள். ஒவ்வொரு அசைவிலும் உறுதி தெரிந்தது. கடவுளே என்று பெருமூச்செறிந்தாள். "பாத்து பாத்து, தண்ணி வழுக்கிடும்" என்று பதட்டத்துடன் கூவினாள். அதுதான் தவறாயிற்று. மடாரென்று மயங்கி விழுந்தான். எங்கோ மளுக்கென்று சத்தம் கேட்டது. எலும்பு முறிவு என்பது புரிந்து விட்டது. வலியில் உயிர் போய்விடும் போலிருந்தது.
இது மாதிரி மடத்தனமான பெண்களை அவனுக்கு பிடிக்காது. அவன் அம்மாவும் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் பதட்டம், கூவல். பிறகு தங்கையும். இப்போது இவள். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைப் பார்த்ததும் அவள் மடத்தனத்தை விட அவளது அழகே தெரிகிறது. சிரத்தையாக அவள் செய்யும் அலங்காரம் புரிகிறது. அலட்டலான பேச்சு விரும்பப்படுகிறது.
(எல்லாம் ஒரே கனவு இல்லை சித்து வேலை தான்)


7. மான் விழியின் காந்தள் மலரொத்த கைகளை தன் இரும்பு கைகளால் கைப்பிடித்த மாத்திரத்தில் காந்தம் இரும்பை இழுக்கும் என்ற உண்மையை வேதாந்தியான அவன் அப்போது உணர அவன் கை மோதிரங்கள் நகைத்தன. அந்நாள் வரை எந்த கையும் படாததினால் விழிகளில் பொங்கிய 'தீ' உடலிலும் பரவி உணர்ச்சிகளின் உள்ளே சென்று விட்ட நிலையை உருவாக்கவே அவள் நளின உடல் சற்று நடுங்கியது. திடீரென்று பரவிய குங்கும ஒளி அவள் நீள் விழிகளிலும் பரவி அதைக் குருதியா கோபமா என்று சந்தேகப் படவைத்தது. "பெண்ணிடம் சிறைப்படுவது கேவலம் ஜடாதரரே", என்று அவள் முணுமுணுத்து பெருமூச்செறிந்தாள்.
(இவரைத் தெரியாது!!!)


8. இரவு பெய்த மழையின் காரணமாக இரவுச் சூரியன் சோம்பல் பட்டுக்கொண்டு வெளியே வராமல் இருந்தது. மரங்கள் சிணுங்கி சிணுங்கி கொட்டாவியுடன் தூக்கத்தை முடித்துக்கொண்டது. மேகத்திரைச் சீலையை விலக்கிக்கொண்டு முக்காடு நழுவாத முகமதியப் பெண்ணாய் முழுச் சூரியன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. வாசல் தௌ¤க்க அங்கம்மா பிளாஸ்டிக் வாளி கோல மாவு சகிதம் கதவைத் திறந்தாள். ஒரு கிரீச்சிடலுடன் திறந்து கொண்டது. தலையை விரித்து போட்ட படி முதுகைக் காட்டியவாறே நின்று கொண்டிருந்தாள் லல்லி. பனியன் முதுகில் PTO என்று எழுதப்பட்டிருந்தது. திரும்பினாள். அலறப்போன அங்கம்மாவை " ஏய்! என்ன வீட்டில பொம்பளைங்க இல்லேனா இவ்வளவு லேட்டாவா வாசல் தௌ¤க்கிறது", என்று மிரட்டியவாறே "எங்கே அந்த கௌசிக்", என்று கேட்டுக்கொண்டே புயலென நுழைந்தாள்.
(பனியன் வாசகம் பார்த்ததும் வாசகர்கள் உஷாராகி விடுவார்கள்)


9. பூஜையறை பூக்களின் வாசத்தால் நிரம்பியிருந்தது. சாமி படங்களுக்கு குங்குமம் இட்டு பூச்சரங்கள் போட்டு பூஜையை முடித்தார் ராஜரத்தினம். பக்கத்தில் அவர் மனைவி சௌந்தரி. பெயருக்கேற்றபடி காலையிலேயே குளித்து முடித்து கொண்டையிட்டு பட்டும் வைரமும் பளபளக்க நின்று கொண்டிருந்தாள்.

" ஏங்க", என்று கூப்பிட்டாள். பிறகு அவளே, "ராத்திரி நீங்களும் கல்யாணும் வர்றதுக்கு நேரமாயிடுச்சே!", என்றாள்.

"ம்! கல்யாண் இன்னும் எந்திரிக்கலையா"

"தூங்கட்டுமேங்க! நீங்கதான் சீக்கிரம் எழுந்திரிச்சி சாமி கும்பிட்டாச்சே".

பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தவரின் முகம் மாறியது. நற நறவென்று பல்லைக் கடித்தார். ஆத்திரத்தில் மீசை துடித்தது.

"முடிவாயிடுச்சா! அவன் ரத்தத்தை குடிக்க எனக்கு நேரம் வந்தாச்சு", என்று உரத்த குரலில் கூறினார்.

"கல்யாண் கிளம்புடா! வேட்டைக்கு நேரமாச்சு", என்று கர்ஜித்தார். வேட்டையென்றால் என்னவென்று சௌந்தரி யோசித்துக் கொண்டிருக்கும் போதே 'டுமீல்' என்ற சத்தம் கேட்டது.
(தமிழ் நாட்டின் சேஸ், ஷெர்லாக்ஹோம்ஸ்... தலையிலடித்துக் கொள்வது தெரிகிறது)


10. மீனவர் குப்பத்தில் மூன்று நாட்களாக வெய்யில். வறுபட்டுக் கிடந்த கருவாடுகள். அதன் பக்கத்தில் அரைகுறை உயிரோடு துடித்துக் கொண்டிருக்கும் ஒரு உயிருள்ள மீன். அது புரண்டு புரண்டு கிடந்த காட்சியை சுற்றியிருந்த சிறுவர்கள் கூடி கைத்தட்டி ரசித்துக் கொண்டிருந்தனர்.

"தே! கசுமாலங்களா! மீனெப் புடிச்சாந்து குளம்பு வெக்கலாம்னு வெச்சா இங்க எடுத்தாந்து சர்க்கஸ் காட்டிகினு. ஆரு எங்க வூட்லேந்து எடுத்தாந்தது?", என்ற சத்தம் வந்ததும் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள். அவளது 'வீடு' என்று அதை சொல்ல முடியாது. இரண்டு குடிசைகளுக்கு நடுவில் ஒரு ஓலைத் தடுப்பில் அவள் இருந்தாள். அந்த புகலிடத்தில்தான் அவள் வாழ்க்கை. சேறும் சகதியுமாக கிடந்த இடத்தை விளக்குமாறால் கூட்டித் தள்ளினாள். கொஞ்சம் கஞ்சித்தண்ணீ குடித்ததும் தெம்பு வந்தது. அவள் சமையல் செய்யும் அழகைப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான் கபாலி.
"இன்னாம்மே! சூடு ஆறிட போவுது. சீக்கிரம் கொண்டா", என்று கேட்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
('பிதாமகனை' ரொம்ப கிண்டல் செய்யக்கூடாது)


பின்குறிப்பு: 'க்ளூ' கொடுத்தும் கண்டு பிடிக்காதவர்கள் மீண்டும் புத்தகங்களைப் படித்து ரிவைஸ் செய்து கொள்ளவும்.

பின்குறிப்புக்கு பி.கு.: உங்கள் அபிமான எழுத்தாளர்கள் யாரேனும் விடுபட்டிருந்தால் அடுத்த வாரம் தொடரும். பத்து எழுத்தாளர்களுக்கும் டாப் டென் வரிசைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

சித்ரா ரமேஷ்,
சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg