சில்லுன்னு ஒரு காதல்

ஜோதிகாவும் சூர்யாவும் இனி வாழப் போகும் வாழ்க்கைக்கு ஒத்திகை பார்ப்பதற்காக இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது, ஜில்லுன்னு ஆசையாக குந்தவியாக நடிக்கும் ஜோதிகாவை கூப்பிடும் சூர்யா, கணவன் குறிப்பறிந்து காதலாகி கசிந்து உருகும் ஜோதிகா.

அம்பையில் தப்பித் தவறி ஒரு பையன் சைட் கூட அடிக்க முடிக்க முடியாதச் சூழலைக் கண்டு வெறுத்து குந்தவியும் அவள் தோழிகளும் அட்லீஸ்ட் கல்யாணமாவது காதல் கல்யாணமாகப் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுகிறார்கள். இரண்டு தோழிகளும் லோக்கலாக கிடைக்கும் இரண்டு மீசைக்காரர்கள் மேல் ஆசைப்பட்டுக் காதல் கல்யாணம் செய்து கொண்டு விட குந்தவிக்கு மட்டும் பெரியோர்கள் நிச்சயித்த மாப்பிள்ளையோடு திருமணம்.
காதலித்துத்தான் கல்யாணம் என்ற லட்சியம் கலைந்த சோகம், முன் பின் தெரியாதவனொடு எப்படி வாழப் போகிறொம் என்ற கடுப்பு குந்தவிக்கு! தாலி கட்டியவுடன் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டக் காதலி/மனைவி நினைவோடு கௌதம்.

இருவரும் தாம்பத்தியத்தில் இணைகிறார்கள். உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் போல் பழையக் கனவுகளையெல்லாம் மறந்து அந்நியோன்னமாய் வாழ்ந்து அதற்கு அடையாளமாக லட்டு மாதிரி ஒரு குட்டிப் பெண் ஐஸ்வர்யா! இது பழைய காதலியின் பெயர்! நிஜமாகவே சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் ஒரு குட்டிப் பெண் பிறந்தால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல வைக்கும் துருதுரு பெண்! தொடரும் ஊடல்கள்! கூடல்கள்! ஜில்லுன்னு ஒரு குடும்ப வாழ்க்கை! சனிக்கிழமை ராத்திரியானால் சூர்யாவுக்காக பார்த்து பார்த்து பணிவிடைசெய்வது, டிரயினில் சூர்யாவைப் பார்த்து காதலாகி உருகும் பெண்ணை சதாய்ப்பது, கணவனின் பழைய காதல் தெரிந்து மருகுவது என்று ஜோதிகாவிற்கு 'நடிகையர் திலகம்' பட்டமே தரலாம். கல்யாணம்! கல்யாணத்திற்கு முன்னால் ஒரு காதல்! திருமணத்திற்குப் பிறகு மனைவி கணவனிடமும் மனைவி கணவனிடமும் பிரியமாக இருப்பதெல்லாம் யதார்த்தமான விஷயங்கள்தான்! பழையக் காதல் பற்றி மனைவிக்கோ
அல்லது கணவனுக்கோ தெரியும் போது மட்டும் இந்த யதார்த்தம் எப்படியோ விடை பெற்றுப்போய் வேண்டாத குழப்பங்கள் வந்து விடும். மீண்டும் அவர்களை வாழ்க்கையில் சந்திக்க நேரும் போது அவர்கள் நல்ல நண்பிகள் அல்லதி நண்பர்கள் என்று நினைக்க முடியும் போது எதற்காக குழப்பம்? நல்ல வேளை இந்தப் படத்தில் அத்தனை நாடகத்தனமான சோகங்கள் இல்லாமல் கணவனின் டயரியில் தாலி கட்டியவுடன் பிரிந்த காதலியை நினைத்து அவளோடு ஒரு நாளாவது வாழ்ந்திருக்கக் கூடாதா என்று புலம்பியிருப்பதைப் படித்து விட்டு அந்தக் காதலியை வரவழைத்து ஒரு நாளாவது வாழ முடியவில்லையே என்று நீங்கள் எழுதியிருந்ததைப் படித்து விட்டேன். இந்த ஒரு நாள் உங்கள் இருவருக்காக! என்று தன் கணவனின் காதலுக்கு மரியாதை தரும் மனைவி.

தன்னுடன் பேசிக் கொண்டிருப்பவன் டைரியில் புலம்பி அழுத பழைய காதலன் இல்லை. குந்தவியின் கணவனாக இருக்கும் கௌதம் மட்டும் தான் எனபதை உணர்ந்துப் பிரியும் காதலி. எல்லாம் சேர்ந்து கவிதையாக்கி இருக்க வேண்டும். ஆனால் சிறுகதையாக்கியிருக்கிறார்கள். ஆனால் அழகான சிறுகதை. இறுதிக் காட்சியில் தழதழத்தக் குரலில் சூர்யா பேசுவதைக் கண்ணை மூடிக் கொண்டுக் கேட்டால் சிவகுமார் தான் பேசுகிறாரோ என்ற ஒரு திடுக்கிடல்!
இனிமேல் சூர்யா தழதழத்தக் குரலில் பேசக்கூடாது என்ற சட்டம் போடலாம். சூர்யாவின் நண்பராக வரும் சந்தானம் வரும் போதெல்லாம் கலகலப்பு! ரெஜிஸ்டர் கல்யாணம் செய்யும் முன்பு டீக்கடைக் காட்சி! அந்தக் காட்சியின் இறுக்கத்தை தளர்த்தி விடுகிறது.அடுத்த விவேக்காக முயற்சிக்கலாம். வடிவேலு வருகிறார். போகிறார்.

சித்ரா ரமேஷ்
kjramesh@pacific.net.sg

வேட்டையாடு விளையாடு

ராணியைக் கொன்றது யார் என்ற கேள்வியுடன் படம் தொடங்குகிறது. போனில் பேசிய போது நேரம் சாயங்காலம் 5.30 மணி. விரல் துண்டாக்கப்பட்டது சுமார் மாலை 6 மணியிருக்கலாம். இந்த அரை மணி நேரத்தில் பேருந்து நிலையத்திலிருந்து மாருதி வேனில், வேனுக்கு காருக்கும் என்ன வித்தியாசம் என்பதைக் கமல் கையால் அபிநயித்து விளக்க வேண்டுமா என்ன? இந்த வித்தியாசம் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம் . இருந்தாலும் வேனை இப்படி திறக்கலாம் கார் என்றால் இப்படி திறக்க வேண்டும். அந்தப் பெண்ணை எந்த வண்டியில் ஏறிப் போனாள் என்று கமல் கேட்பது ரசிக்கும்படியாகவே இருந்தது. இப்படி படம் முழுக்க இயக்குனர் கௌதமின் கைவண்ணம் நிறையவே இருக்கிறது. கடத்தப்பட்ட ராணி எங்கே சென்றிருக்க முடியும்? இந்த வழியென்றால் ஒரு பதினைந்து நிமிட இடைவெளியில் எந்த இடத்தில் குற்றம் நடந்திருக்கலாம் என்று யூகித்து ராணியின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறது. அந்தக் காட்சியிலிருந்து ரத்தம், இன்னும் ரத்தம், வன்புணர்ச்சி, வக்கிரங்கள் என்று உலகின் அத்தனைக் குற்றங்களும் படம் முழுக்கத் தொடருகின்றன.கமல் முத்தக் கமலாக இல்லாமல் ஒரே ரத்தக் கமலாக மாறிவிட்டாரா என்ன?

பாவம்! ஆனால் படத்தில் கமல் ரொம்ப ரத்தம் சிந்தவில்லை. ஒரு முத்தம் கூட யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே இது கமல் படமாக இல்லாமல் கௌதமின் படமாகவே இருக்கிறது. திகில் கலந்த மர்மப் படங்கள் பார்க்கும் போதெல்லாம் எங்கேயோப் பார்த்த ஆங்கிலப் படம் அல்லது தொடரை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடிவதில்லை.
வேட்டையாடு விளையாட்டிலும் அதே உணர்வு. போதாக்குறைக்கு பாதி படத்திக்குப் மேல் கதை நியூயார்க் நகரத்தில்!கமலும் ஜோதிகாவும் தமிழில் தானே பேசிக்கொள்கிறார்கள் என்ற சந்தேகம் அவ்வப்போது வந்து விடுகிறது. ஆரோக்கியராஜும் அவர் மனைவி சித்ராவும் எப்படியோ சரியாக கொலையாளி இருக்கும் ஊருக்குப் பக்கத்து ஊருக்கு வந்து விடுகிறார்கள். கொலையாளிகளால் திட்டமிட்டப் படுகொலை செய்யப்படுவதற்கு! அதெப்படி சரியாக அதே ஊருக்கு வந்து மாட்டிகொள்கிறார்கள் என்ற கேள்வியெல்லாம் கேட்காமல் படத்தைப் பார்த்தால் படம் ஒரு நல்ல படம்தான்! படத்தின் இறுதிக்கட்டக் காட்சியில் வரும் பரபரப்போடு விடியும் விடியற்காலைப் பொழுது! இரவில் நியூயார்க் நகரம் போன்ற கால வித்தியாசங்களை அருமையாகக் காட்டிய காமிரா! பின்னணி இசையில் பின்னியிருக்கும் ஹாரிஸ்!
பாடல்கள்தான் படத்தில் ரொம்பவே உறுத்துகின்றன. பாடல்களே இந்தப் படத்திற்குத் தேவையில்லை. அப்புறம் டாப் டென், விரும்பிக் கேட்டவை இவற்றிலெல்லாம் படத்தின் பெயர் எப்படி இடம் பெறும் என்பதற்காக ரொம்ப மெனக்கெட்டுப் பாடல்கள் நுழைந்திருக்கின்றன.

கமல் அற்புதமான உள்ளுணர்வுப் பெற்ற ஒரு சிறந்த கடமைத் தவறாத போலிஸ் அதிகாரி. ராகவன் இன்ஸ்டிங்ன்ட் என்று ராகவனாக வரும் கமலே சொல்லிக் கொள்கிறார். இருந்தாலும் முதல் காட்சியிலேயே ராணியை சின்னாபின்னமாக்கி சிதைத்தவர்கள் அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் கத்தியை நன்றாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்று பிணத்தை மருத்துவப்பரிசோதனை செய்த டாக்டர் சொல்லும் போதே கொலையாளி யாராக இருக்க முடியும் என்ற வட்டத்தை குறுக்கியிருக்க முடியும்.மேலும் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்று சொன்னதும் semen traces என்று கேட்பார். டி என் ஏ சோதனை மூலம் தான் யார் என்று தெரிந்து விடக் கூடாது என்று அதை அழிக்க முயற்சி செய்திருக்கிறான் என்பார் டாக்டர். புத்திசாலி ராகவனுக்கு அது ஏனோ அப்போதே தோன்றவில்லை.

தமிழ் சினிமாவில் முதல் முறையாக வெளிப்படையாக 'நீங்க ரெண்டு பேரும் என்ன homosexuals ஆ' என்ற வசனம் வருகிறது என்று நினைக்கிறேன். இளமாறனும் அமுதனும் ஓரினப் புணர்ச்சியாளர்கள் மட்டுமில்லை. பெண்களை கற்பழித்து கொலை செய்யும் வக்கிரம் பிடித்த அதி மேதாவியான டாக்டர்கள்! அது வெறும் பழி வாங்குவதற்கு என்றுப் பார்த்தால் சிலப் பெண்களைப் பார்த்து ரசித்துக் கெடுக்கிறார்கள். இளமாறன் அமுதனின் பெண் துணை! ஆனால் மற்ற இடங்களில் தன்னை ஆணாக நிரூபித்துக் கொள்கிறான். இதில் கொஞ்சம் குழப்பி விட்டார்களோ என்று நினைக்கும் படியான காட்சிகள் அவசர அவசரமாக வந்து போகின்றன. இது மட்டுமில்லாமல் போலிஸ் ஸ்டேஷனுக்கு வரும் ஒரு அரவாணியால் வேறு சிறுமைப்படுத்தப்படுகிறார்கள். அந்த அரவாணி உண்மையாகவேத் தேடி வந்த ஜோடி ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர். படம் முழுக்க இப்படி இயற்கைக்கு மாறான உறவு கொண்டவர்களாக இருப்பது யாருடைய கற்பனை?

கமல் என்னதான் மிடுக்காக தன்னைக் காட்டிக் கொண்டாலும் முதல் ஜோடி கமலினியுடன் பாடல் காட்சியில் தோன்றும் போது கொஞ்சம் சித்தப்பா மாதிரித்தான் தெரிகிறார். இந்த மாதிரி பிரச்சனை எல்லா நடிகர்களுக்கும் ஏற்பட்டதுதான். அந்த பாலத்தை எப்படி கடக்கிறார்கள் என்பதுதான் அவர்கள் புத்திசாலித்தனம்! சிவாஜி, எம்ஜியார் காலத்தில் கோட்டு போட்டுக் கொண்டு தொப்பயை மறைத்தும் மறைக்காமல் தைரியமாக கையில் ஒரு நோட் புத்தகத்துடன் காலேஜ் போகிற மாதிரி நடித்து நம்மையெல்லாம் கடுப்படித்து (ஹீம் அதெல்லாம் ஒரு காலம்!) அப்புறம் அமிதாப்புக்கும் இதே பிரச்சனை! அவரும் நிறைய படங்களில் போலிஸ் ஆபிஸர் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை பெரிய அண்ணா என்றெல்லாம் நடித்து சமாளித்தார். இந்த சமாளிப்புகள் பெரிய வெற்றியாகவில்லை. இப்ப வயதான தாத்தா என்று வயதுகேற்றாற்போல் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார். ரஜனியும் கமலும் எப்படி சமாளித்தார்கள் இனிமேல் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஜோதிகாவைப் பற்றிச் சொல்லாவிட்டால் படத்தைப் பார்த்ததில் அர்த்தமே இல்லை. 'காக்க காக்க' படத்தில் கண்ணாலே கவிதையாய்க் காதலைச் சொட்ட விட்டக் கண்கள் இந்தப் படத்திலும் நடித்திருக்கிறது. கமலிடம் அவரே ஒரு முறை கேட்பார். என் கண்ணைப் பார்த்தால் ஏதாவது தெரிந்ததா என்று. உங்க திருடனைப் பிடிச்சுட்டீங்களா என்று கேட்கும் குறும்பு, இழந்த வாழ்க்கையை நினைத்துத் தனிமையில் தவிக்கும் தவிப்பு, மீண்டும் ஒரு புதிதாய் ஒரு உறவு தேவையா என்ற குழப்பம், பழைய கணவன் பேசும் போது குழந்தையைப் பற்றி ஒரு வார்த்தைக் கேட்கவில்லை என்று வெறுப்பு. ஜோதிகா! நீங்க திருமதி சரவணன் ஆகி உங்க காதலுக்கு புதிய அத்தியாயம் தொடரப் போகிறீர்கள். இந்தப் படம் உங்க நடிப்புக்கும் ஒரு புது அத்தியாயம்தான். ஹ¥ம் எங்க அதிருஷ்டம் திரிஷா, ஸ்ரேயா குலுக்கல்களோடுக் கூடிய தமிழ்ப்பட நாயகிகள் தான் போலிருக்கிறது. இயல்பான நட்புடன் ஜோதிகா கமலுடன் பழகும் போதும் கமல் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதும் அதைத் தவிர்க்க நினைக்காமல் தள்ளிப் போடும் யதார்த்தமும் இயக்குனரின் முதிர்ச்சியும் தமிழ் சினிமாவின் மாற்றங்களும் தெரிகின்றது.

கடைசியாக ஒன்று. அமுதனும் இளமாறனும் ஏதோ மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு சாகாவரம் பெறுவதைப் பற்றிப் பேசுவார்கள். கடைசியில் கூட அமுதன் கமலிடம் சொல்வான். எங்களை விட்டுடுங்க நாங்க மக்களுக்குச் சேவை செய்வோம். எங்களுக்குச் சாவே கிடையாது என்று சொல்வான். அமுதனிடம் ஒரு பெண்நோயாளி வருகிறார். டாக்டர் போன வாரம் நீங்கக் கொடுத்த மருந்தில் இந்த சுருக்கமெல்லாம் மறையவே இல்லையே! வேறு ஏதாவது மாத்தித் தர முடியுமா? உடனே அமுதன் வெறி வந்து இளா! இளா! எனக்கு அவளைக் கொல்லணும்! அவ என்னை இன்சல்ட் பண்ணிட்டா! கொலை பண்ணி வேற ரொம்ப நாள் ஆச்சு! உடனே இளா அமுதனைக் கட்டிப் பிடித்து வேண்டாம் அமுதா அப்ப வேண்டாம்! அவளோட தலையை ஒரு பூசணிக்காயில் கட்டி தொங்க விட நா ஏற்பாடு பண்ணின பிறகு கொல்லலாம்! ஆமா நாம ரெண்டு பேரும்தான் உலகதிலேயே சிறந்த டாக்டர்ஸ்! கில்லர்ஸ்!

நல்ல வேளை இப்படியெல்லாம் இரண்டாம் பாகம் தொடராமல் ஒரு வழியாக கழுத்தைத் திருகி கோடாரி ஏற்றிக் கமலே கொன்று விடுகிறார். என்னதான் படம் விறுவிறுப்பாக இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் கொலைகளைப் பார்த்துவிட்டு கழுத்தின் பின் பக்கம் ரத்தம் ஏதாவது வருகிறதா என்று தொட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. கமல் it is getting personal என்ற வசனம் கமல் கௌதமியுடன் மன்னிக்கவும் ஜோதிகாவுடன் பேசும் போது யோசிக்காமல் இருக்க முடியவில்லை. கயல்விழி, அமுதன், இளமாறன் என்ற பெயர்கள் மட்டும் அசல் தமிழ்ப் பெயர்களாக படத்தில் வருகின்றன.

சித்ரா ரமேஷ்
kjramesh@pacific.net.sg

குஷ்புவும் மன்னிப்பும்

குஷ்புவும் மன்னிப்பும்

குஷ்பூ குஷ்பூ என்று எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று பார்த்தால் குஷ்பூவுக்கு கோவில் கட்டிக் கும்பிட்ட அதே ஆண்குலம்தான் இப்போது பெண்களுக்கு அதிலும் முக்கியமாக தமிழ்ப் பெண்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பாய்ந்து கொண்டிருக்கிறது. ஒரு பெண் தன்னுடையக் கருத்தைச் சொல்லக் கூட உரிமை இல்லையா? அதிலும் நாட்டில் ஒன்றும் நடக்காத விஷயத்தைப் பற்றிச் ஒன்றும் சொல்லவில்லையே! பெண்ணின் கற்பு அவளின் கன்னித்தன்மையில் மட்டும் தான் இருக்கிறது என்ற நிலை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இருக்கப் போகிறது? கற்புக்கு அளவுகோல்கள் யாரேனும் கண்டு பிடித்து இருக்கிறார்களா?

வீட்டை விட்டு வெளியில் வந்து நின்றாலே கற்பு போய்விட்ட மாதிரி கண்டிக்கும் காலம் (ரொம்ப நாட்களுக்கு முன்பு இல்லை!) யாரவது வீட்டிற்கு வந்தால் வாசலில் வந்து நின்று வரவேற்க மாட்டார்கள். கதவுக்குப் பின்னால் நின்று கொண்டு "அவங்க வீட்டுல இல்லையே" என்று சொல்லியனுப்பிவிடுவார்கள். இதுவும் ரொம்ப நாட்களுக்கு முன்பு இல்லை. பெரிய பெண் ஆகி விட்டால் அவ்வளவுதான் படிப்புக்கும் முற்றுப் புள்ளி! பிறகு அந்தப் பெண்ணை வெளியிலேயே அனுப்ப மாட்டர்கள். இது கூட ரொம்ப நாட்களுக்கு முன்னால் இல்லை. இந்தக் காட்சிகள் எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். நான் இருந்தது அப்படி ஒன்றும் குக்கிராமம் இல்லை. இப்படியெல்லாம் பெண்களை பொத்தி பொத்தி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பெண்பிள்ளைங்க மட்டும் படிக்கிற பள்ளிக்கூடம், கல்லூரி, விடுதி வாசலில் நின்று பெண்ணை பத்திரமாகக் விடுமுறைக்கு கூட்டிக் கொண்டுப் போகும் அப்பாக்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டே நம் கண் முன்பாகவே இரண்டு தலைமுறைகளின் வாழ்க்கை முறைகள் மாறிக் கொண்டேயிருந்தது. ஆண்களை நல்ல நண்பர்களாக நினைத்து சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டு ஒரே வீட்டில் வாடகையை பகிர்ந்து கொண்டு வாழும் ஆண் பெண் நண்பர்களைப் பார்த்தாகிவிட்டது.

என் பாட்டி காலத்தில் ஆண் நண்பர்களை வீட்டுக்குக்கே கூட்டி வரமாட்டார்கள். அப்படியே சினேகிதர்களை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வந்தாலும் வீட்டில் இருக்கும் வயதான பாட்டிதான் வரவேற்பாள். காபி, டிபனெல்லாம் பின் கட்டிலிருந்து ஆண்கள்தான் கொண்டு வருவார்கள். என் அம்மா காலத்தில் கொஞ்சம் மாறி "வாங்க காபி சாப்பிடரீங்களா?", என்று சகஜமாகக் கேட்கும் அளவிற்கு எல்லைகள் கொஞ்சம் விரிந்திருந்தது. இப்படி காலத்துக்கு காலம் எல்லாம் மாறும் போது பெண்கள் மட்டும் இன்னும் கண்ணகி காலத்திலேயே இருந்து சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? சன் தொலைக் காட்சியில் ஒரு பெண்மணி வீராவேசமாக நாங்க கண்ணகிப் பரம்பரைப் பெண்கள்! எங்களை இப்படி அவமானப் படுத்துவது போல் குஷ்பூ பேசலாமா? என்று கேட்டார்கள். கண்ணைகி காலத்திலே தானே மாதவியும் இருந்தாள். திருமணமாகாமல் குழந்தையும் பெற்றாள்? கண்ணைகியின் கற்புக்கு மாதவியின் கற்பு ஒன்றும் குறைச்சல் இல்லைதான்!

திருமணத்துக்கு முந்தைய உறவு, திருமணத்துகுப் பிந்தைய உறவு இதெல்லாம் நடக்காமலா இருக்கிறது? எத்தனை சதவீதம் என்பதுதான் பிரச்சனையா இல்லை இப்படி நடப்பதே இல்லை என்கிறார்களா? நடக்காத விஷயத்தைச் சொல்லவில்லை. சொல்லப்பட்ட விதத்தில் எங்கோ தப்பியிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆ! அப்படியெல்லாம் நடப்பதே இல்லை சும்மா தமிழ்ப் பெண்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக இப்படி சொல்லிவிட்டார்கள் என்று கூக்குரலிடும் லட்சியவாதிப் பெண்கள் ஏன் உண்மைக்குப் புறம்பாக இருக்க வேண்டும்? உண்மைக்கும் இலட்சியத்துக்கும் நிறைய இடைவெளி கிடையாதே!

சரி!பாவம் அவங்கதான் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டாச்சே! இனிமே என்ன?
இதெல்லாம் கிடக்கட்டும்! ஆட்டோகிரா·ப் படம் மாதிரி உங்க பள்ளியில் உங்களோடு படித்த இளம் பருவத்துத் தோழர், பிறகு கல்லூரியில் உங்களுக்கு காதல் கவிதை கொடுத்து பஸ்ஸில் உங்களோடு கண்ணால் பேசிய கல்லூரிக் காதலர், உண்மையான நட்பில் இணைந்து உங்களோடு சகலத்தையும் பகிர்ந்து கொண்ட உண்மை நண்பர் என்று உங்க ஆட்டோகிரா·ப்பை உங்க கணவர் கிட்டயாவது இல்லை உங்களைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் உங்க ஆண் நண்பர் கிட்ட பெண்களே! யாராவது சொல்லியிருக்கீங்களா? சொன்ன என்ன ஆகும் என்பது தெரியாதா? அரசக் குடும்பத்தில் பிறந்து கன்னிமாடத்தில் ஆண்வாடையேத் தெரியாமல் வளர்ந்து பிறகு அண்ணலும் நோக்க அண்ணியும் நோக்க கண்ணில் பட்ட முதல் ஆண்மகனையே புருஷனாக வரித்ததாகச் சொன்னால்தானே கற்புக்கு நாம் முழு உத்திரவாதம் கொடுத்து பிறகு திருமணத்திற்கு அவர்கள் உத்திரவாதம் கொடுக்க முடியும்? ஆனாலும் குஷ்பூ மேடம் தங்கர்பச்சான் விவகாரத்தில் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டு விட்டு ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தில் இப்படி பொத்தாம் பொதுவாகக் கருத்து சொல்லியிருக்க வேண்டாமோ?

பாடுபொருள் II

பாடுபொருள் II

சிறந்த திருமண இரவுப் பாடல்கள். இதில் பாதி பாட்டுக்கு மேல் வில்லங்கமான முதலிரவுப் பாடல்கள்தான்! முதலிரவே நடக்காது இல்லை பாடி முடிந்ததும் கொஞ்ச நாட்களில் பிரிந்து விடுவார்கள்.

1. கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்
படம்:இருவர் உள்ளம் பாடியவர்: டி.எம். சௌந்திரராஜன்
(சரோஜா தேவியின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் சிவாஜியின் முகத்தில் தெரியும் பதட்டம்)

2. மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாக கையைத் தொட்டு
படம்: சாரதா பாடியவர்: டி.எம் சௌந்திரராஜன்
(பாவமாக இருக்கும். எஸ் எஸ் ஆர் ரொம்ப அனுபவித்துப் பாடுவார்..ஹ¥ம் எதுக்கும் கொடுத்து வைக்க வேண்டாமா?)


3. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?
படம்: நிச்சயதாப்பூலம்
( இது சூப்பர் பாட்டுத்தான்! ஜமுனாவைப் பாவாடைத்தாவணியில் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம்தான்)

4. துள்ளித் திரிந்த பெண் ஒன்று
படம்: காத்திருந்த கண்கள் பாடியவர்: பி.பி.சீனிவாஸ்
(காதல் மன்னன் படமாச்சே! இனிமையான முதலிரவுதான்!)

5. அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே!
படம்: பலே பாண்டியா பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா,பி.பி.சீனிவாஸ்,எல்.ஜமுனாராணி
( அப்பாடா!ஒன்றுக்கு இரண்டு ஜோடி டூயட்! பாடல் முடியும் போது எம்.ஆர்.ராதா வருவது...
இன்னும் நன்றாகத்தான் இருக்கும்! அப்பாடா! இரண்டு ஜோடிகளும் ஆளுக்கு இரண்டு
பாராக்கள் பாடி எப்போது முடியும் என்று காத்திருக்கும் போது எம் ஆர் ராதா வந்து விடுவார்!)

6. கேட்டுகோடி உருமி மேளம்! படம்: பட்டிக்காடா?பட்டணமா? பாடியது: டி.எம் சௌந்திரராஜன்,எல்.ஆர் ஈஸ்வரி
(நிஜமாகவே இது முதலிரவுப் பாட்டுதானா?)

7. கண்ணென்ன கண்ணென்ன கலங்குது? பெண்ணென்ன பெண்ணென்ன பெணென்ன மயங்குது? படம்: பெரிய இடத்துப் பெண் பாடியது: டி.எம். சௌந்திரராஜன்
(இது முதலிரவுப் பாட்டேயில்லைதானே?மறுநாள் காலையில் பாடும் பாட்டையும் சேர்த்துக்கொள்ளலாமா?)

8. ஆயிரம் இரவுகள் வருவதுண்டு! ஆனால் இதுதான்..
படம்: கற்பகம் பாடியவர்: பி.சுசீலா
(இந்தப் பாட்டை விட பேயாக வந்து பாடும் பாட்டு இன்னும் நன்றாக இருக்கும்)

9. மயங்குகிறாள் ஒரு மாது! படம்:பாசமலர் பாடியவர்: பி சுசீலா
(தங்கை போட்டோ பெட் ரூமில் இருப்பதை தர்மசங்கடத்தோடு பார்த்து கவிழ்த்து வைத்து விட்டு எம் என் ராஜத்தை பார்த்துச் சிரிப்பார் சிவாஜி! அருமைத் தங்கை அண்ணனுக்காகப் பாடும் வித்தியாசமானப் பாட்டு)

10. என்னதான் ரகசியமோ இதயத்திலே நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே!
மலர்கள் நனைந்தனப் பனியாலே என் மனமும் குளிர்ந்தது இரவாலே!
படம்: இதயக்கமலம் பாடியவர்: பி. சுசீலா’

( கே.ஆர்.விஜயா நடிக்காமல் சிரித்தால் மட்டும் போதும். நடிப்பு என்ற பெயரில் அவர் காட்டும் அதீத பாவங்களும் வெட்கமும்)

12. தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடு கொலுவிருந்து
படம்: தாமரை நெஞ்சம் பாடியவர்: பி.சுசீலா
(இந்தப் பாடல் படத்தில் இடம் பெற்றதா இல்லையா? தெரியவில்லை! கடைசி இரண்டு வரிகள் மட்டும் படத்தில் வாணிஷி பாடுவதாக வருகிறது.)

13. சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திடும் நாள் படம்:மைக்கேல் மதன காமராஜன்
பாடியவர்: கமலஹாசன், எஸ்.ஜானகி
( ஊர்வசியை நடிப்பில் ஒரு ராட்ஸஸி என்று தெரிந்து கொண்டது இந்தப் படத்தில் தான்)

14. இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி படம்: தேவர்மகன் பாடியவர்: கமலஹாசன், எஸ்.ஜானகி
(தமிழ் திரைப்படத்தில் இரவுப் பகல் பார்க்காமல் இயல்பாக இருவர் இணைந்ததைப் பார்த்தது)

15. நித்தம் நெல்லுச் சோறு நெய் மணக்கும் கத்தரிக்காய்
படம்:முள்ளும் மலரும் பாடியவர்: வாணி ஜெயராம்
(ரஜனியை ரசிக்க ஆரம்பித்ததே இந்த முரட்டு அண்ணனுக்குப் பிறகுதான்)

16. நாணமோ இன்னும் நாணமோ
படம்: ஆயிரத்தில் ஒருவன் பாடியவர்கள்: டி.எம்.சௌந்திரராஜன் பி.சுசீலா
(இந்தப் படத்தில் இருவருக்கும் திருமணம் ஆயிற்றா இல்லையா யார் வில்லன் போன்ற குழப்பங்களுக்கு முடிவே இல்லை! ஆனாலும் அள்ளக் அள்ளக் குறையாதப் பாடல்கள்!)

இன்னும் நிறையப் பாடல்கள் இருந்தாலும் மணிரத்தினம் பாணியில் கிழவிகள், குழந்தைகள் கும்மாளம் போட்டுப் பாடும் பாடல்களையெல்லாம் என் லிஸ்ட்டில் சேர்க்கவில்லை
இன்னும் ஏதாவது இருந்தால் எழுதவும். ரொம்பக் கருத்துள்ளப் பாடல்கள் இடம் பெற்றதால் இந்தப் பாடல் காட்சிகளைக் கண்டு களிக்கலாம்.

பாடு பொருள்

பாடு பொருள்

தமிழில் வந்துள்ள சில சிறந்த பாடல்கள் வரிசைகள் தரப் போகிறேன். இதில் மற்றவர்களும் கலந்து கொள்ளலாம். அதுவும் மிகச் சிறந்தப் பாடலாக இருக்கலாம். ஆகவே இந்த விளையாட்டில் அனைவரும் பங்கு கொள்ள அழைக்கிறேன்.

பெண்ணை வர்ணித்து வெளிவந்த மிகச் சிறந்த பாடல்கள் முதலில்! சரி ஆண்களைத்தான் முன்னிலைப் படுத்துவோம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டுத் தேடியது தான் மிச்சம்! ஆண்களை பாட்டுடைத்தலைவனாக வைத்து பாதாதி கேச வர்ணனையோடு வந்த பாடல்கள்? இன்னும் தேடிக் கொண்டேயிருக்கிறேன். நீ என் இதயத் தெய்வம், வாழவைத்த தெய்வம் , என் கற்புக்குப் பாதுகாவலன், என் வாழ்க்கையில் வீசிய வசந்தம் இப்படியெல்லாம் பெருமையாகப் பாடியிருக்கிறார்கள். தலை முதல் பாதம் வரை வர்ணனை? திரைப் படப் பாடல்கள் பெரும்பான்மையாக ஆண்களால் எழுதப்பட்டு வருவதால் அவர்களுக்குப் பாடுபொருள் பெண்களாக இருந்து வர்ணிப்பதுதான் இயல்பாக இருக்கிறது. ‘வசீகரா’ வில் கூடத் தேடிப் பார்த்தேன். தாமரையாவது ஏதாவது சொல்லியிருக்கிறார்களா என்று. நீ முயல் குட்டிப் போல் துறுதுறுவென்று அலைவது எனக்குப் பிடிக்கும். கூடவே உனக்கு இரண்டு கேரட் தருகிறேன் என்று ஏதாவது மாதவனைப் பற்றிப் பாடியிருக்கலாம். ஒரு ஆணின் அருகாமையை நினைத்துப் பாடுவதாக இருக்கிறதேத் தவிர வர்ணனையைக் காணும்.

தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது’ வரிகளில் என்னவோ கொஞ்சம் கிண்டல் இருப்பதாகப் படுகிறது. கம்பன் மன்னிக்கவும். இது கூட ‘மானல்லவோ கண்கள் தந்தது’ என்று ஆண் பாடிய பின் பாவம் இவ்வளவுச் சொன்ன பிறகு நாமும் ஏதாவது பதில் சொல்லி வைப்போம் என்றுதான் பாடியிருக்கிறார்கள்.

ஆதி சங்கரர் அருளிய சௌந்தரிய லஹரியிலிருந்து அபிராமிப் பட்டர்ப் பாடிய அபிராமி அந்தாதி, நம்ப தமிழ்த்தாயை இடையிலே மேகலை, கைகளில் வளையாபதி, காதுகளில் குண்டலகேசி, கால்களில் சிலப்பதிகாரம் என்று உச்சி முதல் பாதம் வரை பெண்ணை வர்ணிப்பது என்றால் கவிஞர்களுக்கு எத்தனைக் கற்பனைகள்.


1. வதனமே சந்திர பிம்பமே மலர்ந்த சரோஜமோ! படம்: ஹரிதாஸ்பாடியவர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்

2. நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ படம்: உலகம் சுற்றும் வாலிபன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்

3. ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் படம்: தெய்வத்தாய்பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்

4. அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ படம்: பேசும் தெய்வம் பாடியவர்: டி.எம் சௌந்திரராஜன்

5. மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே படம்: பூவா? தலையா? பாடியவர்: டி.எம் சௌந்திரராஜன்

6. அழகில் அழகில் தேவதை படம்: ராஜபார்வை பாடியவர்: கே.ஜே. ஏசுதாஸ்

7. அதிசய ராகம் ஆனந்த ராகம் படம்: அபூர்வ ராகம் பாடியவர்: கே.ஜே.ஏசுதாஸ்

8. மாலையில் மலர்ச் சோலையில் மது வேண்டும் மலரும் நீயே பாடியவர்: பி.பி. சீனீவாஸ் படம்:அடுத்த வீட்டுப் பெண்

9. தொடுவதென்ன தென்றலோ மலர்களோ படம்: சபதம் பாடியவர்:எஸ்.பி.பாலா

10. எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ படம்: கேப்டன் மகள்பாடியவர்: எஸ்.பி. பாலா

11. அன்பே அன்பே கொல்லாதே படம்: ஜீன்ஸ் பாடியவர்:உண்ணிகிருஷ்ணன்

12. பொட்டு வைத்த முகமோ படம்: சுமதி என் சுந்தரி பாடியவர்:எஸ்.பி. பாலா

13. அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு! படம்: தை பிறந்தால் வழி பிறக்கும் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

இதில் ஒரு பாடலில் வரும் நாயகியைத் தவிர மற்ற நாயகியர் ஏதோ அந்தப் படத்தில் அந்தக் கதாநாயகன் கண்ணுக்கு அப்படி ரதியாகத் தெரிந்தார்களேத் தவிர மற்றபடி அந்தப் பாடலைக் கேட்டு விட்டு ஆஹா இந்தக் காட்சியைக் கண்டு களிக்க முயல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். பி•ப்டி கேஜி தாஜ்மஹாலை மட்டும் வர்ணனைக்குப் பொருத்தமாகப் பார்க்கலாம். இதில் மேலும் சில பலப் பாடல்கள் சேர்க்கலாம். இந்த வர்ணனைப் பாடல்கள் மேலும் உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள். அதுக்குன்னு சும்மா ‘உன் மை விழி ஆனந்தப் பைரவிப் பாடும்’ ‘பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ’ போன்ற பாடல்களைச் சொல்லி வெறுப்பேத்தாதீங்க!

பிள்ளையாரும் அவ்வையாரும்

பிள்ளையாரும் அவ்வையாரும்
நேற்று நம்ப பிள்ளையாரைப் பற்றி எழுதியதும் சுண்டல் இல்லையா என்று கேட்டு ஒருவரும் தகவல் களஞ்சியமாக இருக்கிறதே அவ்வையாரில் வரும் பிள்ளையார் யார் என்று ஒருவர் கேட்டிருந்தார். இந்த பிள்ளையார் விஷயமும் அவ்வையார் விஷயமும் நிறைய சர்ச்சைகள் உருவாக்கும் விஷயமாகி விட்டது. சிறுத்தொண்டர் தான் முதலில் வினாயகர் சிலையை வாதாபியிலிருந்து கொண்டு வந்து வழிபட்டார் என்று எழுதியிருந்ததுத் தவறு. சில விஷமிகள் பரப்பும் தவறான கருத்து! மகேந்திர பல்லவன் காலத்திலேயே தொண்டங்கி விட்டது. அப்பர் தன் பதிகத்தில் பாடியிருக்கிறார் என்று ஆதாரப் பூர்வமாக பாடல்களையெல்லம் அனுப்பியிருந்தார். பாடல்களை எப்படி வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம். வினாயகர் என்று வெளிப்படையாக எழுதப் படாததால்! மகேந்திரவர்மன் காலத்திற்கும் அவரது மகன் நரசிம்மப்பல்லவன் காலத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு முப்பது வருட கால வித்தியாசம் இருக்குமா? சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பட்ட பரஞ்சோதியார் நரசிம்ம பல்லவனின் படைத்தளபதிதானே! எனவே பல்லவர் காலத்திலிருந்து வினாயகர் வழிபாடு தொடங்கியது என்று எடுத்துக்கொள்ளலாமா?


அடுத்தது அவ்வையைப் பற்றியது! நம்ப வேற எக்கச்சக்க சினிமாவிலும் செவிவழிக்கதைகளிலும் அவ்வையைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம்.முதல் அவ்வை புராணக் கதைகளில் தென்படும் அவ்வை! இவர் அடிக்கடி கைலாசம் போய் சிவா சிவா என்று வாசித்திருப்பவருக்கு சிவனை ஒன்று இரண்டு மூன்று என்று வகைப் படுத்திப் பாடி முருகனுக்கும் வினாயகருக்கும் ஒரு சின்ன மாம்பழ விஷயத்தில் மனத்தாங்கல் ஏற்படுத்தியவர். நினச்சப்ப •பிளைட் பிடிச்சு கைலாயம் போய் முருகப் பெருமானுக்கு அறிவுரை கூறிய அவ்வை யார்?


இரண்டாமவர் சங்க கால அவ்வை! இவரைப் பற்றித் தெளிவாக ஒரு சித்திரம் இருக்கிறது. தன் இளமை தன்னுடைய புலமைக்குத் தடையாக இருந்ததால் முதுமைப் பருவத்தை இளவயதிலேயே வேண்டி விரும்பிப் பெற்றவர் என்றும் ஒரு கதை இருக்கிறது.இவர் தன்னுடைய கவிதைகளால் எல்லா மன்னர்களிடையேயும் செல்வாக்குப் பெற்றிருந்தார். முக்கியமாக பாரி மன்னனுக்கும் அதியமானுக்கும் ரொம்ப நெருங்கியத் தோழி! பாரி மன்னன் போரில் இறந்ததும் முழு நிலவைப் பார்த்து பாரியின் பெண்கள் இருவரும் பாடும் ‘அற்றைத் திங்கள்’ பாட்டு அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இது சங்க இலக்கிய மரபில் அமைந்த பாடல். அப்போது அவ்வையும் அவர்களோடு இருந்தார். தன் நெருங்கிய நண்பனின் பெண்களுக்கு உதவி செய்தார். இவர் பாடல்கள் சில சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த அவ்ஔவையார்தான் பல சிறந்த எளிமையான அற நூல்கள் எழுதியுள்ளார்.


அடுத்தவர் சங்க காலத்துக்குப் பிந்தியவர். ‘பாலும் தெளிதேனும்’ பாடலை எழுதிய அவ்வை. வினாயகர் அகவல் எழுதியவர். இதைப் பற்றி சில குழப்பங்கள் உள்ளன. அவ்வை என்ற பெயரை பெண்பாற் புலவர்கள் இருவரும் வைத்திருந்தனரா? இல்லை பிற்காலத்தில் வந்த கவிதாயினி ஔவையைப் போல நன்றாகக் கவிதை எழுதியதால் அவருக்கு அவ்வை என்ற பட்டம் கொடுத்தனரா?


ஜெமினி பட நிறுவனத்தினர் எடுத்த அவ்வையார் படம் இப்படி இந்த மூன்று அவ்வையாரையும் கலந்து எடுத்தனர். அவ்வையாரைப் பற்றிய எல்லாக் கதைகளும் வரும். சுட்டப் பழம் வேண்டுமா சுடாதப் பழம் வேண்டுமா என்று முருகன் கேள்வி கேட்டு அவ்வைக்கும் தெரியாத விஷயங்கள் உண்டு என்று தெளிவுப் படுத்தி இறுதியில் கைலாசத்தில் போய் சிவதரிசனத்தில் படம் முடியும். பிறகு ஏபி நாகராஜன் எடுத்த திருவிளையாடலில் வரும் புராண அவ்வை! இதை பற்றி நான் சொல்லவே வேண்டாம். பெரியோர்களாகச் சேர்ந்து நடத்திய நாடகமல்லவா என்று குமரன் கோபித்துக் கொண்டு மலையேற பழம் நீயப்பா என்று நம்ப அவ்வையாரும் போய் புத்திமதிச் சொல்ல.. பார்வதி வந்து உன் அப்பாவுக்கு எப்போதுமே இப்படி விளையாடுவதென்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்ல திருவிளையாடல் துவங்கும். இப்படி சினிமாக்களில் கேபி சுந்தராம்பாளை அவ்வையாகப் பார்த்துப் பார்த்துப் பழகி விட்ட நண்பரொருவர் “முத வாட்டி மாம்பழத்தை கைலாசத்தில் கொண்டு போய் கொடுத்து குழப்பம் பண்ணினாங்க! அப்புறம் இன்னொரு படத்தில் தன் கணவருக்கு வைத்திருந்த மாம்பழத்தை வேறு யாருக்கோ கொடுத்து அதனால் அவங்க கணவர் கோபித்துக் கொண்டுப் போகிறாரே அது என்ன கதை?”, என்று என்னிடம் கேட்க எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவ்வையாருக்கு திருமணம் ஆன கதை எனக்குத் தெரியாதே! என்று விசாரித்துப் பார்த்ததில் அதாங்க சின்ன வயசில் லஷ்மியா இருப்பாங்க வயசான பிறகு கேபிஎஸ்ஸா ஆயிடுவாங்களே அந்தப் படம்தாங்க! என்றார். ஐயகோ! நான் என்ன சொல்வது? இப்படி கேபிஎஸ்ஸை அவ்வையாராகவே மாற்றிய வாசனை ஒரு நிமிடம் உதவிக்குக் கூப்பிட நினைத்தேன். அந்தப் படத்தின் பெயர் காரைக்காலம்மையார். ‘தகதகதகதக என்று ஆடவா’ என்று சிவ பார்வதி நடனத்தைப் பாடியிருப்பார். அப்புறம் பூம்புகாரில் கவுந்தியடிகளாக வேறு வருவார். நல்ல வேளை அந்தப் படத்தை இன்னும் அந்த நண்பர் பார்க்கவில்லை! இல்லையென்றால் சிலப்பதிகாரத்தில் கூட கோவலனுக்கும் கண்ணகிக்கும் ரொம்ப உதவி செய்தாங்களே அவ்வையார் என்று குழப்பிவிட்டுருப்பார்.


கவிஞர் இன்குலாப் அவ்வையாரைப் பற்றி ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். இதுவும் பெரும் சர்ச்சைக்குள்ளானது! ஏன்? அவ்வை தன் நண்பனான பாரியுடன் சேர்ந்து கள் அருந்துவதாக எழுதியிருப்பார். அப்புறம் பாலகுமாரன் முதிர்கன்னி என்று அவ்வையாரை கதாநாயகியாக வைத்து ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அவ்வை விறலியர் கூட்டத்தோடு சேர்ந்து பரிசில் வாழ்க்கை வாழ்ந்ததாக எழுதியிருப்பார்.எது எப்படியிருந்தாலும் நாம் ஒன்றாம் வகுப்பில் படித்த ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் தந்த அவ்வையை ஒரு கண்ணியமும்நேர்மையும் கொண்ட தமிழ் மூதாட்டியாகக் கொண்ட மனப்பிம்பம் மாறப் போவதில்லை.
பெண்கள் எதை எதையோ புரட்சிப் புதுமை என்றெல்லாம் இன்று பேசுகிறார்களே! எந்தப் புதுமைப் பெண்ணுக்கும் இல்லாத ஒரு துணிச்சல் அன்று இருந்த அவ்வைக்கும் காரைக்காலம்மையாருக்கும் இருந்தது. ஒருவர் தன் இளமையே வேண்டாமென்று முதுமைக் கோலத்தை ஏற்றுக் கொண்டார். இன்னொருவர் இறையனுபவத்தைப் பெறப் பேயுரு கொண்டு கைலாசத்திற்குச் சென்றார்.இதைப் போல பெண்களின் புற அழகை மறுத்து அக அழகை மட்டும் பெரிதாக நினைக்கும் ஆண்கள் வேண்டாம்! பெண்களே யாராவது இருக்கிறார்களா?

கம்யூட்டர் கணபதி வாழ்க!

கம்யூட்டர் கணபதி வாழ்க!

வினாயக சதுர்த்தி என்று விடுமுறை, விக்ரம் பேட்டி, வித்யாசாகர் இன்னிசை எல்லாவற்றையும் ரசித்து கூடவே மண் பிள்ளையாருக்கு தொப்புளில் காசு அமுக்கி, குடை பிடித்து கொழுக்கட்டை,வடை,அப்பம்,சுண்டல் என்று விதரணையாக சமைத்து சாப்பிட்டு வாயுத் தொல்லையால் அவதிப்படும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு வினாயகர் பற்றிச் சில தகவல்கள்! வினாயகர் முதலில் தமிழர் கடவுளே கிடையாது. ஐந்து நிலங்களுக்கும் கடவுள்களாக போற்றியது முருகன், இந்திரன், திருமால், கொற்றவை, வருணன் போன்ற கடவுள்கள்தான். சிவன், குமரன், கொற்றவை, காளி, திருமால், பிரம்மன்,இந்திரன், வருணன், கண்ணன் போன்ற கடவுள்களைப் பற்றி சங்க இலக்கியப் பாடல்களில் வருகின்றன. ஐம்பெரும் காப்பியங்களிலும் இக்கடவுள்கள் பற்றியக் குறிப்புகள் இருக்கின்றன.ஆனால் யானை முகத்தோடு உள்ள கடவுளைப் பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. பிற்காலத்தில் சங்க காலத்துக்குப் பிந்திய காலம் குறிப்பாகச் சொன்னால் பல்லவர் காலத்தில்தான் முதன் முதலில் வினாயகர் தமிழ் நாட்டுக்கு விஜயம் செய்தார் என்று ஆதார பூர்வமாகத் தெரிகிறது. ‘வாதாபி கணபதிம்’ பாட்டு நினைவிற்கு வருகிறதா? நம்ம ‘சிவகாமியின் சபதம்’ கதையில் ஒரு படைத் தளபதி வருவாரே பரஞ்சோதி அவர்தான் சாளுக்கியர்களை வெற்றி கொண்ட பின் அவர்கள் தலைநகரமான வாதாபியிலிருந்து ஒரு வினாயகர் சிலையை கொண்டு வந்து வழிபாடு செய்தார். பின்னர் வினாயகர் தொடர்பான புராணக்கதைகளும் நம்பிக்கைகளும் தமிழகத்திலும் பரவ ஆரம்பித்தது. இந்தப் பரஞ்சோதியார்தான் பின்னர் மிகச் சிறந்த சிவத்தொண்டரில் ஒருவரான சிறுத் தொண்டர் என்று அழைக்கப்பட்டார். பெரிய புராணக் கதைகளிலும் இவர் கதை இடம் பெற்றது.

இவருக்கு ஏன் யானை முகம்? என்ற கேள்விக்குப் பலவிதக் கதைகள் உண்டு. எல்லோருக்கும் தெரிந்த கதை பார்வதி குளிக்கப் போகும் போது தன் மீது பூச வைத்திருந்த மஞ்சளால் ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்து விட்டுப் போனாள். அப்போது சிவபெருமான் உள்ளே நுழைய முற்பட இந்தக் குழந்தை அவரோடு உள்ளே போகக் கூடாது என்று மல்லுக்கு நிற்க முன்கோபியான சிவன் ஆத்திரத்தில் தலையை சீவி விட்டார். ஆனாலும் நம்ப சிவனுக்கு இத்தனி கோபமும் அவசரமும் ஆகாது. அவசரப்பட்டு வரம் கொடுத்து மாட்டிக்கொண்டக் கதைகளும் இவரிடம் ஏராளம். அப்புறம் பார்வதி மேடம் வந்து குய்யோ முறையோ என்றுக் கதற வடக்குப் பக்கத்தில் இருந்த யானைத்தலையைப் பொருத்தி பார்வதியால் உருவான மகனுக்கு உயிர் கொடுத்தார்.இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தக் கதைதான். இந்தக் கதையில்லாமல் வேறு சில தத்துவ விளக்கங்களும் உள்ளன. இப்படி ஆர்யக் கடவுளான வினாயகர் நம் தமிழர் வாழ்வில் இடம் பெற நம் திராவிடக் கடவுளான முருகர் பற்றி வட இந்தியாவில் காளிதாஸர் எழுதிய ‘குமார சம்பவம்’ என்ற காப்பியம் மூலம் தெரிய வந்தது. ஆனாலும் நாம் விக்னேஷ்வரரை வழிப்பாட்டுகுரியவராகமுழு முதற் கடவுளாக, எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் வினாயகர் சன்னதி முதலில் வைத்துக் கொண்டாடியது போல் முருகனின் புகழ் வடநாட்டில் ஏனோ சென்று சென்று சேரவில்லை.


பிள்ளையார் என்று சொல்லும் போதே ஒரு எளிமையான வழிபாடுதான் எல்லோர் மனதிலும் தோன்றும். ஏனையக் கடவுள்கள் போல் இவரை வழிபடுவதற்கு விசேஷமான எந்த சிரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அங்கங்கே மரத்தடியிலும், ஆற்றங்கரையிலும் அவர் பாட்டுக்கு தேமேயென்று பழைய துண்டுத் துணியிலும் சிரித்துக் கொண்டு காட்சியளிப்பார். போகிற போக்கில் ஒரு குடம் தண்ணீர் விட்டால் இவர் அபிஷேகக் கணக்குத் தீர்ந்து விடும். காட்டுப் பூவாக கிடைக்கும் எருக்கம் பூவில் மாலை. எளிதாகக் கிடைக்கும் அருகம்புல்லில் பூஜை! இந்தப் பருவத்தில் கிடைக்கும் நாவற்பழம், பிரப்பம்பழம், விளாம்பழம் போன்ற பழங்களை வைத்துப் படைத்தால் போதும். அவருக்குப் பெரிய விருந்தே கிடைத்த மாதிரி!



வினாயகரைப் பற்றி மதிப்பும் மரியாதையும் பெருகுகிற மாதிரி ஒரு அசாத்திய மனோத்ததுவக் கதையும் உண்டு. இவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று பார்வதி ஆசைப்பட்டுப் பெண் தேடினாள். இதற்கு வினாயகர் போட்ட ஒரே நிபந்தனைஅம்மா மாதிரிப் பெண் வேண்டும். கிடைத்தால் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று சொன்னார். அதனால் இன்னும் பெண் கிடைக்காமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அடேயப்பா! சிக்மண்ட் •பிராய்ட் இதைத்தான் சொன்னார்!எல்லா ஆண்களுக்கும் அம்மாவைப் போல் மனைவி வேண்டும் என்பது ஒரு நிறைவேறாதக் கனவாகவே இருக்கிறது. என்ன செய்து போட்டாலும் என் அம்மா மாதிரி செய்ய வராது என்று மனைவியை கடுப்படிப்பார்கள். அம்மா சமைத்தது சுமாராக இருந்தாலும் அந்தப் பருவம், அந்த அன்பு, அரவணைப்பு, முக்கியமாக நன்றாகப் பசித்துச் சண்டைப் போட்டுச் சாப்பிடுகிற பருவம் இவையெல்லாம் சேர்ந்து இளம் பருவத்துக் கனவுகள் போலவே மனதில் அம்மாவைப் பற்றியும் அவள் சமையலைப் பற்றியும் ஒரு அற்புதச்சித்திரம் எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்கத்தானே செய்யும்!

பரிசு வெறும் பரிசுதான்!

பரிசு வெறும் பரிசுதான்!

சில கல்யாணங்கள் நடந்த கதையினைக் கேட்டால் அப்பாடா ஒருவழியாக கல்யாணம் நடந்து முடிந்து விட்டாதா என்று பெருமூச்சு விட வைக்கும். பெண் பார்க்கும் போதே ஒரு வித குழப்ப நிலையிலிருப்பார் மாப்பிள்ளை. தன்னுடைய அழகுக்கும் அறிவுக்கும் ஈடு கொடுப்பாளா இந்தப் பெண்! தன்னுடைய குடும்பத்துக்கு ஒத்து வருவாளா! பார்த்தால் கொஞ்சம் திமிர் பிடித்தவள் போல் இருக்கிறாளே என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பார். அதற்குள் இரு குடும்பத்துக்கும் இடையில் இருக்கும் ஒரு பொது நலச் சிந்தனையாளர் ‘இந்தப் பொண்ணை விட்டு விடாதே! அப்புறம் தேடினால் கூட கிடைக்காத வைரக்கல்’ என்று புளுகி மப்பிள்ளையை நம்ப வைத்து விடுவார். கல்யாணத்திற்கு பார்க்கும் சத்திரத்திலிருந்து எடுக்கும் புடவை, நகை நட்டு பதில் மரியாதை சீர் முறுக்கு லட்டு எத்தனை வைப்பது போன்றவைகளிலிருந்து கல்யாணத்தன்றே சாந்தி கல்யாணம் உண்டா என்பது வரைக்கும் இரு வீட்டாரும் உராய்வும் புகைச்சலும் இருந்து கொண்டேயிருக்கும். அப்படியென்ன பெரிய ரதியா பொண்ணு! நல்ல கருப்புத்தான்! நம்ம லலிதாவோட பொண்ணைத்தான் முதல்ல பாக்கறதாயிருந்தது! எப்படியோ இங்க வந்து மாட்டிக்கொண்டாச்சு! பேசாம ஒத்து வரல்லைன்னு கல்யாணத்தை நிறுத்தி விடலான்னு பாக்கறேன் என்று மாப்பிள்ளை வீட்டில் புலம்பிக் கொண்டிருப்பார்கள். நிச்சயதார்த்தமே நல்ல கல்லுக்குண்டாய் இருந்த பெரியப்பா திடீரென்று மண்டையைப் போட்டுவிட தள்ளிப் போய் ஏதோ ஒப்புக்கு நடந்திருக்கும். கல்யாணத்தன்று நடக்கும் கூத்தைப் பார்க்கும் போது கல்யாணம் நின்றிருந்தாலே பரவாயில்லை என்று தோன்றும். காபி வரவேயில்லை. வந்த காபியும் சூடு ஆறிப் போய் பூனை மூத்திரம் மாதிரி இருந்தது. எங்க விட்டு மனுஷாளுக்கெல்லாம் தலைவலி என்று குற்றம் சொல்ல ஆரம்பிப்பார்கள். வழக்கம் போல் ரசத்திலெ உப்பு இல்லை. ஸ்வீட் சைஸ் சின்னதாயிருக்கு! ரெண்டாம் தடவை வந்து விசாரிக்கவில்லை என்று பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் அவர்கள் வாழ்வில் பொன் எழுத்தில் பொறிக்கவிருக்கும் ஒரு பொன்னான நாள் என்பதையே மறக்கடித்து விடுவார்கள். பெண்ணைப் பெற்றவரும் சளைக்காமல் தாலி கழுத்தில் ஏறுகிற வரை பணிந்து நடப்பதைப் போல் ஒரு பாவ்லாவாவது பண்ணிக் கொண்டிருப்பார். பெண் கழுத்தில் தாலி ஏறிய பிறகு இந்த பூச்சாண்டிகெல்லாம் பயப்படாமல் இனிமெ இவ உங்க வீட்டுப் பெண். இனிமே இது உங்க வீட்டுக் கல்யாணம் என்று பட்டும் படாமலும் சொல்லி விடுவார். அப்புறம் என்ன? எல்லாக் கல்யாணங்களையும் போல் இந்த கலாட்டாவெல்லாம் மறக்கடிக்கப்படுவதற்கென்றே இன்னொரு கல்யாணம் வந்து விடும். அதுவும் இன்னொரு கில்லாடி சம்பந்தியுடன்!


பெண்ணும் மாப்பிள்ளையும் எல்லாத் தம்பதியினரைப் இந்தக் கசப்பையெல்லாம் மறந்து போல தேனிலவு கொண்டாடி கோவிலுக்கெல்லாம் போய் வந்து பத்தாம் மாதம் ஒரு குழந்தைப் பெற்று சம்சார சாகரத்தில் மூழ்கி விடுவார்கள்தான்! ஆனால் வருடா வருடம் கல்யாண நாள் என்று ஒன்று வந்து மலராத கசப்பான நினைவுகள் வந்து தொல்லைக் கொடுக்கும். குழந்தைகள் வளர்ந்து கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் கல்யாண போட்டோவைப் பார்த்து ( இப்போதெல்லாம் குழந்தைகள் அப்பா அம்மா கல்யாண போட்டோவைப் பார்த்து உங்க கல்யாணத்தப்போ நான் எங்கேயிருந்தேன்? என்னை ஏன் யாரும் போட்டோ எடுக்கலை என்ற அசட்டுக் கேள்விகள் கேட்பதேயில்லை! ஹ¥ம்!) ஏன் மம்மி நீ சிரிக்கவேயில்லை? டாடீ ஏன் இப்படி முழிச்சுண்டு நிக்கறா, நீயும் டாடியும் லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டே? என்றெல்லாம் அறிவு பூர்வமாகக் கேள்விகள் கேட்கும் போது கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் “ ஆமா கல்யாணத்தன்னிக்கு எங்கே சிரிக்க விட்டா? உங்கப்பா முழிக்கலே! பயந்து போய் அப்படிப் பார்க்கிறார். லவ்வா? அப்படீன்னா? பொண்ணு பாக்க வந்த அன்னிலேந்து லவ்வுக்கும் வாழ்க்கைக்கும் எந்த அர்த்தமும் இல்லைன்னு தெரிஞ்சு போச்சு!” என்று கசந்து பேசும் போது கல்யாணம் என்பது வெறும் சடங்குகளுக்காகவும், யாரையோ திருப்தி படுத்த நடத்தப்படுகின்ற விஷயமாகவும் ஆகிவிடுகிறது.


சரி! இத்தனை வியாக்கியானம் எதற்கு? சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் விழாவில் ஒரு அங்கமாக தங்கமுனை போட்டிகள் நடை பெற்றன. அந்த பரிசளிப்பு விழாவில் நடந்த சில விஷயங்களைப் பார்த்த போது எழுந்த சோகம்தான் இது! முதல் பரிசு பெற்றவர்கள் மட்டும்தான் மேடையேறி பரிசு பெற முடியும் மற்ற பரிசுக்குரியவர்கள் அங்கே ஒரு கௌண்டரில் போய் அடையாள அட்டையைக் காட்டி சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இது முதல் அடி! அப்புறம் அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் பரிசுக்குரியவர்கள் இல்லை. கடைசி ரவுண்ட் வரைக்கும் வந்து விட்டதால் அனைவருக்கும் அழைப்பு. எனவே முடிவுகள் மேடையில் தான் அறிவிக்கப்படும். இது இரண்டாவது அடி! தமிழில் சிறுகதைக்கு முதல் பரிசு கிடையாது. அந்த அளவுக்கு உலகத் தரம் மிக்க சிறுகதைகள் வரவில்லை. எனவே முதல் பரிசு இல்லையென்பதால் யாரும் மேடைக்குப் போய் பரிசு வாங்கவில்லை. இது மூன்றாவது அடி! வந்திருப்பர்கள் அனைவருமே இராணுவ வீரர்கள் இல்லை. மென்மையான உள்ளம் கொண்ட இலக்கியவாதிகள்! முதல் பரிசு கிடைத்தால் பெருமைதான்! ஆனால் முதல் பரிசு மட்டுமே பெருமைக்குரியது என்பது எப்படி? பரிசு கிடைத்ததற்காக வாழ்த்தியவர்கள் அனைவருமே கேட்ட முதல் கேள்வி முதல் பரிசு இல்லையாமே! இது என்ன லாப லஷ்டக் கணக்குப் பார்த்து வாங்கும் அதிர்ஷ்டக் குலுக்கல் பரிசுச்சீட்டா?


என் நண்பரொருவர் இந்த பரிசளிப்பு விழாவிற்கு வரவில்லையென்று சொல்லிவிட்டார். பின்ன எப்படிச் செல்வது? ஐந்து பேரைக் கூப்பிட்டு மூவருக்குத்தான் பரிசு என்பதை அவர்கள் அழைக்கும் போதே சொல்லிவிட்டார்கள். மூன்று பெயர்களைக் கூப்பிடும் போதும் நம்பிக்கையோடு அனைவரும் காத்திருப்போம். நம் பேரைச் சொல்லி விட்டு நம் இரண்டு பக்கங்களிலும் உட்கார்ந்திருப்பவர்கள் பேரைச் சொல்லவில்லையென்றால் அந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு நம் கையை குலுக்குவதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பக்கத்தில் இருந்த இருவருக்கும் பரிசு எனக்கு மட்டும் பரிசு இல்லையென்றாலும் என்னால் தாங்க முடியாது. என்ன முதல் பரிசு கிடைத்திருந்தால் மட்டுமே கொஞ்சம் அதிகப்படியான மகிழ்ச்சி அவ்வளவுதான் என்று யதார்த்தமாக சொல்லி விட்டுப் போனதும் தான் இன்னும் துக்கம் அதிகமாகி விட்டது. இந்தக் கோணத்தில் இரண்டு மூன்று நாட்களாக யோசித்தும்
எதற்காக அந்த பரிசளிப்பு விழாவிற்குப் போனோம்?

மனித மனமே சற்று விசித்திரமானதுதான்! தினந்தோறும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் போதெல்லாம் மல்லாக்கப் படுத்திருக்கும் கரப்பான்பூச்சிப் போல் விபத்தில் சிக்கிய பேருந்துகளையும், லாரிகளையும் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் நாம் போகும் வாகனம் மட்டும் பத்திரமாக போய் விடும் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருப்போம்.ஆமாம் நூறு பஸ் போனா அதுல ஒரு பஸ் இப்படித்தான் ஆயிடும் என்ற சொல்லிக்கொள்வோம்.ஏனென்றால் பயணம் போகும் போது விபத்தைச் சந்திக்கும் வாகனங்களின் எண்ணிக்கை சிறுபான்மைதானே! ஆனால் அதே போல் லாட்டரிச்சீட்டு வாங்கும் போது பத்தாயிரம் பேரில் ஒருவருக்குத்தான் பரிசு விழும் என்பது தெரிந்தும் அந்த பத்தாயிரத்தில் ஒருவராக நாம் இருக்கக்கூடாதா என்ற நம்பிக்கையில் பரிசுச் சீட்டு வாங்குவோம்.சாதாரண வாழ்க்கையில் இதைப் போன்ற கணக்கியல் தத்துவங்கள் நிறைய உண்டு!


ரொம்ப சீரியஸாகப் போய்விட்டது. சரி! இன்றைக்கும் கடவுளைத்தான் கூப்பிடப்போகிறேன். கணவன் மனைவி இருவரும் முதல் நாளிரவு விருந்துக்குப் போய்விட்டு வந்ததிலிருந்து வயிறு சரியில்லாமல் போய்விட்டது. மறுநாள் காலையில் எழுந்ததிலிருந்தே இருவரும் மாறி மாறி டாய்லெட் பக்கமே சுற்றிக் கொண்டிருந்தனர். “ஐய்யோக் கடவுளே”, என்று கத்திக் கொண்டே வயிற்றைப் பிடித்துக் கொண்டே இருவரும் மாறி மாறி கழிவறைக்குப் போவதும் வருவதுமாக இருந்தனர். “ ஐய்யோக் கடவுளே! நீங்க இன்னும் உள்ளத்தான் இருக்கீங்களா”, என்று மனவி கதவை இடிப்பதும் “ ஐய்யோ கடவுளே கொஞ்சம் சீக்கிரம் வெளியே வரக்கூடாதா”, என்று கணவனும் கத்திக் கொண்டிருந்தான். இதையெல்லாம் கவனித்துக் கொண்டே அவர்கள் குழந்தை பள்ளிக்குக் கிளம்பியது. அன்று பள்ளியில் அவர்கள் ஆசிரியர் பாடம் நடத்தும் போது இறைவன் எங்கே இருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். உடனே நம் சமத்துக் குழந்தை கையைத் தூக்கி எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும் என்று ஆனந்தக் கூக்குரலிட்டது. எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்லியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? உங்கள் வீட்டு டாய்லெட்டில்தானே!


இறைவன் இலக்கியம் இரண்டுமே இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் பரம் பொருள் தானே!

eppoothum pen

எப்போதும் பெண்கள்
நம் ஊடகங்கள் மூலமாக பெண்கள் சித்தரிக்கபடும் விதத்திலிருந்து ஆண்கள் மனதில் பெண்கள் பற்றிய பிம்பங்கள் உண்மையான பெண்மையின் வெளிபாடுகளாகாது. கதைகள், காப்பியங்கள், பாடல்கள், கவிதைகள், திரைப்படங்கள் தொலைகாட்சித் தொடர்கள் இப்படி எத்தனை ஊடகங்கள் இருந்தாலும் இவை அனைத்துமே கனவுலகப் பதுமைகளாக மட்டுமே பெண்களைச் சித்தரிக்கின்றன. எழுதுபவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். பெண் கவிதாயினிகள் சிலர் பெண்மையின் வலிகளை உண்மையாக வெளிப்படுத்த முயலும் போது அவர்கள் எழுத்தின் மூலம் இன்னும் அதிகமாக காயப்படுகின்றனர். தாய்மை, கற்பு, ஒழுக்கம், குடும்பத்துக் குலவிளக்கு என்று அதிகப்படியான போற்றுதல், தேவையற்ற ஆடைக்குறைப்பு, ஆபாச வசனங்கள் மூலம் அதிகப்படியான இழிவுகள் இவை இரண்டைத் தவிர இயல்பான பெண்களைக் காணவே முடிவதில்லை. தமிழ் நாட்டில் மிகப் புகழ் பெற்றப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். அநேகக் கதைகளில் வலுக்கட்டாயமாக திருமண உறவிலோ திருமணத்திற்கு முன்பே குடும்பச்சூழலால் ஒருவனால் கெடுக்கபட்டு கர்ப்பமடைந்து விடுவாள். அவனை சரியான அயோக்கியன் என்று வெறுத்து ஒதுக்குவாள். இது வரை அட பரவாயில்லையே என்று யோசிக்க வைக்கும் திருப்பம்தான்! இதற்கு மேல்தான் தொடரும் கேலிக்கூத்து!அயோக்கியன் என்று வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்தக் காமுகனை உற்றுப் பார்க்க பார்க்க அவளுள் மலராத பெண்மை மலரும். உயரமாக பெண்களில் பாதிப் பேருக்கு மேல் பிடித்த நிறமாக(!) ராஜகுமாரனாகக் காட்சியளிப்பான். அதுவும் நல்ல பணக்காரனாக வேறு இருந்து விடுவான். பெரிய பங்களா, கார், பணம், அந்தஸ்து எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் அவனை வெறுப்பதற்கு கதாநாயகிக்கு ஒரு காரணமும் இல்லை. ஆனாலும் வெறுப்பதைப் போல் நடிப்பாள். ஒரு நாள் உறவில் குழந்தை உருவாகி அவன் கண்ணம்மா கண்ணம்மா என்று உருகி வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்து எப்பாடியோ இருவரும் இணைந்து விடுவார்கள். இணையும் போது எப்படி இருவரும் சூழ்நிலைக் கைதியாகி ஒருவரை ஒருவர் வெறுப்பதைப் போல் நடித்தார்கள் என்று கடைசி அத்தியாயத்தில் பேசிக் கொள்வார்கள். எல்லாப் பெண்களுக்கும் தாங்கள் குத்து விளக்கைப் போல் பிரகாசிக்கும் அழகிகள் என்ற தீவிரமான நம்பிக்கையும் தன்னிடம் மயங்கி வருபவனிடம் அவர்கள் எதிர்பார்க்கும் பொய்க்கற்பனைகள் இதை பயன்படுத்தி பெண்களை ஒரு அபத்த நிலைக்கு கொண்டுபோகும் பரிதாபம். மின்மினிப் பூச்சி,பளபளக்கும் நியான் பல்பு மற்றும் கலர் பல்பெல்லாம் இதே கதையில் வரும் பிரமாதமான இன்னொரு அழகிக்கு வரும் வர்ணனைகள். ஆனால் அந்தப் பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். இன்னொரு பெண்ணையே பயன்படுத்தி பெண் வாசகிகளை இன்னும் முட்டாளாக்கும் யுக்தி! ஆண்கள் அழகானப் பெண்களை ஏறெடுத்தும் பார்க்காததற்கு இரண்டு காரணங்கள் மட்டும் தான். முதல் காரணம் அவ்வளவு அழகானப் பெண்ணின் பக்கத்தில் போய் நிற்க முடியுமா என்ற பயம். இன்னொன்று விஷயம் வீட்டம்மா வரை போய் அமைதியான குடும்பவாழ்க்கையில் எதற்கு தேவையில்லாமல் சலசலப்பு என்ற ஜாக்கிரதை உணர்ச்சி! மற்றபடி கற்பு சமாச்சாரத்தைப் போற்றிப் பாதுகாக்கத்தான் உங்களுக்கு இணையாக வேறு ஒரு உயிரினம் வாழ்ந்து கொண்டிருக்கிறதே! இன்னும் மற்ற பெண் எழுத்தாளர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கஷ்டபட்டுக்கொண்டேயிருந்து கடைசியில் தன்னிடமிருந்து வேறொருத்தியின் மோகத்தினால் பிரிந்த கணவனை மன்னித்து ஏற்றுக்கொண்டு மாதர்குல மாணிக்கமாக ஒளிவிடுவாள். ஒரு தமிழ் சினிமா பார்த்து விட்டு கணவனிடம் “வேற பொம்பளைக்கிட்டப் போய் சீரழிஞ்சு கடைசிலே பெண்டாட்டிக்கிட்ட வந்து சேருகிறான்” என்று சொல்லும் மனைவியிடம் “அதுதான் அவனுக்குக் கிடைத்த தண்டனையா?” என்றுக் கேட்டக் கணவன் நினைவிற்கு வருகிறது. (இந்திரா பார்த்தசாரதிக் கதையில்)
சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் விழாவில் சில பல எழுத்தாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் எழுத்திலிருந்து சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர். சிங்கப்பூர் எழுத்தாளர் ஒருவர் தன் எழுத்தைப் பற்றிப் பேசும் போது தான் மனிதர்களை வைத்துக் கதை எழுதுவதே இல்லை எப்போதும் மிருகங்களை வைத்துத்தான் கதை எழுதுவதாகச் சொன்னார். சரிதான் ஏதோ புதுமையாக இருக்க்¢றதே என்று அவர் சொன்ன கதையைக் கேட்டால் ரத்தக் கொதிப்பு எகிறி விட்டது. சொன்ன கதையின் சாராம்சம் இதுதான்! இரண்டு நாய்கள் பெரிய பங்களாவில் வளர்கிறது. இரண்டும் சகோதரிகள்! அதில் தங்கை நாய்க்கு எப்போதும் வெளியில் போக வேண்டும் கெட்டழிய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருந்தது. அக்கா நாய் அப்படியெல்லாம் போகக்கூடாது என்று புத்திமதி சொல்லும். ஆனால் தங்கச்சியோ சொன்னதைக் கேட்காமல் வெளியில் போய் கண்டபடி திரிந்து விட்டு கடைசியில் உடம்பெல்லாம் சொறி பிடித்து வீடு திரும்புகிறது. அக்கா நாயோ கற்போடு வாழ்ந்ததால் சீரும் சிறப்பாக இருந்தது. ஆகையால் பெண்கள் எப்போதும் கற்போடும் ஒழுக்கத்தோடும் வாழ வேண்டும். கெட்டழிந்தால் இப்படிப்பட்ட இன்னல்களைத்தான் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி முடித்ததும் அங்கேயிருந்த பெண்கள் ஒருவர் முகத்தில் கூட ஈயாடவில்லை. யாரும் வாயேத் திறக்கவில்லை. கேள்வி கேட்ட என்னையும் அவருடன் யாரும் பேச முடியாது என்று வாயைத் தைத்து விட்டார்கள்.பாழாய்ப்போன நாய் வாழ்க்கையிலுமா கற்பு, ஒழுக்கம் போன்ற வட்டங்கள் வெளியில் சென்றால் சொறி பிடித்து வாழ்க்கையே வீணாகி விடும் போன்ற’ ரத்தக் கண்ணீர் தீர்ப்பு! பெண்களில் பாதிப் பேருக்கு மேல் நடப்பது அநியாயம் என்று தெரிந்தாலும் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கிப் போகும் மனோபாவத்தை தேவையில்லாமல் வளர்த்துக் கொள்கிறார்கள். இப்படிப் பேசியதால் நீ என்ன சாதித்தாய் என்று எதிர்க்கேள்வி! அடுத்த முறை இதைப் போன்ற ஒரு வாய்ப்பு வரும்போது அந்த எழுத்தாளர் குறைந்த பட்சம் இதைப் போன்ற ஒரு கதையை தேர்ந்தெடுக்கவாவது தயங்குவார் இல்லையா?
கேள்வி கேட்கும் பெண்களைப் பற்றி எப்போதுமே ஒரு எதிர்மறையான சிந்தனை! உனக்கு ஏன் இதைப் பற்றிப் பேசினால் கோபம் வருகிறது? பொதுவாக நமக்குத் தவறு என்று தோன்றும் ஒரு விஷயம், நம் மனதை நெருடும் ஒரு செயல், கண் முன்னால் நடக்கும் அவமானங்கள் இவற்றை சகித்துக் கொண்டுச் சென்றால் அவள் ரொம்ப நல்ல பெண்! பொறுமைசாலி! எதிர்த்து நின்றால் இவங்களுக்கு ஏங்க கோபம் வருது? இவங்களும் அப்படித்தானோ? சமீபத்தில் தங்கர் பச்சான் நடிகைகளைப் பற்றித் தவறாகப் பேசிப் பெரிய பிரச்சனையாகி விட்டது. உண்மையாகவே திரைப்படத்துறையில் இருப்பவரும் சரி அல்லது வெளியில் இருந்து பார்ப்பவரும் சரி தங்களுடன் நடிக்கும் நடிகை மேல் எப்படிப்பட்ட மரியாதை வைத்திருக்கிறனர் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே! தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொள்வார்கள். முதல் தாராமாகத் திருமணம் செய்து கொண்டால் இனிமேல் என் மனைவி நடிக்க மாட்டாள் என்று பேட்டியளிப்பார்கள். மிஞ்சிப் போய் காதல், புரட்சி ‘சேர்ந்து வாழ்தல்’ என்று பேசியவர்கள் கூட பிரிந்து விவாகரத்து வரைக்கும் போய் விட்டது. திரைப்படத்துறை ஒரு கவர்ச்சி மிக்கத்துறை. அங்கே இப்படி ஏடாகூடமாக சங்கதிகள் நடக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. மற்ற துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் இதைப் போன்ற துக்கங்கள் தொடர்கின்றன. பெண் முதலாளிகள் என்றால் இன்னும் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக ஆண்கள். எப்போதும் எடுக்கப்படும் கடைசி ஆயுதமாக பெண்ணின் நடத்தையைப் பற்றி விமர்சனங்கள்! அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படும் பத்திரிகைத் துறையிலிருந்து பாடம் சொல்லிக்கொடுக்கப்படும் ஆசிரியர் பணி வரை பெண் என்பவளை பெண்ணாக மட்டுமே ஒரு ஆண் பார்க்கிறான். ஆனால் பெண்களோ ஆண்களை சக மனிதனாக பார்க்கிறார்கள். இறுதியாக ஒரு குட்டிக் கதை! கடவுள் உலகத்தை சிருஷ்டிக்கத் தீர்மானித்து பிரமாதமாகத் திட்டம் தீட்டி ஒவ்வொரு உயிரினமாக படைக்கிறார். மீன்கள், பறவைகள், பூச்சிகள், மிருகங்கள் என்று பலவிதமான உயிரினங்கள். பலவிதமான தாவரங்கள். இவையெல்லாம் கடவுள் படைத்த படி வாழ்ந்து உண்டு இனப்பெருக்கம் செய்து மடிந்து போயின. கடவுளுக்கு கொஞ்சம் போரடித்து விட்டது. இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகளோடு ஒரு உயிரினத்தை உருவாக்கலாமே என்று மனிதனை உருவாக்கினார். மனிதன் மற்ற மிருகங்கள் போலவே காட்டில் திரிந்து உணவு தேடி அலைந்து எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தான். கடவுளுக்கு இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது. ஒரு பெண்ணை உருவாக்கினார். அவளை கொண்டு போய் மனிதனிடம் கொடுத்து இவளை உருவாக்கியதே உனக்காகத்தான்! இவளால் உனக்குச் கொஞ்சம் தொந்தரவுகள் இருந்தாலும் உனக்குத் துணையாக இருப்பாள் என்று சொன்னார். மனிதனும் சரிதான் ஏதோ தனக்குத் துணையாக இருப்பாள் என்று நம்பி அவளுடன் வாழ ஆரம்பித்தான். பெண் எப்போது பார்த்தாலும் தொணதொணவென்று பேசிகொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாள். இவனிடம் எனக்குத்தான் அந்த உயரமான மரங்களில் ஏற்த் தெரியாதே நீதான் ஏறி எனக்கும் சேர்த்து பறித்துக் கொண்டு வாயேன், அந்த பட்டாம் பூச்சி இறக்கைகள் போல் ஏதாவது பூவைப் பார்த்து எனக்குத் தா, என்னால் வெட்ட வெளியில் படுக்க முடியாது ஏதாவது நல்ல குகையைக் கண்டு பிடி என்று ஏதோ ஏவல்கள் சொல்லிக் கொண்டேயிருந்தாள். இவன் அவள் பக்கத்தில் போய் நின்றால் உடனே நல்ல தண்ணீரில் குளிக்கக் கூடாதா?என்பாள். கூடிக் குலாவ முயன்றால் மிருகத்தைப் போல் உன் முகமெல்லாம் ஏன் இத்தனை தாடி மீசை என்று தள்ளிவிடுவாள். மனிதனும் பெண்ணை பலவழிகளில் திருப்திபடுத்த முயன்று கடைசியில் கடவுளிடமே போய் “ கடவுளே! என்னால் இவள் தொல்லைத் தாங்க முடியவில்லை. எனக்குத் துணையே வேண்டாம். நீங்களே இவளை உங்களிடம் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவளை கடவுளிடமே திருப்பிக் கொடுத்து விட்டு வந்து விட்டான். இனிமேல் நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணினான். ஆனால் எங்கேயிருக்க முடிந்தது? மரமேறி பழம் பறித்தாலும் வண்ணத்துப் பூச்சிகளைப் பார்த்தாலும் பேசிச் சிரித்த பெண் நினைவு வந்தது. இரவு நேரங்கள் கொடுமையாயின. பைத்தியகாரனைப் போல் அவளை மறக்க நினைத்து இன்னும் அதிகம் நினைத்தான். காடு, மரம், மலை, மேடு அருவி, நதி, நீர், புல் எல்லாவற்றிலும் அவள் தெரிந்தாள். திரும்பவும் கடவுளிடமே ஓடினான். “எனக்குத் தொந்தரவு, தொணதொணவென்றப் பேச்சு இவையெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் அவளில்லாமல் என்னால் இருக்க முடியவில்லை. அவளை என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள்’, என்று கெஞ்சினான். கடவுள் சிரித்துக் கொண்டே “இனிமேல் நீ அவளிடம்தான் கேட்கவேண்டும்”, என்றார். பெண்ணுக்கு அப்போது ஆணவம், முசுட்டுத்தனம், முன்கோபம் என்று எல்லா துர்க்குணங்களையும் கொண்டிருந்த ஆண் என்ற எண்ணம் மறந்து அப்போது பைத்தியக்காரன் போல் தன்னிடம் கெஞ்சிகொண்டிருந்த ஆணைப் பார்த்துப் பரிதாபப்பட்டு அவனோடுக் கிளம்பினாள்.
கதையிலிருந்து நிறைய விஷயங்கள் புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஆண்கள் கேட்டு வாங்கிய வரம் பெண்கள். பெண்ணுக்கு உரிமைத் தருகிறேன் என்று இந்தக் கடவுள் கூட அநியாயமாக அவளை இப்படி பரிதவிக்க விட்டாரே ! இவன் உனக்கு வேண்டாமம்மா! நீ சிரித்தால் கூட இவனுக்குப் பிடிப்பதில்லை. உன்னுடைய நியாயமான கோரிக்கைகளைக் கூட சந்தோஷமாக நிறைவேற்றுவதில்லை! உனக்கு இப்படிப்படத் துணை வேண்டாமென்று அந்தக் கடவுள் கூட பெண்ணை எச்சரிக்கவில்லையே!

அன்புள்ள நண்பர்களுக்கு,

கவிஞரேறு அமலதாசன் நூல் வெளியீட்டு விழாவைப் பற்றி சித்ரா எழுதுவாங்கன்னு ஒரு புரளி கிளப்பிய ஒரு இனிய உடன் பிறவாச் சகோதரர் எங்கே என்று தேடி கொண்டிருக்கிறேன். நல்லா ஒரு நன்றி சொல்லத்தான்!

வழக்கம் போல் செயலவை அங்கத்தினர் அனைவரும் மாலை நான்கு மணிக்கெலாம் வந்து விட வேண்டும் என்று செயலாளர் ஆண்டியப்பன் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். வழக்கம் போல் கிட்டத்தட்ட வியர்க்க விறுவிறுக்க நாலேமுக்காலுக்கெல்லாம் போய் சேர்ந்தேன். செயலாளர் மணி என்ன என்று விசாரிக்க நானும் மணி என்ன ஒரு நாலரை மணி இருக்குமா என்று அப்பாவியாகக் கேட்டு விட்டு என்னுடைய அலுவல்களில் மூழ்குவது போல் எதையோத் தேடினேன். தண்டாயுதாபாணி கோவிலில் திருமணமண்டபத்தை குளிர் சாதன வசதி படைத்ததாக மாற்றி விட்டனர். அதனால் கொஞ்சம் குளிர்ச்சியாக இருந்தது. இல்லையென்றால் போனவுடன் ரத்தக் கொதிப்பு ஏறியிருக்கும். (யாருக்கு?) மாலை, பொன்னாடை, நினைவுப் பரிசு என்று இதெல்லாம் எப்போதும் என் பொறுப்புதான். இந்த முறையும் மதுரையிலிருந்து ஏலக்காய் மாலை! கல்வி அமைச்சர் திரு. தர்மன் சண்முகரத்தினத்திற்கும், விழா நாயகர் திரு அமலதாசனுக்கும் போடுவதற்கு! எடுத்து வைக்கும் போதே வாசனை கமகமத்து ஏலக்காய் மசாலா தேநீரை நினைவுப் படுத்தியது! உண்மையாகவே தேநீர் இடைவேளை வந்து விட்டது! கோவில் மடப்பள்ளியிலிருந்துதான் ஏற்பாடாகியிருந்தது. மடப்பள்ளி! தவறான வார்த்தையோ! பெருமாள்கோவிலில் புளியோதரையும் தத்தியோன்னமும் அக்காரவடிசலும் செய்தால்தான் மடப்பள்ளி! நிஜமாகவே இந்த சமையலறையில் உப்பா சர்க்கரையா என்று குழம்பி விட்டார்கள்! வடையில் உப்பு சரியாகத்தான் இருந்தது. கேசரியில் தான் சர்க்கரையே காணவில்லை. விஷயம் தெரிந்த பின்னர் அந்த ரவா உப்புமாவை இல்லை ரவா கேசரியை சாப்பிடாமல் டயட்டில் இருப்பது போல் நடிக்க விஷயம் தெரியாத நண்பர் ஸ்வீட் சாப்பிடுங்க என்று உபசாரம் செய்ய தப்பித்தோம் பிழைத்தோம் என்று இல்லை நான் ஸ்வீட்டாக இருந்தால்தான் ஸ்வீட் சாப்பிடுவேன் என்று உண்மையைச் சொல்ல அவர் நான் ஏதோ சிரிப்புக் காட்டியதாக நினைத்துச் சிரித்தார். பாதி நேரம் நான் உண்மை பேசும் போதெல்லாம் இப்படித்தான் ஆகிவிடுகிறது. (குமாரே சாட்சி!) விஜய் திட்டாதீங்க! அமலதாசனும் அல்வா கொடுப்பர் என்று நினைத்திருந்தேன். நமக்கு சர்க்கரை இல்லாத கேசரிதான் என்று விதி சிரிக்கும் போது திருநெல்வேலி அல்வாவுக்கு ஆசைப்பட முடியுமா? நிஜமாகவே திருநெல்வேலிக்குப் போயிருந்த போது இருட்டுக்கடை அல்வாவுக்கு அன்னிக்கு ஹாலிடே! இப்படி ஊர் ஊராகப் போனாலும் சிரிக்கும் விதியை எங்காவது பார்த்திருக்கீங்களா? இனிமேல் இலக்கிய நிகழ்வுகளைப் பற்றி எழுதும் போது இதை பற்றியெல்லாம் எழுதக்கூடாது என்று யாரவது சட்டம் போட்டுவிடப் போகிறார்கள். மணியன் என்று ஒருவர் பயணக்கட்டுரை எழுதுவார். அவருக்கு வடதுருவம், தென்துருவம், ஐஸ்லாந்து என்று எந்த நாட்டுக்குச் சென்றாலும் இட்லி, மிளகாய்ப்பொடி, வத்தக்குழம்பு செய்துத் தர ஒரு தமிழ்க் குடும்பம் காத்திருக்கும். அதைப் போல எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் தேநீர் வரவேற்பு என்றிருக்கிறதே! அதை எழுதாமல் விடமுடியுமா? கேசரியில் போடாமல் விட்ட சர்க்கரை எங்கே போயிற்று என்று தேநீர் ஒருவாய் குடித்த பிறகுதான் தெரிந்தது. கேசரியில் சர்க்கரை அதிகம் வேண்டும், தேநீரில் சர்க்கரை குறைத்து வேண்டும் என்று எக்கச்சக்க வரங்களைக் கேட்டதில் முருகன் குழம்பிப் போய்விட்டார்.

திடீரென்று பரபரப்பு! மாண்புமிகு அமைச்சர் வந்து விட்டார். மாலை மேள மரியாதைகளுடன் விழா மேடைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அதற்கு முன்னால் மேடைக்குச் சென்றுவிட வேண்டும் என்று அவசரமாக ஓடியதில் காலில் ஒரு 'மளுக்'. ஜெயந்தி உன்னைப் போலவே அடிக்கடி விபத்துகளைச் சந்திக்கும் ஒரு துணை இருக்கிறது. இதற்கு முன்பு ஒரு முறை பட்டி மன்ற மேடையிலிருந்து விழுந்து விழாவிற்குத் தலைமைத் தாங்க வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரே அலறி அடித்துக் கொண்டு எங்கள் இருக்கைக்கே தேடி வந்து பரிசுகளைக் கொடுத்து விட்டுச் சென்றார். நல்லவேளை! இந்த அரியக் காட்சியை வீடியோவில் பதிவு செய்யாமல் விட்ட என் துணைவர் திரு ரமேஷை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். இல்லையென்றால் ஒரு பிரபலத் தலைவர் கைது செய்யப் பட்ட விடியோக் காட்சியைப் போல் நூறு முறையாவது அதை திருப்பி திருப்பிப் போட்டுப் பார்த்து "அம்மா நீ ஒரு தடவை விழுந்தால் நூறு தடவை விழுந்த மாதிரி" என்று என்னை புல்லரிக்க வைக்கும் நான் பெற்றச் செல்வங்கள்!

தமிழ் வாழ்த்துடன் நிகழ்ச்சித் துவங்கியது. அதிலும் ஒரு புதுமை! திரு. குணா அமலதாசனின் பாடல் ஒன்றையேத் தேர்ந்தெடுத்து இசையமைத்துப் பாடினார். இந்த இசை வட்டை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசித்து கொண்டேன். இதற்கும் ஒரு பின்புலம் இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் தமிழ் வாழ்த்துப் பாட ஆள் தேட வேண்டியிருக்கும். அதிலும் 'தமிழுக்கும் அமுதென்றுப் பேர்' பாரதிதாசன் பாடலைப் பாட சுசீலாவை விட்டால் வேறு யாரும் பாட முடியாது என்று தீவிரமாக நினைத்துக் கொண்டிருக்கும் என்னை வேறு அவ்வப்போது என்ன சித்ரா தமிழ் வாழ்த்து நீங்களே பாடிடறீங்களா? என்று என்னிடம் கேட்டு என் அதிர்ச்சியை ரசித்து விட்டு சரி நீங்களே அதுக்கு ஒரு ஆள் ஏற்பாடு செஞ்சிடுங்க என்று நான் ஆள் பிடிப்பதற்கு அலையும் கதை எனக்குத்தான் தெரியும்! அதனால் குடும்பப் பாடல் மாதிரி எங்க எழுத்தாளர் கழகக் குடும்பப் பாடலாக இதையேத் தேர்வு செய்தால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

வரவேற்புரையை திரு ஆண்டியப்பன் சுருக்கமாக முடித்துக் கொண்டார். தலைமையுரையை வழங்க விழாத் தலைவர்ப் பற்றித் துணைத் தலைவர் திரு துரைமாணிக்கம் வந்தார். தமிழாசிரியர் ஆயிற்றே! பேச்சு வெகு சுவையாகவே இருந்தது. பிறகு வாழ்த்துரை வந்த தமிழ்த்தொண்டர் திரு தங்கராசு அன்றைய நூல் வெளியீட்டு விழாவின் புதுமையைப் பற்றிக் கூறினார். புத்தகம் வாங்குபவர்கள் அனைவரின் பெயரும் குலுக்கலில் சேர்த்துக் கொள்ளப் பட்டு குலுக்கலில் வெற்றி அடைபவர் சஹாரா விமானச்சேவை நிறுவனத்தார் வழங்கும் டெல்லிக்குச் சென்று வர இரு விமானப் பயணச் சீட்டுகள் பெறலாம். ஆஹா! என் பெயரையும் சேர்க்கலாமே என்று விண்ணப்பத் தாளைத் தேடினேன். நாம் இந்த மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது. இது பொது மக்களுக்கு மட்டும் தான்! என்று செயளாலர் அறிவுறுத்தினார். அடச்சீ இந்தப் பழம் புளிக்கும்! நான் பார்க்காத டெல்லியா?

வாழ்த்தும் நெஞ்சங்களின் வாழ்த்துக்கள் தொடர்ந்தன. அனைவருமே கொடுக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டிற்குள் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது கடினம்தான் என்றாலும் கூடிய மட்டும் சுருக்கமாகப் பேசினால் மற்றவர்கள் பேசுவதற்கும் நேரமிருக்கும். இந்தக் கருத்தை எத்தனை முறை சொன்னாலும் பேசும் போது உணர்ச்ச வசப்பட்டுபேசிக் கொண்டேப் போனால் தடுக்கத் தெரியாமல் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லைதான்.சிறப்பு விருந்தினர் உரையில் திரு தர்மன் சண்முகரத்தினம் தாய்மொழிக் கற்பித்தலில் ஏற்படுத்திய புதுமைகளையும் மாற்றங்களையும் குறிப்பிட்டார். அடுத்த தலைமுறையினருக்கு நம் மொழியை கொண்டு செல்லும் போது அதை அவர்களுக்கு எவ்வளவு சுவாரஸ்யமாக்குகிறோம் என்பது முக்கியம். இதைப் போன்ற நூல்களால் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு நம் மொழியின் நுண்மையும் நம் கலாச்சாரமும் எடுத்துரைக்கப்படுகிறது.

நூலின் முதல் பிரதியை திரு நிர்மலன் பிள்ளைப் பெற்றுக் கொண்டார். பிறகு ஒரு பெயர் சொல்லாப் புரவலர் சிங்கப்பூரில் இருக்கும் 12 தொடக்கக்கலூரிகளுக்கும் பத்து பிரதிகள் வாங்கி இலவசமாகக் கொடுத்தார். விழாவிற்கு வந்திருந்த அனைவரும் அமைச்சர் கையால் புத்தகம் வாங்கிச் சென்றனர். திரு அமலதாசன் மேல் அனைவரும் வைத்திருந்த மதிப்பும் பாசமும் அதில் தெரிந்தது. தலைவர் ஏற்கெனவே உணர்ச்சிப் பிழம்பு! அவர் ஏற்புரையில் இன்னும் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுக் கண் கலங்கி நம்மை நெகிழ வைத்தார். அவர் நன்றி கூறாமல் யாரையாவது விட்டுருந்தால் அவர்கள் ஏன் தன் பெயரை விட்டு விட்டார் என்று தவறாகவே நினைக்க வேண்டாம். அந்த அளவிற்குமுடிந்தவரை அனைவரையும் நினைவுப் படுத்தி அவர்கள் தனக்குச் செய்த உதவிகளைப் பட்டியலிட்டார். மலேசியாவிலிருந்து வந்திருந்த கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி. இரா.மதிவாணன், ஜிஜிஎஸ் புத்தகக்கடை உரிமையாளர் திரு வெ ராமசாமி போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சிறப்புரை ஆற்ற வந்த குமரி அனந்தனிடம் உங்களுக்குச் சிறப்புச் செய்ய வேண்டும் மேடைக்கு நடுவில் வாருங்கள் என்று அழைத்தால்இதெல்லாம் என்ன சிறப்பு இந்த மேடையில் நான் பேசுவதுதான் சிறப்பு என்று மறுத்தார். இருந்தாலும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவுப் பரிசு கொடுத்ததும் அவர் முகத்தில் ஒரு சின்னப் புன்னைகை! வரும் விருந்தினருக்கு இதைப் போல ஏதாவது செய்யலாம் என்று சமீபத்தில் நம் இலக்கியக் குடும்பத்தில் பேச்சு நடந்தது நினைவிருக்கலாம். பெறுவதில் ஒரு இன்பம் என்றால் கொடுப்பதிலும் ஒரு இன்பம் இருக்கிறது. கொஞ்சம் கர்ணன் வாடை அடித்தாலும் வேறு யாராவது அடிக்க வந்தாலும் என்னுடைய ஆலோசனை ஏதாவது கொடுக்கலாம் என்பதுதான். ஆனால் இதனால் எழும் நிர்வாகப் பிரச்சனைகள் காரணமாக இந்த ஆலோசனையை சற்று ஒத்தி போட்டுள்ளேன். நம் குழு இன்னும் விரிவடைந்து பெரிதானால் இதைப் போன்ற யோசனைகள் நிறைவேற்றப்படலாம். கடல் பொங்குவதற்கும் இலக்கியச்செல்வர் பேசுவதற்கும் யார் குறிப்பெழுத முடியும்? நன்றி நவிலலோடு விழா முடிந்தது. டெல்லிச் செல்ல பயணச்சீட்டு பெற்றவர்கள் வெயிலில் சென்று வறுபடாமல் நிழலாக நடந்து புதுதில்லியின் சமாதிகளையும், செங்கோட்டையைப் பார்த்து பெருமூச்செரிந்து, அஜ்மல்கான் சாலை ஆடைகளையும் வாங்கி வர வாழ்த்துக்கள்!

சித்ரா

ஆட்டோகிராஃப் - 21- "இதயம் என்றொரு ஏடெடுத்தேன் அதில் எத்தனையோ நான் எழுதி வைத்தேன்!!"

சித்ரா ரமேஷ்

“எங்களுடைய சொந்த ஊரில் இரண்டு மூணு வீடு வாங்கியாச்சு! ஊருக்குப் போனா வசதியாத் தங்கலாம்”, என்று என்னிடம் யாராவது சொன்னால் அவர்களை சற்றுப் பொறாமையுடன் பார்க்கத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறையாய் சொந்த ஊர் என்ற ஒரு அனுபவமே இல்லாமல் வாழ்ந்து விட்டக் குடும்பம். சொந்த ஊர், அதில் நிலம், வீடு, அதற்கென்று பிரத்யேகமான தெய்வங்கள், நம்பிக்கைகள், வழிபாடுகள், சுற்றிலும் நெருங்கிய சொந்தங்கள், ஊர் முழுக்கத் தெரிந்த மனிதர்கள்! இப்படிப்பட்ட பாதுகாப்புகள் அற்ற சமூகத்தில் வாழப் பழகி விட்டோம். இனிமேல் தீடீரென்று இப்படிப்பட்ட அமைப்பில் வாழ நேரிட்டால் மூச்சு முட்டுமோ? வெளிக் கிர்¤ல்கதவைப் பூட்டி, உள்மரக் கதவைச் சாத்தி பெல் அடித்தால் மந்திரக்கண்ணால் பார்த்து உள்ளே வர வேண்டியவர்கள் மட்டுமே நுழையலாம் என்ற பாதுகாப்புகள் மட்டுமே உள்ள வாழ்க்கைக்கு மட்டுமே பழகியவர்கள். சொந்த ஊர் ஏக்கம் என்பது தாய்ப்பாலை மறக்கும் ஏக்கம் போன்றது. கண்டிப்பாக எந்தக் குழந்தையும் தாய்ப்பாலை மட்டுமே குடித்து வளர முடியாது. அம்மாவிடம் பால் குடித்து வளரும் குழந்தைகள்வளர வளர மற்றச் சாப்பாட்டுக்குப் பழகிக் கொள்ளும். ஆனால் அம்மாவைப் பார்த்தால் ஒரு கெஞ்சலும், கொஞ்சலுமாக ஒரு சிரிப்புச் சிரித்து மயக்கி அம்மாவிடமும் பால் குடிக்கும். இந்த நயன பாஷை அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையே நடக்கும். காலையில் பாட்டிலில் பால், இட்லி, அப்புறம் பருப்புச்சாதம், சாத்துக்குடி ஜூஸ், பிஸ்கெட், சாக்லேட், அவல் பொரி, பொட்டுக்கடலை என்று சகலத்தையும் சாப்பிட்டு விட்டு அம்மாவிடமும் போய் பால் குடிக்கும். தூக்கம் வந்தால் தூங்காமல் அம்மாவைத் தொந்தரவு செய்யும். கடைசியில் இந்த அநியாயம் பொறுக்க முடியாமல் அம்மா, மாமியார், அண்ணி, நாத்தனார் என்று அத்தனை பெண் உறுப்பினர்களும் சேர்ந்து சதித்திட்டம் போட்டு குழந்தையையும் அம்மாவையும் ஒருத்தர் கண்ணில் ஒருத்தர் படாமல் கொஞ்ச நாள் வைத்து குழந்தைக்குத் தாய்ப்பாலை மறக்கச் செய்வர். நல்லா கொழுக் மொழுக்கென்று இருந்த குழந்தை கொஞ்சம் வாடி இளைத்துத்தான் போகும். இவ்வளவு சதி பண்ணி நிறுத்த வைத்தவர்களே “பாவம் குழந்தை பால் குடிக்கறதை நிறுத்தினப்புறம் உடம்பே தேறலை”, என்று பரிதாபப்படுவார்கள். கலையில் காபி,இட்லி, சாதம், பிஸ்கெட் என்று வகைவகையாக சாப்பிட்டு விட்டு பாலையும் குடித்துக் கொண்டிருந்தால் உபரிச் சத்து சேர்ந்து குழந்தை குண்டாகத்தான் இருக்கும். உபரிச்சத்து குறைந்த பிறகு கொஞ்சம் உடம்பு இளைக்கத்தான் செய்யும். அம்மாவுக்கும் இந்தப் பிடுங்கல் இல்லாமல் இருந்தால் சரிதான் என்று எல்லாத்துக்கும் ஒத்துக்கொண்டுதான் இருப்பாள். அப்புறம் குழந்தையை தன் உடம்பில் ஒரு பாகமாகச் சுமந்த நினைவின் மீதமாக பால் குடிக்கும் பழக்கமும் மறக்கடிக்கப் பட்டது ஏக்கமாகத்தான் இருக்கும். குழந்தைக்கும் அம்மா மேல் ஒரு சின்ன வருத்தமும் ஏக்கமும் இருக்கும். இந்த ஏக்கம் போலத்தான் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுப் பிரிவதும்!

அப்பா அம்மாவோடு அந்த ஊரிலேயேதான் இருக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையில் ரொம்ப நாள் இருந்தோம். பிறகு விடுமுறைக்கு மட்டும் எட்டிப் பார்க்கும் ஊராகி விட்டது. அப்பா அம்மா வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஊரே அந்நியப்பட்டுப் போய்விட்டது. ஸ்கூலுல் அப்படித்தானே! நாம் படிக்கும் வரை நாம் அலங்காரம் செய்து பழகிய வகுப்பு, நம்முடைய பெயர் இன்ன பிற விஷயங்களோடு பிளேடு கீறல்கள் கொண்ட நம்முடைய டெஸ்க், விளையாட்டு மைதானம், நம் நண்பர்களோடு வழக்கமாக உட்காரும் மரத்தடி எதுவுமே நம்முடையதாக இல்லாமல் ஆகிவிடும். அடுத்த வருட மாணவிகள் அதையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்வார்கள். ஸ்கூலுக்கு சும்மா போய் நம் ஆசிரியைகளைப் பார்த்து விட்டு வரும் போது அங்கு நாம் இருந்த மாதிரி எதுவுமே இல்லாதது போல், நம்முடைய சக மாணவிகள் போல் ஒழுக்கமாகவும், நட்புடனும் இல்லாமல் அதிகமாக அலட்டுவது போலவும் தோன்றி அதை டீச்ச்சரிடமும் சொல்லி “ என்ன டீச்சர் எங்களையெல்லாம் இப்படி விடமாட்டீங்க! பரவாயில்லை! இப்போ ரொம்ப லீனியன்ட்டா ஆயிட்டீங்க!” என்று புலம்பி விட்டு “நம்ப ஸ்கூல் நம்ப இருந்த மாதிரி இல்லை”, என்று அப்புறம் அவ்வளவாக போகப் பிடிக்காது. நாங்கள் வாழ்ந்த வீட்டைப் பிரியும் போதும் இதே போல் ஒரு துக்கம். வளர்த்த மரங்கள், பூச்செடிகள், ஒட்டு மாமரம், கொய்யா, வாழை, மணத்தக்காளி, அம்மா தினமும் கொடுக்கும் தக்காளிப் பழத்தைச் சாப்பிட வரும் அணில், பின்னால் டிசம்பர் பூச்செடிப் புதரில் வாழ்ந்த கீரிப் பிள்ளைக் குடும்பம், முன்னால் மல்லிகைப் புதர் பக்கத்தில் வாழ்ந்த பாம்பு, இப்படி அசையும், அசையாச் சொத்து ஏகத்துக்கு விட்டு விட்டுச் செல்ல யாருக்குத்தான் மனது வரும்? கடைசித் தம்பி பிறந்ததும் இந்த வீட்டில்தான்! பாட்டி ரூமுக்குள் வராதே என்று மிரட்டினாலும் அம்மாவுக்கு எதுவும் ஆகாமல் பத்திரமாக இருக்கிறாளே என்று அம்மாவிடம் போக முயற்சி செய்த போது பாட்டி தம்பிப் பாப்பாப் பாரு என்று காட்டினாள். அப்படியெல்லாம் உடனே பாசமிகு அக்காவாக மாறி தம்பியை உச்சி மோந்து கொஞ்சவில்லை. அம்மா அசதியாக ஏன் இருக்கிறாள்? களைப்புடன் படுத்துக் கொண்டிருந்த அம்மாவைத்தான் பார்க்கத் தோன்றியது. இப்படி எத்தனையோ நினைவுகளை எடுத்துச் சென்ற வீடு. அதைக் காலி செய்து கிளம்ப வேண்டும். ஊரையும் மறந்து வேறு ஊருக்குப் போய் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் எந்த ஊருக்குப் போனாலும் எங்க ஊர் மனிதர்கள் அடையாளம் கண்டு கொண்டு பாசத்துடன் பேசுகிறார்கள். ஒரு இரவு நேரப் பஸ் பயணத்தில் யாரோ ஒரு பயணி போல அந்த ஊர் வழியாக கடந்து செல்லும் போது அந்த மௌனமான இரவு, இலை உதிர்ந்த மரங்கள்,வெறுமை வழியும் சாலைகள் இவையெல்லாம் சோகமாகத் தெரிகின்றன. சில சமயம் சில காட்சிகளே மனதில் சோகமாக படிகின்றன. இது ஏன் இவ்வளவு துக்கத்தைத் தர வேண்டும்? பஸ்ஸை விட்டு இறங்கி நான் வந்திருக்கிறேன் என்று உரத்தக் குரலில் கத்த வேண்டும் போல் இருந்தது. இந்த ஊரின் ஒவ்வொரு மூலையும் என்னகுத் தெரியும். உங்களுக்குத் தெரியுமா என்று பக்கத்தில் இருப்பவரிடம் பெருமை அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

ரொம்ப நாட்களுக்குப் புதிதாக எந்த ஊருக்குப் போனாலும் தொலைந்து போய்விடுவோமோ? எப்போது வீட்டுக்குத் திரும்பப் போகலாம் என்றிருக்கும். திரும்ப ஊருக்கு வந்ததும்தான் பாதுகாப்பாக உணர்வேன். இப்போதும் ஊருக்குப் போகலாம். தெரிந்த மனிதர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம் ஊர் நம் வீடு என்ற உரிமைக் கொண்டாட அங்கு எதுவும் இல்லை.
ஆனால் ஊர் பிரமாதமாக முன்னேறிவிட்டது. சைக்கிள் எல்லாம் அவ்வளவாக ஓட்டுவதே இல்லை. எல்லோரும் டூவீலர்தான். நகர மத்தியில் குளிர் சாதன வசதியோடு திரையரங்கு. நிறைய பஸ் வசதி. ஆட்டோ ஸ்டாண்ட். ஒரு லட்சம் ரூபாய் வரை போனஸ் வருகிறதாம். வீடு வாங்க லோன் என்று நிறைய வசதிகள். இப்போது அங்கு வளரும் குழந்தைகள் எங்கள் ஏக்கங்கள், அப்பாவித்தனங்கள், விளையாட்டுகள் எதுவும் இல்லாமல் அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ வளர்கின்ற குழந்தைகளைப் போல் வளர்வதற்குரிய வசதிகள் பெருகி விட்டன. போனமுறை விடுமுறைக்குப் போன போது நெய்வேலி போய்விட்டு மறக்காமல் முந்திரிப் பருப்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான் என் தம்பி. “நம்ம ஊர் டேஸ்ட் வேறெங்கேயும் கிடைக்காது. அமராவதித் தியேட்டரில் டிக்கெட் கிடைக்கறதுக்கு சாமி கிட்டல்லாம் வேண்டிப்போமே! இப்ப போய் பாரு. புதுப் படமெல்லாம் ரிலீஸ் செய்யறான். பாக்கறத்துக்குத்தான் ஆள் கிடையாது” என்றான்.

எல்லோரும் பிரியும் போது ஆட்டோகிராஃப் வாங்கிக் கொள்வோமே! அதைப் போல் நானும் வாங்கினேன். ஆட்டோகிராஃப்பில் பொதுவாக எல்லோரும் இந்திரன், சந்திரன், நல்லவரு, வல்லவரு, உலகம் உருண்டைதான் என்றாவது சந்திப்போம் என்று இஷ்டத்துக்குப் புகழ்ந்துதான் எழுதித் தருவார்கள்.உன் சிரிப்பு 'ஸ்ரீதேவி மாதிரி, வகுப்புத் தலைவியாக இருந்து வழி காட்டிய தெய்வம் என்று ரீதியில் புகழ்ந்து எழுதியிருந்ததைப் பார்த்து என் உயிர்த் தோழிகள் இருவரும் செமையாக கடுப்பாகி நாங்களும் எழுதித்தருவோம் என்று கேட்டார்கள். நான் முடியாது என்று சொல்லியும் கேட்காமல் அவர்களே பிடுங்கி உன் அலட்சியப் போக்கும், ஆணவமான பேச்சும், அகங்காரமான சிரிப்பும் என்று ஆளுக்கு ஒரு வரி எழுதி அதற்கு மேல் இன்னும் என்ன எழுதுவது என்று யோசித்து முடிக்கிறோம் என்று எழுதத் தொடங்கியது இன்னும் முடிக்கப் படாமலேயே என்னிடம் இருக்கிறது. எப்போது முடிக்கக் போகிறீர்கள் என்று கேட்டால் இன்னும் முழுமையாக உன் குணங்களைத் தெரிந்து கொண்ட பிறகு என்கிறார்கள். அதேப் போல் இன்னும் முழுமையாக முடிக்கப்பட்டாத ஆட்டோகிராஃப் இது. பதினாறு வயதுடன் ஒரு காலக் கட்டம் முடிவடைகிறது. இதற்குப் பிறகு அந்த நண்பர்கள், என் சகோதர்கள், அப்பா அம்மா யாருடனுமே முழுமையாக இருக்க முடியவில்லை. இந்த உலகில் பெரிய நகரங்களில் வாழும் படியான சூழ்நிலை. வளர வளர அப்பாவித்தனத்தோடு கூடிய யதார்த்தம் போய் நிறைய கள்ளங்கள், கபடு சூது எல்லாம் கற்றுக் கொண்டு பெரிய பெண்ணாகி விடுகிறோம்.இதெல்லாம் கற்றுக் கொள்ளவில்லையென்றால் ஸ்மார்ட் கேர்ள் ஆக முடியாதே! சொந்தச் சகோதர்களே விருந்தாளி ஆகிவிடுகிற விபரீதம்! அண்ணன் அண்ணியின் கணவனாகி விடுகிறக் கொடுமை! இது மட்டும் நல்லவேளையாக நடக்கவில்லை. வாழ்க்கை பதினாறு வயதுடன் முடிவடையவில்லை. உங்க பக்கத்து வீட்டுக் குழந்தை விளையாடுவதை மட்டும் பார்த்து ரசித்தவர்களுக்கு அந்தக் குழந்தையின் அழுகை, பிடிவாதம், படுத்தல், அடம் ஜூரம் வந்த போது ராத்திரியெல்லாம் கண் விழித்துப் பார்த்துக் கொண்டது உடம்பு சரியில்லைகாது வலி, வயிற்று வலி என்று நடுராத்திரி கதறியது, இதெல்லாம் தெரியாது. மேலும் அதை வளர்க்கும் பொறுப்பும் நமக்குக் கிடையாது. அதேப் போல் சிரித்து விளையாடியதை மட்டும் சொல்ல முடிகிறது. கிடைத்த ஏமாற்றங்கள், மூழ்கிய சோகம், சிந்தியக் கண்ணீர், முதுகில் குத்திய துரோகங்கள், பொறாமை, வருத்தம் இதெல்லாம் சொல்லப்படாதக் கதைகள்.
ஆட்டோகிராஃப் எழுத ஆரம்பித்ததும் நிறைய வாசகர்கள் மின்னஞ்சல் மூலம் தங்களுடைய ஆட்டோகிராஃபை என்னுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள்.

'அக்காவைப்' பற்றி எழுதிய வாரம் தான் எக்கச்சக்கக் கடிதங்கள்! என்னைப் போலவே அக்காவால் வஞ்சிக்கப்பட்ட அப்பாவிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்புறம் தமிழ் மீடியம் வகுப்பிலிருந்து ஆங்கிலவழிக் கல்விக்கு மாறிய சோகத்தை எழுதிய போதும் அதே போன்றச் சோக அனுபவங்களைப் படித்தேன். தீபாவளிக் கதையின் போது ஓலைவெடி, லஷ்மி வெடியை பற்றி எழுதவில்லையே என்று கேட்டு வந்த கடிதங்கள்! இன்னும் ஒருவர் என்னுடைய ஆட்டோகிராஃப்புக்கு இணையாக ஒவ்வொரு வாரம் வந்தக் கதைகளுக்கும் ஒரு ஆணின் பார்வையோடு எழுத முடியும் என்று எழுதினார். சீக்கிரம் முடிக்கப் போகிறேன் என்று எழுதியதற்கு ஹாஸ்டலில் இருந்த அனுபவங்கள் ஒரு முதிர்ச்சியடைந்தப் பெண்ணாக உங்கள் அனுபவங்கள் என்றெல்லாம் தொடரலாமே என்று ஒருவர் ஆலோசனை கொடுத்தார்.பாவம் ஹாஸ்டல் வார்டன்! எழுதலாம். ஆனால் இப்போது இல்லை!எப்போதும் காதல் பாடல்கள் வருகின்றன. ஆனால் காதல் அனுபவங்கள் எதுவும் இல்லையா? என்று கேட்ட நண்பருக்கு நான் வாழ்க்கையைக் காதலித்ததுப் புரியவில்லையா? வாரா வாரம் படித்து விட்டு தொடர்ச்சியாக எழுதிய மின்னஞ்சல் நண்பர்கள்! திண்ணையில் எழுதினால் நிறைய பேர் படிப்பார்கள். ஆனால் அதற்கு குமுதம், விகடனில் எழுதுவது போல் வாசகர் கடிதமெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று சொன்ன நண்பரின் கணிப்பைப் பொய்யாக்கிய இணைய வாசகர்களுக்கு நன்றி! நான் எழுதாவிட்டால் என்ன? இன்னும் நிறைய ஆட்டோகிராஃப் தொடரப் போகிறது என்று ஒரு குருவி சொல்கிறது. நாமே நம் அனுபவங்களைச் சொல்லும் போது அதுவும் பெண்கள் தங்களை பற்றிச் சொல்லும் போது ரொம்ப அலட்டலாகத்தான் அமையும். நான் எப்பவும் ஃப்ர்ஸ்ட் ராங்க்தான் வாங்குவேன். டான்ஸ் ஆடுவேன், பாட்டுப் பாடுவேன் எங்க வீட்டுலே ரொம்ப ஸ்டிரிக்ட் எங்க குடும்பம் முகலாய வம்ச வழித்தோன்றல்கள், எங்கப்பாதான் பில்கேட்ஸ் இப்படி நிறைய அலட்டுவாங்க! கூடிய மட்டும் இதெல்லாம் இல்லாம அடக்கி வாசிக்க முயற்சி செய்தேன். நிறைய சமயங்களில் ஆண்களைக் கிண்டலடித்திருக்கிறேன். அப்படியெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி பெரிய பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் புதுமைப் பெண்ணெல்லாம் இல்லை.அருமையான அண்ணன், தம்பிகள், கணவர், பையன், நண்பர்கள் என்று நிறைய ஆண்கள் என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு சமயத்திலும் கைக் கொடுத்திருக்கிறார்கள். உங்க பக்கத்து வீட்டுப் பெண்போல் சராசரி வெற்றியுடன், சாதாரணமாக எல்லாப் பெண்களையும் போல் சமைத்து குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு கொலு வைத்து சரஸ்வதி பூஜை கொண்டாடும் பெண்தான்! ஒரே மாற்றம்! கொஞ்சம் படிக்கும் பழக்கம் உண்டு! அவ்வளவுதான்! என்னுடைய அனுபவங்கள் எனக்கு மட்டுமே நிகழ்ந்தவையல்ல! அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்த எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைத்ததுதான்! நாம் அந்தச் சமயத்தில் பார்த்தக் கனவுக் கன்னிகளெல்லாம் அண்ணி, அம்மா, பாட்டி வேஷத்தில் வந்து கலர்க்கனவுகள் நிறம் மாறி கருப்பு வெள்ளையாய் ஆனது போல், கருப்பு வெள்ளைக் கனவுகள் கலர்க்கனவுகளாக ஆக முடியாதா? என்ற நினைவுகளோடே ஆட்டோகிராஃப் கதாநாயகியை இனிக்கும் பதினாறோடு நிறுத்திவிட்டேன்.

கனவும் கற்பனையும் தான் வாழ்வு! நாம் நமக்களித்துக் கொள்ளும் சுகம்! நம்மைச் சுற்றி இருக்கும் சமூகம் மாறி வருவதைப் பார்க்கிறோம். தங்கள் வாழ்வை தாங்களே வகுத்துக் கொள்ளும் சுதந்திரத்தோடு என் வாழ்வை வாழும் உரிமை என்னிடம்தான் இருக்கிறது என்று தங்கள் வாழ்வை தாங்களே வரையறுத்துக் கொள்ளும் மனிதர்களைப் பார்க்கும் போது அந்தத் தன்னம்பிக்கை பிடித்திருக்கிறது.அப்படியெல்லாம் வாழும் சுதந்திரம் இல்லையென்றாலும் வாழ்கின்ற நாட்களின் ஒவ்வொருத் துளியையும் நிறைந்த மனதோடு அனுபவிக்க வேண்டாமா!
ஆகாயத்தில் நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கும் போதெல்லாம் பிரபஞ்சத்தில் வேறு ஒரு கிரகம்! அதில் என்னைப் போல் ஒரு மனுஷி வாழ்ந்து கொண்டிருப்பாள். வேறு ஒரு பிரபஞ்சம்! அதிலும் வேறு ஒரு கிரகம்! அதிலும் நம்மைப் போல் மனிதர்கள் வாழ்வார்கள். இல்லையா? இந்தத் தொடர்ச்சிக்கும் முடிவில்லை. பிரபஞ்சத்துக்கு காலம், இடைவெளி எதுவும் கிடையாது. ஆனால் வாழ்க்கையில் செய்யபடும் எதற்கும் ஒரு கால வரையறையுண்டு!

போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?- இந்த ஞாலமும் பொய்தானோ?

இத்தனை நாள் சிரிக்கச் சிரிக்க எழுதிவிட்டு முடிக்கும் போது ஏன் இத்தனைச் சோகம்? எல்லாத்துன்பங்களையும் அனுபவித்து விட்டு கடைசிக் காட்சியில் திருமணக் கோலத்தோடு வாய் விட்டு சிரித்ததும் 'வணக்கம்' போட இது என்ன தமிழ் சினிமாவா?
உண்மை வாழ்க்கை! தேவதைக் கதைகளில் 'பிறகு இளவரசனும் இளவரசியும் மகிழ்ச்சியுடன் எப்போதும் வாழ்ந்தார்கள் என்று முடிப்பது ஒரு மரபு போல் வாழ்க்கையும் முடியுமா? ஆனால் சந்தோஷமாக இருந்தக் காலங்களை எழுதிய சந்தோஷத்தோடு.... முற்றும்.

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப்- 20 -'காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்'

சித்ரா ரமேஷ்

ரயிலில் இரண்டு நாள் தொடர்ச்சியாகப் பயணம் செய்திருக்கிறீர்களா? ஏறியவுடன் பரபரப்பாக இருக்கும். சாமான்களை அடுக்கி, ஜன்னலோர சீட் கிடைத்தால் மகிழ்ந்து, பக்கத்துச் சீட்காரர் நம் மனதுக்குப் பிடித்துப் போய் பேசி அரட்டை அடித்து, வருவதையெல்லாம் வாங்கித் தின்று கொண்டு ரொம்ப சந்தோஷமாகத்தான் இருக்கும். மறுநாள் கரி படிந்து அழுக்காக அலுத்துப் போய் எப்போதடா இறங்குவோம் என்றாகி விடும். மீண்டும் நாம் இறங்க வேண்டிய ஸ்டேஷனை நெருங்க நெருங்க இந்தப் பயணம் முடியப் போகிறதே,மீண்டும் நம் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே என்ற வெறுமையும், அப்பாடா வீட்டுக்குப் போய்விடலாம் என்ற நிம்மதியும் சேர்ந்து ஒரு குழப்பமான மனநிலை வந்து விடும். பள்ளியில் கடைசி வருடம். எப்போது இந்த ஸ்கூலை விட்டுப் போவோம் என்று தோன்றும். பள்ளியை விட்டு வெளியேறி விட்டால் மீண்டும் திரும்ப முடியாது. இந்தப் பருவமும் இந்த நண்பர்களும் திரும்ப கிடைக்காது என்ற துக்கமும் இருக்கும். கடைசி வருடம் எங்கள் சயின்ஸ் டீச்சர் இன்னும் பெரிய பெண்களாகி விட்டதால் எங்களைக் காப்பாற்றும் மிகப் பெரிய பொறுப்பு தனக்கு அதிகமாகி விட்டது போல் கெடுபிடிகளை அதிகப் படுத்தினாள். தான் வகுப்பில் இல்லாவிட்டாலும் என்ன நடக்கிறது என்பதை அறிய இரண்டு பேரை குளோஸ்டு சர்குயூட் காமரா போல நியமித்திருந்தாள். இந்த ரகசியம் தெரியாமல் அந்த ஒற்றர்களையும் வைத்துக் கொண்டே
'அப்ஸரா' என்ற சுஜாதா கதையை விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தேன். 'அ' 'ப்' இருவரின் கொலையையும் சொல்லி முடித்து 'ஸ' கொலையைச் சொல்லும் போது டீச்சர் புயலென உள்ளே நுழைந்து கதைக் கேட்ட யாருக்கும் எந்த விதப் பாதிப்பும் இல்லை. போர்க்களம்தான்! அந்த ஒற்றர்கள் கூட வாயைப் பிளந்து கொண்டு முக்கால்வாசிக் கதையைக் கேட்டுவிட்டுதான் வத்தி வைக்கப் போயிருக்கிறார்கள். அந்த டீச்சர் வகுப்பு அது. அந்த டீச்சர் ஏன் கிளாஸ§க்கு வரவில்லை எனப்தைப் பற்றியெல்லாம் யாரும் யோசிக்கக் கூடாதுதான். ஏற்கெனவே வகுப்பில் நுழையும் போதெல்லாம் தெருவைப் பார்த்து அமைந்திருந்த ஜன்னலை மூடச் சொல்வார்கள். ஜன்னல் வழியாக நாங்கள் யாரையாவது பார்த்து மயங்கி விடுவோமாம். மனதை படிப்பில் செலுத்த முடியாதாம் என்று என்னவோ காரணங்கள். சுறுசுறுப்பாக இயங்கும் காலை, மாலை வேளைகளிலேயே மொத்தம் பத்து பேர்தான் தெருவில் நடந்து கொண்டிருப்பார்கள். இதில் காலை பதினோரு, பன்னண்டு மணி வெய்யிலில் ஈ, காக்கா இருக்காதத் தெருவில் எந்த கந்தர்வனைப் பார்த்து நாங்கள் மயங்கப் போகிறோமோ? எதற்கும் கேள்விகள் கேட்காமல் கீழ்ப்படிந்து நடந்தால்தானே பெண்கள் பெருமையடைவார்கள்? ஜன்னலுக்கு அருகே உட்கார்ந்திருந்த எனக்குத்தான் இதனால் தலைவலி! இவர்கள் வகுப்பில் சாத்தப்படும் ஜன்னல் மற்றவர்கள் வகுப்பில் திறக்கப் பட்டுவிடும். நான்தான் இந்த வம்பு செய்வதாக ஒரு சந்தேகம்! தமிழாசிரியை வகுப்புக்கு வந்ததும் ஜன்னைலை எதற்கு மூட வேண்டும் காற்றும் வெளிச்சமும் வர வேண்டாமா என்று சொல்லி திறக்கச் சொல்வார்கள். இதனால் ஏற்கனவே என் மீது அதிருப்தி ஏற்பட்டு 'அப்ஸரா' விஷயத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டதில் ஓநாய், ஆடு கதை போல சமீபத்தியத் தவறுகளை பட்டியலிட்டு என் அம்மாவிடம் சொல்லப் போவதாக சொன்னதும் தப்பித்து விட்டோம் என்று புரிந்து விட்டது. “' ஸ்ரீகாந்த் பற்றி நீ எழுதினியாமே. அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தியாமே”, என்று சம்பந்தமில்லாமல் இவர்கள் வகுப்பில் நடக்காத விஷயத்தைப் பெரிது படுத்த அம்மாவிடம் சொல்லிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். என் அம்மா நடிகர் 'ஸ்ரீகாந்த்' பற்றி எழுதினாலும் ஒன்றும் சொல்லமாட்டாள் என்ற தைரியம்தான்!

அதென்ன 'ஸ்ரீகாந்த்' பற்றி கட்டுரை? அப்போ கிரிக்கெட் வீரர் 'ஸ்ரீகாந்த்' டீமில் நுழையவே இல்லை. நடிகர் 'ஸ்ரீகாந்த்தும்' கிடையாது. வங்காள எழுத்தாளர் சரத்சந்தர சட்டர்ஜி எழுதிய 'ஸ்ரீகாந்த்' என்ற நாவலைப் பற்றியது. ஒரு அருமையான மொழிபெயர்ப்புக் கதை. சரத் சந்திரர்
எழுதிய நாவல்கள் அனைத்துமே பிரமாதமாக இருக்கும். 'தேவதாஸ்' இவர் எழுதிய நாவல்தான். இவருடைய நிறைய கதைகள் திரைப் படமாகக் கூட வந்திருக்கிறது. வங்காள மக்களுக்கும் கேரள மக்களுக்கும் இருக்கும் இலக்கிய ரசனை இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்தினருக்கும் கிடையாதுதான். பிபூதிபூஷன்பானெர்ஜீ எழுதிய 'பதேர் பாஞ்சாலி' உலகத் திரைபடவரிசையில் பேசப்படும் அருமையான நாவல். இதெல்லாம் பற்றி காற்றும், வெளிச்சமும் தர மறுக்கும் அந்த டீச்சருக்கு எப்படிப் புரியும்? மேலும் ஒரு கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்ட கட்டுரை!இதை ஏதோ அரைகுறையாகப் பார்த்து விட்டு ஒற்றர்கள் கொடுத்தத் தகவலை நம்பி குற்றசாட்டு! இத்தனைக்கும் அம்மாவுக்கு நெருங்கிய ஃபிரெண்ட் மாதிரித்தான். நட்பு வேறு கொள்கை வேறு என்பதில் தௌ¤வாக இருந்த ஆசிரியை என்னை கண்டித்துத் திருத்த வேண்டிய கடமை இன்னும் அதிகமாக கட்டுப்பாடுகள் அதிகமாக்கப் பட்டு விட்டன. அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்ல “பரவாயில்லை உங்க ஸ்கூலில் பெண் குழந்தைகளை படிங்கடின்னு மிரட்டினால் உக்காந்து படிக்கறாங்களே! எங்க ஸ்கூல் பசங்கக் கிட்ட இத மாதிரி கிளாஸ§க்குப் போகாம படிங்கன்னு சொல்லியனுப்பினால் மறு நிமிஷம் கிளாஸில் ஒரு பையன் இருக்க மாட்டான். எல்லோரும் கிரௌண்டுக்கு ஓடிப் போயிருப்பாங்க” என்று நைசா அந்த டீச்சர் கிளாஸ§க்கு வராமல் ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாடம் எடுப்பதைப் பற்றிப் பேசி சமாளித்து விட்டாள்.

அந்த ஒற்றன் யார் என்பதைக் கண்டு பிடித்து 'என்ன இந்த வருடத்து 'பெஸ்ட் ஸ்டுடண்ட் அவார்ட்' உனக்குத்தானா?' என்று அப்பாவியாக எங்க குழுவினர் விசாரித்து இவள் மூலமாக அந்த டீச்சர் காதில் போய் விழட்டுமே என்ற அலட்சியத்தோடுதான் செய்தோம். எல்லோரும் படித்து உருப்படற வழியை பார்ப்போம் என்று அக்கப் போரையெல்லாம் தவிர்த்து விட்டோம். ஆனால் வலுவில் வந்தால்? ஒரே இனிஷியல், ஒரே பெயர், ஒரே வகுப்பு எல்லாம் ஒன்றாக இருந்ததால் யாரோ ஒரு ஆசைக் காதலன் எழுதிய கடித்திற்கு பதில் சொல்ல வேண்டிய நிலைமை! யாருக்காக எழுதப்பட்டது என்பதைப் பற்றி விசாரணைக் கமிஷன்!பத்தாம் வகுப்பு படிக்கும் போது பாம்பேயிலிருந்து ஒரு பெண் வந்து சேர்ந்தாள்! எதுக்குப்பா இப்படி கஷ்டப்பட்டு படிக்கிறீங்க? பாம்பேல ஜாலியா இருக்கலாம். பாக்க நல்லாயிருந்தா படிக்கவே வேண்டாம். ஏதாவது வேலைக்குப் போகலாம்” என்று லோ கட் பிளவுஸ், எப்போது குட்மார்னிங் சொல்ல வைக்கும் தாவணி இப்படி டிரஸ் செய்து கொண்டு “ஆத்தா நான் பத்தாங்கிளாஸ் பாஸாயிட்டேன் என்று மயில் கணக்காய் இருப்பவர்களுக்கு பல தத்துவங்கள் சொல்லி ஏற்கனவே புஷ்பா தங்கதுரை கதையெல்லாம் படித்து பம்பாய் ஒரு பயங்கர நகரம் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு கலாச்சார அதிர்ச்சியைக் கொடுத்தாள். கடிதம் யாருக்கு வரும்? ரொம்ப நியாயமாக நடந்து கொள்கிறார்களாம். என்னையும் அவளையும் கூப்பிட்டு விசாரித்தார்கள். 'போன வாரம் புதன் கிழமை சாயங்காலம் நீஎங்கே போயிருந்தே” என்று கேட்டதும் அங்கேயிருந்த என் மேத்ஸ் டீச்சரிடம் “உங்க வீட்டலதானே டுயூஷன் படிச்சுக்கிட்டு இருந்தேன்” என்று நம்பகத் தகுந்த ஆதாரத்தோடு சொன்னதும் சந்தேகப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விட்டேன். அவளும் எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சாதித்து விட்டாள். அப்படி ஒரு முகராசி சிலருக்கு! நான் பாட்டுக்கு தீவிரமாக படித்துக் கொண்டிருந்தாலும் என்ன பண்ணுகிறாய் என்று விசாரிப்பார்கள். டெஸ்க் அடியில் உட்கார்ந்து இட்லி சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களை கண்டுக்கவேமாட்டாங்க! இட்லி வைத்திருக்கும் டிஃபன் பாக்ஸைத் திறந்ததும் நல்லெண்ணெயும் மிளகாய்ப் பொடியும் சேர்ந்து கும்மென்று வாசனை வரும். அது கூடவாத் தெரியாது! நாமதான் பெரிய கம்யூனிஸ்ட்ன்னு நினைப்பாச்சே!காம்ரேட்ஸைக் காட்டிக் கொடுக்க மாட்டோமே! ஹெட்மிஸ்ட்ரஸ் ரூமை விட்டு வெளியில் வரும்போது இருவரும் திக் ஃபிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். “லெட்டர் எழுதறவங்கக்கிட்ட வீட்டு அட்ரஸ் கொடுக்க வேண்டியதுதானே!” என்று யதார்த்தமாக கேட்க “ ஆமா! யாரு அட்ரஸ் எல்லாம் கொடுத்தா?சும்மாப் பேசும் போது பேர், கிளாஸ் எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு லெட்டர் எழுதிட்டான்!”, அடிப்பாவி சும்மா பேசினாலே காதல் வந்து விடுமா?
“சேச்சே! அதெல்லாம் இல்லெப்பா! சும்மா ஒரு பாய்பிரெண்டுன்னு சொல்லிக்க இருக்கட்டுமேன்னுதான்!”, என்று அவள் சொன்னதும் வாழ்க்கையில் என்னவெல்லாம் தேவைப்படுகிறது என்பது புரிந்தது. பரவாயில்லை உலகம் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது.

மற்றப் பெண்கள் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி “அந்த லெட்டரில் என்ன எழுதியிருந்தது?”, என்பதுதான். ஏறக்குறைய என்ன எழுதப் பட்டிருக்கலாம் என்பது தெரிந்த பெண்ணிடமே கேட்கச் சொன்னேன். “யாருக்குத் தெரியும்? எதோ போன புதன் கிழமை மீட் பண்ணியதைப் பற்றி எழுதியிருப்பான். இந்த புதன் கிழமையும் மீட் பண்ணலாமா என்று எழுதியிருப்பான்”, என்று எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு பிறகுதான் சொன்னாள். அசப்பில் சந்திரபாபு போல் இருந்த அந்தப் பையனைப் பார்த்த பிறகு அதற்கு மேல் அதில் எந்தப் பரபரப்பும் இல்லை.
சிரிப்புத்தான் வந்தது. அப்பொ நிறைய பசங்க காமெடியன் போலத்தான் இருப்பாங்க! பருவ வயதில் பெண்கள் அழகாக இருப்பதைப் போல் ஆண்பிள்ளைகள் தமாஷாக இருப்பார்கள். இதில் ஒரு அசட்டு மூஞ்சியை வேறு காட்டிக் கொண்டு காதல் பார்வைப் பார்த்தால் செம காமெடியாகத்தான் இருக்கும்.

ஆமா இந்த ஸ்கூலை விட்டு போவதற்கு என்ன கஷ்டம்! என்று ஆயிரம் முறை சொல்லி கொண்டாலும், நாம் எல்லோரும் அடிக்கடி மீட் பண்ணிக்கலாம். லெட்டர் எழுதிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தாலும் மீண்டும் அதே வகுப்புத் தோழியரோடு அதே அமைப்பில் இணைய முடியாது என்பதை உணராமல் இல்லை. ஸ்டடி ஹாலிடேஸ§க்கு முதல் நாள்தான் கடைசியாக நம் வகுப்பில் இருக்கப் போகிறோம் என்பதை அறியாமலேயேப் பிரிந்தோம். கடைசி நாள் பரீட்சையன்று பார்த்த சிலரைப் அப்புறம் பார்க்கவேயில்லை. பப்ளிக் எக்ஸாம் எழுதுகிற அன்று பெரியப் பொறுப்பு! முதல் டெஸ்க்கில் உட்கார்ந்திருந்ததனால் கேள்வித்தாள் கையில் வந்ததும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு எல்லாம் ரொம்ப ஈஸியாகத்தான் இருக்கு எனபதைப் போல் பின்னால் திரும்பிப் பார்த்துச் சிரிக்க வேண்டும்! பிறகுதான் எல்லோரும் அவர்கள் கேள்வித்தாளைப் பார்ப்பார்கள். பெண்களுக்கு இந்த மாதிரி சென்ட்டிமெண்ட்டெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். ஓம் முருகா,ஸ்ரீராமஜெயம் சிலுவை, பிறைநிலா786 எழுதுவது என்று எம்மதத்துப் பெண்களுக்கும் இந்த மாதிரி எக்கச்சக்க நம்பிக்கைகள். பரீட்சைத் தொடங்குவதற்கு முன்னால் இந்த மாதிரி டென்ஷன் பார்ட்டி பக்கத்தில் நின்று விட்டால் நமக்கு மாரடைப்பே வந்து விடும். இதெல்லாம் நீ படிக்கலையாப்பா! இதுதான் ரொம்ப முக்கியம்ன்னு அவங்க ஸ்கூல்ல சொன்னாங்களாம்” என்று கையையும் காலையும் உதைத்துக் கொண்டு குட்டிப் போட்ட பூனை மாதிரி குறுக்கும் நெடுக்கும் நடந்து நகத்தைக் கடித்து விரலை ரத்தக் களறியாக்கிக் கொண்டு செமையாகப் படுத்துவார்கள். இத்தனி நாள் படிக்காதது எதுவும் புதுசா வராதுடி! இனிமே எதையும் புதுசா படிச்சு எழுதப் போவதில்லை என்று சொன்னாலும் கேட்காமல் கண்ணீருடன் தான் பரீட்சை ஹாலில் நுழைவார்கள். இதற்காக அவசரம் அவசரமாக குவெஸ்டின் பேப்பரை ஒரு பார்வைப் பார்த்து விட்டு எல்லோரையும் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிந்தி விட்டு எழுதத் தொடங்க வேண்டும். அப்படியெல்லாம் ஒன்றும் கஷ்டமாக இல்லை ஜாலியாகத்தான் எழுதினோம். வகுப்பில் இருப்பதிலேயே வசதியான பெண் ஒருத்தி எங்க ஊரை விட்டுத் தள்ளியிருக்கிற தியேட்டருக்கு, அவர்களோட தியேட்டர் என்று சினிமா பார்ப்பதற்கு கூட்டிக் கொண்டுப் போனாள். வெஜிடபிள் பிரியாணி, வெங்காயத் தயிர்ப்பச்சடி என்ற ஒரு அபூர்வ சாப்பாட்டை வாழ்க்கையில் முதன் முதலாக சாப்பிட்டேன். “இவ்விடம் பிரியாணி அரிசி கிடைக்கும்” மளிகைக் கடையில் என்று எழுதப்பட்டிருக்கும் போர்டைப் பார்த்தாலே அந்த அரிசியிலேயே மட்டன், சிக்கன் எல்லாம் கலந்திருக்கும் என்று
சமையல் விஷயத்தில் நிறைந்த பொது அறிவு பெற்று கற்பனை செய்திருந்தவள்! ஏதோ எங்க வீட்டில் செய்யும் வத்தக் குழம்பு, சாம்பார், பொரிச்சக் கூட்டு, பருப்பு உசிலி சமாச்சாரங்களைத்தான் உலகமெங்கிலும் சாப்பிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்ததால் வந்த கற்பனை! ஹோட்டலுக்குப் போனாலும் மசால் தோசை மட்டுமே சாப்பிடுவோம். அது கூட வருடம் ஒரு முறைதான்! அப்ப ஹோட்டலில் கூட இந்த மாதிரி ஐட்டமெல்லாம் கிடைக்காது. அவர்கள் வீட்டில் இந்த விருந்தைச் சாப்பிட்டு விட்டு என்ன படத்திற்குப் போனோம் தெரியுமா? ““இதயக்கனி”! அவங்க தியேட்டரில் ஓடற படத்துக்குத்தானே போக முடியும்? நான் “இது வேண்டாம். தலையிலே தொப்பி வைத்துக் கொண்டு காவேரியை வாழ்த்திப் பாடுகிறார் என்று நம்பிப் போகவேண்டாம்” என்று லேசாகச் சொல்லிப் பார்த்தேன். விதி யாரை விட்டது? இதுக்குப் பதிலா 'மன்மத லீலை” பார்க்கலாம். அது 'ஏ' படம் நம்மையெல்லாம் விட மாட்டார்கள் என்று இதில் போய் உட்கார்ந்தால்.. பாவம் வாழ்க்கையிலேயே இரண்டு மூன்று திரைப்படம் பார்த்திருந்த ஒருத்திக்கு ரத்தக் கொதிப்பு ஏறி தலை சுற்ற ஆரம்பித்து விட்டது. அவளை மெல்ல ஆசுவாசப் படுத்தி எத்தனை நாள் சின்னப் பெண்ணாகவே இருப்பது நம்மையெல்லாம் 'அடல்ட்' ஆக்கும் முயற்சியில் இதுவும் ஒன்று என்று கிண்டல் செய்து கிளைமாக்ஸ் பார்க்காமலேயே கிளம்பி விட்டோம். என்ன
நடக்கும்? வழக்கம் போல் போலிஸ் வந்திருக்கும். கதாநாயகி 'அத்தான்' என்று எம்ஜிஆர் காலில் விழும் காட்சி இருந்திருக்கும். இழந்த இளமையைத் தேடும் முயற்சியில் புரட்சித் தலைவர் நடித்த படம்! சும்மாவா? இந்த அதிர்ச்சியிலிருந்து மீள வீட்டில் அனுமதி வாங்கி 'மன்மத லீலை' ரசித்துப் பார்த்தோம். இதுக்கு 'ஏ' கொடுத்திருக்காங்களே!
இதயக்கனிக்கு டபுள் ஏ தர வேண்டாமா? என்று ஒருத்தி அங்கலாய்த்தாள்.

எங்க ஊர்ல நடக்கும் ஒரே திருவிழாவான பங்குனி உத்திரத் திருவிழாவுக்குப் போய் திரிந்து விட்டு வீட்டுக்குத் திரும்பினோம். லீவு முடியும் வரை ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் மாறி மாறி போய்க் கொண்டிருந்தோம். “ என் ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு வரும் போது எந்த கலாட்டாவும் பண்ணாதீங்கடா” என்று என் அருமைச் சகோதர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மழை என்று என் வீட்டில் வந்து நின்று கொண்டிருந்த என் தோழியைப் பார்த்து வெறுத்துப் போய் என் அண்ணன் தம்பிகள் “மழை ஏன் இப்படிக் கேவலமாக இருக்கு இவ்வளவு கோரமான மழையைப் பார்த்ததேயில்லை” என்று கன்னாபின்னாவென்று டபுள் மீனிங் வைத்துப் பேசி என் மானத்தை வாங்கியதால் இந்த எச்சரிக்கை! இந்த மாதிரி சமயத்தில் வயது வித்தியாசம் எல்லாம் மறைந்து போய் ரொம்ப நெருங்கிடுவாங்க! அந்தப் பெண்ணுக்கு நல்ல வேளை தன்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று புரியாமல் அதுவும் இவர்கள் செய்யும் கலாட்டாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் போனபிறகு “ஏண்டி உன் ஃபிரெண்ட்ஸ் ஒருத்திக் கூட தேற மாட்டாங்களா” என்று துக்கம் விசாரித்து என்னைச் சீண்டிவிட்டார்கள்.அப்படியும் அவர்கள் கிளம்பிப் போனபிறகு “யாருடி அது ரயில் ராதிகா மாதிரி கொஞ்சிக் கொஞ்சி பேசிகொண்டிருந்தாள்? ஒய்விஜயா மாதிரி ஒருத்தி இருந்தாளே”, என்றெல்லாம் அன்பாக விசாரித்தான் அண்ணன்.தினமும் பேசிப் பழகும் எனக்குத் தெரியாத உண்மையெல்லாம் அவனுக்கு ஒரு பார்வையில் பதிவாகி விடுகிறது. இதில் ஃபர்ஸ்ட்ஹாண்ட் தகவல் வேணும் என்று அப்பப்ப கடைசித் தம்பியை விட்டுப் பார்க்கச் சொல்லி அனுப்பிகொண்டிருந்தான். அவனும் சின்னப் பையன் என்ற சலுகையில் கோபிகைகள் நடுவில் கண்ணன் மாதிரி எங்க அரட்டையில் சேர்ந்து கொண்டுப் பேசி எல்லோரையும் அறுத்துத் தள்ளி.. என்ன செய்தால் என்ன? எல்லோரும் அவனையும் ஞாபகம் வைத்துக் கொண்டு விசாரிக்கிறார்கள். ஒரே ஒரு பெண் மட்டும் “உங்கண்ணன் பாக்கறத்துக்கு ஹிந்திப்பட ஹீரோ மாதிரி இருக்காண்டி” என்று சொல்லி விட்டுப் போனாள். அடச்சே! இதுக்கா எல்லோரும் வந்தாங்கன்னு எனக்கு வெறுத்துப் போச்சு! இதை இன்னும் அவனிடம் சொல்லவில்லை. சொன்னால் கர்வம் ஏறிக்கும் என்ற நல்லெண்ணம்தான்!

சிலர் படிப்பைத் தொடர ஊரை விட்டுக் கிளம்பினார்கள். சிலர் ஊரிலேயே இருந்து கொண்டு ஏதோ செய்தார்கள். நிறைய பேரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவேயில்லை. அதில் ஒருத்தி 20 வயதிலேயே இறந்தும் போய்விட்டாள். எட்டாவது படிக்கும் போது ரெண்டு பேர் உட்காரும் டெஸ்க்கில் இடப் பற்றாக்குறையால் மூன்று பேர் உட்காருவோம். அப்போது என்னோடும் சுபா என்ற என் ஃபிரெண்டோடும் பழிச் சண்ண்டைக்கு நிற்பாள். ஸ்கேல் வைத்து அளந்து பிளேடால் கோடு போட்டு அதைத் தாண்டி துளி இடம் கூட கொடுக்க முடியாது என்று துரியோதனன் போல் கறாராகச் சொல்லிவிடுவாள். இவள் சண்டையால் எனக்குக் கிடைத்த அருமையானத் தோழிதான் சுபா! இந்தப் பூங்கோதைத்தான் இப்படி அல்பாயுசில் இறந்து விடுவாள் என்பது தெரியாமல் நானும் சுபாவும் சேர்ந்து கொண்டு அவளோடு விடாமல் சண்டை போட்டிருக்கிறோம். துரதிருஷ்டவசமாக வகுப்புப் புகைப்படம் எடுக்கும் அன்று அவள் பள்ளிக்கு வரவில்லை. அந்த போட்டோவைப் பார்க்கும் போதெல்லாம் அதில் இருப்பவர்களை விட இல்லாத அவள் ஞாபகம்தான் அதிகம் வருகிறது. பதினாறு வயதில் பிரிந்த நாங்கள் இருபத்தியைந்து வருடங்கள் கழித்து அழகான ஆண்ட்டிகளாக மீண்டும் சந்தித்தோம். (கூட்டிக் கணக்குப் பாத்துட்டீங்களா!) கணவர், குழந்தைகள் என்று எந்தப் பிடுங்கலும் இல்லாமல் அதேத் துடிப்போடு ஜெயண்ட் வீல், ரோலர் கோஸ்டர் எல்லாவற்றிலும் சுற்றி ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டு விஜிபியையே கலக்கினோம். சுஜாதாவோட “கற்றதும் பெற்றதும்” படிக்கும் போதெல்லாம் உன்னைத்தாண்டி நினைச்சுக்குவேன்” என்று ஒருத்தி சொன்னாள். எதுக்கு? நல்லதாக எதைப் படித்தாலும் பகிர்ந்து கொண்டதைத்தானே அவரும் செய்கிறார்.வகுப்புப் புகைப் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பெயரெல்லாம் நினைவுப் படுத்திப் பார்த்துக் கொண்டோம். ஒரு சிலரோடு ஒரு வார்த்தைக் கூடப் பேசியதில்லை திடுக்கிடும் என்ற உண்மையைப் பகிர்ந்து கொண்டோம். வராதவர்களில் யார் யார் எங்கேயிருக்கிறார்கள் என்று வம்படித்தோம். ஒருத்தி எங்க ஊரிலேயே டாக்டராக இருக்கிறாள். நெய்வேலிக்கு வா. கார் வைத்திருக்கிறேன். நீ வசதியாகச் சுற்றிப் பார்க்கலாம்” என்றாள்.நமக்கு எதற்குக் கார்? ஒரு லேடீஸ் சைக்கிள் இருந்தால் போதுமே!எல்லோரையும் சிங்கப்பூர் வாங்க என்று கூப்பிட்டுவிட்டு எப்ப வரீங்கங்கறதை மட்டும் கரெக்டாக சொல்லிடுங்க” அப்பத்தானே வீட்டைப் பூட்டிக் கொண்டு எஸ்கேப் ஆக முடியும்? என்று நான் சொன்னதை யாரும் தப்பாக நினைக்கவேயில்லை. என்னுடைய தோழிகள் ஆயிற்றே! இதையெல்லாம் தப்பாக நினைத்தால் என்னுடைய ஃபிரெண்ட்ஸாக இருக்கவே முடியாதே!

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் -19- “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”

சித்ரா ரமேஷ்

அசோகமித்தரன், தி.ஜானகிராமன், அ.முத்துலிங்கம், கி.ராஜநாரயணன், சுந்தரராமசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், இந்திரா பார்த்தசாரதி இவர்கள் எழுதிய மொத்த சிறுகதைத் தொகுப்புக்கள் இன்னும் இதைப் போல் சிறுகதைத் தொகுப்புகள், கவிதை தொகுப்புகள் வெளிவந்திருப்பதைப் பார்க்க என் போல் புத்தகப் பிரியர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இதைப் போன்ற பெரிய வால்யூம்களில் புத்தகத்தைப் பார்க்கும் போது ஆஹா நேரம் கிடைக்கும் போது நிறையப் படிக்கலாம் என்று மனது ஆசைப் பட்டாலும் எங்களுடைய பத்துக் கட்டளைகளுக்கு உட்பட்டு படிக்க வேண்டும். இதைப் போன்ற கனமான புத்தகங்களைக் கையாள்வதில் உள்ள சிரமம், அப்புறம் யாராவது இரவல் கேட்டால் தர மாட்டேன் என்று சொல்ல முடிவதில்லை. அப்போது சொன்னது போல் புத்தகத்தை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று விளக்கப் படங்கள் போட்டு சொல்லிவிட்டால் மித்ர துரோகம் செய்தவர்கள் ஆகிவிடுகிறோம். அல்பம் என்ற பட்டப் பேர் வேறு வந்துவிடும். இவை எல்லாவற்றையும் மீறி திரும்பத் திரும்ப அசட்டு நாவல்களைப் படிப்பதிலிருந்து நல்ல இலக்கியங்களை படிக்கட்டுமே என்ற நல்லெண்ணமும் பெருந்தன்மையும் மேலோங்கி கொடுத்து எந்த கதை உனக்குப் பிடித்திருக்கிக்கிறது என்று கேட்டு அதைப் பற்றிப் பேசும் நட்பும் சமயத்தில் தேவைப் படுகிறதே! ஹீம்! இதுக்குக் கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒருவர், ரெண்டு பேரைத் தவிர தேற மாட்டேங்கறாங்க! அப்புறம் எழுத்தாளர்கள் ஏன் இத்தனை கர்வமாக இருக்க வேண்டும்?
வெகுஜன ரசனைக்கு எழுதுகிறவர்கள் ஆகட்டும் இல்லை தீவிர இலக்கியவாதிகள் ஆகட்டும்! தங்கள் எழுத்து மேல் தன்னம்பிக்கை இருக்க வேண்டியதுதான்! அதற்காக அவர்களைப் போலவே வாசகர்களும் அதி மேதாவிகளாக இருந்து விட்டால் இவர்களைப் படிப்பதற்கு யாரும் இருக்க மாட்டர்கள் என்பதை உணருவதில்லையா? சினிமாக்காரங்கதான் இந்த மாதிரி பொது மக்கள் தொடர்பில் கில்லாடிகள்! எழுத்தாளர்களுக்கு அறிவுஜீவித்தனம் வந்து ரொம்ப தொந்தரவு செய்கிறது. உங்க எழுத்தைப் படித்து விட்டு உங்களை சாதாரண மக்களை விட உயர்ந்த நிலையில் வைத்து கேள்விகள் கேட்டால் உங்களால் ஒரு நியாயமான பதிலைத் தர முடியவில்லையென்றால் அந்த எழுத்தின் நேர்மையில் சந்தேகம் வருகிறது.

மர பீரோவில் வைத்துப் பூட்ட முடியாத அளவிற்கு புத்தகங்கள் சேர சேர இன்னொரு பெட்டி தயார் செய்து அதில் அடுக்க ஆரம்பித்தோம். என் பாட்டி, அம்மா சேர்த்து வைத்திருந்த பார்த்திபன் கனவு, துப்பறியும் சாம்பு, தில்லானா மோகனாம்பாள், தியாக பூமி, அடுத்த வீடு போன்ற கதைகளும் சேர்ந்து பெரிய பெட்டி நிறைய புத்தகங்கள்!! ஒனிடா டிவி வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்னவோ சொல்வார்களே! அதைப் போல் ஒரு மன நிலையிலிருந்தோம். அண்ணன் கல்லூரி படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டிய காலக் கட்டாயம்! உடனே அவன் சங்கராபரணம் சங்கர சாஸ்திரி மாதிரி காலில் இருந்த தண்டை! இல்லை கையில் இருந்த காப்பைக் கழட்டி அடுத்த தலைமுறைக்கு கொடுத்து உயிரை விடுவாரே அதைப் போல் இவனும் பீரோச் சாவியை என்னிடம் கொடுத்து பார்த்துக் கொள்ளச் சொல்வான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு என்பது போல் தொடர்கதைகளை கிழித்து வைக்கச் சொல்வது, யாரும் பீரோவின் பக்கத்தில் அநாவசியமாக நிற்காமல் பார்த்துக் கொள்வது போன்ற சில்லறை வேலைகளைக் கொடுத்து விட்டுப் போய்விட்டான். முதலில் கொஞ்ச நாள் அண்ணனுக்கு பயந்து பீரோ பக்கத்திலேயே யாரும் போகாமல்தான் இருந்தோம். அப்புறம் அவந்தான் இல்லையே இனிமே யார் அவனுடைய கோலியெல்லாம் எடுத்து விளையாடப் போறாங்க எனக்கு எடுத்துக் குடேன் என்று தம்பிகள் கேட்க ஆரம்பித்தனர். அண்ணன் அறிவுபூர்வத் தோழன் என்றால் தம்பிகள் விளையாட்டுத் தோழர்கள் ஆயிற்றே!அவர்கள் கெஞ்சிக் கேட்டதும் சரி எடுக்கலாம் ஆனா சாவி கிடையாதே என்று சமாளித்துப் பார்த்தேன். நீ சரின்னு சொன்னா சாவிக்கு நாங்க ஏற்பாடு செஞ்சுக்கறோம் என்று மாற்றுச் சாவி போட்டு திறக்க ஆரம்பித்தோம். முதலில் கோலிக் குண்டுகள், பம்பரங்கள், பட்டம் செய்வதற்கான உபகரணங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளைக் கூட்டத்தினரின் குகையிலிருந்து அலிபாபா திருடியது போல் எடுத்து பீரோவே கிட்டத்தட்ட காலியாகும் நிலை! ஆனால் அப்போது கூட புத்தகங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. லீவுக்கு வரும் போது திறந்து பார்த்து கண்டு பிடித்து கத்தி கலாட்டாப் பண்ணிப் பார்த்தான். யாரும் கண்டுக்கவேயில்லை. மாற்றுச் சாவி போட்டு திறந்த உண்மையை உளறாமல் ரகசியத்தைக் காப்பாற்றி விட்டோம். அப்புறம் நானும் காலேஜ் படிக்க வெளியூர் போன பிறகுதான் உண்மையான கொள்ளை நடந்து விட்டது. ஒரு தம்பி ஒளரங்கசீப் மாதிரி! அவனுக்கும் கலை இலக்கியம் கதை எதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்து விடுவான். இப்போது கூட ஹாங்காங்கில் வீ¤டியோ கடையிலிருந்து போன் செய்வான். என்ன சினிமா பார்க்கலாம்? என்று விசாரித்து விட்டு விசிடி வாங்கிக் கொண்டுப் போவான். “அழகிய தீயே” பாரு என்று கடைசியாக பரிந்துரைத்தப் படம். கடைசித் தம்பிதான் தமிழ்வாணன் கதையைப் படிக்க முயற்சி செய்தான். அவனுக்கு நண்பர்களிடம் சாமர்த்தியமாக நடந்து கொள்ளத் தெரியாத அப்பாவி! அவன்தான் யாராவது நண்பர்கள் கேட்கிறார்கள் என்று திறந்து எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும். இப்படி நிறைய கதைகள் காணாமல் போக, பெட்டியில் போட்டுப் பூட்டியக் கதைகளும் கறையான் அரித்து மிஞ்சியதையும் வேண்டாம் என்று வெறுத்து நாங்களே முன் வந்து யாருக்கோ கொடுத்து விட்டோம். அண்ணன் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்ததும் மீண்டும் இந்தப் பழக்கம் தொடங்கி நிறைய புத்தகம் வாங்கி அடுக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் முன்பு போலில்லாமல் யார் கேட்டாலும் கொடுத்து அவர்கள் படிப்பதைப் பார்த்து மகிழும் அற்புத மனது இருவருக்கும் தோன்றி விட்டது. அம்பையின் 'அம்மா ஒரு கொலை செய்தாள்' தொகுப்பைக் கொடுத்து என் நெருங்கிய தோழிகள் அனைவரையும் பெண் எழுத்தாளர்கள் பெண்களைப் பற்றி எழுத வேண்டும் என்றெல்லாம் பேசுவோமே இவங்க கதைகளைப் படித்துப் பார் ஒரு பெண்ணின் குரல் எப்படி ஒலிக்கிறது என்று அனைவரையும் படிக்க வைத்து உணரச் செய்த மனது மெல்ல முதிர்ச்சியடையத் தொடங்கியது.

முதலில் துப்பறியும் கதைகள், நாவல்கள் என்று தொடங்கிய பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல விஷயங்களைத் தேடி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி விட்டது. தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' படித்து விட்டு ஏற்பட்ட பிரமிப்பு இன்னும் மாறவில்லை. 'மரப்பசு' அம்மணிதான் ஒரு பெண்மையின் இறுதியான விடுதலையோ? இப்படியெல்லாம் யோசிக்க வைத்தக் கதைகள் நிறைய இருந்தாலும் அவரது 'தீர்மானம்' என்ற சிறுகதை! அதை படிக்கும் போதெல்லாம் .. ..

முதல் முதலில் படிக்கும் போது பதிமூணு வயதிருக்கும். விக்கி விக்கி அழத் தோன்றியது. பத்து பதினோரு வயது சிறுமி! அந்தக் கால வழக்கப்படி சீக்கிரம் கல்யாணம் ஆகியிருக்கும். அதில் ஏதோ ஏமாற்றிவிட்டார்கள் என்ற கோபத்தில் பெண்ணின் அப்பா பெண்ணை புகுந்த வீட்டுத் தொடர்பு இல்லாமல் வளர்க்கிறார். அப்பா இல்லாத சமயம் மாமனாரும், சின்ன மாமனாரும் வந்து கூப்பிடுவார்கள். இந்தப் பெண் குங்குமத்தை எடுத்து இட்டுக் கொண்டு கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பாவாடையையும் சுருட்டிக் கொண்டு அவர்களோடு கிளம்பிவிடுவாள். வீட்டில் இருக்கும் அத்தை பதைபதைத்துப் போய்விடுவாள். அத்தை அப்பா வந்தால் சொல்லிவிடு அவாத்துலே என்னைக் கூப்பிடறா நான் கிளம்பறேன் என்று கிளம்பி விடுவாள். கிளம்பிப் போனதும் பக்கத்து வீட்டு மாமி வந்து என்ன தீர்மானம் இத்தனூண்டு பெண் கிட்ட என்று மாய்ந்து மாய்ந்து போவாள். அப்பா வந்ததும் அத்தை புலம்புவாள். யம கிங்கிரர்கள் மாதிரி ரெண்டு பேரும் கூப்பிட்டதும் கிளம்பிப் போய்டுத்தே பசிக்கறதுன்னா ஒருவாய் சாப்பிடக் கூட இல்லை என்று பொருமுவாள். அப்பா உடனே குழம்பு சாதத்தை எடுத்துக் கட்டிக் கொண்டு கிளப்புவார். அப்பா வண்டி வருவதைப் பார்த்து நிறுத்த அப்பா சாப்பிடாமலேயே போய்ட்டியே என்று சாப்பிடத்தருவார். மிச்ச சாப்பாட்டை ஆற்றில் தூக்கி வீசிவிடுவார். அப்பா நீ எங்காத்துக்கு வருவியாப்பா என்று அந்தப் பெண் கேட்க நீ என்னைப் பார்க்க வா என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார். அந்தக் கதையைப் படிக்கும் போது நானும் அந்தப்
பெண்ணைப் போலத்தான் என்று நினைத்து ஒரு துக்கம் பொங்கும். அந்த பதிமூணு வயது திரும்ப வந்தது போல் மனது பேயாட்டம் போடும். உண்மையிலேயே எனக்குத் திருமணம் ஆனதும் எனக்கு மட்டுமில்லை எல்லாப் பெண்களுக்கும் திருமணம் ஆகிப் போகும் போது பொங்குகிற துக்கம் தான் இது. வீட்டுக்கு ஒரே பெண்ணாக 'குட்டி இளவரசியாக' வளைய வந்த வீடு நமக்குச் சொந்தம் இல்லை என்று எங்கேயோ அனுப்பிவிடுகிறார்களே என்ற சோகம்! அப்புறம் நம்ம வீடு, குழந்தை என்றான பிறகு அம்மா அப்பா அவசரம் என்று கூப்பிட்டால் கூட நினைத்த போது நம் வீட்டை விட்டுக் கிளம்ப முடியாத பிரச்சனைகள். ஒரே வீட்டில் ஒன்றாக இருந்தவர்கள்தானா என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ஒன்றாக சேரும் போது கூட ஒருத்தருக்கு போன் வரும். உடனே கிளம்ப வேண்டியதுதான்! பின்ன வாழ்க்கையிலேயே முக்கிய உறவான அவங்க வீட்டம்மா கூப்பீட்டால் ஓட வேண்டியதுதானே என்று எங்களை நாங்களே சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான்!

வளர்ச்சி என்பது இப்படித்தான் நிகழ வேண்டும் என்று யாரும் அட்டவணைப் போட்டுப் பார்க்க முடிவதில்லை. நம் கண்ணெதிரே பார்பி பொம்மைக் கேட்டு அடம் பிடிக்கும் பெண் 'ஸ்டார்டஸ்ட்' பார்த்துக் கொண்டு அம்மா இதில் யார் ரொம்ப ஹேன்ட்ஸம் என்று கேட்கும் போது ஒரு கணம் தூக்கி வாரிப் போடுகிறது. இந்த ஹார்மோன் மாற்றங்கள் போலத்தான் ரசனைகளும் வளர்கின்றது. ஆனால் நிறையப் பேர் படிக்கிறோம் என்கிறார்கள். ஆனால் அதில் வளர்ச்சி என்பது எப்பவோ நின்று விட்டது போல் இருக்கிறது. சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, சிவசங்கரியோட இல்லை இன்னும் சில தீவிர தமிழ் ஆர்வலர்கள் நாபா, முவ, ஜெயகாந்தன் என்று அதற்கு மேல் வளராமல் நிற்பது குறைபாடுதான் என்பதை உணராமல் இருக்கிறார்கள். ஜேகே ஓஷோ என்று எக்ஸ்ஸிஸ்டென்ஷியலிசம், சர்ரியலிசமெல்லாம் படிக்க வேண்டாம். அட நம்ப ஜெயகாந்தனுக்கு அப்புறம் இப்போ ஜெயமோகனெல்லாம் வந்து பிரமாதமாக எழுதுகிறாரே என்று யோசிக்க வேண்டாமா? பாரதி, கண்ணதாசனுக்கு அப்புறம் கவிதைக்கு ஆளே இல்லை என்று வேறெதையும் படிக்காத பிடிவாதம் விதண்டாவாதம்தான்! மீராவின் கனவுகள் + கற்பனைகள் படித்து விட்டு எத்தனைக் காதலர்கள் கவிஞன் ஆக வேண்டும் என்ற கனவுகள் + கற்பனைகளோடு அலைந்தார்களோ? இப்ப ந முத்துக்குமார் எழுதிய கவிதைகள்!சினிமாவுக்குப் பாட்டு எழுதும் முகமூடி இருந்தாலும் பிரமாதமாக எழுதுகிறார். புதியதாக மனதுக்கு நிறைவைத் தரும் எதுவுமே ஒரு இலக்கிய அந்தஸ்து பெற்று விடுகிறது. சினிமா மெட்டுக்கு பாட்டு எழுதினால் நல்ல கவிதை இல்லை என்ற ஒரு அபத்தக் கருத்து நிலவுகிறது. இந்த மாதிரி சினிமாப் பாட்டு மட்டும் இல்லையென்றால் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போவதற்கு வேறு என்ன ஊடகம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
ஊருக்குப் போகும் போது புத்தகங்கள் வாங்கி இன்னும் இருவரும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். எந்த நல்ல விஷயத்தையும் இன்னும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை. சமீபத்தில்தான் அவனுடைய பீரோவுக்கு மாற்றுச் சாவிப் போட்டு திறந்த விஷயத்தை உளறி வைத்தேன். ரொம்ப மூட் அவுட் ஆகி என் கணவரிடம் உன் மனைவியால் எனக்கு எக்கச்சக்க மனக் கஷ்டம். நீதான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். அட்லீஸ்ட் ஒரு மில்லியனாவது தர வேண்டும் என்று புலம்ப இந்த விஷயம் உன் தங்கையாய் இருந்தப்ப நடந்த விஷயம் இப்ப என் மனைவியாக ஆன பிறகு இதைப் பற்றி பேசி வம்பு வளர்த்ததற்கு நீதான் நஷ்ட ஈடு தர வேண்டும் இருவரும் கொஞ்ச நேரம் சட்ட நுணுக்கங்களைப் பற்றி நட்புடன் பேசிக்கொண்டார்கள்.

“ மிக உயர்ந்த பிறப்பு பெண்தான்! தெரியுமா? உங்களுக்கு எக்ஸ்ஒய் குரோமோசோம் என்பதெல்லாம் அபத்தம். ஒரு எக்ஸ் ஆண் இல்லை ரெண்டு எக்ஸ் பெண் என்பதுதான் சமீபத்திய கண்டுபிடிப்பு. ஒய் இருப்பது சும்மா! என்று நான் எதாவது விஞ்ஞானபூர்வமாக பேசி பெண்களுக்காகக் குரல் கொடுத்தால் எதுக்கு இவளுக்கு இப்படி இடம் கொடுத்து கெடுத்துட்டீங்க என்று செல்லமாக கண்டிக்கும் அண்ணன்! உலத்தில் எல்லா அண்ணன்களும் கல்யாணம் ஆகிப் போகும் தங்கைக்கு என்ன சொல்வார்களோ தெரியாது. ஆனால் உன்னில் இருக்கும் நீ தொலைந்து போகும் படி ஒரு உறவில் நிர்ப்பந்தங்கள் இருந்தால் நீ எந்த யோசனையும் இல்லாமல் தைரியமாக எந்த முடிவும் எடுக்கலாம் என்று சித்ரா என்ற தனித்துவம் மாறாமல் இருக்க ஆலோசனை சொன்ன அதிசயப் பிறவி ஆயிற்றே!

இப்போது கூட யார் வீட்டுக்காவது போகும் போது அவர்கள் வீட்டில் பழைய பத்திரிகைகளிலிருந்து கிழித்து சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களைப் பார்த்தால் பரவசமாக இருக்கிறது. பழைய சினிமா விமர்சனங்கள், ஜோக்குகள், விளம்பரங்கள் இவற்றோடு அதைப் படிப்பதே ஒரு தனி சுகம்தான்.தில்லானா மோகனாம்பாள் படிக்கும் போது “அய் அம்மா அப்பா உங்க கல்யாண போட்டொ வந்திருக்கு” என்று ஆச்சரியப்பட வைக்கும். என் அம்மா அப்பா மட்டுமில்லை என் அத்தைகள், மற்றும் எங்க குடும்பத்தின் நிறைய கல்யாணக் காட்சிகளைப் பழைய ஆனந்த விகடன் தொடர்கதைகளில் பார்க்கலாம். இதில் ஒரு சின்ன ரகசியம் இருக்கிறது. என்ன? என்ன? அது என்ன? விகடன் குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கும் ஒரு உறவு முறை!

எல்லாவற்றையும் மன்னித்தாலும் அப்புசாமித் தாத்தாக் கதைகளும், தீவிர சிவாஜி ரசிகனான அவன் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தொகுத்த சிவாஜியின் முதல் நூறு படங்களின் ஸ்டில்களோடு சிவாஜியே அந்த நூறு படங்களை பற்றி சின்ன கமென்ட் கொடுத்திருப்பார். அந்த புத்தகமும் தொலைந்து போனதை மட்டும் அவனால் மன்னிக்கவே முடியவில்லை. நானும் அவனைப் போலவே சிவாஜி ரசிகையானதால் கண்டிப்பாக என்னால் அந்தப் புத்தகம் தொலைய வாய்ப்பில்லை என்பதை நிரூபித்து விட்டேன். பரவாயில்லை ஃபிலிம் நியூஸ் ஆனந்தனிடமே அந்த புத்தகத்திற்கு இன்னொரு பிரதி இருக்கிறதா என்று போய்க் கேட்டுப் பார்ப்போம் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறோம். இதைப் படிப்பவர்கள் யாரிடமாவது இருந்தால் கொடுக்கலாம். ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம். ஆனால் அந்த ஒரேஒரு முறை பார்ப்பதற்கு எத்தனை நாளாகும் என்பதைத்தான் தீர்மானம் செய்யவில்லை. அப்படித் திருப்பித் தர முடியவில்லையென்றாலும் கவலைப் பட வேண்டாம். நிறைய நஷ்டஈடு தர நான் ஏற்பாடு செய்கிறேன். யாரிடமாவது இருக்கிறதா? இன்னும் அந்த பீரோ பத்திரமாக இருக்கிறது. அதிலிருந்து கடைசியாக கொள்ளை அடிக்க முயற்சி செய்தது என் பையனும் என் அண்ணன் பையனும் சேர்ந்து! ஒரு ஸ்டாம்ப் ஆல்பம், உபயோகிக்கும் நிலையில் இருந்த வியூ மாஸ்டர்! இரண்டையுமே என் மருமகன் எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுக் கொடுத்து விட்டேன். பாவம்! இதுவாவது அண்ணன் பையனுக்கு அவன் அப்பா சொத்து என்று போகட்டும் என்று!

ஆனால் இன்னும் அந்த பீரோவுக்குப் பெயர் 'கோபால் பீரோ”!

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்
kjramesh@pacific.net.sg

ஆட்டோகிராஃப் -18 - “பூங்கதவே தாள் திறவாய்”

சித்ரா ரமேஷ்

வாசித்தல் என்பது சுவாசித்தல் மாதிரி நிகழ வேண்டும். கையில் பொட்டலம் கட்டி வந்த பேப்பர் கிடைத்தால் கூட படிப்பேன். சிறு வயதிலிருந்தே 'விதரிங் ஹைட்ஸ்', 'டேல் ஆஃப் டூ சிடீஸ்', 'விக்கார் ஆஃப் தி வேக் ஃபீல்ட்', 'பிரைட் அண்ட் ப்ரெஜுடிஸ்' போன்ற அற்புத இலக்கியங்களைப் படித்து மனதை மேன்மைப் படுத்திக் கொண்டேன்!!ஹீ!ஹீ!ஹீ!ஹீ! இப்படியெல்லாம் நான் எழுதி நீங்க நம்பத் தொடங்கினா இந்த ஆட்டோகிராஃப் படிப்பதைப் பற்றி கொஞ்சம் மறு பரிசீலனை செய்யுங்க! கபட வேடதாரிகள் நிறைந்த உலகம் இது! இதையெல்லாம் படிப்பதற்கு நான் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போர்டிங் ஸ்கூலில் கன்யாஸ்திரீகள் பொறுப்பில் வளர்ந்த கான்வெண்ட் பெண்ணா? பக்கத்து வீட்டு தினத்தந்தியில் தினமும் “பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்” என்று ஆண்டிப் பண்டாரம் 'குறும்பாகப்' பாடுவதையும், “லைலா என்ன இது?” “வேண்டாம் சிந்துபாத்!” சிந்துபாத் கத்தியை உருவினான். தொடரும். சி10235. என்று படித்து குட்டி லைலாவுக்கு என்ன ஆகுமோ என்று மனம் பதைத்தவள்! தினத்தந்தியில் ஆண்டிபண்டாரம் கிட்டத்தட்ட ஆயிரம் முறையாவது குளிக்கும் அழகிகளை பார்த்து பாடியிருப்பார். இது என்ன கலாச்சாரமோ? கிரஹச்சாரம்! மேல் மட்ட வர்க்கத்தினரின் கையில் இலக்கியம் இருக்கட்டும். செய்திகளாவது எல்லோருக்கும் போய் சேரட்டும் என்று தினத்தந்தி பாமரர்கள் கூட படிக்கும் வகையில் உருவாக்கியதை எல்லோரும் புகழட்டும். கூடவே கொஞ்சம் கொஞ்சமாவது ஒரு நல்ல ரசனையையும் வளர்த்து விட்டிருக்கலாம். இதையெல்லாம் எல்லோரும் படிக்க மாட்டார்கள் என்று யாரும் தீர்மானிக்க முடியாது. எப்படியோ நமக்குத் தேவையான அக்கப்போரை நம்பிக்கையான முறையில் கொடுத்து வந்த தினத்தந்தியின் வியாபாரத்தந்திரத்தை பாராட்டாமல் இருக்க முடியாதுதான்! ஒரு செய்தி! ஆளில்லா ரயில்பாதையில் பஸ் மோதி 22 பேர் சாவு! இதில் இறந்து போனவரில் ஒருவர் வசந்தி. வயது 32! குறிப்பு: இவர் ஒரு எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்ததே! பின்குறிப்பு: இவர் எழுத்தாளர் வாசந்தி இல்லை! இப்படி ஒரு செய்தியை தினத்தந்தி மட்டுமே தர முடியும்!

சித்திரக் கதைகளை எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்த போது கூட 'வேதாளம்' கதைகள் புரியாது! வேதாளம் முத்திரை எதற்கு இடுகிறார்? ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கும் ஆதிவாசிகளின் இங்கிலிஷ் மன்னரான 'வேதாளம்' கதை கொஞ்சம் நம்ப கலாச்சாரத்துக்கு மாறுபட்டதுதானே! “மரண அடி மல்லப்பா” “அஞ்சு பைசா அம்மு” போன்ற குமுதம் காமடி ஸ்ட்ரிப்! குமுதம் மாலைமதி இதழ் முதலில் குழந்தைகளுக்கான சித்திரக் கதைகள் தான் வெளியிட்டார்கள். 'காதல் காவலர் அப்புசாமி, ரத்தினசாமிக்கு ஜே, குண்டுபூபதி போன்ற கதைகளை அண்ணன் அம்மாவை அரித்து காசு வாங்கி வாங்கிக் கொண்டு வந்து விடுவான். யார் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ தெரியாது! நம்மிடம் அந்த புத்தகத்தைக் கண்ணில் கூட காட்டாமல் மறைத்து வைப்பதில் மன்னன். கெஞ்சிக் கூத்தாடி அம்மா வரைக்கும் போய் நாட்டாமைத் தீர்ப்புக்குக் கட்டுப் பட்டு ஒருமணி நேரத்துக்குள் தந்து விட வேண்டும் என்று பின்னாலேயே சுற்றிக் கொண்டிருப்பான். எப்படித்தான் இப்படி அல்பமாக இருக்கிறாயோ என்று என்ன திட்டினாலும் கண்டு கொள்ளாமல் புத்தகத்தை வாங்கி அவனுடைய பொக்கிஷக் கருவூலமான மர பீரோவில் வைத்துப் பூட்டினால்தான் ஜென்ம சாபல்யமடைவான். அந்த மர பீரோவுக்கு பூட்டு சாவியெல்லாம் கிடையாது. இவனே அதுக்கு பாட்லாக், சாவியெல்லாம் வாங்கி பொருத்தி பூட்டி சாவியை யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துக் கொண்டு அலைவான். மெட்றாஸ் போகும் போது மூர் மார்க்கெட் என்று ஒரு நிதி நிறுவனம் இருக்கும். அதில் பழைய புத்தகங்கள், பழைய கண்ணன் இதழ்கள், ராணிமுத்து எல்லாம் வாங்கி பத்திரப் படுத்துவான். புத்தகம் வாங்குவது படிப்பதற்காகத்தான் என்று யாராவது அவனிடம் உரத்தக் குரலில் சொன்னால் தேவலை. அவன் வாங்கியப் புத்தகத்தை அவனே கூட சில சமயம் படிக்காமல் லைப்ரரியிலிருந்து எடுத்து படிக்கும் கூத்தெல்லாம் உண்டு!

எப்படியோ பெரியவன் என்று சலுகையில் இதைப் போன்ற கொடுங்கோலாட்சி செய்து
கொண்டிருந்தான். அவன் தராததால் நானும் புத்தகம் வாங்க வேண்டும் என்று தகறாறு செய்ய ஆரம்பித்ததும்தான் அமைதிக் குழு ஏற்பாட்டின் பேரில் எனக்கும் புத்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. அப்படியும் புத்தகங்களை லேசில் எடுத்து யாருக்கும் கொடுத்து விட மாட்டான். அவனுடைய நெருங்கிய நண்பனுக்கு ஒரே ஒரு புத்தகம் இரவல் கொடுத்து விட்டு மறு நாளே அவன் வீட்டிலிருந்து அதை தூக்கிக் கொண்டு வந்து விட்டான். கேட்டதற்கு இவன் சொன்ன மாதிரி நடந்து கொள்ளவில்லை என்று பதில்! புத்தகத்தைக் கசக்கக் கூடாது. மடிக்கக் கூடாது. எச்சில் பண்ணி பக்கங்களைப் புரட்டக் கூடாது. படித்துக் கொண்டிருக்கும் போது வேறு ஏதாவது வேலை வந்து விட்டால் அதை அப்படியே மடக்கி போட்டு விட்டு போகக் கூடாது. புத்தகத்தின் ஓரம் மடித்து அடையாளம் வைக்கக் கூடாது. என்று அவன் சொன்ன கட்டளைகளுக்குக் கட்டுப் பட்டுத்தானே நடந்து கொண்டேன் என்று அந்த நண்பன் பரிதாபமாகக் கேட்க “நா வீட்டுக்கு வந்தப்ப உங்கக்கா இந்தப் புத்தகத்தை எடுத்து பாத்துக்கிட்டு இருந்தாங்களே?” என்று சொன்னதும் நொந்து போய்விட்டான். ஆமாம் அவன் சொன்ன கட்டளைகள் அந்த அக்காவுக்கு எப்படித் தெரியும்? அப்படியேத் தெரிந்தாலும் கட்டுப் பட்டு நடக்கவில்லையென்றால் அந்த அக்காவிடம் கேட்க முடியுமா? இந்த விளக்கத்தைக் கேட்டு அந்த நண்பன் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் போய்விட்டான். ஆனால் எனக்கு என்னவோ அண்ணனின் கோபம் நியாயமாகத்தான் பட்டது! சொந்தத் தம்பி தங்கைக்கே தராதவன் அந்த நண்பனுக்கு கொடுத்தான் என்றால் அந்த நண்பன்தான் அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்! இப்பொது கூட யார் வீட்டுக்காவது போய் அங்கே புத்தகங்கள் விரித்தபடி கவிழ்ந்து கிடந்தால் நான் எடுத்து “ ஏய்! நீ படிச்சிக்கிட்டு இருந்தது 235வது பக்கம் என்று சொல்லி புத்தகத்தை சரியாக வைத்துவிடுவேன். ஒருத்தி சாமர்த்தியமாக “புக் பாட்டுக்கு கிடக்கு! அதை ஏன் எடுத்து மூடறே! நீ சொல்ற பக்கமெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்காதுன்னு சொல்லப் போக படிக்கிற புத்தகத்தில் என்ன படிக்கிறோம்னு ஞாபகம் வெச்சுக்க முடியலைன்னா நீ புத்தகம் படிப்பதே வேஸ்ட் என்று பதில் சொல்லியதிலிருந்து அவள் என்னைப் பார்த்தாலே பதுங்குக் குழியில் இருக்கும் வீரனைப் போல் ஆகி விடுகிறாள். எல்லாம் அண்ணன் காட்டிய வழிதான்!

சோவியத் யூனியன் புத்தகக் கண்காட்சி வருடாவருடம் வரும். அதில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் பிரமாதமாக இருக்கும். நல்ல கெட்டியான அட்டையுடன் மழமழவென்ற ஆர்ட் பேப்பரில், வண்ணப் படங்களோடு எளிமையான ஆங்கிலம் இல்லை அழகான மொழிபெயர்ப்போடு புத்தகங்கள். எல்ல்லோருக்கும் காசு கொடுத்து ஏதாவது வாங்கிக் கொள்ளச் சொல்லும் அம்மா! இதற்கு மறுப்பேதும் சொல்லாத அண்ணன்! எப்படியும் படித்து முடித்தவுடன் அவனிடம் வந்து சேர்ந்து விடுமென்ற நம்பிக்கைதான்! “தூக்கம் பிடிக்கவில்லை சிறுமி மாஷாவுக்கு” கதைத் தலைப்பே கவிதை மாதிரி இல்லை! அழகான இளம்சிவப்பு நிற படுக்கையறை! இரவு உடையோடு ஒரு குட்டிப் பெண்! அவளுக்குக் கதை சொல்லி தூங்க வைக்கும் அம்மா! வரிசையாக கறுப்பு ஜமுக்காளத்தில் தலைகாணி போட்டுக் கொண்டு இன்னிக்கு யார் அம்மா பக்கத்தில் என்று சண்டை போட்டுக் கொண்டு படுக்கும் எங்களுக்கு யாரும் என் பக்கத்துலே வேண்டாம் எல்லாரும் உதைச்சே கொன்னுடுவீங்கன்னு அம்மா மறுப்பு சொன்னாலும் எதாவது ஒரு குழந்தை அருகிலாவது படுக்கத்தான் வேண்டியிருக்கும், இந்தக் கதைகள் ஆச்சரியமூட்ட வைத்தன. அம்மா கதை சொல்லி தூங்க வைத்தும் தூக்கம் வராமல் வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டத்தில் போய் நின்று விடுகிறாள். அங்கே ஒரு ஆந்தை மரக்கிளையில் தன்னுடன் வந்து இருக்கும் படி கேட்கும். அப்புறம் ஒரு தவளை தன்னுடன் தண்ணீரில் வந்து படுத்துக் கொள்ளும் படிச் சொல்லும். இப்படி எல்லா இடத்திற்கும் போய் சுற்றி விட்டு உலகத்திலேயே சிறந்த இடம் என் பெட் ரூம்தானென்று முடிவுக்கு வந்து நிம்மதியாகத் தூங்குவாள் சிறுமி மாஷா! அதிசய ஏழு நிறப்பூ! என்ற கதை! இதைத் தழுவித்தான் சமீபத்தில் நம்ப சூப்பர் ஸ்டார் பாபா கூட வந்தது. ஏழு வண்ண இதழ்கள் கொண்ட பூ ஒன்று ஒறு சிறுமியிடம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இதழையும் பிய்த்து “பறப்பாய் பறப்பாய் பூவிதழே! கிழக்கிலிருந்து மேற்காய், மேற்கிலிருந்து வடக்காய், வடக்கிலிருந்து தெற்காய், மீண்டும் தெற்கிலிருந்து கிழக்காய்” என்று அற்புத மந்திரத்தைச் சொல்லி தனக்கு விருப்பப் படுவதைக் கேட்பாள். முதல் முறை ஐஸ்கிரீம், இரண்டாம் முறை வடதுருவத்துக்குப் போவதற்கு, மூன்றாம் முறை வடதுருவத்திலிருந்து வீடு திரும்புவதற்கு என்று எல்லாவற்றையும் வீணடித்து விட்டு கடைசி இதழ் இருக்கும் போது ஒரு கால் ஊனமான சிறுவனுக்கு உதவுவாள். சிறுமி இப்படி விளையாட்டுத்தனமாக இருந்தால் ரசிக்க முடியும். ரிட்டயர் ஆகிற வயசில் ஒருவர் இப்படி விளையாட்டுத்தனமாக வீணடித்தால் ரசிக்க முடியுமா?

“மறைந்த தந்தி” 'சுக்' 'கெக்' மாஸ்கோவில் இருக்கும் இரட்டைச் சிறுவர்கள். அப்பா சைபீரியக் காட்டில் வேலை செய்யும் ஆஃபிஸர். கிறிஸ்மஸ்ஸ§க்கு அப்பா வேலை செய்யும் அந்த காட்டுப் பகுதிக்குப் போகலாம் என்று திட்டமிடும் அம்மா டிக்கட் வாங்கப் போயிருக்கும் போது ஒரு தந்தி வரும். அதை இருவரும் சண்டை போடும் மும்முரத்தில் தொலைத்து விடுவார்கள். “அம்மா வந்து தந்தி எங்கே என்று கேட்பாள்” என்று சுக் பயப்படுவான். கெக் கொஞ்சம் தைரியசாலி. அம்மாவிடம் தந்தி வரவேயில்லை என்று சொல்லிவிடலாம் என்று தைரியம் சொல்வான். பொய் சொன்னால் அம்மாவுக்குப் பிடிக்காதே! உலகத்தில் எல்லா அம்மாக்களும் ஒன்றுதான் போல இருக்கிறது! அம்மா வந்து தந்தி எங்கே என்று கேட்டால் உண்மையை சொல்லிவிடலாம் என்று இருவரும் தீர்மானிப்பார்கள். அம்மாவுக்குத்தான் தந்தி வந்ததே தெரியாதே! தெரிந்தால்தானே கேட்பாள்! கடைசியில் ரொம்ப கஷ்டப்பட்டு அப்பாயிருக்கும் அந்த பனி படர்ந்த காட்டுக்குள் போய் அங்கே அப்பா இல்லாமல் ஒரு காவல்காரன் மட்டும் இருப்பான். அப்பா கொடுத்த தந்தியைப் பற்றித் தெரிந்து கொண்டு அம்மா எப்படியோ நிலைமையைச் சமாளித்து அப்பாவும் அவர்களுடன் கிறிஸ்மஸ்ஸ§க்கு வந்து சேர்ந்து விடுவார். இந்தக் கதைகள் நம்மைக் கதையோடு பயணம் செய்ய வைக்கும். சோவியத் யூனியன் உடைந்து சிதறிப் போனதில் இப்படி ஒரு இலக்கிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதோ? பாவம் ரஜனிக்கு கதை சொல்லி சொல்லி ஓய்ந்து போன கதாசிரியர்களுக்கு ஒரு டிப்ஸ்! இந்த “மறைந்ததந்தி” கதையை உல்ட்டாப் பண்ணி சூப்பராக் கதை சொல்லலாம். “சுக்” “கெக்” என்று இரட்டை வேஷங்களூம் ரஜனியே நடிக்கலாம். இரண்டு கதாநாயகிகள்! ஒரு காட்டுவாசிப் பெண்! ஒரு நகரப் பெண்! இது இல்லாமல் முறைப் பெண் என்று மூன்றாவது கதாநாயகியைக் கூட சேர்த்துக் கொள்ளலாம். சைபிரியக் காடுகளில் லொகெஷன்! இதுவரை யாரும் படம் பிடிக்காத லொகெஷன்! டைட்டில் சாங் கூட பிரமாதமாக எழுதிவிடலாம்.

சினிமாப் பாட்டுப் புத்தகங்கள்! இசைத் தட்டு வடிவத்திலேயே ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகம் வந்ததே என்ன சினிமான்னு நினைவு இருக்கா? கண்டு பிடியுங்க! திண்ணை ஆசிரியரிடம் சொல்லி அந்தப் பாட்டுகளை உங்கள் கணினியில் இலவசமாக “இறக்குமதி” செய்யச் சொல்கிறேன். பாட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் கதைச் சுருக்கம் போட்டிருக்கும். சேகர் அந்த சுந்தரியைச் சந்தித்தானா? காணாமல் போனக் குழந்தை என்ன ஆயிற்று? ராஜூ இழந்த சொத்தை மீண்டும் பெற்றாரா? விமாலாவுக்குப் பைத்தியம் தெளிந்ததா? போன்ற கேள்விகளுக்கு வெள்ளித்திரையில் தெள்ளென பதில்! “மணாளனே மங்கையின் பாக்கியம்” படத்தின் கதையில் கதைச் சுருக்கத்தை விட இதைப் போன்ற கேள்விகள் நிறைய இருந்தது. படம் முடியுமா என்ற சந்தேகமே வந்து விட்டது! 18 ரீல் படத்தில் இப்படி முடிச்சு மேல் முடிச்சு போட்டுத் தெளிய வைப்பதுதானே சரியான டெக்னிக்! பாட்டு புத்தகத்தை வைத்துக் கொண்டு பாட்டுப் பாடுவதுக் கூட ஒரு கலை! பாடல் ஆரம்பத்தில் தொகையறா என்றெல்லாம் இருக்கும். அதை போய் தொகையறா என்று பாடினால்! ஹிந்தி படப் பாட்டு புத்தகமெல்லாம் வாங்கி வேறு பாடிப் பார்ப்போம். “மேரி சப்னேக்கி ராணி கப்பு ஆயே கித்தூ” முதல் வரி பழகி விட்டிருப்பதால் பாடிவிடலாம். அப்புறம் ஆயி கிஸ் மஸ்தானே என்று வாயில் நுழையாத வார்த்தையெல்லாம் வந்து பாடவிடாமல் செய்யும்.

பத்திரிகைகளில் வரும் தொடர்கதைகளை கிழித்து 'பைண்ட்' பண்ணி பீரோவுக்குள் வைப்பது, அந்த மர பீரோவில் புத்தகங்கள் மட்டுமில்லை. கோலிக் குண்டு, சீட்டுக் கட்டு, சோடாமூடி, சிகரெட் அட்டைகள், டுவைன் நூல்கண்டு, கோணிஊசி, பாட்டரி, கிரீட்டிங்ஸ் கார்ட்ஸ், பழைய பொம்மைகளின் உடைந்த சக்கரம், இன்னும் விளையாடக் கூடிய நிலையில் இருக்கும் தகரப்பொம்மைகள், முட்டை போடும் கோழி, கொக் கொக் என்று கொத்தும் கோழி, பம்பரம், நாங்களே செய்த கெலிடாஸ்கோப், கண்ணாடிக் கடையிலிருந்து நீளமான கண்ணாடித் துண்டுகளை எடுத்து வந்து முப்பட்டையாக்கிக் கட்டி உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளைப் போட்டு ஒரு லென்ஸ் வைத்துப் பார்த்தால் கெலிடாஸ்கோப், எங்க குடும்பச் சொத்தான வியூ மாஸ்டர் இதில் முப்பரிமாணத்தில் படங்கள் தெரியும். நேரு வாழ்க்கை வரலாறு, தம்ப்லீனா, இந்திய நடனங்கள், ஸ்நோவொயிட் என்று வியூ மாஸ்டரில் பார்ப்பதற்கு சின்ன வட்ட வடிவமான புகைப்படங்கள். கலர்ல பார்ப்பதற்கு பிரமாதமாக இருக்கும். சின்ன சின்ன ஃபிலிம் துண்டுகள் எங்கிருந்தோ கொண்டு வருவான். அதை இருட்டில் சினிமா மாதிரி போட்டுக் காட்டுவான். அந்த வயதில் அண்ணன்தான் எங்களுக்குப் பெரியா ஹீரோ! இப்படி கையில் கிடைப்பதையெல்லாம் சேர்த்து உள்ளே வைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவனின் பீரோ எனக்கும் என் தம்பிகளுக்கும் ஒரு கனவுப் பிரதேசமாக இருந்தது. அவன் வாரம் ஒருமுறை அதைத் திறக்கும் போது அதைச் சுற்றி உட்கார்ந்து கண்கள் விரியப் பார்த்துக் கொண்டிருப்போம். தீசல்! எதையும் தொட விட மாட்டான். இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்க்காமல் என் அம்மா
“ஏண்டா பெரியவனா இருந்துண்டு இப்படி இருக்கே! அதுங்கக் கையிலே எதையாவது கொடேன். நாளைக்குத் தம்பி தங்கைகளுக்கு நீ ஏதாவது பண்ணிடுவியா?' என்று வீராவேசமாகக் கேட்டால் கொஞ்சம் மனமிறங்கி வியூ மாஸ்டரைப் பார்ப்பதற்கு வாய்ப்புத் தருவான். இரண்டு மூன்று உடைந்த பம்பரத்தை எடுத்து ஆணி அடித்து தருவதாக வாக்குத் தருவான். எனக்குப் போனால் போகிறது என்று பெருந்தன்மையாக சேர்த்து தைத்து வைத்திருக்கும் பாட்டு புத்தகத்தையோ அல்லது அவனுக்குப் பிடிக்காத ராணிமுத்து புத்தகத்தையோ படிக்கத் தருவான். இப்படி மூன்றாம் முறையாக “பாரு பாரு பட்டணம் பாரு” என்ற குரும்பூர் குப்புசாமி எழுதிய ராணிமுத்துவைக் கொடுக்க ரோஷம் வந்து வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து விட்டேன். அதுக்குப் பதிலா 'படகு வீடு' கொடுத்தால்தான் ஆச்சு என்று பிடிவாதம் செய்து வாங்கி விட்டேன். பிறகு இருவரும் சேர்ந்து ஒத்த அலை வரிசையாகி 'படகு வீட்டை' சினிமாவாக எடுக்க ஸ்க்ரிப்ட் எல்லாம் கூட எழுதினோம். சிவாஜி, வாணிஸ்ரீ, நாகேஷ், முத்துராமன், எஸ்விரங்காராவ் என்று ஒரு நட்சத்திரப் பட்டாளத்தையே நடிக்க வைத்திருந்தோம். அப்புறம் ஆண்டவன் கட்டளை பார்த்து விட்டு கிட்டத்தட்ட அதே கதையை எடுப்பதில் அர்த்தமில்லை என்று கைவிட்டு விட்டோம். இதேபோல் பிவிஆர் எழுதிய “தொடுவானம்” என்று ஒரு நாவல். அதில் நர்மதா என்ற செம அழகான கர்வமான பெண்! உன் அழகுக்கு நகை நட்டு ஏதுக்கடி என்ற வார்த்தை வரும். அதைக் கூட திரைப்படமாக எடுத்துப் பார்த்தோம். என் அண்ணன் சிவாஜியைத் தவிர வேறு யாரையும் ஹீரோவாக ஒத்துக் கொள்ளவே மாட்டான். தொடுவானம் ஹீரோயின் சப்ஜெக்ட். இதில் நடிக்க சிவாஜி ஒத்துக் கொள்ள மாட்டார் என்று நான் சொல்லி விட்டேன். லஷ்மி அப்போ இந்த கர்வம் பிடிச்ச கேரக்டரெல்லாம் பிரமாதமாதமாக நடிப்பாங்க! “புகுந்த வீடுன்னு ஒரு படம் நினைவிருக்கிறதா? அதை பார்த்துவிட்டு லஷ்மியை ஹீரோயின்னா போடலாம்னு முடிவு எடுத்தோம். ஜாவர்ட் சீதாராமன் எழுதிய “உடல், பொருள், ஆனந்தி”, சாண்டில்யனோட 'கடல் புறா' அப்புசாமித் தாத்தாவைக் கூட திரைப் படமாக எடுப்பதற்கு நிறைய திட்டம் வைத்திருந்தோம். என் அண்ணன் மட்டும் திரைப்படத் துறையில் நுழைந்திருந்தால் நானும் ஒரு அட்லீஸ்ட் ஒரு அஸிஸ்டண்ட் டைரக்டர் ஆகியிருப்பேன். இப்போது கூடப் பார்க்கும் போதெல்லாம்
ஏதாவது ஒரு நல்ல கதையைப் பற்றிப் பேசி அதை சினிமாவாக எடுப்பது பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. “மோகமுள்” எடுப்பதைப் பற்றி கூடப் பேசியிருக்கிறோம். எங்களுக்கு முன்பாகவே ஹீம்! அதை யாரோ எடுத்து விட்டார்கள்! அந்தக் கதையை அவர்கள் எடுக்காமலேயே இருந்திருக்கலாம். ஜமுனாவையும் படத்தில் முதலில் வரும் அரை மணி நேரம் தவிர மற்ற எதுவுமே சரியில்லை என்று படத்தைப் பார்த்து வருத்தமாகி விட்டது.

முதன் முதலில் சித்திரக் கதைகள் இல்லாமல் பெரிய கதை படித்தது தமிழ்வாணனின் 'இரண்டுபேர்'. மன்னப்பன், நலம்விரும்பி என்று இரண்டு துப்பறிவாளர்கள். முதலிலேயே நலம்விரும்பி இறந்து விடுவான். “சிலையைத் தேடி” என்று வாண்டுமாமா கதை! ஒரு தங்க புத்தர் சிலையைத் தேடி ஷீலாவும் ரவியும் புறப்படுவார்கள். கடலுக்கு அடியில் அந்த தங்கப் புத்தர் சிலை இருக்கும். இந்த மாதிரி வீர சாகசங்கள் நிறைந்த கதைகள்தான் ரொம்ப பிடிக்கும். “ஒளிவதற்கு இடமில்லை” கதையில் வரும் குறுந்தாடி டிடெக்டிவ் ரமணன், கௌசிகன் எழுதிய “சுழிகாற்று” கதையில் வரும் லேசாக காலை விந்தியபடி வரும் ரிட்டயர்ட் மிலிட்டரி டிடெக்டிவ்
நம்ப சங்கர்லால், இன்ஸ்பெக்டர் வஹாப், கத்தரிக்காய் என்று கல்கண்டுக் கதைகள்.
சங்கர்லால் துப்பறிந்த வரை சுமாராப் போனக் கதை அப்புறம் தமிழ்வாணனே துப்பறிய ஆரம்பிச்சதும் போரடிக்க ஆரம்பிச்சுடுத்து. SS66 என்ற நீர்மூழ்கி கப்பலைப் பற்றியக் கதை, இன்னொரு செருப்பு எங்கே? மலர்க்கொடி உன்னை மறப்பதெப்படி? மனிமொழி என்னை மறந்து விடு, என்னுடன் பறந்து வா இப்படி எல்லாக் கதைகளும் எதோ ஒரு இங்கிலிஷ் கதையையோ, ஜேம்ஸ்பாண்ட் படத்தையோ காப்பியடிச்சு வந்தாலும் நமக்குத் தெரிந்த மொழியில் படிக்கும் போது ஒரு திரில்தானே!

மரபீரோ கதை என்ன ஆச்சு? இப்படி வாரம் ஒரு முறை மட்டும் வித்தை காட்டும் நிகழ்ச்சிக்கு ஒரு இக்கட்டு வந்தது. எப்படியோ ஒரு துரும்புக் கூட அதிலிருந்து வெளியேறாமல் பார்த்துக் கொண்டவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக பீரோவையே காலியாகப் பார்த்தால் .... நானாவாது இன்னும் உரிமையாக எல்லாவற்றையும் எடுத்து ஆசை தீர படித்திருப்பேனே!

சித்ரா ரமேஷ்
சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg